Published:Updated:

காசு மேல காசா... கடனுக்கு மேல கடனா..?

காசு மேல காசா...   கடனுக்கு மேல கடனா..?
காசு மேல காசா... கடனுக்கு மேல கடனா..?

உங்கள் நிதி எதிர்காலத்தைத் தெளிவுபடுத்தும் செல்ஃப் டெஸ்ட்ஜெ.சரவணன்

காசு மேல காசா...   கடனுக்கு மேல கடனா..?

ரு வீட்டில் இரண்டு, மூன்று வருமானம் இருந்தால்கூட இப்போது இருக்கும் வாழ்க்கை முறைக்கு சமாளிப்பது கடினமாக இருக்கிறது. கல்யாணம், காது குத்து மட்டுமில்லாமல், நம்முடைய அன்றாட செலவுகளே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

விலைவாசியும் பணவீக்கமும் கண்ணுக்குத் தெரியாமல் ஏறிக் கொண்டிருக்கிறது. இதை எப்படி மக்கள் சமாளிக்கிறார்கள்? முதலீடு, செலவு, இன்ஷூரன்ஸ் ஆகியவற்றைப் பற்றி எந்தளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள், எதிர்காலத்தை எப்படித் திட்டமிடுகிறார்கள் என்பதை எல்லாம் தெரிந்துகொள்ள ஆன்லைனில் ஒரு மெகா சர்வே செய்தோம். பல நூறு பேர் இந்த சர்வேவில் கலந்துகொண்டனர்.

இந்த சர்வேவில் கிடைத்த முடிவுகள் கொஞ்சம் அதிர்ச்சியும், ஆச்சரியமும் தருவதாக இருந்தன. இந்த சர்வேயில் கலந்துகொண்டவர் களில் சுமார் 55% பேர் தனிநபர் கடன்களை (Personal loan) வைத்திருந்தனர். 57% பேர் கிரெடிட் கார்டு வைத்திருந்தார்கள். மாதமொன்றுக்கு ரூ.15,000 வரை கிரெடிட் கார்டில் செலவு செய்கிறார்கள். 46% பேர் தங்கள் எதிர்காலத்துக்காக எந்த ரிஸ்க்கையும் எடுக்க துணியவில்லை. 40 சதவிகிதத்தினர் தாம் எடுத்த ரிஸ்க் சரியா, தவறா என்றுகூட தெரியாமல் இருக்கின்றனர். (இந்த சர்வே முடிவினை விரிவாக தெரிந்து கொள்ள http://bit.ly/1TefMmj என்ற லிங்கினை க்ளிக் செய்யுங்கள்!)

இந்த சர்வே ஒருபக்கம் இருக்கட்டும். இன்றைக்கு உங்களுடைய நிதி நிலைமை எப்படி இருக்கிறது, குறைவில்லாத நிதி எதிர்காலம் என்பதை நோக்கி நீங்கள் சரியான பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறீர்களா, பணத்தை எப்படி கையாளுகிறீர்கள், உங்களுடைய முதலீடு, சேமிப்பு எப்படி இருக்கிறது என்பதை அறிய நீங்களும் ஒரு செல்ஃப் டெஸ்ட் செய்து கொள்ளலாமே!

இந்த செல்ஃப் டெஸ்டுக்கான கேள்விகளைத் தந்து, அந்தக் கேள்விகளுக்கான பதில்களை அலசுவதன் மூலம் நீங்கள் எப்படிப்பட்டவர், பொருளாதாரத்தில் நீங்கள் உயர என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்ல முடியுமா என மியூச்சுவல் ஃபண்ட் நிபுணரும் ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின்   இயக்குநருமான சொக்கலிங்கம் பழனியப்பனிடம் கேட்டோம். செல்ஃப் டெஸ்டுக்கான கேள்விகளைத் தந்து,  அதற்கான மதிப்பெண் விளக்கத்தையும் தந்தார் அவர்.

முதலில், அவர் தந்த கேள்வி களுக்கான பதிலை பென்சில் அல்லது பேனாவை  கொண்டு ‘டிக்’ செய்ய ஆரம்பியுங்கள். இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் எடுக்கும் மதிப்பெண்களை வைத்து நீங்களே உங்கள் நிதி நிலைமையை மதிப்பிட முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள். ஓகே, ரெடி, கோ!

காசு மேல காசா...   கடனுக்கு மேல கடனா..?

கீழ்க்கண்ட கூற்றுகளில், நீங்கள் யார்?

*எதிர்காலத்தைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. பறவைகள் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுகிறதா என்ன!

*எதிர்காலத்துக்காக சேமிப்பதைவிட செலவழிப்பதையே  விரும்புகிறேன்

*தேவை என்றால், எவ்வளவு விலை என்றாலும் வாங்கிவிடுவேன்

*தேவை என்றாலும், திட்டமிட்டு, சரியான விலை கொடுத்துத்தான் வாங்குவேன்

உங்கள் வங்கி சேமிப்புக் கணக்கு ஆண்டுக்கு 4% வருமானத்தைத் தருகிறது. பணவீக்கம் ஆண்டுக்கு 8% எனில், ஒரு வருடம் கழித்து இந்த வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்துக்கு எவ்வளவு பொருட்கள் வாங்க முடியும்?

*எனக்குத் தெரியாது

*இன்று வாங்குவதைவிட அதிகமாக வாங்க முடியும்

*இன்று வாங்கும் அளவே வாங்க முடியும்

*இன்று வாங்குவதைவிட குறைவாகத்தான் வாங்க முடியும்

உங்களிடம் உள்ள ரூ.1 லட்சத்தை ஒரு நிறுவனத்தில் குமுலேட்டிவ் டெபாசிட்டாக முதலீடு செய்கிறீர்கள். வருடத்துக்கு 10% கூட்டு வட்டியாக தருவதாக சொல்கிறார்கள் எனில், இரண்டு வருட முடிவில் உங்களுக்கு முதிர்வுத் தொகையாக எவ்வளவு கிடைக்கும்?

*எனக்குத் தெரியாது

*ரூ.1,10,000

*ரூ.1,20,000

*ரூ.1,20,000க்கு மேல்.

இந்திய அரசாங்க பாண்டுகள் பற்றி...

*இதுவரை கேள்விப்பட்டது இல்லை

*சமீப காலத்தில் பத்திரிகைகளில் படித்துள்ளேன்

*இவை நமது மத்திய அரசாங்கம் வெளியிடும் கடன் பத்திரங்களாகும்

*மத்திய அரசாங்கம் வெளி யிடும் இந்தக் கடன் பத்திரங்கள் அதற்குரிய சந்தையில் வர்த்தகமாவது டன், வெவ்வேறு முதிர்வு காலத்துக் கும் வெளியிடப் படுகின்றன.

காசு மேல காசா...   கடனுக்கு மேல கடனா..?

உங்கள் பைக் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் 42 கி.மீ தருகிறது என்று வைத்துக்கொள்வோம். ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.60 எனில், உங்கள் பர்ஸில் உள்ள ரூ.660-யைக் கொண்டு எவ்வளவு தூரம் நீங்கள் உங்கள் பைக்கில் கவலையில்லாமல் பிரயாணம் செய்யலாம்?

*குழப்பாதீர்கள் ப்ளீஸ்

*எனது நண்பனை கேட்டுச் சொல்கிறேன்

*420 கி.மீ

*462 கி.மீ

முதலீடு என்பது....


*என்ன என்று எனக்குத் தெரியாது

*செலவு செய்யவே நான் சம்பாதிக்கிறேன். எதற்கு முதலீடு?

*செலவுகளுக்குப் பிறகு செய்வதாகும்

*மாதம்தோறும் செய்ய வேண்டிய கட்டாயக் கடமையாகும்

எனக்கும் என் குடும்பத்தினருக்கும் தேவையான/போதுமான அளவு காப்பீடுகள்

*எடுப்பது வெட்டிச் செலவு

*கூடிய விரைவில் எடுக்க உள்ளேன்

*குறைவான அளவில் உள்ளது. இன்னும் சில மாதங்களில் எடுக்க உள்ளேன்

*உள்ளது

எனது செலவு எப்படி?


*வருமானத்துக்கு மீறி எப்போதும் சென்றுவிடும்

*வரவு, செலவு ஆகிய இரண்டும் சமமாக இருக்கும்

*நான் போடும் பட்ஜெட்டுக்குள்தான் இருக்கும்

*செலவு போக மாதா மாதம் கணிசமான தொகையை சேமித்து வருகிறேன்

கடன்...?

*பெரும்பாலான சம்பாத்தியம் கடனை திருப்பிச் செலுத்தவே சென்றுவிடுகிறது

*வட்டி  விகிதம் பார்க்காமல், தேவையென்றால் வாங்கிவிடுவேன்

*தேவைப்படும்போது, நாலு வங்கிகளிடம் வட்டி மற்றும் பிற கட்டணங்களை விசாரித்து, எனது தகுதிக்கு மீறாமல் கடன் வாங்குவேன்.

*கடன் வாங்காத அளவுக்கு எனது திட்டமிடல் உள்ளது

கிரெடிட் கார்டில் வரும் மாதாந்திர கடனுக்கு...

*மினிமம் தொகையை மட்டும் செலுத்துவேன்

*பாதிக்குப் பாதி கட்டிவிடுவேன்

*பெரிய பர்ச்சேஸ்களை இ.எம்.ஐ-ஆக மாற்றிவிடுவேன்

*ஒரு நாள் தாமதமில்லாமல், முழுத் தொகையையும் செலுத்தி விடுவேன்

பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்டுகள், டெபாசிட்டுகள், பாண்டுகள், அஞ்சலக சேமிப்புகள்

காசு மேல காசா...   கடனுக்கு மேல கடனா..?*போன்ற எதிலும் முதலீடு செய்யவில்லை

*இவை பற்றி கேள்விப்பட்டுள்ளேன்

*இவற்றில் இப்போதுதான் முதலீட்டைத் துவக்கியுள்ளேன்

*இவற்றில் நீண்ட காலமாக முதலீடு செய்து வருகிறேன்

திடீரென்று இன்றே எனது சம்பாத்தியம் நின்றுவிட்டால்...


*நான் வேலை/தொழில் தேடி அலைய வேண்டும்

*அடுத்த 6 மாதத்துக்கு சமாளிக்க முடியும்

*எனது சம்பாத்தியத்தைப் போல் 50% வருமானம் நான் செய்துள்ள முதலீடுகளிலிருந்து எனக்கு கிடைத்துவிடும்

*எனது சம்பாத்தியத்தைப் போல் 100% வருமானம் நான் செய்துள்ள முதலீடுகளிலிருந்து எனக்கு கிடைத்துவிடும்

மேலே கண்ட 12 கேள்விகளுக்கும் நன்கு யோசித்து பதில் சொல்லிவிட்டீர்களா? இப்போது நீங்கள் எப்படிப்பட்ட நபர் என்று தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறதா?

கேட்கப்பட்ட  கேள்விகளுக்கு தரப்பட்ட பதில்களில் நான்கு ஆப்ஷனில் முதலாவது ஆப்ஷனை நீங்கள் டிக் செய்து இருந்தால், 1 மதிப்பெண். இரண்டாவது ஆப்ஷனை டிக் செய்திருந்தால் 2 மதிப்பெண். மூன்றாவது ஆப்ஷனை டிக் செய்திருந்தால் 3 மதிப்பெண். நான்காவது ஆப்ஷனை டிக் செய்திருந்தால் 4 மதிப்பெண் என்று போட்டுக் கொள்ளுங்கள்.

இப்போது 12 கேள்விகளுக்கும் உங்களது மொத்த மதிப்பெண்களைக் கூட்டுங்கள். உங்கள் மதிப்பெண்களைப் பொருத்து நீங்கள் எப்படிப் பட்டவர், உங்கள் எதிர்காலம் எப்படி என்பதை மேலே உள்ள அட்டவணையைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
   
உங்கள் மதிப்பெண்களை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்துகொண்டு விட்டீர்களா..? இனி  உங்களுடைய வளமான நிதி எதிர்காலத்துக்கு நீங்கள் என்ன  செய்ய வேண்டும் என்பதற்கான டிப்ஸ்களைத் தருகிறார்  சொக்கலிங்கம் பழனியப்பன்.

‘‘பணம் சம்பாதிப்பதைக் காட்டிலும், சம்பாதித்தப் பணத்தை எப்படிப் பெருக்குவது என்பதுதான் மிக முக்கியம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை.

1. வருமானத்தைக் கூட்டுங்கள்!


பணக்காரர் ஆவதற்கு முதல் தகுதி, நம் கையில் செலவைத் தாண்டி உபரிப் பணம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதுதான். எனவே, வேலையோ, தொழிலோ நம்முடைய வருமானத்தைப் பெருக்கும் முயற்சிகளில் இறங்க வேண்டும். வாயைக் கட்டி, வயித்தக் கட்டி இந்தக் காலத்தில் சேமித்து வைக்கவே முடியாது. அதனால் நம் வருமானத்தை அதிகப்படுத்த வேண்டும். அப்போதுதான் செலவை மீறி, நம்மால் சேமிக்கவும், முதலீடு செய்யவும் முடியும். குடும்பத்தின் அன்றாட செலவுகளையே சமாளிக்க முடியாதவர்கள், பணம் சம்பாதிக்க நினைத்து ஏமாற்றுத் திட்டங்களில் முதலீடு செய்து நஷ்டப்பட வேண்டாம்.

2. ஆரம்பத்தில் கடன்.. ஆபத்து!


காரணமே இல்லாமல் கடன் வாங்குவது தற்கொலைக்கு சமம். கடன் என்பது இக்கட்டான சூழ்நிலைகளைச் சமாளிக்கத் தான்.  பெரும்பாலானோர் ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன் என்று ரொட்டேஷனில் வாழ்க்கையைத் தள்ளுகிறார்கள். அதுவும் புதிதாக வேலைக்குச் சேரும் இளைஞர்கள், சம்பளம் வந்ததும் உடனே செலவு செய்கிறார்கள். அதுமட்டும் இ்ல்லாமல் தனிநபர் கடன், கிரெடிட் கார்டு போன்றவற்றை உடனே வாங்கிவிடுகிறார்கள். இந்தியாவில் சராசரி கிரெடிட் கார்டு கடன் ரூ.8,668 ரூபாய். இங்கு பாதி பேருக்கு இவ்வளவு கூட சம்பளம் இருக்காது. அதனால் திட்டமிட்டு செலவு செய்யுங்கள், கடனைத் தவிர்க்க சேமியுங்கள்.

காசு மேல காசா...   கடனுக்கு மேல கடனா..?

3. ரிஸ்க்கா, அப்படின்னா?

ரிஸ்க்கெல்லாம் நமக்கு ரஸ்க் சாப்படற மாதிரின்னு யார் வேண்டுமானாலும் டயலாக் பேசலாம். ஆனால், ரிஸ்க் எடுப்பது அவ்வளவு சுலபம் இல்லை. திட்டமிடாமல் தவறான ரிஸ்க் எடுத்தவர்களே அதிகம்.  அதற்காக பயந்து ரிஸ்க் எடுக்காமலும் இருக்கக் கூடாது. இளைஞர்கள் கட்டாயம் ரிஸ்க் எடுக்கத்தான் வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில்  மகிழ்ச்சியாக இருக்கலாம்.

வேலையை விட்டு சொந்தமாக பிசினஸ் பண்ணலாமா? வேறு வேலைக்குப் போகலாமா? பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாமா? இப்படியே கடைசி வரை கேள்விகளைக் கேட்டுக்கொண்டு இருக்காமல், திட்டமிட்டு இறங்கி ரிஸ்க் எடுத்து ஒரு கை பார்த்துவிட வேண்டும். பின்வாங்கவே கூடாது. விடா முயற்சிதான் விஸ்வரூப வெற்றியைத் தரும்.

4. புரியாத முதலீட்டுக்கு ‘நோ’!

இதில் முதலீடு பண்ணுங்க, ரெண்டே வருஷத்துல எட்டு மடங்காகும். இதில் போட்டிங் கன்னா பத்து மடங்காகும் என்று எத்தனை பேர் சொன்னாலும் சரி, உங்களுக்குத் தெரியாத, புரியாத ஒரு விஷயத்தில் மட்டும் பணத்தைப் போடவே வேண்டாம். பலரும் தங்கள்  முதலீடுகளைப் பற்றி ஒன்றுமே தெரியாமல்தான் செய்கிறார்கள் என்கிறது ஆய்வு முடிவு. அதனால் பாலிசி எடுத்தாலும், பங்கு வாங்கி னாலும், சீட்டு போட்டாலும் அதைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்துகொண்டு பணத்தை முதலீடு செய்யுங்கள். 

5. இப்போ என்ன அவசரம்?

முதலீடு, சேமிப்பு ஆகிய வார்த்தைகளைச் சொன்னாலே பலரிடம், இப்போ என்ன அவசரம் என்ற பதில்தான் வருகிறது. முதல் மாதம் சம்பளம் வாங்கியதும், போன் வாங்கலாமா, பைக் வாங்கலாமா என்று யோசிக்கும் நாம், எவ்வளவு சேமிக்கலாம் என்று யோசிப்பதே  இல்லை. அப்புறம் குடும்பம், குழந்தைகள் என்று வந்தபிறகு செலவுக்கே வருமானம் போதாமல் திண்டாடுகிறோம்.   சம்பளம் வாங்குகிற முதல் மாதத்திலிருந்தே சேமிக்க தொடங்குங்கள், அது வெறும் பத்து ரூபாயாக இருந்தாலும் சரி. பிற்பாடு உங்கள் சேமிப்பை அதிகப்படுத்தி கொண்டே இருங்கள்.

சேமித்த பணத்தை சரியான முதலீடுகளாகவும் மாற்றுங்கள்.

ஆக மொத்தத்தில் அதிகம் சம்பாதித்தால்தான் சேமிக்க முடியும். சேமித்தால்தான் முதலீடு செய்ய முடியும். முதலீடு செய்தால்தான் பணத்தைப் பெருக்க முடியும். பணத்தைப் பெருக்கினால்தான் கஷ்டம் இல்லாமல் மகிழ்ச்சியான எதிர்கால வாழ்க்கையை வாழ முடியும்.

எனவே மேற்சொன்ன விஷயங்கள் அனைத்திலும் கவனமாக இருங்கள், உங்கள் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்’’ என்று முடித்தார் அவர்.

அவர் சொல்வதை நீங்கள் செய்வீர்கள்தானே!

அடுத்த கட்டுரைக்கு