Published:Updated:

3 - ம் ஆண்டில் மோடி... சாதனையா, சரிவா?

3 - ம் ஆண்டில் மோடி... சாதனையா, சரிவா?
3 - ம் ஆண்டில் மோடி... சாதனையா, சரிவா?

சோ.கார்த்திகேயன்

3 - ம் ஆண்டில் மோடி... சாதனையா, சரிவா?

ரும் 26-ம் தேதியுடன் இரண்டாண்டு நிறைவடைந்து மூன்றாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறார் பிரதமர் மோடி.

இந்த இரண்டு ஆண்டு காலத்தில் மக்களின் எதிர்பார்ப்பு களில் பிரதமர் மோடி என்ன சாதித்திருக்கிறார் என்பதை அலசி ஆராயும் நேரம் இது.

40 சதவிகித ஆட்சி!

தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதை அடுத்து, பல்வேறு எதிர்ப்புகளும், விமர்சனங்களும் எழுந்தன. ஆனால், அந்த எதிர்ப்புகளை எல்லாம் மீறி, மக்களின் பெரும் ஆதரவுடனும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்தார் மோடி.

இந்த இரண்டு ஆண்டு காலத்தில் அவருடைய ஆட்சியை ஆராய்ந்து பார்த்துவிட்டு ஒரு முடிவுக்கு வருவது சரியானதாக இருக்காது. காரணம், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் நடந்த பல தில்லுமுல்லுகளை சரிசெய்வதற்கே பல மாதங்கள் போனது மோடி அரசாங்கத்துக்கு.

என்றாலும், ஐந்து ஆண்டு கால மோடி அரசின் ஆட்சியில் 40% முடிவடைந்துவிட்டது. இன்னமும் இருப்பது 60 சதவிகித காலம்தான். இன்னும் ஓராண்டு காலம் சென்றுவிட்டால், மீதம் இரண்டு ஆண்டுகளே இருக்கும். எனவே, மோடி அரசின் மீதான விமர்சனங்கள் இனியும் வெளியே வருவதை யாராலும் தடுக்க முடியாது.

எருமை வேக ஆட்சி?

‘அச்சாதின்’ (மகிழ்ச்சியான நாட்கள்) என்று சொல்லித்தான் மோடி ஆட்சிக்கு வந்தார். ஆனால், அவர் ஆட்சிக்கு வந்தபின் அந்த ‘அச்சா தின்’ வந்ததா என்றால், முழுமையாக வந்துவிடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மகிழ்ச்சியான நாட்களை உருவாக்க நினைக்கும் மோடியின் ஆட்சி எருமை வேகத்தில் நடப்ப தாக சொல்லி கடந்த ஆண்டு இதே சமயம் கருத்து வெளியிட்டன.

‘தி எக்கனாமிஸ்ட்’ போன்ற வெளிநாட்டு பத்திரிகைகள். அந்த கருத்து இன்றும் நீடித்து வருவதாகவே பலரும் நினைக்கிறார்கள்.

மோடி அரசின் திட்டங்கள் அனைத்தும் ஆரம்ப கட்டத்தில் பரபரப்பாக இருந்தன. நம் நாடு மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சி காணும் என்று சொன்னதை எல்லோரும் நம்பினார்கள். ஆனால், அவர்கள் சொன்ன அளவுக்கு பொருளாதார வளர்ச்சி ஏற்படவில்லை. என்றாலும் உலக அளவில் அயர்லாந்து தவிர வேறு எந்த நாடும் இந்த அளவுக்கான ஜி.டி.பி. வளர்ச்சி காணவில்லை. அயர்லாந்தின் ஜி.டி.பி. வளர்ச்சி 9.20%. நமது ஜி.டி.பி. வளர்ச்சி 7.30%. இந்த ஆண்டில் பருவ மழை நன்கு பெய்யும்பட்சத்தில் நமது ஜி.டி.பி. 7.75% முதல் 8% வரை வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3 - ம் ஆண்டில் மோடி... சாதனையா, சரிவா?
3 - ம் ஆண்டில் மோடி... சாதனையா, சரிவா?

மோடி அரசின் திட்டங்கள்!

தூய்மை இந்தியா, டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா, பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, சான்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா, அடல் ஓய்வூதிய யோஜனா, பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா, பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, ஸ்கூல் நர்சரி யோஜனா, சுரக்க்ஷா பீமா யோஜனா, கிருஷி சிச்சாயின் யோஜனா, கவுசல் விகாஸ் யோஜனா, பிரதம மந்திரி முத்ரா யோஜனா, சுகன்யா சம்ரிதி யோஜனா, டிஜிலாக்கர் திட்டம், எல்பிஜி மானியம் திட்டம், சாகர் மாலா, ஸ்மார்ட் சிட்டி, ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் மற்றும் தங்கத்தைப் பணமாக்கும் திட்டம் உட்பட பல திட்டங்கள் மோடி அரசின் இரண்டு கால ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டன. இப்படி பல திட்டங்கள் தொடங்கப்பட்டாலும் சில திட்டங்களே நன்றாக நடந்து வருகின்றன. மேக் இன் இந்தியா திட்டம் அதிவேகத்தில் செயல்படுத்தி இருந்தால், இன்றைக்கு இன்னும் பல லட்சம் இளைஞர்களுக்கு வேலை கிடைத்திருக்கும். ஸ்மார்ட் சிட்டி திட்டமும் பெரிய வளர்ச்சி காணாமல் சுறுசுறுப்பற்றுக் கிடக்கிறது.

முக்கிய சாதனைகள்!

என்றாலும் இந்த குறுகிய காலத்தில் சில முக்கிய சாதனைகளை படைக்க மோடி அரசு தவறவில்லை. சிறு மற்றும் குறு தொழில்முனைவோர்களுக்கு கடனுதவி அளிக்கும் முத்ரா திட்டம், குறைந்த விலையில் எல்இடி விளக்குகள் விநியோகம், நாடு முழுவதும் சமையல் எரிவாயு பயன்பாடு அதிகரிப்பு மற்றும் கடந்த இரண்டு ஆண்டுகளில் மின் வசதி இல்லாத 18,000 கிராமங்களுக்கு மின் வசதி செய்து தரப்பட்டுள்ளதை மத்திய அரசின் முக்கிய சாதனைகளாக சொல்லலாம்.

வெளிநாட்டுக் கொள்கை!

பிரதமர் மோடி கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் பல வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். வெளிநாட்டு தலைவர்களுடன் ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டார். அவர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை பலரும் விமர்சித்தாலும், அதனால் நமது வெளிநாட்டு உறவு மேம்பட்டதுடன், அந்நிய நேரடி முதலீடும் அதிகரித்தது. மோடி பொறுப்பேற்றதில் இருந்து கடந்த பிப்ரவரி வரையிலான காலத்தில் இதுவரை இல்லாத அளவாக  51 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடு கிடைத்துள்ளது.

எல்லோருக்கும் வங்கிக் கணக்கு!

நிதி சார்ந்த சேவைகள் மற்றும் வங்கிச் சேவைகளை அனைத்து இந்தியர்களும் பயன்படுத்த வேண்டும்

3 - ம் ஆண்டில் மோடி... சாதனையா, சரிவா?

என்ற குறிக்கோளுடன் ஆரம்பிக்கப்பட்ட ‘பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா’ திட்டத்தின் கீழ் இதுவரை 21.74 கோடி வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு ரூபாய் 37,445.07 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது சாதனைதான். மோடி கேட்டுக் கொண்டதற்கிணங்க இதுவரை 10,093,206 பேர் சமையல் எரிவாயு மானியத்தை விட்டு கொடுத்திருப்பதும் ஒரு சாதனைதான்.

ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த பிரீமியம், நிறைய இழப்பீடு திட்டமான பிரதான் மந்த்ரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டத்தின் கீழ் 9.42 கோடி பேர் மற்றும் பிரதான் மந்த்ரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் கீழ் 2.95 கோடி பேர் இணைந்திருக்கின்றனர். ஆதார் திட்டம், பயிர் காப்பீட்டுத் திட்டத்தினால் விவசாயிகளுக்கு பாதுகாப்பு போன்ற பல திட்டங்கள் மோடி அரசின் சாதனைகள்தான்.

ஆனால், பணவீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது. இன்னமும் தெளிவான தொழில் கொள்கை வகுத்து, செயல்படுத்தாமல் இருப்பது, பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் வங்கிகளில் பெரிய நிறுவனங்கள் கடன் வாங்கி திருப்பி செலுத்தாதமல் இருப்பது, ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்படாமல் இருப்பது போன்றவை மோடி அரசின் நிறைவேறாத திட்டங்களாக சொல்லலாம்.

என்ன செய்யப் போகிறார்..!

மோடி அரசின் கடந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில் எந்தவொரு அமைச்சர் மீதும் ஊழல் புகார்கள் இல்லை என்பதே வரவேற்கத்தகுந்த அம்சம். ஏழை, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் பல சமூக நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனாலும் மக்களுக்கு நல்லாட்சி தருவதில் மோடி காட்டும் வேகம் நிச்சயம் போதாது. அரசியல் விவகாரங்களில் தானே நேரடியாக ஈடுபடுவது போன்ற செயல்களை (பல்வேறு மாநிலங்களில் நடக்கும் தேர்தல் பிரச்சாரத்துக்காக பல நாட்களை செலவு செய்வது) செய்வதை விட்டுவிட்டு, நாட்டின் முன்னேற்றத்துக்குத் தேவையான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இன்னும் அதிக அக்கறையோடு செயல்பட வேண்டும். 

அடுத்துவரும் மூன்று ஆண்டுகள் பிரதமர் மோடிக்கு மிக முக்கியமானவை. இந்த மூன்று ஆண்டுகளில் அவர் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வெகுவாக உயர்த்தி, மக்களிடம் நல்ல பெயர் வாங்கினால்தான் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியும். இந்த இரண்டு ஆண்டு காலத்தில் மோடி வெறும் பாஸ் மார்க்கை மட்டுமே வாங்கி இருக்கிறார் என்பதை யாராலும் மறுக்க முடியாது!

அடுத்த கட்டுரைக்கு