Published:Updated:

அள்ளித் தரும் ஆர்கானிக் பிசினஸ்!

அள்ளித் தரும்  ஆர்கானிக்  பிசினஸ்!
அள்ளித் தரும் ஆர்கானிக் பிசினஸ்!

த.சக்திவேல்

அள்ளித் தரும்  ஆர்கானிக்  பிசினஸ்!

ரு காலத்தில் உணவே மருந்தாக இருந்தது. பிற்பாடு அதிக விளைச்சலுக்காக பூச்சிக்கொல்லி மருந்துகளையும், ரசாயன உரங்களையும்  பயன்படுத்த ஆரம்பித்தோம்.

அதன் விளைவாக  இன்றைக்கு நாம் சாப்பிடுகிற அரிசி, பருப்பு, காய்கறிகள், பழங்கள் அனைத்துமே நஞ்சாகிவிட்டது. உணவே நோய்களுக்கு மூலக்காரணியாக உருமாறிவிட்டது. வேறு எதையும் விட நாம் சாப்பிடுகிற உணவில் மிகுந்த அக்கறையும், கவனமும் செலுத்த வேண்டிய கால கட்டத்தில் வாழ்ந்து  வருகிறோம்.  இதனால் மீண்டும் இயற்கையை நோக்கி, நம்முடைய பாரம்பரிய விவசாயத்தை நோக்கி நாம் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதனை உணர்ந்த பலரும் இன்றைக்கு இயற்கை விவசாயத்தையும், அதன் மூலம் விளைந்த  உணவுப் பொருட்களையும் தேடிச் செல்கின்றனர். 

ஊடகங்கள், சமூக வலைதளங்கள் வாயிலாக  மக்கள் மத்தியிலும் உணவு விஷயத்தில் பெரிய விழிப்பு உணர்வு  ஏற்பட்டிருக்கிறது. அதிக அளவில்  மக்களும் தங்களின் உடல் ஆரோக்கியத்தில்  கவனம் செலுத்துகின்றனர். வேலை வாய்ப்பு பெருக்கத்தால் கையிலும் பணம் அதிகமாக புரளுகிறது.அதனால் இயற்கை விவசாயத்தின் மூலம் விளைந்த ஆர்கானிக் உணவுப் பொருட்களைத் தேடி செல்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஆர்கானிக் உணவுப் பொருட்களை விற்கிற கடைகளும் அங்கங்கே புதிது புதிதாக திறக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. படித்து நல்ல வேலையில் இருந்தவர்கள் தாங்கள் செய்துவந்த வேலையை விட்டு இயற்கை விவசாயத்திலும்  ஆர்கானிக் உணவுப் பொருட்களை விற்கிற பிசினஸி லும் இறங்கி, நல்ல லாபம் பார்த்து வருகின்றனர். 

ஆர்கானிக் உணவுப் பொருட்களை விற்பனை செய்கிற கடையை ஆரம்பிக்க  வேண்டுமெனில்,  எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்.,இந்த தொழிலில் இருக்கின்ற   பிசினஸ் வாய்ப்புகள் என்னென்ன என்பதைப்  பற்றி செங்கல்பட்டில் இருக்கும்  ஆரோக்யம் ஆர்கானிக் ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் நிறுவனர் ஆறுமுகசாமியிடம் கேட்டோம். அவர் விரிவாக எடுத்துச் சொன்னார்.

‘‘முன்பைவிட  இப்போது அதிகமாக மக்கள்  இயற்கை சார்ந்த  உணவுமுறைக்கும், வாழ்க்கைக்கும்  திரும்புவது அதிகரித்து வருகிறது.  ரசாயன உரங்கள் இல்லாமல், பூச்சிக் கொல்லி மருந்துகள் இல்லாமல்  இயற்கையாக விளைவிக்கப்பட்ட   ஆர்கானிக் உணவுப் பொருட் களின் மீது  மக்களின் கவனமும் ஆர்வமும் அதிகரித்திருப்பது ஆரோக்கியமான விஷயம்தான்.  இதனால் ஆர்கானிக் உணவுப் பொருட்களை விற்பனை செய்கிற கடைகளுக்கான தேவையும் அதிகரித்து இருக்கிறது. இதனால் ஆர்கானிக் பொருட்களை விற்கும் கடைகளைத் திறக்கும் முடிவு சரியானதாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.  

மாநகராட்சி  அல்லது நகராட்சியிடம் இந்த இடத்தில், இவ்வளவு சதுர அடியில்  ஆர்கானிக் உணவுப் பொருட்களை விற்கிற கடையை  ஆரம்பிக்க பதிவு செய்து உரிமம் பெற்றாலே போதும் நம்மால் ஒரு ஆர்கானிக் ஸ்டோரை உருவாக்கிவிட முடியும்.

அள்ளித் தரும்  ஆர்கானிக்  பிசினஸ்!

ஒரு நல்ல, தரமான ஆர்கானிக் கடையை ஆரம்பிக்க  குறைந்தபட்சம் ரூ.15 லட்சம் தேவைப்படும். சென்னை போன்ற மாநகரங்களில்  கடையை வாடகைக்கு எடுக்கும் பட்சத்தில் முன்பணமாக கொடுக்க வேண்டிய தொகை ரூ.3 லட்சம் வரை ஆகும். கடைக்கான இன்டீரியர் செலவுகள் ரூ.5 லட்சம், பொருட்களுக்கு ரூ.3 லட்சம் போக, வாடகை, சம்பளம், கொள்முதல் போன்ற இதர செலவுகளுக்குக்  கையில் எப்போ தும் ரூ.4 லட்சம் இருக்க  வேண்டும்.     
        
 நீங்கள் எந்த இடத்தில் எப்படி இந்தக் கடையை ஆரம்பிக்கப் போகிறீர்கள் என்பதுதான் முக்கியம். கடை வீதிகளிலோ, மெயின் ரோட்டிலோ, மக்கள் அதிகம் வந்து போகிற இடத்திலோ,  கடை திறக்க வேண்டுமானால் குறைந்தபட்சம் 500 சதுர அடி முதல் 1000 சதுர அடி வரைக்கும் இடம்  இருந்தாலே போதுமானது.

ஆர்கானிக் ஸ்டோரை   பொறுத்தவரை,  கடையின்  விசாலமான  தோற்றம் மிகவும் முக்கியம். வாடிக்கையாளர்களை கவர்கிற மாதிரி வண்ணங்களுடன் உள் அலங்காரம் இருக்க வேண்டும். முற்றிலும்     குளிரூட்டப்பட்டிருப்பது அவசியம்.

பொதுவாக, மற்ற உணவுப் பொருட்களின் விலையோடு ஒப்பிடும்போது,  ஆர்கானிக் உணவுப் பொருட்களின் விலை அதிகமாகத்தான் இருக்கும்.  அதனால்  உயர் வகுப்பை சேர்ந்தவர்கள்தான்  அதிக அளவில் நம்முடைய  வாடிக்கை யாளர்களாக இருப்பார்கள்.

முக்கியமாக, கடைக்கு முன் கார்களை நிறுத்த பார்க்கிங் வசதி இருக்க வேண்டும். வாடிக்கை யாளர்களே பொருட்களை தேர்வு  செய்து எடுத்துக்கொள்ளும் விதமாக செல்ஃப் சர்வீஸ் வசதியும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் கடைக்கு இரண்டு ஆட்களை வேலைக்கு நியமிக்க வேண்டும்.

அரிசி, பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள், சிறு தானியங்கள், நறுமணப் பொருட்கள், ஊறுகாய், பான வகைகள், இனிப்பு வகைகள், கார வகைகள், குளியல் சோப்கள், பற்பசை, அழகு சாதனப் பொருட்கள், காய்கறிகள், பழ வகைகள் என  சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கிற   அனைத்துப் பொருட்களும் இருக்க வேண்டும்.        

வாடிக்கையாளர்கள் தங்களின் விருப்பம் போல பிராண்டட் உணவுப் பொருட்களை தேர்வு செய்துகொள்ள போஜனம், பாரம்பரியம், 24 லெட்டர் மந்த்ரா,புரோ நேச்சர், புரோ ஆர்கானிக், போன்ற விதவிதமான பிராண்டுகள் சந்தையில் கிடைக்கின்றன. கடையில்  குறைந்தது மூன்று பிராண்டுகள் இருக்க வேண்டும்.

இந்தத் தொழிலில் முக்கியமானது நம்பகத்தன்மை. நீங்கள் கொடுக்கின்ற ஆர்கானிக் உணவுப் பொருட்களில் கொஞ்சம்கூட கலப்படம் இருக்காது என்கிற நற்பெயரை எடுத்துவிட்டாலே போதும், நம்மால் இந்த பிசினஸில் நிச்சயமாக காலூன்றிவிட முடியும். தவிர, வாடிக்கையாளர்களுக்கு இல்லை என்று சொல்லாத மாதிரி எப்போதுமே அனைத்துப் பொருட்களும் ஸ்டாக்கில் இருக்க வேண்டும்.

அள்ளித் தரும்  ஆர்கானிக்  பிசினஸ்!

இந்தத் தொழிலில் இருக்கிற ரிஸ்க் என்னவென்று பார்த்தால், காய்கறிகள், பழ வகைகள் அழுகிப் போகக்கூடியவை;

அதனால் காய்கறிகளை கொள்முதல் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். தேவைக்கு அதிகமாக கொள்முதல் செய்து விற்பனை செய்ய முடியாமல் நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. 

புதிதாக ஆர்கானிக் உணவுப் பொருட்களை விற்கத் தொடங்குகிறவர்களில் நிறைய பேர் 100 சதுர அடியிலேயே கடையை ஆரம்பிக்கிறார்கள். பிராண்டட்  இல்லாத பொருட்களை விற்கின்றனர். இந்தக் கடைகள் மக்களைக்  கவருவதில்லை. இந்த பிசினஸில் ஆட்களுக்கு கொடுத்த சம்பளம், மின் கட்டணம், வாடகை மற்ற செலவுகள் போக குறைந்தபட்சம் மாதம் ரூ.50,000-லிருந்து ரூ.70,000 வரைக்கும் நம்மால் சம்பாதிக்க முடியும்.

இன்றைக்கு எல்லோரும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பொருட்களை வாங்க விரும்புகின்றனர். எனவே, ஆன்லைன் வழியான சேவை, இலவச டோர் டெலிவரி போன்ற வசதிகளை தந்தால், இந்த தொழிலை இன்னும் நம்மால் செழிப்பாக வளர்க்க முடியும்.

இந்தத் தொழிலை வெறும் பிசினஸாக பார்க்காமல் சமூகத்துக்கு நாம் செய்கிற சேவையாக பார்கக வேண்டும். நாம் வெறும் உணவுப் பொருட்களை மட்டும் விற்கவில்லை, மக்களுக்கான ஆரோக்கியத்தை தருகிறோம் என்ற திருப்தி வேறு எந்த பிசினஸிலும் நமக்கு  கிடைக்காது.

  குறைந்த முதலீட்டில் லாபம் மட்டுமல்லாமல் மனதுக்கு திருப்தியையும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரக்கூடிய இந்த பிசினஸை புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் கவனிக்கலாமே!

படங்கள்:   உ.கிரண்குமார்.

 ஊழலுக்கு எதிரான புகார்கள் 50% குறைந்தது!

மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்புக்கு வரும் ஊழலுக்கு எதிரான புகார்கள் ஏறக்குறைய 50 சதவிகிதம் அளவுக்கு குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

2014-ம் ஆண்டில் மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு 62,363 புகார்களைப் பெற்றது. ஆனால், 2015-ல் 29,838 புகார்கள் மட்டுமே வந்திருக்கிறதாம். ஆனால் காவல் துறை, கல்வி நிலையங்கள், அடிப்படை சேவை இல்லாதது என பல்வேறு விஷயங்கள் குறித்த புகார்கள் பிரதமர் அலுவலகத்துக்கு வருவது அதிகரித்திருக்கிறதாம். ஒவ்வொரு மாதமும் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் பிரதமர் அலுவலகத்துக்கு வருவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியிருக்கிறார்.

ஒன்று குறைந்தால், இன்னொன்று எகிறுகிறதே!

அடுத்த கட்டுரைக்கு