Published:Updated:

அறம் பொருள் இன்பம் - 1

அறம் பொருள் இன்பம் - 1
பிரீமியம் ஸ்டோரி
News
அறம் பொருள் இன்பம் - 1

வ.நாகப்பன், ஓவியம்: ஹாசிப்கான்

அறம் பொருள் இன்பம் - 1

`பணம் என்பது, மக்கள் தங்களுக்கு இடையே பொருட்கள் மற்றும் சேவைகளை எளிதாகப் பரிமாறிக் கொள்ளவும், கடன்களைத் திருப்பித் தரவும் ஈடான மதிப்புடையதாக, ஓர் அரசால் உறுதியளிக்கப்பட்ட அடையாள அலகு!'

- தமிழ் விக்கிபீடியா

ணம், நம் எல்லோருக்கும் இனிக்கும். ஆனால், அதைப் பற்றி தெரிந்து கொள்வது? 

இந்தக் கரும்பலகையைப் பாருங்கள். ஏதாவது புரிகிறதா? நம்மில் பலருக்கு, பணம் சம்பாதிப்பதும் சேமிப்பதும் முதலீடு செய்வதும் இதைப்போலத்தான். வாழ்க்கையின் கடைசி வரை இதன் சூத்திரமும் சூட்சுமமும் புரிவதே இல்லை. 

அறம் பொருள் இன்பம் - 1

பெரும் பணக்காரர்களை விடுங்கள். நம்மைப்போலவே நடுத்தரப் பின்னணியில் பிறந்து, நம்மைப்போலவே படித்து வளர்ந்தவர்களில் சிலர் மட்டும், நம்மைவிட அதிக வசதியோடு வாழ்வதையும் பணக்காரர் ஆவதையும் பார்க்கிறோம். நாம் மட்டும் எங்கு தவறவிடுகிறோம்?

சொன்னால் நம்ப மாட்டீர்கள். பணம் சம்பாதிப்பதும் பணத்தைக் கையாள்வதும் அவ்வளவு சிக்கலானது அல்ல!

`லாட்டரியில் கோடி ரூபாய் விழவேண்டும்' என, ஒருவர் தினசரி பிரார்த்தனை செய்தார். விழவே இல்லை. வெறுத்துப்போய்  ஒருநாள் கடவுளிடம் சண்டைக்குப் போனார். பிரசன்னமான கடவுள், `பரிசு வேணும்னா, மொதல்ல ஒரு லாட்டரிச் சீட்டு வாங்குடா முட்டாள். சீட்டே வாங்காமல் பரிசு எப்படி விழும்?' எனக் கேட்டார். இப்படித்தான் பணத்தைக் கையாளும் முறைகளைக் கற்றுக்கொள்ளும் முயற்சியே இல்லாமல், பலனை மட்டும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். ஏன் இப்படி?

மனத்தடைதான்!

பணம் என்றால், ஏதோ குஜராத்திகள் போன்ற குறிப்பிட்ட சில சமூகத்தினருக்கோ அல்லது ஆடிட்டருக்கோ மட்டுமே புரியக்கூடிய விஷயம் எனும் தவறான புரிதல் இது.

அறம் பொருள் இன்பம் - 1

நம்மைப் பொறுத்தவரை, 8 மணி நேரமோ 10 மணி நேரமோ உண்மையாக வேலைபார்த்து பணம் சம்பாதிப்பது மட்டுமே நம் வேலை. சொல்லப்போனால் இன்றைய சூழலில் அதுவே பெரிய சாதனை. இதில் பணத்தைச் சேமிப்பது, முதலீடு செய்வது என, பணத்தைக் கையாளும் கலைகளை வேறு கற்றுக்கொள்ள எங்கே சார் நேரம் இருக்கிறது என அலுத்துக்கொள்பவரா நீங்கள்? நமக்கு இருக்கும் அதே 24 மணி நேரம்தான் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களுக்கும்!

வாழ்க்கையில் நம் முன்னுரிமை எது என்பதில் தெளிவு இருந்தால், தானாகவே அதற்கு நேரம் கிடைக்கும். 

கொஞ்சம் `ஸ்டார்ட்டிங் ட்ரபிள்' அல்லது `டீத்திங் ட்ரபிள்' இருக்கலாம். ஜிம்/வாக்கிங் செல்லத் தொடங்கும் முதல் சில நாட்கள் கை, கால் வலிக்கத்தான் செய்யும்.  சில நாட்களுக்குப் பின்னர் வாக்கிங் செல்லாவிட்டால் தூக்கம் வராது. அந்த அளவுக்கு ஒரு நல்ல பழக்கம் நமக்குப் பழகிவிடும். பண நிர்வாகமும் அப்படித்தான்.

அடிப்படையில் முதலில் மனம் மறுதலிப்பது நிற்க வேண்டும். `முடியும்' என நம்ப வேண்டும். `இல்லை சார், உங்களுக்கு அது சுலபம். நீங்க என்னதான் சொன்னாலும் சாமானியனுக்கு அது கொஞ்சம் டஃப்பான விஷயம்தான்' என்பவரா நீங்கள்?

அறம் பொருள் இன்பம் - 1

இந்தக் கேள்விகள் உங்களுக்குத்தான்!

1. (a + b)^2 = a^2 + b^2 + 2ac - இது எப்படி என விளக்க முடியுமா?

2. E=Mc^2 என்பதை விளக்க முடியுமா? அல்லது (Ohm's Law ) ஓம்ஸ் விதி என்றால் என்ன?

3. Periplaneta Americana என்றால் என்ன?

விடை:

`இதெல்லாம் ஒரு கேள்வியா சார்?' என டான்... டான் எனப் பதில் சொல்பவர்களுக்கு பணத்தைக் கையாளக் கற்றுக்கொள்வதில் சிரமம் இருக்கப்போவது இல்லை.

`இதெல்லாம் எங்கேயோ படித்த மாதிரி இருக்கே சார்' என நினைக்கும் மற்றவர்களுக்கும், `வாய் வரைக்கும் விடை வந்திருச்சு. ஆனா, நிக்குது' என்பவர்களுக்கும் இதெல்லாம் ஒன்றும் ஐ.ஐ.டி கேள்விகள் அல்ல.

கணிதம், இயற்பியல், தாவரவியல் என வகைக்கு ஒன்றாகக் கேட்கப்பட்டிருக்கும் இந்தக் கேள்விகள், நாம் பள்ளிப்பருவத்தில் படித்தவைதான். இவற்றில் பலவற்றுக்கு இன்று நம்மில் பெரும்பாலானோருக்குப் பதில் தெரியாது அல்லது மறந்தேபோயிருப்போம். இப்போது மறுபடியும் பதிலைத் தேடி புத்தகத்தைப் படிக்க முயன்றால், மனம் மறுக்கும். இதுதான் மனத்தடை. இதை வெல்லவேண்டியதுதான் நம் முதல் படிக்கட்டு.

அறம் பொருள் இன்பம் - 1

வாழ்க்கையில் இன்று எந்தவிதத்திலும் பயன்படாத இதுபோன்ற கடினமான விஷயங்களைக்கூட பள்ளிக்காலத்தில் கட்டாயத்தின் பேரில் கற்றுக்கொண்டிருக்கிறோம் அல்லவா?

1. கடினமானவை – அந்தக் காலகட்டத்தில்

2. பயன்படாதவை – என்றும்

அறம் பொருள் இன்பம் - 1

ஆனால், பணம் இப்படிப்பட்டது அல்ல. புரிந்துகொள்வதற்கும் கையாள்வதற்கும், மேலே சொன்ன அனைத்தையும்விட சுலபமானது. நம் ஒவ்வொருவருக்கும் எங்கேயும் எப்போதும் பயன்படக்கூடியது. அதைக் கற்றுக்கொள்வதில் நமக்கு என்ன தயக்கம்?

- பொருள் சேர்க்கலாம்...