அறம் பொருள் இன்பம் - 2

“கை   நெறைய சம்பாதிக்கிறேன்; தேவையான அளவு வசதிகள்; நல்லா செலவு செய்றேன். செலவு போக கையில் கணிசமா மிஞ்சுது. வொயிஃப் சம்பாத்தியம் வேற எக்ஸ்ட்ராவா... அப்புறம் என்ன கவலை? ஜாலியா லைஃபை என்ஜாய் பண்றதை விட்டுட்டு, இந்தக் காலத்துல போயி சேமிப்பு, முதலீடு, திட்டமிடறதுனு எதுக்கு சார் டயத்தை வேஸ்ட் பண்ணிக்கிட்டு?” - இது இன்று.
“மரத்தைவெச்சவன் தண்ணி ஊத்த மாட்டானா?” - இது என்றும்.

பலர் அடிக்கடி முன்வைக்கும் வாதங்கள் இவை. அப்படி ஒரு கூட்டத்தில் எல்லோரும் இப்படிச் சொன்னபோது நான் ஒரே ஒரு கேள்வியைத்தான் திருப்பிக் கேட்டேன். ``அதெல்லாம் சரி, எப்போது ரிட்டயர்டாக விரும்புகிறீர்கள்?”

ஆளுக்கொரு பதில் சொன்னார்கள். ஆண், பெண், வேலைக்குச் செல்வோர், தொழில்முனைவோர் என ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தினுசான பதில்கள்.

`அரசே சொல்வதால் 60 வயதில்.' ( சுயபுத்தி இல்லை?)

அறம் பொருள் இன்பம் - 2

`65-ல்' (மத்தவங்களைவிட கொஞ்சம் கூடவாம். அது என்ன கணக்கோ?)

``எதுக்கு சார் ரிட்டயர்டாகணும்? உடம்புல சக்தி இருக்குற வரைக்கும் உழைக்கணும் சார்!” (சூப்பர், உங்களுக்கு சிலைதான் வைக்கணும்!) 

``கடைசி காலம் வரைக்கும், சோத்துக்கு அடுத்தவனை நம்பி இருக்கக் கூடாது சார். அது பெத்த பிள்ளையா இருந்தாலும் சரி!”

இவர்களில் பலர் ரிட்டயர்டாவது என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. ரிட்டயர்டாவது என்பது ஓய்வு பெறுவது அல்ல. ரிட்டயர்டான பின்னரும் ஏதாவது வேலை பார்க்கலாம்; பார்க்காமலும் இருக்கலாம். அது வேறு. எப்படி?

மொத்தக் கூட்டத்திலும், ஒரே ஒரு கல்லூரி மாணவி மட்டும் தயக்கமாகச் சொன்னார்... “என்னைவிட்டா இப்பவே ரிட்டயர்டு ஆகிடுவேன் சார்” என்று! “ஏன்?” எனக் கேட்டேன்.
``அப்போதான் சார் நமக்குப் பிடிச்சதைச் செய்யலாம்.”

“அப்போ பணத்துக்கு?”

``அதுக்குத்தான் சார் இப்ப காலேஜ்ல படிக்கிறேன். முடிச்சுட்டு வேலைக்குப் போவேன். சீக்கிரமாவே நிறைய சம்பாதிப்பேன். ஓரளவு கையில காசு சேர்ந்ததும், வேலையை விட்டுருவேன்” என்றார் கண்கள் மின்ன.

“அப்புறம் என்னம்மா பண்ணுவே?”

“பயணிப்பேன். உலகம் முழுக்கப் பார்க்கணும். பல இடங்களுக்குப் போகணும். காடு, மலை, மிருகங்கள், தீவுகள்னு அலுக்குற வரைக்கும் எல்லாத்தையும் பார்த்துடணும் சார். அப்புறம் அடிப்படை வசதிகள்கூட இல்லாத குக்கிராமங்களில் தங்கி முடிந்தவரை சேவை செய்யணும்னு ஆசை” என்றவர், தொடர்ந்தார். “கடைசிக்காலத்துல ரிட்டயர்டான பின்னால இதெல்லாம் பார்க்கணும்னா, கையில பணம் இருந்தாலும், உடம்புல பலம் இருக்காது சார். மூட்டுவலி, பிரஷர், சுகர்னு ஏதாவது படுத்தும். அதுக்கு முன்னாடி எல்லாத்தையும் செய்யணும்னா, சீக்கிரமா வேலையை விட்டுறணும். அதுக்கும் முன்னாடி எக்கச்சக்கமா சம்பாதிச்சு சேமிச்சு வெச்சுரணும். அப்பதான் வாழ்க்கையை நம்ம நினைச்சபடி நல்லா என்ஜாய் பண்ணலாம்.”

தெளிவான தீர்க்கம்!

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் எனில், நாம் நியாயமாக நினைத்ததைச் செய்யும் பூரண சுதந்திரம் என்றைக்கு நமக்குக் கிடைக்கிறதோ, அன்றே நாம் ரிட்டயர்மென்டுக்குத் தயார். அதை அடைய முதலில் நமக்குத் தேவை நிதிச் சுதந்திரம்!

24 x 7 என 365 நாட்களும் கடுமையாக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது வாழ்வின் அடிப்படை அல்ல. வாழ்க்கையை வாழ வேண்டும்; கொண்டாட வேண்டும். சந்தோஷமாகக் கழிக்க வேண்டும் என்பதுதானே அடிப்படை நோக்கமாக இருக்க முடியும்?

அந்த இலக்கை அடைய, நம் படிப்பும் வேலையும் உழைப்பும் ஒரு கருவி, அவ்வளவே. ஆனால், நாம் கருவியையே பிடித்துக்கொண்டு, உண்மையாக வாழ மறுக்கும் அளவுக்கு பதப்படுத்தப்பட்டு விட்டோம். நாம் மனதளவில், சிந்தனை அளவில் கொத்தடிமையாக இருக்கிறோம்.

பலருக்கு வாழ்க்கையை என்ஜாய் பண்ணுவது என்றாலே, பாவம் செய்வதைப்போன்ற ஒரு குற்ற உணர்ச்சி வந்துவிடுகிறது. திருட்டுத்தனமாகச் செய்வார்கள். ஹாலிடே ட்ரிப் போகும்போதுகூட வேலையைக் கட்டிக்கொண்டு இம்சிப்பார்கள் – தன்னை மட்டுமல்ல, குடும்பத்தையும் சேர்த்து. அந்த அளவுக்கு வேலை, வேலை, வேலை!

``கடவுளே, போற இடத்துல வைஃபை-யோ, இன்டெர்நெட்டோ, இல்லை டவர் சிக்னலோ இருக்கக் கூடாது” எனக் குடும்பம் மொத்தமும் வேண்டிக்கொள்ளும்.

`வாழ்க்கையை என்ஜாய் பண்ண பணம் தேவை. பணம் சம்பாதிக்கணும்னா, அதுக்கு வேலை தேவை. நல்ல வேலை கிடைக்கணும்னா, அதுக்கு நல்ல படிப்பு தேவை. படிப்புக்கு நிறையப் பணம் தேவை!’ - என்ன ஒரு சுழற்சியான சிஸ்டம் இது? சமீபத்தில் வாட்ஸ்அப்பில் படித்தது.

மொத்தத்தில், வாழ்க்கையை வாழ்வதற்கு நிறையப் பணம் இருந்தால் வசதி. அதைத் துரிதமாகத் திட்டமிட்டுச் சேமித்தால், விரைவில் ரிட்டயர்டாகலாம். மனம் நினைத்ததைச் செய்யலாம்... சுதந்திரமாக.

ஏன் முறையாகத் திட்டமிட்டுச் சேமிக்க வேண்டும், அதுவும் விரைவாக - என்பதற்கு, அது மட்டும் காரணமல்ல. பல ஆய்வுகள் சொல்லக்கூடிய இன்னும் சில விஷயங்களையும் நாம் இங்கு கவனிக்க வேண்டும். படித்தால் கொஞ்சம் பயம் ஏற்படத்தான் செய்யும். அவை...

முதலாவதாக, நிச்சயமற்ற எதிர்காலம். அந்தக் காலம்போல இப்போது எல்லாம் ஜாப் செக்யூரிட்டி கிடையாது. `ஹையர் அண்ட் ஃபயர்' பாலிசி என்பது சாதாரணமாகிவிட்டது. 22 அல்லது
23 வயதில் ஒரு வேலையில் சேர்ந்தோம், அதே கம்பெனியிலேயே சுமார் 35 ஆண்டுகள் உழைப்புக்குப் பின்னர், 58 அல்லது 60 வயதில் ரிட்டயர்டானோம் என்ற பேச்சு எல்லாம் இப்போது கிடையாது. கம்பெனியும் அப்படி வைத்துக்கொள்வது இல்லை. நாமும் ஒரே கம்பெனியில் தொடர்ந்து இருப்பது இல்லை. சின்ன இன்க்ரிமென்ட்டோ, புரொமோஷனோ கிடைத்தால்கூட, அடுத்த கம்பெனிக்குத் தாவிவிடும் மூடில்தானே இருக்கிறோம்?

இப்படிப்பட்ட நிச்சயமற்றச் சூழலுக்கு ஏற்ப நம்மைத் தயார் செய்துகொள்கிறோமா என்றால், பெரும்பாலும் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. கையில் அதிகம் காசு புழங்கும்போது, செலவும் அதிகமாகச் செய்வோம். ஊதாரித்தனத்தை எல்லாம் நியாயப்படுத்துவோம். கையைக் கடிக்கும் போது லேட்டாக விழித்துக்கொண்டு என்ன பயன்?  

அடுத்ததாக, லாங்கிவிட்டி. முன்பெல்லாம் சஷ்டியப்தபூர்த்தி செய்துகொள்வது என்பதே ஒரு சாதனை... 60 வயது ஆரோக்கியமாக வாழ்ந்திருக் கிறோம் என. இப்போது சதாபிஷேகம் செய்து கொள்வோர் எண்ணிக்கையே பல மடங்காக அதிகரித்திருக்கிறது. காரணம்? மருத்துவ முன்னேற்றம்.

இன்றைய மருத்துவ வசதிகளால் நம் ஆயுட்காலம் வெகுவாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது... சிலருக்கு `ஏன்டா வாழ்கிறோம்?' என என்னும் அளவுக்கு. இதில் கவலை ஏன்? எல்லோருக்கும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்பது ஆசையானாலும், அதற்கான பண வசதி ஒரு கேள்விக்குறியாக அமைவதுதான் சிக்கல்.

30 வருடம் உழைப்பு, சம்பாத்தியம். பின்னர் இன்னுமொரு 30 வருடம் ஓய்வு. ஆனால் செலவு மட்டும், சம்பாத்தியம் இல்லாமல். இதுதான் பிரச்னை.

மூன்றாவதாக, தொடர்ந்து அதிகரித்துவரும் மருத்துவச் செலவுகள்: அமெரிக்காவில் 2000-ம் ஆண்டு தொடங்கி சுமார் 10 ஆண்டுகளில் மருத்துவச் செலவு ஏறத்தாழ இரு மடங்காக அதிகரித்திருப்பதாகச் சொல்கிறது `ஃபோர்ப்ஸ்' பத்திரிகை. அங்கே மட்டுமா? இந்தியாவை எடுத்துக்கொண்டால், ஆண்டுக்கு சராசரியாக ஐந்து சதவிகிதத்துக்கு மேல் மருத்துவச் செலவுகள் அதிகரித்திருப்பதாகச் சொல்கிறது நேஷனல் சாம்பிள் சர்வே. பணவீக்கத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாத ஏற்றம் இது.

ரிட்டயர்டான பின்னர் பெரும்பாலும் மருத்துவக் காப்பீடும் இருப்பது இல்லை என்பதால் இன்னும் அதிகச் சிக்கல். சேமிப்பில் இருந்து கைக்காசு செலவு... சம்பாத்தியமே இல்லாத காலகட்டத்தில்!
கடைசியாக இன்றைய குடும்பச் சூழல். பிள்ளைகளை, `படி, படி’ எனச் சொல்லி ஒரு இன்ஜினீயரிங் கல்லூரிக்கு அனுப்பி, கேம்பஸில் பிளேஸ்மென்ட் வாங்கி, அமெரிக்காவுக்கு அனுப்பி நம்மைவிட்டு வெகு தொலைவில் செட்டிலாகிறார்கள்.

இதனால் பணம், உடல் உழைப்பு என அந்தக் காலத்து கூட்டுக் குடும்பமுறையில் இருந்த சப்போர்ட் இப்போது மிகவும் குறைவு. கணவனும் மனைவியும் ஒன்றாக இருந்தாலே அது கூட்டுக் குடும்பம் எனும் அளவுக்கு ஆகிவிட்டது. ஆத்திரம், அவசரத் துக்கு யாரிடமும் கையேந்த முடியாது. நாம்தான் திட்டமிட வேண்டும்!

அறம் பொருள் இன்பம் - 2

ஆக மொத்தத்தில், நிச்சயமற்ற எதிர்காலம், ஓய்வுக்குப் பின் சம்பாத்தியம் இல்லாமல் அதிக காலம் வாழ்வதால் ஏற்படும் செலவுகள், தொடர்ந்து அதிகரித்துவரும் மருத்துவச் செலவுகளைச் சந்திப்பது, இவை எல்லாவற் றுக்கும் யாரையும் நம்பி இல்லாமல் சுய கௌரவத்துடன் வாழ்வது... என எல்லாவற் றுக்கும், முறையான திட்டமிடல், சேமிப்பு மற்றும் முதலீடு ஆகியவை இன்றியமையாதது.

எவ்வளவு சேமிப்பது, எப்படித் திட்ட மிடுவது? எங்கு முதலீடு செய்வது? பார்க்கலாம்.

- பொருள் சேர்க்கலாம்...

``கடன் வாங்கி வீட்டு மனை வாங்குவது சரியா?”

கடன் வாங்கி வீடு வாங்கலாம்; அப்பார்ட்மென்ட்கூட வாங்கலாம்; மனை வாங்க கொஞ்சம் யோசிப்பது நல்லது. ஏன்?

வீடு அல்லது அப்பார்ட்மென்ட் வாங்குகையில், ஒன்று, அதில் நாம் தங்கலாம் – வீட்டு வாடகை மிச்சம். அல்லது, அடுத்தவருக்கு வாடகைக்குவிடலாம் – வருமானம் வரும். எப்படிப் பார்த்தாலும் பணம் மிச்சம் அல்லது வருமானம்.

அதுமட்டுமல்ல, சொத்து மதிப்பு அதிகரித்து, நீண்டகால அடிப்படையில் மூலதன ஆதாயமும் வர வாய்ப்புண்டு அல்லவா?

மேலும், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, வருமானவரிச் சலுகைகளும் அள்ளி வழங்கப்படுகின்றன. மாதா மாதம் நாம் கட்டும் ஈ.எம்.ஐ தவணையில், முதல் பணத்தை திருப்பிக் கட்டும் கணக்கில் ஆண்டுக்கு 1.50 லட்சம் ரூபாய் வரை வரிச்சலுகை பெற முடியும். அதில் கட்டும் வட்டி முழுவதையுமே வரிவிலக்காகப் பெற முடியும்... வீட்டை வாடகைக்குவிட்டிருக்கும் பட்சத்தில். ஒருவேளை நாமே அதில் குடியிருந்தாலும், திருப்பிக் கட்டும் வட்டி மீது வருமான வரிச்சலுகை உண்டு... 2 லட்சம் ரூபாய் வரையில். 

இடம் வாங்கி அதீத லாபம் பார்த்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இப்போதைய காலகட்டத்தில், மனை வாங்குவது பொதுவாக லாபகரமாக அமைவது குறைவு. இப்போது இடம் என்பது ஒரு லயபிலிட்டி-யாக மாறி வருகிறது. சில ஆண்டுகளாகவே சந்தை டல்லானதால், மனைகளை விற்க முடிவதில்லை.
 
வீடாகாவோ, அப்பார்ட்மென்ட்டாகவோ இருந்தால் இந்தக் காலகட்டத்தில் மாதா மாதம் வாடகையாவது வரும். மனையில் அந்தச் சாத்தியம் மிகக் குறைவு.

நாம் குடியிருக்கவும் பயன் தராது... வீடு கட்டும்வரை.

வீட்டுக் கடனைவிட, நிலம் வாங்க வெகு சில வங்கிகளே கடன் கொடுக்கின்றன. அதேசமயம், அதன் மீதான வட்டி விகிதமும் வீட்டுக் கடனைவிட சற்றே அதிகம்.

திருப்பிக் கட்டும் பணத்தின் மீது வருமானவரிச் சலுகைகளும் கிடையாது; நீண்டகால ஆதாயத்தின் மீதும் வரிச்சலுகைகளும் ஏதும் பெரிதாகக் கிடையாது... விவசாய நிலமாக இருந்தாலொழிய.

இடம் கண்பார்வையில் இல்லையென்றால் சட்டத்துக்குப் புறம்பான நில ஆக்கிரமிப்புகள் நடக்கும் ஆபத்தையும் பார்க்கிறோம்.

வருமானமும் இல்லை; வரிச்சலுகையும் இல்லை. கடன் மீதான வட்டியும் அதிகம். பின்னர் அதிக விலைக்கு விற்பதன் மூலம் மட்டுமே லாபம் பார்க்க முடியும் எனும் சொத்தை, கடனில் வாங்குவது சரியான முடிவாக இருக்காது. விதிவிலக்குகள் இருக்கலாம்; எனினும், மேலே சொன்னவற்றை எடைபோட்டுப் பார்த்து பின் முடிவெடுப்பது நல்லது.