Published:Updated:

ஜொமோட்டோ, ஈஸி டைனரிலிருந்து 1,200 உணவகங்கள் விலகியது ஏன்?!

செ.கார்த்திகேயன்

இரண்டு நாள்களுக்கு முன்பு குர்கானில் தொடங்கிய #Logout பிரசாரம், தற்போது நாடு தழுவிய ஒன்றாக மாறியுள்ளது.

Zomato #Logout
Zomato #Logout

இன்று இந்தியா முழுவதிலுமுள்ள 1,200 உணவங்கள் ஜொமோட்டோ, ஈஸி டைனர் போன்ற சில அப்ளிகேஷன் சேவைகளின் திட்டங்களிலிருந்து தங்களை விலக்கிக் கொண்டதுதான் டாக் ஆஃப் தி டவுனாக மாறியிருக்கிறது.

உணவு டெலிவரி நிறுவனங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வரும் இந்தச் சமயத்தில், ரெஸ்ட்டாரன்ட்கள் ஜொமோட்டோ, ஈஸி டைனர், நியர்பை, மேஜிக் பின் மற்றும் கர்மெட் பாஸ்போர்ட்  நிறுவனங்களுடன் இருந்த பிஸினஸ் உறவை நிறுத்தி இருக்கின்றன. 

குறிப்பாக மும்பை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, கோவா, புனே  ஆகிய இடங்களில் உள்ள உணவங்கள், உணவுகளை டெலிவரி செய்யும் அப்ளிகேஷன் சேவைகளின் உணவருந்தும் திட்டங்களிலிருந்து, விலகி உள்ளன. இதற்காக #Logout என்கிற பிரசாரமும் ஆரம்பிக்கப்பட்டு, அது தொழில் பிரச்னைகள் குறித்த விவாதமாக மாறியிருக்கிறது.

Zomato
Zomato

இந்திய தேசிய உணவக சங்கத்தின் (National Restaurant Association of India) தலைவர் ராகுல் சிங் பேசியபோது, ``இரண்டு நாள்களுக்கு முன்பு குர்கானில் தொடங்கிய #Logout பிரசாரம், தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளது. உணவுகளை டெலிவரி செய்யும் அப்ளிகேஷன் நிறுவனங்களுக்கு அதிகப்படியான ஆஃபர்களை வழங்குவதால், பெரும்பாலான ரெஸ்டாரன்ட்கள், அவர்களின் வியாபாரத்தில் நஷ்டத்தைச் சந்தித்திருக்கின்றன. இதனால் அவர்கள் சேவை நிறுவனங்கள் வழங்கும் திட்டங்களிலிருந்து விலகியிருக்கிறார்கள்" என்றார்.