Published:Updated:

எஸ்எம்இ-களுக்கு உள்ள பிரச்னைகள்... தீர்வுகள்!

எஸ்எம்இ-களுக்கு உள்ள பிரச்னைகள்... தீர்வுகள்!
எஸ்எம்இ-களுக்கு உள்ள பிரச்னைகள்... தீர்வுகள்!

செ.சல்மான், சோ.கார்த்திகேயன்

எஸ்எம்இ-களுக்கு உள்ள பிரச்னைகள்... தீர்வுகள்!

லக அளவில் பொருளாதாரம் சரிவடைந்தபோது நம் நாட்டில் அதன் பாதிப்பு பெரிய அளவில் இல்லை. காரணம் இங்குள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்தான் (எம்எஸ்எம்இ). விவசாயத்திற்கு அடுத்து  அதிக வேலை வாய்ப்பை வழங்குவது ‘எம்எஸ்எம்இ’கள்தான்.

நாட்டின் உற்பத்தியை பெருக்கி, பொருளாதார தேக்கமில்லாமல், வேலைவாய்ப்பையும் வழங்கும் நிறுவனங்கள் தற்போது பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றன. 

இது குறித்து கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (கொடீசியா) தலைவர் பொன்னுசாமியிடம் கேட்டோம்.

“எம்எஸ்எம்இ நிறுவனங்களிடமிருந்து 20% பொருட்களை பொதுத் துறை நிறுவனங்கள் கொள்முதல் 

எஸ்எம்இ-களுக்கு உள்ள பிரச்னைகள்... தீர்வுகள்!

செய்ய வேண்டும் என அரசு உத்தரவு உள்ளது. ஆனால், 20% கொள்முதல் செய்யாத நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது தெரியவில்லை.

எம்எஸ்எம்இ-களிடமிருந்து 20% கொள்முதல் செய்வது என்பதில் என்னென்ன பொருட்கள் செய்யப்படும் என்பதும் தெரியாமலே உள்ளது.

எம்எஸ்எம்இ வளர்ச்சியடைய திறன் மேம்பாடு (ஸ்கில் டெவலப்மென்ட்) அவசியத் தேவையாக உள்ளது. எம்எஸ்எம்இ-ல் எவ்வளவு வேண்டுமானாலும் தொழில் பழகுநர்கள் (அப்பரன்டீஸ் - apprentice) வைத்துக் கொள்ளலாம் என்ற நிலையை கொண்டு வர வேண்டும்.

தற்போது எம்எஸ்எம்இ-ல் தொழில் பழகுநர்கள் வைத்துக் கொள்ளவே முடியாத சூழ்நிலைதான் உள்ளது. இரண்டு  பேர் மட்டுமே வைத்துக் கொள்ளலாம் என்ற நிலை இருக்கிறது. ஆனால், அதற்கே பல கட்டுப்பாடுகள் உள்ளன. இவற்றை சரி செய்தால்தான் தொழில் வளரும்.

நிறுவனங்கள் எளிதில் தொழில் தொடங்க ஏதுவாக ஒற்றைச் சாளர முறையில் அனைத்து அனுமதியும் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நில பயன்பாடு மாற்றி அமைப்பு (land reclassification), மாசு கட்டுப்பாடு உட்பட எல்லாமே ஒற்றைச்சாளர முறையில் அனுமதி கிடைத்திட வழி செய்ய வேண்டும்.

வாராக் கடன் விதிமுறைகள்  எல்லாம்  அனைத்து நிறுவனங்களுக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும். வங்கிக் கடனை தொடர்ந்து மூன்று மாதம்  கட்டவில்லை என்றால் வாராக் கடன் என்றாகி விடுகிறது. ஆனால், கொள்முதல் செய்யப்பட்ட  பொருட்களுக்கு பல மாதங்கள் கழித்துதான்  பணம் வந்து சேர்கிறது. இப்படி இருந்தால் நிறுவனங்களின் வாராக் கடன் அதிகரிக்காமல் இருக்குமா?. வங்கிகளும் தொழில் நிறுவனங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்” என்றார்.

எஸ்எம்இ-களுக்கு உள்ள பிரச்னைகள்... தீர்வுகள்!

தமிழ்நாடு சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கத்தின் (டான்ஸ்டியா) துணைத் தலைவர் மோகன், சிறுதொழில் நிறுவனங்கள் அதிகம் சந்திக்கும் வாராக் கடன்  பிரச்னையைப் பற்றி கூறும் போது, “எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்குப் பணப் பட்டுவாடா  45 நாட்களுக்குள் நடக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தாலும் கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் தருவதில்லை.  மின்சார வாரியம், பிஹெச்இஎல் உட்பட பல மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் கூட கொள்முதலுக்கான தொகையை முறையாக வழங்குவதில்லை. இதனால், பல நிறுவனங்கள் மேலும்  கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டு கடன் சுமை அதிகரிக்கிறது.

எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு பணப்பட்டுவாடா உடனடியாக கிடைக்காதபட்சத்திலும் விற்பனை வரி, பிராவிடெண்ட் ஃபண்ட், இஎஸ்ஐ, கலால் வரி என எல்லாமே உடனடியாக கட்டியாக வேண்டும் என்ற சூழ்நிலை உள்ளது. இவற்றை செலுத்தவில்லை என்றால் அபராதம், அதன்பிறகு நிறுவனத்திற்கு பூட்டும் போடப்படுகிறது.

ஜாமீன் (collateral security) இல்லாமல் ஒரு கோடி ரூபாய் வரை கடன் வழங்க வேண்டும் என்று வங்கிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் என்னதான் சட்டம் இருந்தாலும் வங்கிகள் கடன் வழங்குவதில்லை. ஏன், தமிழக அரசின் நீட்ஸ் திட்டத்தின் (NEEDS  Scheme) கீழ் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு தொழில் தொடங்க போதுமான பயிற்சிகளை அளித்து, கடன் வழங்கலாம் என அரசு சான்றிதழ் அளித்த பிறகும் பலருக்கு வங்கிகள் கடன் வழங்குவதில்லை. வங்கிகள் கடன் வழங்காதற்கு ஒரே காரணம்  ஷூரிட்டி இல்லாதது மட்டுமே.

வீட்டுக் கடன், கார் கடனுக்கு எல்லாம் வட்டி குறைவாகவே உள்ளது. ஆனால், எம்எஸ்எம்இ-கள் வாங்கும் கடனுக்கு  வட்டி 12% முதல் 18% வரை  அதிகமாக இருக்கிறது. சீனாவில் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு 4% முதல் 6% என குறைந்த வட்டியில் கடன் வழங்குகின்றனர்.

நிறுவனங்கள் தொழில் தொடங்க நில பயன்பாடு மாற்றத்தில் பல பிரச்னைகள் உள்ளன. இப்போது தெலங்கானா மாநிலத்தில் இதில் இருந்த பல சிக்கல்களை நிவர்த்தி செய்து எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு ஊக்கமளித்து வருகின்றனர்.

நமது அண்டை மாநிலங்கள் தொழில் கொள்கையை மாற்றி எம்எஸ்எம்இ நிறுவனங்களை கவர்ந்து வருகின்றன. இதில் மிக முக்கியமான ஒன்று  கொள்முதல் முன்னுரிமை, விலை முன்னுரிமை (Purchase Preference, Price Preference). இதன்படி, அந்ததந்த மாநில அரசுகள் அந்த மாநிலங்களில் உற்பத்தியாகும் பொருட்களை கொள்முதல் செய்ய முன்னுரிமை அளிக்கின்றன. அந்த மாநிலத்தில் உள்ள நிறுவனம் சொல்லும் விலை அதிகமாக இருந்தாலும் அதற்கு முன்னுரிமை அளித்து அந்த நிறுவனத்தின் பொருட்களை கொள்முதல் செய்கிறார்கள். இதேபோல், தமிழக அரசும் தனது தொழில் கொள்கையில் எம்எஸ்எம்இ-க்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

தமிழகத்தில் மின்சார வாரியத்தை நம்பி பல சிறிய நிறுவனங்கள் இருக்கின்றன. இதற்கு முன் டிரான்ஸ்பார்மர், ஸ்விட்ச், கேபிள் என தனித்தனியாக டெண்டர் விட்டு கொள்முதல் செய்து வந்தனர். இப்போது வெளிமாநிலங்களிலிருந்து தேவையான அனைத்தையும் ஒரே டெண்டராக போட்டுவிடுகின்றனர். இதனால், சிறிய நிறுவனங்கள் யாரும் கொட்டேஷன் கொடுக்க முடியாத நிலையில்தான் உள்ளனர். இதன் மூலம் பயனடைவது எல்லாம் வெளிமாநிலங்களிலிருந்து செயல்படும் பெரிய நிறுவனங்கள் மட்டுமே.

எஸ்எம்இ-களுக்கு உள்ள பிரச்னைகள்... தீர்வுகள்!

இவர்களிடமிருந்து தமிழகத்தில் உள்ள எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு எந்த ஒரு டென்டரும் கிடைப்பதில்லை. ஆந்திரா, தெலங்கானா மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் எல்லாம் இதுபோன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கி எம்எஸ்எம்இ நிறுவனங்களை வாழ வழி செய்ய வேண்டும்” என்றார்.

மதுரை மாவட்ட சிறு குறு தொழில் சங்கத்தின் (மடிசியா) துணை செயலாளர் மணிமாறன் கூறும்போது, ‘‘பாத்திரங்கள் முதல் தீப்பெட்டி, மெழுகுவர்த்தி, ஊறுகாய்  வரை பெரு நிறுவனங்கள் தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.  இதை  கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதால் பல  குறு, சிறு,தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. 

தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகளும், வேலைவாய்ப்பும் மிகவும் குறைவு. மாநிலத்தில் ஆட்சிகள் மாறி மாறி வந்தாலும் சிறு குறு தொழில்கள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.

மின் இணைப்பு வாங்க முதலீட்டில் பாதியை செலவு செய்ய வேண்டியுள்ளது. மத்திய அரசு,  தூத்துக்குடி முதல் மதுரை வரை இண்டஸ்ட்ரியல் ஜோன் கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளது. இதில் பல ஆயிரம் ஏக்கரில் பெரு நிறுவனங்கள் தொழிற் சாலைகளை துவக்க உள்ளன. அதில் 20% சிறுகுறு தொழில்களுக்கு ஒதுக்கினால், இத்தொழில் சிறப்பாக நடைபெறும். 

ஒரே சீரான வரி விதிப்புகளை விதிக்க வேண்டும். சீனாவில் தொழில் துவங்க எந்த கட்டுப்பாடுமில்லை. அதனால், அங்கு சிறு, குறு தொழில் வளர்ச்சி அதிகரித்து கொண்டே போகிறது. பங்களாதேஷில் தொழில் துவங்குகிறவர்களுக்கு அரசாங்கமே அனைத்து சலுகைகளையும் வழங்குகிறார்கள். இந்திய நிறுவனங்கள் அனைத்தும் அங்கே தொழில் செய்ய போய்விட்டன. இன்னும் கொஞ்ச நாட்களில் பங்களாதேஷ் பொருளாதாரத்தில் எங்கேயோ போய்விடும். அதுபோல் இல்லாவிட்டாலும் ஓரளவாது சிறு, குறுதொழில்களுக்கு அரசு உதவ வேண்டும்’’
என்றார்.

தமிழ்நாட்டில் 10 லட்சத்துக்கும் அதிகமான எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. மீண்டும் ஆட்சியை பிடித்து இருக்கும் அதிமுக அரசு இவர்களின் பிரச்னையை நிச்சயம் விரைவில் நிறைவேற்றும் என்று நம்புகிறோம்.

நிறைவேற்ற கால தாமதமோ அல்லது இதை அரசு கண்டுகொள்ளாத பட்சத்தில் வலுவான எதிர்கட்சியாக திகழும் திமுக சட்டமன்றத்தில்  கோரிக்கையை நிறைவேற்றிட உதவி செய்ய வேண்டும்.

எல்லாம் தலைகீழாக நடக்கிறது!

எஸ்எம்இ-களுக்கு உள்ள பிரச்னைகள்... தீர்வுகள்!



பெரீஸ் மகேந்திரவேல், தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க செயலாளர் “முன்பெல்லாம் சிறு தொழில்களை பாதுகாத்து, பெருந்தொழில்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பாங்க. இப்ப பெருந்தொழில்களை பாதுகாத்து சிறுகுறு தொழில்களை நசுக்குறாங்க. சுதேசி பொருட்களுக்கு முன்னுரிமைனு சொன்னாங்க, நாங்களும் நம்பினோம். இப்ப வெளிநாட்டு கம்பெனிகளுக்குத்தான் முன்னுரிமை தர்றாங்க. முத்ரா  திட்டத்தில் சிறு தொழில்களுக்கு கடன் கொடுப்பதாக சொல்றாங்க. இதை யாருக்கு கொடுத்தாங்க, யாரு வாங்கினாங்கன்னு தெரியலை. அதில் வெளிப்படைத்தன்மை வேண்டும்.

சிறு குறு தொழில்களை பெரிய நிறுவனங்கள் செய்வதை தடுக்கணும். வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேர தடையில்லா மின்சாரம், பலவித வரிகளிலிருந்து தள்ளுபடி, தொழிலாளர் சட்டங்களிலிருந்து விலக்கு, என்று பல சலுகைகள் காட்டுகிறார்கள். இதேபோல் சிறு குறு தொழில்களுக்கும் சலுகைகள் வழங்க வேண்டும்.”

அடுத்த கட்டுரைக்கு