Published:Updated:

அறம் பொருள் இன்பம் - 4

அறம் பொருள் இன்பம் - 4
பிரீமியம் ஸ்டோரி
News
அறம் பொருள் இன்பம் - 4

வ.நாகப்பன்

அறம் பொருள் இன்பம் - 4

`நீங்க சொல்ற மாதிரி திட்டம்போட்டுக் கட்டுசெட்டாத்தான் குடும்பத்தை நடத்துறோம். இருந்தாலும், திடீர்னு ஏதாவது செலவு வந்துடுது. திட்டம் எல்லாம் பாழாகிடுது' எனப் புலம்புவோர் உண்டு.  இப்படிப்  புலம்புவது, தீர்வுக்கு வழி வகுத்ததாகச் சரித்திரம் இல்லை.

நிதி திட்டமிடலில் வரும் சிக்கல்கள் என்னென்ன?

1. எதிர்காலத்தில் பணவீக்கம் அதிகரித்தல் காரணமாக, நம் சேமிப்பின் உண்மையான மதிப்பு குறைதல்.

2. எதிர்காலத்தில் வட்டிவிகிதம் குறைதலால், நம் முதலீட்டின் மீது நாம் எதிர்பார்த்த வருவாய் வராமல்போவது.

இந்தப் பிரச்னைகளால் நம் சேமிப்புப் போதாமல், அன்றாட வாழ்க்கைக்கே நாம் எதிர்பாராமல் தாக்குண்டு நிலைகுலைந்து போகிறோம். இவை இரண்டு போக, மூன்றாவதாக முக்கியமான ஒரு சிக்கல் இருக்கிறது.

குடும்ப உறுப்பினர்களில் யாருக்காவது உடல்நலனில் பெரிய பாதிப்பு வந்தாலோ அல்லது குடும்பத்தலைவருக்கே உடல்நிலை பாதிக்கப்பட்டாலோ, ஆஸ்பத்திரி, டாக்டர்  என மருத்துவச் செலவுகள் ஒருபக்கம் அழுத்த, மறுபக்கம் உடல் முடியாமை காரணமாக வேலைக்குச் செல்லாமல் வருவாயையும் இழக்க நேரிடலாம் அல்லவா?

இதைச் சமாளிக்க, நாம் முதலில் கை வைப்பது நம் சேமிப்பில்தான். இல்லையேல் தங்கம், வீடு என எதையாவது அடமானம் வைப்பது அல்லது விற்பது. இப்படிச் செய்வதால்,  நம் திட்டம் முழுவதும் க்ளோஸ். ஓய்வுகாலம் ஆட்டம்காணும் - கையில் காசு இல்லாமல்.

பிறகு என்ன செய்வது? குடும்பத்தில் யாருக்காவது ஏதாவது திடீரென வரலாம் என லட்சக்கணக்கில் கையில் பணம் வைத்துக் கொண்டிருக்க எல்லோராலும் முடியுமா? இல்லை அது சரியான தீர்வா?
இருக்கவே இருக்கின்றன காப்பீட்டுத் திட்டங்கள். அதில் மிக முக்கியமானவை, நம் ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியமானவை:

1. முதலில் நாம் உயிருடன் இருக்கையில், நம்மைக் காப்பாற்ற மருத்துவக் காப்பீடு.

2. தனிநபர் விபத்துக் காப்பீடு – விபத்தில் சிக்கி நாம் செயலற்று இருக்கும்போது.

3. டேர்ம் பாலிசி – ஒருவேளை துரதிஷ்டவசமாக நாம் இல்லாதேபோனாலும் நம் குடும்பத்தைக் காப்பாற்ற.

அறம் பொருள் இன்பம் - 4

இந்த மூன்றையும் இம்போசிஷன் மாதிரி திரும்பத் திரும்பச் சொல்லி மனப்பாடம் செய்துகொள்ளுங்கள். இவை நம் ஒவ்வொரு வருக்கும் அவ்வளவு முக்கியம்!

``நீங்க மேலே சொல்ற மூன்று பாலிசியிலயும் பணம் திருப்பிக்  கிடைக்காதாம்ல... ஏஜென்ட் சொன்னார்.''

உண்மைதான். அவருக்கும் பெரிதாகக் கிடைக்காது, உங்களுக்கும் எதுவும் கிடைக்காது, உங்க உடம்புக்கோ உயிருக்கோ ஏதாவது நடக்கும் வரையில். எனவே, தயவுசெய்து பணம் ஏதும் திரும்பக் கிடைக்கவே வேண்டாம் என்றே வேண்டிக்கொள்ளுங்கள். சரிதானே!

எதற்காகப் பணம் திரும்பக் கிடைக்க வேண்டும் – உடம்புக்கு ஒன்றும் இல்லாதபட்சத்தில்?

முதலில் ஒன்று: காப்பீட்டையும் முதலீட்டையும் சேர்த்துக் குழப்பிக்கொள்ளாதீர்கள். காப்பீடு என்பது, ஒரு முதலீடு அல்ல; எதிர்பாராத அவசரக் காலங்களில் உங்கள் முதலீட்டுக்குப் பங்கம் வராமல் பத்திரமாகக் காப்பாற்றும் ஆபத்பாந்தவன். இதைத் தெளிவாகப் புரிந்துகொண்டால்தான், நாம் மேலே நகர முடியும்.

ஒரு `எண்டோவ்மென்ட் பாலிசி'க்கோ, `மணி பேக் பாலிசி'க்கோ கட்டும் பிரீமியம் பணத்தை இரண்டாகப் பிரித்து, ஒரு பகுதியில் காப்பீடு போக மீதப் பணத்தை வேறு நல்ல பாதுகாப்பான முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்தால்கூட, குறைவான பிரீமியத்தில் உங்களுக்கு அதிகமான இன்ஷூரன்ஸ் கவரேஜ் ஒரு பக்கமும், அதிக வருவாய் மறுபக்கமும் கிடைக்கும் என்பதற்கு நான் உத்தரவாதம்.

`டேர்ம் பாலிசியில், பிரீமியமும் குறைவு. அதே சமயம் கவரேஜோ அதிகம். ஏனைய பாலிசிகளில் பெரும்பாலும் பிரீமியம் தொகை மிக அதிகமாகவும் கவரேஜ் மிகக் குறைவாகவும் இருக்கும்.

அடுத்ததாக, இன்ஷூரன்ஸ் என்பது ஆப்ளிகேஷன் அல்ல; அது உங்களுக்கான அத்தியாவசியத் தேவை. இந்தப் புரிதல் மிக அவசியம். எனவே, அடுத்த முறை உங்கள் அலுவலக நண்பரோ அல்லது உறவினரோ காப்பீடு முகவர் எனும் ஒரே காரணத்துக்காகவோ அவரை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவோ மட்டும் காப்பீடு எடுக்காதீர்கள். உங்களின் உண்மையான தேவை என்ன என்பதைக் கணக்கிட்டு, அதற்கான காப்பீட்டை எடுப்பதே நல்லது.

மிக முக்கியமாக, `என் முதல் பிரீமியத்தை நீ கட்டுகிறாயா?' என இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டிடம் தயவுசெய்து கேட்காதீர்கள். பாவம், அது அவரது சம்பாத்தியம். அதில் மண்ணைப் போடலாமா? `சேர்மன் கிளப் என்றால் அதிகம் கட்டுவாராம்’ என வேறு ஒரு குரூப் கிளம்பியிருக்கிறது. இப்படி எல்லாம் ஓசியில் காப்பீடு எடுத்தால், நமக்குத் தேவை இல்லாததை நம் தலையில் கட்டாமல் வேறு என்ன செய்வார்கள்?

முடிந்தால் அவருக்கு  ஒருமுறையாவது ஆலோசனைக் கட்டணம் கொடுத்துப் பாருங்களேன். சிறந்ததொரு பாலிசியை நமக்குப் பரிந்துரைப்பார் அல்லவா?

கொஞ்சம் பிரீமியம் அதிகமாகக் கொடுத்தால், இந்த மூன்று பலன்களையும் அல்லது இதில் ஏதாவது இரண்டு பலன்களையும் ஒருசேரக் கொடுக்கும் சில காப்பீடுகளும் இப்போது கிடைக்கின்றன.
எல்லோர் மனதிலும் எழும் கேள்வி... `எனக்கு எவ்வளவு காப்பீடு தேவை?’

இது ஆளுக்கு ஆள் மாறுபடும். மருத்துவக் காப்பீட்டைப் பொறுத்தவரையில், நம் வயதைப் பொறுத்து, நம் வருவாயை மட்டுமே நம்பி இருக்கும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் வயதைப் பொறுத்தும், குடும்பச் செலவுகள் எவ்வளவு என்பதை கணக்கில்கொண்டும் மாறுபடும்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? காப்பீட்டைப் பொறுத்தவரையில் `இந்தியா அண்டர் கவர்டு நேஷன்' என்கிறார்கள். அதாவது, தேவையான அளவுக்கு நாம் காப்பீடு எடுப்பது இல்லை. அதை வெறும் வேண்டாத செலவாகவோ, ஆப்ளிகேஷனாகவோதான் பெரும்பாலோர் எடுக்கிறோம்.

ஆயுள்காப்பீடைப் பொறுத்தவரையில், உண்மையில் நம் தேவை என்ன... எப்படிக் கணக்கிடுவது?

இதற்கு பொதுவான சூத்திரம் ஏதும் இல்லை என்றாலும், அவரவர் தேவையின் அடிப்படையில் சிறிய கணக்கு ஒன்று போடலாமா?

என் குடும்பத்தின் மாதச் செலவு 50,000 ரூபாய் என வைத்துக்கொள்வோம். உத்தேசமாக ஆண்டுச் செலவுகள் 6 லட்சம் ரூபாய். ஒருவேளை நான் விபத்தில் சிக்கியோ உடல்நலம் பாதிக்கப்பட்டு, பணம் சம்பாதிக்க முடியாத சூழல் உருவானால், அதன் பாதிப்பு தெரியாமல் வழக்கம்போல என் குடும்பச் செலவுகளைச் சரிக்கட்ட இந்தத் தொகை தேவை. குறைந்தபட்சம் ஆண்டுக்கு 6 லட்ச ரூபாய் வருவாய் தரக்கூடிய அளவுக்கு, காப்பீட்டுத் தொகை அல்லது கவரேஜ் இருக்க வேண்டும்.
 
அப்போதுதான், இழப்பீட்டின் மூலம் வரும் தொகையை பாதுகாப்பான முதலீட்டில் முதலீடுசெய்து, அதன் மூலம் ஆண்டுக்கு 6 லட்ச ரூபாய்  கிடைக்கும். இன்றைய தேதியில் பாதுகாப்பான முதலீடு என்றதும் உடனே நினைவுக்கு வருவது வங்கி வைப்புநிதிதான். அதில் முதலீடு செய்யும்போது இப்போதைய வட்டி ஆண்டுக்கு 7.50 சதவிகிதம். ஆக, ஆண்டுக்கு 7.50 சதவிகித வருவாயில் 6 லட்ச ரூபாய் கிடைக்கத் தேவையான முதலீடு எவ்வளவு எனக் கணக்கிட வேண்டும். விடை: ரூ.80 லட்சம்!

இப்போது கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்; மாதம் ரூ. 50,000/- வருவாய் உள்ளவர்களில் நம்மில் எத்தனை பேர் 80 லட்ச ரூபாய்க்குக் காப்பீடு வைத்திருக்கிறோம்? எவ்வளவு பெரிய ரிஸ்க்கில் நம் குடும்பத்தை வைத்திருக்கிறோம் என்பது தெரிகிறது அல்லவா?

அதோடு நிற்கவில்லை நம் ரிஸ்க். சென்ற ஆண்டு 9 சதவிகிதமாக இருந்த வங்கி வட்டி விகிதங்கள் குறைந்து, இப்போது 7.50 சதவிகிதம் ஆகியிருக்கிறது. ஒருவேளை இது மேலும் குறைந்து, 2008-ம் ஆண்டு இருந்ததுபோல ஆண்டுக்கு 6 சதவிகிதமானால்..? அப்போது இந்த 80 லட்சம் முதலீடு/கவரேஜ் பத்தாது; குறைந்த வட்டி காரணமாக இதே வருவாயை ஈட்ட, 1 கோடி ரூபாயாவது வேண்டும். தயாரா நாம்?

இன்னும் ஒன்று சொன்னால் திகில் கூடும்.

பணவீக்கம் காரணமாக நம் செலவு அதிகரித்து, ஆண்டுக்கு ரூ 6 லட்சம் என்பது உயர்ந்து ரூ. 8 லட்சமாக மாறினால், ஆண்டுக்கு 6 சதவிகித வட்டியில் நமக்குத் தேவையான முதலீடு/கவரேஜ் ரூ. 1,33,33,333/- அம்மாடியோவ்!

இப்போது கைவசம் வைத்திருக்கும் பாலிசிகளை எடுத்து மொத்த கவரேஜ் எவ்வளவு எனக் கணக்கிடுங்கள் பார்க்கலாம்!

உத்தேசமாகச் சொல்வதானால், நம்முடைய தற்போதைய ஆண்டுச் செலவுகளைப்போல சுமார் 20 மடங்காவது கவரேஜ் இருந்தால், எதிர்காலத்தைப் பற்றியோ, குடும்பத்தைப் பற்றியோ அதிகம் கவலைப்படாமல் ஓரளவுக்கு நிம்மதியாக இருக்கலாம்.

`அதுசரி, கோடிக்கணக்கில் கவரேஜுக்கு பாலிசி எடுக்கிறதுக்கு எல்லாம் எங்கே சார் பணம் இருக்கு?' என்பவர்களுக்கு, அங்குதான் டேர்ம் பாலிசி வருகிறது ஆபத்பாந்தவனாக.

உதாரணத்துக்கு, சுமார் 30 வயதில் உள்ளோருக்கு மாதம் ரூ.1,000/-க்கும் குறைவாக பிரீமியம் கட்டினாலே, இப்போது ஒரு கோடி ரூபாய்க்கான காப்பீடு கிடக்கிறது.

அறம் பொருள் இன்பம் - 4

சிறு தொகையை இத்துடன் சேர்த்துக் கட்டினால், கூடுதலாக விபத்துக் காப்பீடு, மருத்துவக் காப்பீடு போன்றவையும் கிடைக்கின்றன. முன்னர் எல்லாம் இந்த கவரேஜ் 60 அல்லது 65 வயதோடு நின்றுவிடும். இப்போது 85 வயதுவரையிலும் கிடைக்கிறது.

எளிதாகச் சொன்னால், நாள் ஒன்றுக்கு 30 ரூபாய். அதாவது, ஒரு காபியை கட் பண்ணினால், நல்ல காப்பீடு கிடைக்கும்.

ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம்; பாதுகாப்புக்குப் பாதுகாப்பு!

- பொருள் சேர்க்கலாம்...

காப்பீட்டையும் முதலீட்டையும் பிரித்தால்...

ஆண்டுக்கு 12,000 ரூபாய் கட்டி, ஒரு கோடி ரூபாய்க்குக் காப்பீடு எடுத்துக்கொள்ளலாம். அடுத்த 15 ஆண்டுகளில் நாம் கட்டும் பிரீமியம் 1.80 லட்சம் ரூபாய். இதற்கு எந்த வருவாயும் கிடையாது. முழுவதுமே செலவுதான்.

அறம் பொருள் இன்பம் - 4

ஆண்டுக்கு 1.50 லட்சம் ரூபாயை, 15 ஆண்டுகாலப் பொது சேமநல நிதியில் போடலாம். இப்போதைய வட்டிவிகிதம் 8.70 சதவிகிதம் போடக்கூடிய முதலீடு, அதன் மீதான வருவாய், திரும்ப எடுக்கும்போது என மூன்றுக்கும் வருமான வரிவிலக்கு உண்டு – சில சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு. 15-ம் ஆண்டுகளுக்குப் பின்னர் நமக்குக் கிடைக்கக்கூடிய தொகை சுமார் 46.75 லட்ச ரூபாய்.

இப்போது, இதர காப்பீடுகளோடு இந்த கவரேஜையும் வருவாயையும் ஒப்பிட்டுப் பாருங்கள். நீங்களே ஒரு நல்ல முடிவுக்கு வருவீர்கள்!

நான் வேலைபார்க்கும் நிறுவனத்திலேயே எனக்கு மருத்துவக் காப்பீடு உண்டு; இது வேறு ஏன் தனியாக?

நல்ல கேள்வி. இதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம்.

முதலாவதாக, சில நிறுவனங்களில் நமக்கு மட்டுமே இந்தக் காப்பீடு இருக்கும்; குடும்பத்தினருக்கு இருக்காது.

அடுத்ததாக, இன்றைய தேதியில் நாம் ஒரே வேலையில் சேர்ந்து அதிலேயே ரிட்டயராவது என்பது எல்லாம் குறைவு. நாம் தயார் என்றாலும் கம்பெனிகள் தயாராக இல்லை என்பதுதான் நடைமுறையாக மாறிவருகிறது. எனவே, கம்பெனிக்கு கம்பெனி மாறுகையிலோ அல்லது வி.ஆர்.எஸ் எடுக்க நேர்ந்தாலோ அப்போது போய் காப்பீடு எடுக்க முடியாது. 35 வயதுக்கு மேல் என்றாலே, பல நிறுவனங்கள் யோசிக்கின்றன.

எனவே, செலவைப் பார்க்காமல், சிறு வயதில் இருந்தே ஒரு சிறு தொகைக்காவது மருத்துவக் காப்பீடு மொத்தக் குடும்பத்துக்கும் எடுத்து வைத்துக்கொண்டால், பின்னர் பெரும் உதவியாக இருக்கும்.