
வ.நாகப்பன்

இதுவரை தங்கத்தில் முதலீடுசெய்ய விரும்புகிறவர்களுக்கு உகந்த முதலீடாக கோல்டு ஈ.டி.எஃப். (Gold Exchange Traded Fund) இருந்து வந்தது.
ஆனால், இந்தத் திட்டத்தில் உள்ள பின்னடைவு... தங்கக் காசுகளைப்போலவே நீண்டகால ஆதாயம் ஒன்று மட்டுமே. இடைக்காலத்தில் இதன் மீது வட்டி வருவாய் ஏதும் கிடைக்காது.
இப்போது அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய திட்டங்களில் வட்டி வருவாயும் உண்டு என்பதால், ஈ.டி.எஃப்-ஐவிட எவ்வளவோ பெட்டர்.
அவை:
1. இந்திய தங்கக் காசுகள்
2. தங்கத்துக்கு ஈடான மாற்றுப் பத்திரங்கள்
3. தங்கப் பத்திரங்கள்
இந்தத் திட்டங்களின் சாதக - பாதகங்கள் என்னென்ன?
1. இந்திய தங்கக் காசு:
தங்கத்திலேயே முதலீடுசெய்பவர்களுக்கான சேமிப்பு இது.
ஒரு பக்கம் அசோகச் சக்கரமும் மறுபக்கம் மகாத்மா காந்தியின் உருவமும் பொறிக்கப்பட்ட, முற்றிலும் தூய்மையான 24 காரட் ( 999 ப்யூரிட்டி)ஹால்மார்க் காசுகள் இவை.
5 மற்றும் 10 கிராம்களில் கிடைக்கின்றன.
20 கிராம் காசு/கட்டிகளும் விற்கப்படுகின்றன.
எம்.எம்.டி.சி., இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கடைகளின் மூலம் இவை விற்கப்படுகின்றன. முழு விவரமும் அரசின் indiangoldcoin.com இணையதளத்தில் கிடைக்கும். விலை கொஞ்சம் அதிகமாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது.
2. தங்க மாற்றுப் பத்திரம்
(Gold Monetization Scheme):
எந்தவித வருமானமும் இல்லாமல் நம் வீட்டில் சும்மா பூட்டிவெச்சிருக்கும் தங்கத்தை, நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தும்விதமாக அதை வெளிக்கொண்டு வர, சென்ற ஆண்டு மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் இது. நமக்கும் அதில் நிறையப் பலன்கள் உண்டு.
`நம்மகிட்ட அவ்வளவு தங்கம் எங்க சார் இருக்கு?' என்கிறீர்களா... குறைந்தபட்சம் 30 கிராம் தங்கத்தைக்கூட இந்தத் திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்யலாம். அதாவது சுமார் 4 சவரனுக்கும் குறைவு.
`நல்லாயிருக்கே கதை... நம்ம கையில் இருக்கிற தங்கத்தை ஏன் அரசாங்கத்துக்கிட்ட ஒப்படைக்கணும்... பிரச்னை ஆகிடாதா?' என பலர் என்னிடம் கேட்பார்கள்.
நம் கையில் இருக்கும்போது அதன் மீது எந்தவிதமான வருமானமும் கிடையாது. சொல்லப்போனால் லாக்கர் எடுத்து, பணம் கட்டிப் பாதுகாக்க வேண்டும். வெட்டிச் செலவு. சரி... செலவுக்கு யோசித்து வீட்டிலேயே அலமாரியில் வைத்தால், பீரோ புல்லிங் என திருட்டுப் பயம். ஜாலியாக ஹாலிடேகூடப் போக முடியாது. யாருக்கும் பிரயோஜனம் இல்லாமல் பூட்டிவைப்பதில் என்ன லாபம்? அதற்கு அரசிடம் ஒப்படைத்தாலாவது, நமக்கும் வட்டி வருவாய் கிடைப்பதோடு, அரசுக்கும் தங்க இறக்குமதி குறையும் என்பதால் அந்நியச் செலாவணி மிச்சம்.
நம் தங்கத்தை இந்தத் திட்டத்தின் கீழ் அரசிடம் ஒப்படைப்பது எப்படி?
நம் ஊரிலேயே இதற்கு என உள்ள அங்கீகரிக்கப்பட்ட சுத்திகரிப்பாளர்களிடம் நம் தங்கத்தைக் கொடுக்க வேண்டும். நாம் கொடுக்கும் தங்கக் காசுகள் மற்றும் ஆபரணங்களை உருக்கி சுத்தம் சோதனைசெய்வார்கள். இவை எல்லாம் நம் கண் முன்னே நிகழலாம். அல்லது வீடியோவில் பதிவுசெய்யப்படும். அதன் பின்னர் அதற்கு ஈடான சான்றிதழ் கொடுப்பார்கள். அதை வங்கியில் கொண்டுபோய் சமர்ப்பிக்க வேண்டும். எவ்வளவு தங்கம் நம்மிடம் இருந்து பெறப்பட்டது எனக் குறித்துக்கொண்டு, அந்த வங்கி நமக்கு ஒரு டெபாசிட் ரசீது கொடுக்கும்.
எவ்வளவு வட்டி கிடைக்கும்?
எந்த வருமானமும் இல்லாமல் வீட்டில் பூட்டித் தூங்கிக்கொண்டிருந்த தங்கத்தின் மதிப்பு மீது, வட்டி வருவாய் கிடைக்கும் என்பதுதான் இந்தத் திட்டத்தின் ஹைலைட்.
மூன்று ஆண்டுகளுக்கு உட்பட்ட திட்டத்துக்கு வங்கிகளே வட்டிவிகிதம் நிர்ணயம் செய்துகொள்ளலாம்.
5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகளில் முதிர்வடையக்கூடிய இடைக்கால வைப்புத் திட்டத்தின் மீது ஆண்டுக்கு 2.25 சதவிகிதம் வட்டி வழங்கப்படும்.
12 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகளில் முதிர்வடையக்கூடிய நீண்ட கால வைப்புத் திட்டத்தின் மீது ஆண்டுக்கு 2.50 சதவிகிதம் வட்டி வழங்கப்பட்டுவருகிறது.
எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை வட்டி கிடைக்கும்?
ஆண்டுக்கு ஒருமுறை. மேலே சொன்ன சான்றிதழை வங்கிகள் பெற்றுக்கொண்டு தங்கத்துக்கு ஈடாக வைப்பு நிதியாக ரசீது கொடுப்பார்கள். தங்கத்தின் அன்றைய சந்தை விலையைக் கணக்கிட்டு, ஆண்டுக்கு ஒருமுறை மார்ச் 31-ம் தேதி அன்று இந்தத் தொகை மீதான வட்டி கணக்கிட்டுக் கொடுக்கப்படும்.
இதில் மிகக் குறுகியகாலத் திட்டத்தில் மட்டுமே தங்கமாகவே திரும்பப் பெறும் வசதி உண்டு. ஏனைய திட்டங்களில் திரும்பப் பெறும் தேதி அன்று, தங்கத்தின் சந்தை விலை என்னவோ அதைக் கணக்கிட்டு நம் கையில் கொடுப்பார்கள்.
இடையில் பணம் தேவைப்பட்டால், நம்மால் வெளியே எடுக்க முடியுமா... திரும்பப் பணம் பெறும் வசதி உண்டா?
5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகளில் முதிர்வடையக்கூடிய இடைக்கால வைப்புத் திட்டத்தில், குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் பணத்தை வெளியில் எடுக்கலாம்.
12 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகளில் முதிர்வடையக்கூடிய நீண்டகால வைப்புத் திட்டத்தில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் நம் பணத்தை வெளியில் எடுக்க முடியும்.
இந்தத் திட்டத்தின் கீழ் தங்கம் டெபாசிட் செய்ய உச்ச வரம்பு ஏதும் உள்ளதா?
அப்படி எதுவும் கிடையாது. எவ்வளவு தங்கம் வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். அதற்கான அன்றைய சந்தை மதிப்பின் மீதான வட்டி நமக்குத் தொடர்ந்து கிடைக்கும்.
காலகட்டம் முடிந்து முதிர்வடையும்போது, அன்றைய தேதியில் இந்தத் தங்கத்தின் சந்தை விலை என்னவோ, அந்தத் தொகை நமக்கு பணமாகத் திருப்பித் தரப்படும்.
3 ஆண்டுகால குறுகிய கால வைப்பு நிதியில் மட்டும் தங்கமாகவே திரும்பப் பெறும் வசதியும் உண்டு. ஆனால், டெபாசிட் செய்யும்போதே தங்கமாகத்தான் திரும்ப வேண்டும் எனச் சொல்லிவிட வேண்டும்.
இப்படி பல பலன்களும் கூடியது இந்தத் திட்டம் என்றாலும், தங்க நகைகளை உருக்கி ஒப்படைக்க, நம்மில் எத்தனை பேர் ஒப்புக்கொள்வார்களோ தெரியாது. அதோடு, அங்கீகரிக்கப்பட்ட சுத்திகரிப்பாளர்கள் பெரும் நகரங்களில் மட்டுமே உள்ளனர். எனவே, சின்ன ஊர்களில் இவர்கள் இல்லாததால், நடைமுறை சிக்கல்களும் இருக்கவே செய்கின்றன.
எனவே, பெரும் பணக்காரர்கள் அல்லது கோயில்களுக்கு மட்டுமே ஏற்ற திட்டமாக இது தோன்றுகிறது.

3. அரசு தங்கப் பத்திரங்கள்:
(Sovereign Gold Bonds Scheme)
தங்கத்தை வெறும் முதலீடு என்ற நோக்கத்தில் மட்டுமே அணுகி அதில் முதலீடு செய்ய வேண்டும் என நீங்கள் நினைத்தால்... அப்போ திட்டங்களிலேயே இதுதான் சூப்பர் முதலீடு.
மத்திய அரசின் சார்பாக, மத்திய ரிசர்வ் வங்கியே வெளியிடும் தங்கப் பத்திரங்கள் இவை. எனவே, மிகவும் பாதுகாப்பான முதலீடு.
இந்தத் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது?
ஒவ்வொரு கிராம் தங்கத்துக்கு இணையாக ஒரு தங்கப் பத்திரம் வெளியிடப்படும். நாம் அதில் முதலீடு செய்யலாம். எவ்வளவு வேண்டுமோ அத்தனை யூனிட்டுக்களுக்கான பணத்தைக் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம். நம் முதலீட்டுக்கு இணையாக தங்கப் பத்திரச் சான்றிதழ் நமக்கு வழங்கப்படும்.
நாம் முதலீடாகக் கட்டும் பணத்துக்கு ஈடாக, தங்கப் பத்திரங்களாகத்தான் கொடுப்பார்களா... எலெக்ட்ரானிக் முறையில் டீமேட் கணக்கில் பெற முடியுமா?
சர்டிஃபிகேட்டாக இல்லாமல், எலெக்ட்ரானிக் முறையில் (காகிதம் இல்லா டீமேட் கணக்கில்) பெறும் வசதியும் இந்தத் திட்டத்தில் உண்டு.
இந்தத் திட்டத்தில் நமக்கு என்ன ஆதாயம்?
தங்கத்தின் சந்தை விலைக்கு ஏற்ப இந்தப் பத்திரங்களின் விலையும் ஏற்ற இறக்கங்களுடன் இருக்கும். தங்கம் விலை அதிகரிக்கும்போது அதற்கு ஈடாக நம் பத்திரங்களின் மதிப்பும் கூடும்.
மேலும் ஆண்டுக்கு 2.75 சதவிகிதம் வட்டி வருவாயும் உண்டு. கரும்பு தின்னக் கூலி என்பார்களே... அதுபோல. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இந்த வட்டி நம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
குறைந்தபட்சம் எவ்வளவு முதலீடு செய்யலாம்?
ஓர் ஆண்டில், தனி நபர், குறைந்தபட்சம் 2 கிராமில் இருந்துகூட முதலீடு செய்யலாம்.
அதிகபட்சம் எவ்வளவு முதலீடு செய்யலாம்?
தனி நபர், ஆண்டு ஒன்றுக்கு அதிகபட்சமாக 500 கிராம் வரை முதலீடு செய்யலாம். அதேமாதிரி, ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் ஆளுக்கு தலா 500 கிராம் அளவுக்குப் பத்திரங்கள் வாங்கலாம். அதாவது ஒரு குடும்பம் மொத்தமாக 2 கிலோ வரை முதலீடு செய்யலாம்.
வாங்கும்போதும் மறுபடியும் விற்கும்போதும் பணமாகவே கொடுக்கல் வாங்கல் இருக்கும். அதாவது, பணம் கொடுத்து இந்தப் பத்திரங்களை வாங்க வேண்டும்; மறுபடியும் விற்கும்போது பணமாகவே மட்டுமே திரும்பக் கிடைக்கும். தங்கமாக இல்லை.
விண்ணப்பங்கள் எங்கு கிடைக்கும்... இந்தத் திட்டத்தில் சேர யாரை அணுக வேண்டும்?
குறிப்பிட்ட இடைவெளியில் மத்திய அரசு இந்தத் தங்கப் பத்திரங்கள் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான அறிவிப்பை வெளியிடும். அப்போது குறிப்பிட்ட சில வங்கிகள், அஞ்சல கங்கள், மத்திய அரசு நிறுவனமான ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் உள்ளிட்ட சில அலுவலகங்களில் இதற்கான விண்ணப்பங்கள் கிடைக்கும். பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டிருக்கும் இந்தப் பத்திரங்களின் யூனிட்டுகளிலும் முதலீடு செய்யலாம்.
இந்தப் பத்திரங்கள் எத்தனை ஆண்டுகளில் முதிர்வடையும்... பணம் எப்போது திரும்பக் கிடைக்கும்?
8 ஆண்டுகளில் முதிர்வடையும். முதிர்வடையும் ஒரு மாதம் முன்பே நமக்கு கடிதம் மூலமாகத் தகவல் தெரிவிப்பார்கள்.
இடையில் பணம் தேவைப்பட்டால்?
முதிர்வடையும் முன்பே, இடையில் பணம் தேவைப்படின், 5-ம் ஆண்டில் இருந்தே பணம் திரும்பப் பெறும் வசதியும் உண்டு. அது மட்டும் அல்ல... பத்திரங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என்பதால், இடையில் பணம் தேவைப்படுபவர்கள் அங்கு விற்று காசாக்கிக்கொள்ளும் வசதியும் உண்டு.
இந்தப் பத்திரங்கள் பெயரில் அடமானம் வைத்து, கடன் வாங்க முடியுமா?
சந்தையில் ஒரு வேளை விலை குறைவாக இருந்து அதன் காரணமாகப் பத்திரங்களை இப்போதைக்கு விற்கவேண்டாம் என நினைத்தால், அவற்றின் மீது கடன் பெறவும் முடியும். ஆபரணத் தங்கத்தைப்போலவே, இந்தப் பத்திரங்கள்மீதும் குறைந்த வட்டியில் கடன் பெறும் வசதியும் உண்டு.
இந்தப் பத்திரங்கள் ஈட்டும் வட்டியின் மீது வருமான வரி உண்டா?
வரிப் பிடித்தம் ( TDS – Tax Deducted at Source) ஏதும் இருக்காது. ஆனால், வழக்கமான வருமான வரி ஏதாவது நமக்கு உண்டு என்றால், அதன் அடிப்படையில் நாம் கட்ட வேண்டியிருக்கலாம்.
இந்தத் திட்டம் குறித்த முழு விவரங்களுக்கு: http://finmin.nic.in/swarnabharat/sovereign-gold-bond.html
https://www.rbi.org.in/Scripts/FAQView.aspx?Id=109
https://www.nseindia.com/products/content/equities/sgbs/FAQ.pdf
http://www.bseindia.com/downloads1/SGB_Brochure.pdf
- பொருள் சேர்க்கலாம்...
மாதாந்திரத் தங்க சீட்டு போட்டுவரும் குடும்பத் தலைவிகள் கவனத்துக்கு...
ஆரம்பத்தில் சொன்னதுபோல நீண்டகால அடிப்படையில் தங்கம் என்பதே நல்ல முதலீடா என்பது கேள்விக்குறிதான். இது ஒருபக்கம் இருந்தாலும், பணவீக்கத்தைக் கவனத்தில்கொண்டு பார்க்கையில், நம் சேமிப்பில் ஒரு சிறுபகுதியாவது தங்கத்தில் முதலீடாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
திருமணம் போன்ற தேவைகளுக்காகச் சேமிக்க வேண்டும் என்னும் நடுத்தட்டு மக்கள், சிறு சிறு முதலீடாக, ரெக்கரிங் டெபாசிட் போல (எஸ்.ஐ.பி முறையில்) மாதாமாதம் சில யூனிட்டுக்களை வாங்கிச் சேர்க்கலாம். முதலீட்டுக்கு சிறு வட்டியும் கிடைக்கும். விலை ஏற்றத்தால் கிடைக்கும் லாபத்திலும் பங்கு பெறலாம்.
விலை இறங்கும் ரிஸ்க் இருந்தாலும், கூலி சேதாரம் போன்ற இழப்புகள் இல்லை என்பதால், நேரடியாக தங்கத்தில் முதலீடு செய்வதைவிட இது நிச்சயம் பெஸ்ட்.