அறம் பொருள் இன்பம் - 9

ருமான வரி இல்லாமல் ஆண்டுக்கு 16 சதவிகித வருமானம் பெற முடியுமா?

நீண்டகால அடிப்படையில் பார்த்தால், பணவீக்கத்தால் நமக்கு ஏற்படும் இழப்புக்கு ஈடாக ஆதாயத்தைத் தருவதாக தங்கம் இருந்தாலும், அந்த ஆதாயத்தின் மீது நாம் ஆதாய வரி கட்ட வேண்டும் என்பதால், அதைவிட பி.பி.எஃப் எனும் `பொது சேம நல நிதி’ நிச்சயமாக ஒருபடி மேலான முதலீடு.

அரசுத் திட்டம் என்பதால் பி.பி.எஃப் மிகப் பாதுகாப்பனது. உயிர் பயம் / திருட்டு பயம் இல்லை. இவை எல்லாவற்றையும்விட மிக முக்கியமாக E-E-E வருமான வரிச் சலுகை உள்ள மிகச் சில முதலீடுகளுள் பி.பி.எஃப்-ம் ஒன்று.

இருப்பினும், பி.பி.எஃப்-ல் உள்ள ஒரே சிக்கலும் சிறப்பும் அதன் 15 ஆண்டுகால முதிர்வுகாலம். நம் சேமிப்பை நீண்டகாலம் கட்டிப்போடும். இது ஒருவிதத்தில் நல்லது என்றாலும், பணப்புழக்கம் அதிகம் இல்லாத முதலீட்டாளர்களுக்கு இது ஏற்றது அல்ல.

பி.பி.எஃப்-ல் உள்ளதுபோலவே Exempt – Exempt – Exempt அடிப்படையில், நாம் போடும் முதலீட்டுக்கும் வருமான வரி விலக்கு, அதன் மீது நாம் ஈட்டும் வருமானத்துக்கும் வரி விலக்கு, மீண்டும் திரும்பப் பெறும் தொகை மீதும் வருமான வரி விலக்கு என மூன்று சலுகைகளும் உள்ள வேறு முதலீடு ஒன்று இருந்தால், அதே சமயத்தில் பி.பி.எஃப்-ஐவிடக் குறைந்த காலத்தில் முதிர்வடையக்கூடியதாக அமைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

அதற்காகத்தான் இருக்கிறது ELSS.

Equity Linked Savings Scheme என்பதன் சுருக்கமே இ.எல்.எஸ்.எஸ். இது ஒருவகை மியூச்சுவல் ஃபண்ட். பி.பி.எஃப்-போல 15 ஆண்டுகள் காத்திருக்கத் தேவை இல்லை. இந்தத் திட்டத்தில் மூன்றே ஆண்டுகளில் நம் முதலீட்டைத் திரும்பப் பெறலாம்... முழு வரி விலக்குடன். சுவாரஸ்யம் தட்டுகிறதா?

இந்தத் திட்டத்தைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்துகொள்ளும் முன்னர், மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். அதுதான் அடிப்படை. சிலருக்குத் தெரிந்திருக்கலாம் என்றாலும், பெரும்பாலோருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அதிகம் தெரியாத காரணத்தால், நம் நாட்டில் இரண்டு சதவிகிதத்துக்கும் குறைவானோரே இந்த மாதிரி திட்டங்களில் முதலீடு செய்கின்றனர்.

பொதுவாக முதலீட்டுக்கான சூத்திரம் இதுதானே...

1. குறைந்த ரிஸ்க்    =    குறைந்த வருவாய்

2. மீடியம் ரிஸ்க்    =    மீடியம் வருவாய்

3. அதிக ரிஸ்க்    =    அதிக வருவாய்

ஆனால், நம்மில் பெரும்பாலோரின் ஆசை என்ன?

குறைந்த ரிஸ்க் = அதிக வருவாய்.

ஆனால், பிராக்டிக்கலாக அது சாத்தியமா? கொஞ்சம் கால்குலேட்டட் ரிஸ்க் எடுத்தால் இந்த ஃபார்முலாவை இப்படிக் கொஞ்சம் மாற்றலாம்.

மீடியம் ரிஸ்க் = அதிக வருவாய்க்கான வாய்ப்பு.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு இதைத்தான் செய்கிறது. நம்மைப்போல பலருக்கும் முதலீடு செய்ய வேண்டும் எனும் எண்ணம் இருக்கும். பணவீக்கத்தைத் தாண்டிய ஆதாயமும் வருமானமும் வேண்டும் எனும் ஆசை இருக்கும். ஆனால், நம் சேமிப்பை முறையாக எப்படி முதலீடு செய்வது என வரும்போது ஒரு குழப்பம் ஏற்படும்.

வருவாய் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் நல்ல கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாமா இல்லை பங்குச்சந்தையில் ரிஸ்க் எடுக்கலாமா எனும் தயக்கம் இருக்கவே செய்யும்.

அப்படியே நேரடியாக ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய நினைத்தாலும், எந்தெந்தக் கம்பெனிப் பங்குகளில் முதலீடு செய்வது, ஒவ்வொரு பங்கிலும் எவ்வளவு தொகை முதலீடு செய்வது, எவ்வளவு நாட்களுக்கு /ஆண்டுகளுக்கு முதலீடு செய்வது, நம் தினசரி அலுவல்களுக்கு இடையே இவற்றை எல்லாம் எப்படி மானிட்டர் செய்வது என மலைப்பாக இருக்கும். விரைவில் ஒரு முடிவுக்கு வர முடியாது.

நம் அன்றாட வாழ்க்கையில் இவற்றுக்கு எல்லாம் எங்கே நமக்கு நேரம் இருக்கிறது என்ற எண்ணம்கூட பலருக்கு எழலாம். அதற்காக நல்ல வருவாய் தரக்கூடிய முதலீட்டைத் தவிர்க்க முடியுமா என்ன?

நம் சார்பாக, இவற்றை எல்லாம் யாராவது நம்பிக்கையானவர்கள், இந்தத் துறையில் பல ஆண்டுகள் அனுபவமிக்கவர்கள், விவரமானவர்கள் பார்த்துக்கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
அதைத்தான் செய்கின்றன மியூச்சுவல் ஃபண்டுகள்.

நம்மைப் போன்ற பலர் கொடுக்கும் பணத்தை ஒன்றாகத் திரட்டி, பங்குகளிலோ, பாண்டு/டிபென்ச்சர் போன்ற கடன் பத்திரங்களிலோ முதலீடு செய்வார்கள். அந்த முதலீட்டின் மதிப்பு உயரும்போது நமக்கு ஆதாயம் கிடைக்கும். அந்த ஆதாயத்தை அவ்வப்போது டிவிடென்ட்டாகவோ அல்லது ஒட்டுமொத்தமாக வெளியே எடுக்கும்போதோ நமக்குக் கொடுப்பார்கள்.

நாம் முதலீடு செய்யும் பணத்துக்கு ஈடாக மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளை நம்மிடம் கொடுப்பார்கள் அல்லது அந்த யூனிட்டுகள் நம் கணக்கில் வரவு வைக்கப்படும்.

மொத்த முதலீட்டின் மதிப்பு உயரும்போது நம் யூனிட்டுகளின் மதிப்பும் கூடும். நமக்கு பணம் வேண்டும் எனும்போது அவர்களிடம் யூனிட்டுகளைத் திரும்பக் கொடுத்தால், அதைப் பெற்றுக்கொண்டு அன்றைய தேதியில் நம் யூனிட்டுகளின் மதிப்பு என்னவோ அதற்கு ஈடான தொகையை நம்மிடம் திரும்பக் கொடுப்பார்கள்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை அடிப்படையில் மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை:

1. ஈக்விட்டி ஃபண்ட் - பங்குச்சந்தை முதலீட்டுத் திட்டம்

2. டெப்ட் ஃபண்ட் - கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் திட்டம்.

3. பேலன்ஸ்டு ஃபண்ட் - கொஞ்சம் பங்குகளில், கொஞ்சம் கடன் பத்திரங்களில் என இரண்டும் இணைந்த திட்டம்.

இவற்றில் எது நமக்கு ஏற்றது?

ஈக்விட்டி ஃபண்ட்

அதிக வருவாய் வரும் எனில் ரிஸ்க் எடுக்கத் தயார் என்பவர்களுக்கான திட்டம் இது. நம்மிடம் இருந்து திரட்டப்படும் பணம் முழுவதும் அல்லது அதன் பெரும்பகுதியை, பங்குச் சந்தையில் வணிக நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வார்கள். பங்குகளின் விலை ஏற்ற-இறக்கங்களுக்கு ஏற்ப இந்தத் திட்டத்தின் நிகரச் சொத்து மதிப்பும் கூடும் அல்லது குறையும். நம் யூனிட்டுகளின் மதிப்பும் அப்படியே. மேலே சொன்ன மூன்று திட்டங்களில் கொஞ்சம் ரிஸ்க் அதிகமானது இது என்றாலும், வருவாயும் அதிகம் வரும்.

2008-ம் ஆண்டில் பங்குச்சந்தைகள் சரிந்தபோது, பாதிக்கு மேல் அதாவது 50 சதவிகிதத்துக்கு மேல் வீழ்ச்சியைச் சந்தித்த திட்டங்கள் உண்டு. அதன் பின்னர் அடுத்த ஆண்டே அதைவிட இரு மடங்கு லாபம் கொடுத்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களும் இதில் அடக்கம். இந்தத் திட்டத்தில் பல உட்பிரிவுகள் உண்டு. எனினும் முக்கியமானவை இரண்டு. பல துறை சார்ந்த நிறுவனப் பங்குகளில் பணத்தை முதலீடு செய்யும் திட்டத்தை `டைவெர்சிஃபைடு மியூச்சுவல் ஃபண்ட்’ என்பார்கள். அதற்கு நேர் மாறாக, வங்கித் துறை அல்லது ஃபார்மா துறை என ஒரே ஒரு துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யக்கூடிய திட்டங்களை, `செக்டோரல் ஃபண்ட்’ என்பார்கள். ஒரே துறை பங்குகளில் முதலீடு செய்யக்கூடிய செக்டோரல் ஃபண்ட்களைவிட டைவெர்சிஃபைடு திட்டங்களில் ரிஸ்க் கொஞ்சம் குறைவு. சமீபத்தில் வங்கித் துறை சந்தித்த கடும் சோதனைகளால் இந்தத் துறை சார்ந்த சில திட்டங்களின் சொத்துமதிப்பு பாதிக்குப் பாதியாகக் குறைந்தது. டைவெர்சிஃபைடு திட்டங்களில் பெரும்பாலும் அப்படி நடப்பது குறைவு. பல துறைகளாகப் பிரித்து முதலீடு செய்வதால், அதிக ஆதாயத்துக்காக அதிக ரிஸ்க் எடுக்க விரும்பும் இளம்வயதினர் செக்டோரல் ஃபண்ட்களில் முதலீடு செய்யலாம். ஏனையோர் தவிர்ப்பது நல்லது.

இந்தத் திட்டத்தின் மீது முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும் டிவிடென்ட்டுக்கு வருமான வரிக் கிடையாது. முதலீடு செய்து ஓர் ஆண்டுக்குப் பின்னர் திரும்ப எடுக்கும்போது கிடைக்கும் ஆதாயம் முழுமைக்கும், ஆதாய வரியோ வருமான வரியோ கிடையாது என்பது ஊக்க போனஸ் அல்லவா!

டெப்ட் ஃபண்ட்

பாதுகாப்பான முதலீடு வேண்டும் என்பவர்களுக்கானது  `டெப்ட் ஃபண்ட். இந்தத் திட்டத்தின் மூலம் நம்மிடம் இருந்து திரட்டப்படும் பணம் முழுவதும் அல்லது அதன் பெரும்பகுதி கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும். கடன் பத்திரங்கள் மீது வரக்கூடிய வட்டி வருவாயோடு, கடன் பத்திரங்களின் விலை அதிகரித்தால் அந்த ஆதாயமும் நமக்குக் கிடைக்கும். சில சமயங்களில் கடன் பத்திரங்களின் விலை குறையவும் செய்யலாம். அப்போது நம் யூனிட்டுகளின் மதிப்பும் சற்றே குறையும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அப்படி பெரிதாகக் குறைந்துவிடாமல் நிர்வகிப்பதற்காகவே அனுபவமிக்க வல்லுநர்களான `ஃபண்ட் மேனேஜர்'களை அமர்த்தியிருப்பார்கள். ஈக்விட்டி ஃபண்ட்-டோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் இதில் வருவாய் குறைவுதான். பெரும்பாலும் வங்கிகள் கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியைவிடச் சற்று அதிகமாக இருக்கலாம். அவ்வளவுதான்.

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்கு இருப்பதைப்போல, வருமான வரிச் சலுகைகள் எதுவும் பெரிதாக இல்லை என்பது நெகட்டிவ்.
 
பேலன்ஸ்டு ஃபண்ட்

பெயரிலேயே இருப்பதுபோல ரிஸ்க் மற்றும் ரிட்டர்ன் இரண்டையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, பேலன்ஸ்டாக கொஞ்சம் ரிஸ்க், கொஞ்சம் பாதுகாப்பு, அதற்கு ஏற்ற வருவாய் எனும் அடிப்படையில் செயல்படும் திட்டம்.

அறம் பொருள் இன்பம் - 9

நம்மிடம் இருந்து திரட்டப்படும் நிதியில் ஏறத்தாழ பாதி பங்குச்சந்தையிலும், மீதி கடன் பத்திரங்களிலும் என முதலீடு செய்வார்கள். பங்குகளின் விலை எப்போதாவது கொஞ்சம் சரிந்தாலும்கூட கடன் பத்திரங்கள் ஈட்டும் வட்டி வருவாய் அந்த நஷ்டத்தை ஓரளவுக்கு ஈடுகட்டும். எனவே, முழுவதும் பங்குச்சந்தை சார்ந்த ஈக்விட்டி திட்டத்தில் இருக்கும் அளவு ரிஸ்க் இதில் இல்லை. கொஞ்சம் குறைவுதான். நல்ல தரக் குறியீட்டுடன் உள்ள நல்ல நிறுவனங்களின் கடன் பத்திரங்களாக இருக்கும்பட்சத்தில் நம் முதலீட்டைப் பற்றி அதிகம் கவலைப்படத் தேவை இல்லை.

ஈக்விட்டி ஃபண்ட் போலவே, இந்தத் திட்டத்தின் மீது முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும் டிவிடென்ட்டுக்கும் வருமான வரிக் கிடையாது. முதலீடு செய்து ஓர் ஆண்டுக்குப் பின்னர் திரும்ப எடுக்கும்போது கிடைக்கும் ஆதாயம் முழுமைக்கும் ஆதாய வரியோ, வருமான வரியோ கிடையாது.

ELSS திட்டத்தில் நாம் முதலீடு செய்வதால் என்ன ஆதாயம் என்பது அடுத்த இதழில்!

- பொருள் சேர்க்கலாம்...

அறம் பொருள் இன்பம் - 9

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதால் நமக்குக் கிடைக்கும் பலன்கள்!

* பங்குச்சந்தையில் நேரடியாக நுழைய நேரம் இல்லாதவர்களுக்கும், முதலீடுகளின் சாதக - பாதகங்களை அலசி ஆராய முடியாதவர்களுக்கும் ஏற்றது.

* பங்குச்சந்தை முதலீட்டைப் புரிந்துகொள்ள சிரமப்படுபவர்களுக்கு, முதல் முறை முதலீடு செய்பவர்களுக்குச் சுலபமானது.

* இந்தத் துறையில் பல ஆண்டுகள் அனுபவமிக்கவர்களால் நிர்வகிக்கப்படுகிறது; ஒளிவுமறைவு அற்ற முறையில் நிர்வகிக்கப்படுகிறது. நம் பணம் எதில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என அவ்வப்போது அவர்களது இணையதளத்தில் வெளியிடப்படும்.

* பங்குகளைப்போலவே உடனடியாக விற்றுக் காசாக்க எளிதானது.

செபி அமைப்பால் நெறிமுறைப்படுத்தப்பட்டு கடும் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டுச் செயல்பட்டுவருகின்றன.

இவை எல்லாவற்றையும்விட மிக முக்கியமாக, வருமான வரிவிலக்கு மற்றும் நீண்டகால ஆதாய வரிச் சலுகை.