Published:Updated:

``தடைகளை சவால்களாக பார்க்கணும்!’’

``தடைகளை சவால்களாக பார்க்கணும்!’’
பிரீமியம் ஸ்டோரி
``தடைகளை சவால்களாக பார்க்கணும்!’’

- அட்டைப்பெட்டி தயாரிப்பில் அசத்தும் ரம்யா பிசினஸ் ஸ்பெஷல்

``தடைகளை சவால்களாக பார்க்கணும்!’’

- அட்டைப்பெட்டி தயாரிப்பில் அசத்தும் ரம்யா பிசினஸ் ஸ்பெஷல்

Published:Updated:
``தடைகளை சவால்களாக பார்க்கணும்!’’
பிரீமியம் ஸ்டோரி
``தடைகளை சவால்களாக பார்க்கணும்!’’
``தடைகளை சவால்களாக பார்க்கணும்!’’

‘‘ஏழு வருஷத்துக்கு முன்னாடி நான் இந்தத் தொழிலை ஆரம்பிச்சப்போ, இந்தக் களத்துல ஒரு பெண்கூட இல்லை. ஆனாலும் நான் பயப்படல. `முதல் அடியை நாமளே எடுத்து வைப்போம்’னு தைரியத்தோடயும், நம்பிக்கையோடயும் உழைக்க ஆரம்பிச்சேன். இன்னிக்கு நான் ஒரு வெற்றியாளர்’’ என்று ரம்யா சொன்னபோது, அவரிடம் வெளிப்பட்ட தன்னம்பிக்கை ரசிக்கவைத்தது. இவர், சென்னை, பாடி பகுதியில், பாப்கார்ன் டப்பாக்கள் முதல் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளுக்கான பெட்டிகள் வரை அட்டைப் பெட்டிகள் தயாரிப்பு தொழிலில் அழுத்தமாகக் கால் ஊன்றியிருக்கும் தொழில் முனைவோர்.

‘‘ என்னுடைய அப்பா ஆட்டோ மொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் நடத்திக்கொண்டிருந்தார். ஸ்பேர் பார்ட்ஸ் பேக் செய்வதற்கான அட்டைப் பெட்டிகளை வெளியே வாங்கிக்கொண்டிருந்தோம். நான் பி.எஸ்ஸி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சுட்டு, ஃபேஷன் டெக்னாலஜி முடிச்சேன். அப்பாவுக்கு உதவியாதான் நான் இந்தத் தொழிலுக்கு வந்தேன். எங்களுக்கு பெட்டிகளை சப்ளை செய்த நிறுவனத்தில் சில மாதங்கள் வேலைபார்த்து, தொழிலைக் கத்துகிட்டேன். இது சம்பந்தமா சிறுதொழில் பயிற்சியும் முடிச்சேன். ‘நாம ஏன் இன்னொரு நிறுவனத்துகிட்ட இருந்து அட்டைப் பெட்டிகள் வாங்கி சப்ளை பண்ண ணும்? நாமளே அட்டைப் பெட்டிகள் தயாரிச்சா என்ன?’னு எங்கப்பாகிட்ட நான் கேட்டப்போ எனக்கு வயசு 23.

அப்பாவுக்கு முழு நம்பிக்கையில்லை. இருந்தாலும், ‘உதவிக்கு நான் இருக்கேன். செய்ய நினைக்கிறதை செயல்படுத்து’னு சொன்னார். நான் முதல்கட்டமா வங்கிக் கடனுதவி மூலமா, அட்டைப் பெட்டிகள் தயாரிக்கத் தேவையான இயந்திரம் வாங்கினேன். ‘லயன் பேக்ஸ்’ என்ற பெயரோட தொழிலை ஆரம்பிச்சேன். வேலையில் ஏதாவது தவறு நேர்ந்தா சரிசெய்துதர அப்பாவும், அண்ணனும் இருந்தாலும், அந்த நஷ்டத்துக்கு முழுக் காரணமும் நான்தான் என்ற பொறுப்போட செயல்பட ஆரம்பிச்சேன்.

டெண்டர், ஆர்டர்னு எல்லா வேலைகளுக்கும் நானே நேரடியா அலைஞ்சப்போதான், இந்தத் தொழிலில் ஒரு பெண்கூட இல்லை என்பதை கவனிச்சேன். தெருவுக்கு நாலு போட்டியாளர்கள் இருக்கிற இந்தத் தொழிலில், நான் மோதவேண்டியது எல்லாம் சீனியர் ஆண்களோட என்பதுதான் நிலைமையா இருந்தது. அது ரொம்ப சவாலாவும் இருந்தது. `இந்தத் துறையில் முக்கியமானது தரமும், குறித்த நேரத்தில் டெலிவரியும்தான். அதை நாம சரியா செஞ்சா, போட்டியாளர்கள் பற்றிக் கவலைப்பட வேண்டாம்; நம்ம உழைப்புக்கான பலன் நமக்கு வந்து சேரும்’னு எனக்கு நானே நம்பிக்கை சொல்லிக்கிட்டேன்.

பெண் என்பதால, போட்டியாளர்கள் பேசுற அவதூறுகள் ஒருபக்கம்; சில கஸ்டமர்கள் பணம் கொடுக்காம இழுத்தடிக்கிறது ஒரு பக்கம். ஒரு கம்பெனிக்கு பத்து முறை ஏறி இறங்கி  ஆர்டர் பிடிச்சு,  சப்ளை பண்ணப் போகும்போது, போட்டியாளர்கள் என் வண்டியை ஃபாலோ பண்ணி, சப்ளை செய்ற இடத்தை பார்த்துக்கிட்டு, அந்த கம்பெனியில அவங்க போய் ஆர்டர் எடுத்துடுவாங்க. எப்போ நம்ம ஆர்டர் கேன்சல் ஆகும்னு தெரியாது. ஒருவழியா அதை கடந்துவந்தோம்னா, மறுநாள் சப்ளைக்கான வேலை நடந்துட்டு இருக்கும்போது மெஷின் ரிப்பேர் ஆகுற டென்ஷன்னு, தொழிலில் எதிர்பாராமல் நடக்கிற சம்பவங்கள் நம்மை சாய்க்கப் பார்க்கும். ஆனாலும், எந்தச் சூழல்லயும் குறையாத மனவலிமையோட இருந்து தடைகளை சவாலாக பார்க்கணும் என்பது என் அனுபவ மொழி.

இதுக்கு இடையில, எனக்குக் கல்யாணம் முடிந்தது. வேலைச்சுமை இரண்டு மடங்கு ஆச்சு. குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் சொல்லவே தேவையில்லை. ஆனாலும், இவ்வளவு அரும்பாடுபட்டு எடுத்துட்டு வந்த தொழிலை, எந்தக் காரணத்துக்காகவும் விடுறது இல்லை என்ற உறுதியோட வீடு, தொழில் ரெண்டையும் பேலன்ஸ் பண்ணக் கத்துக்கிட்டேன். அந்த ஓட்டத்துல ஓய்வு நேரம் குறைஞ்சு, உழைக்கிற நேரம் அதிகமாச்சு. ஆனாலும், தொழில் ஏறுமுகத்தில் இருந்ததால அந்த உற்சாகம் எந்தச் சோர்வையும் என்னை நெருங்கவிடல.

மாசம் 25,000 ரூபாய் லாபம் கிடைக்கிற அளவுக்கு தொழில் ஸ்திரமாகியிருக்கு. பாக்ஸ் தயாரிக்கிறது, பிரின்ட்டிங்னு எல்லாத்துக்கும் அட்வான்ஸ்டு மெஷின்களை வெச்சிருக்கேன். தியேட்டர்களில் பாப்கார்ன் டப்பாக்கள், பீட்ஸா டப்பாக்கள், ஆட்டோமொபைல் நிறு வனங்கள், அரசுத் துறை நிறுவனங்களுக்கு பெரிய அட்டைப்பெட்டிகள்னு ஆர்டர் பெற்று, ரெகுலரா சப்ளை பண்றேன். ஆன்லைன் மூலமாவும் ஆர்டர் பிடிக்கிறேன். சென்னை தவிர மதுரை, சேலத்திலும் சப்ளை பண்றேன்.

இந்தத் தொழிலில் மட்டுமில்ல, இங்க எந்தத் தொழில் செஞ்சாலும் அங்க ஆண்களின் ஆதிக்கம் இருக்கும். ஆனாலும், பெண் என்பதால தொழிலில் எந்த இடத்திலும் நான் பின்வாங்கியதே இல்ல. இதில் ஜெயிக்கிறதுகூட அப்புறம்தான், நிலைச்சு நிக்கிறதே முதல்ல கடினமான விஷயம். ஆனா,  அதை முறியடிச்சு நான் நிரூபிச்சிருக்கேன்னு நினைக்கும்போது, சந்தோஷமாவும் பெருமையாவும் இருக்கு. இப்போ எனக்கு லோன் தர வங்கிகள் தயாரா இருக்காங்க. என் பிராண்ட் பெயர் கேட்டதும், கஸ்டமர்கள் தயக்கமில்லாம ஆர்டர் தர்றாங்க. இந்த நம்பிக்கையை சம்பாதிச்சிருக்கிறதை நினைக்கும்போது, நிம்மதியா இருக்கு. ஆனா, இலக்கு இன்னும் முடிஞ்சுடல. தொழிலில் அடுத்த கட்டத்துக்குப் போகணும்!’’

இந்த வேகம், தடைகள் தாண்டி சிகரம் ஏறவைக்கும் ரம்யாவை!

கே.அபிநயா, படம்:ப.சரவணகுமார்