அறம் பொருள் இன்பம் - 10

ரிச்சலுகைத் திட்டங்களிலேயே முழுப் பாதுகாப்புடன் ஓரளவு வருவாயைத் தருவது பி.பி.எஃப் என்றால், அதே வரிச்சலுகைகளுடன் ஆனால், அதைவிட அதிக வருவாய் தரும் சாத்தியங்களுடன்கூடிய ஒரு முதலீட்டுத் திட்டம்தான் இ.எல்.எஸ்.எஸ்.

பி.பி.எஃப் போன்ற உத்தரவாதத்துடன்கூடிய முதலீடுகள் ஆண்டுக்கு சராசரியாக 8 சதவிகித வருவாய் தருகிறது என்றால், இ.எல்.எஸ்.எஸ் திட்டங்களில் சில அதைவிட 50 சதவிகிதம் அதிக வருவாயைக் கொடுத்திருக்கின்றன. அதாவது, சராசரியாக ஆண்டுக்கு 12 சதவிகித வருவாய், வருமான வரி ஏதும் இல்லாமல்!

இந்தத் திட்டத்தில் உள்ள ரிஸ்க் என்ன...ஆதாயம் என்ன?

இதில் சந்தையின் ஏற்ற-இறக்கத்துக்கு ஏற்ப லாபம் அமையும். ஏனெனில், நாம் கொடுக்கும் பணத்தின் பெரும்பகுதி நம் சார்பாக பங்குச்சந்தைகளில்தான் முதலீடு செய்யப்படுகிறது. எனவே, சில நேரங்களில் குறுகிய கால அடிப்படையில் இழப்பும் நேரலாம். உறுதியிட்டுச் சொல்வதற்கு இல்லை.

முதலீட்டின் மீது வரிச் சலுகை மூலம் கிடைக்கக்கூடிய மிச்சம் எவ்வளவு?

அறம் பொருள் இன்பம் - 10

( # சர்சார்ஜ் மற்றும் செஸ் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாமலேயே!)

ஆனால், பெரும்பாலான திட்டங்கள் நீண்டகால அடிப்படையில் ஓரளவுக்கு நல்ல லாபத்தையே கொடுத்துவந்திருக்கின்றன. நல்ல சீரான நிர்வாகத்துடன் நீண்டகாலமாகச் செயல்பட்டுவரும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் இ.எல்.எஸ்.எஸ் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது நல்லது.  இதற்கு  என நியமிக்கப்பட்டிருக்கும் நிதி ஆலோசகர்களை அணுகி ஆலோசனை பெற்று, நல்ல திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இழப்பைக் குறைத்து லாபத்துக்கான வாய்ப்பை அதிகரிக்கலாம்.

யார் முதலீடு செய்யலாம்?

தனிநபர் பெயரிலோ, கணவன் – மனைவி – பெற்றோர் என ஜாயின்ட்டாக இரண்டு அல்லது மூன்று பேர் பெயர்களிலோ முதலீடு செய்யலாம்.

18 வயது நிரம்பாத மைனர்களின் பெயர்களிலும் முதலீடு செய்து, நமக்கு வரிச்சலுகை பெறலாம். இந்து கூட்டுக் குடும்பங்களின் பெயரிலும் முதலீடு செய்ய முடியும்.

இந்தத் திட்டத்தில் நாமினேஷன் வசதி உண்டா?

உண்டு. ஒன்றுக்கு மேற்பட்டவர்களை நாமினேட் செய்யலாம். நமக்குப் பிறகு நம் இரண்டு அல்லது மூன்று குழந்தைகளுக்குப் போய்ச் சேர வேண்டும் என நினைத்தால், அதே மாதிரி நாமினேஷன் செய்ய முடியும்.

அது மட்டும் அல்ல, ஒவ்வொருவருக்கும் இந்த முதலீட்டில் எத்தனை சதவிகிதம் போய்ச் சேர வேண்டும் எனவும் குறிப்பிட முடியும். அதாவது, ஆளுக்கு இரண்டு அல்லது மூன்றில் ஒரு பங்கு என்றோ அல்லது அதில் ஒருவருக்கு மட்டும் கொஞ்சம் அதிகமாக 50 சதவிகிதம் எனவும், மீதம் இருவருக்கும் ஆளுக்கு தலா 25 சதவிகிதம்  எனவும் மாற்றிக்கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு எவ்வளவு?

அறம் பொருள் இன்பம் - 10

பொதுவாக குறைந்தபட்ச முதலீடு 500 ரூபாய் மட்டுமே. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய உச்சவரம்பு ஏதும் இல்லை. எனினும், 1.50 லட்சம் ரூபாய் வரை மட்டுமே முதலீட்டின் மீதான வரிச்சலுகைக்குப் பயன்படும்; அதுவும் காப்பீடு போன்ற இதர முதலீடுகளையும் சேர்த்து!

வரிச்சலுகை பெற, மொத்தத் தொகையையும் ஒரே நேரத்தில் முதலீடு செய்ய வேண்டுமா?

இல்லை, அது நம் விருப்பம். 1.50 லட்சம் ரூபாயையும் மொத்தமாக ஒரே நேரத்திலும் முதலீடு செய்யலாம் அல்லது மாதாமாதம் 12,500 ரூபாயாகவும் ரெக்கரிங் டெபாசிட்போல தவணைமுறையில் முதலீடு செய்யலாம்.

அதுவும் முடியாது என்றால், அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்வதோடு, தீபாவளி போனஸ்போல லம்ப்பாகக் கிடைக்கும்போது அதில் ஒரு பகுதியை எடுத்து மொத்தமாகவும் முதலீடு செய்யலாம். ரொம்பவே ஃப்ளெக்ஸிபிள் திட்டம் இது. அந்த விதத்தில், சிறு முதலீட்டாளர்களுக்கு சௌகரியமானது.

இதில் முதலீடுசெய்ய யாரை அணுக வேண்டும்?

1. முகவர்கள்: புதிதாக முதலீடு செய்பவர்கள், இதற்கு என நியமிக்கப்பட்டிருக்கும் மியூச்சுவல் ஃபண்ட்    ஏஜென்ட் அல்லது டிஸ்ட்ரிபியூட்டர்களை அணுகலாம். சிறு ஊர்களில்கூட இப்போது முகவர்கள் இருக்கிறார்கள். நமக்கு ஏற்ற முதலீட்டை அவர்கள் பரிந்துரைப்பார்கள். அவர்கள் ஆலோசனைபெற்று முதலீடு செய்வதன் மூலம் நஷ்டத்தைக் குறைப்பதுடன் ஓரளவுக்கு லாபத்தை அதிகரிக்கவும் திட்டமிடலாம்.

2.நேரடி முதலீடு: கொஞ்சம் அனுபவமிக்க முதலீட்டாளராக இருந்தால், இணையதளம் மூலமாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தையே நேரடியாகவும் அணுகலாம். மியூச்சுவல் ஃபண்ட் முகவர்களுக்குக் கொடுக்கப்படும் கமிஷன் இல்லாததால், இந்த முறையில் முதலீடு செய்தால் நமக்குக் கொஞ்சம் அதிக எண்ணிக்கையில் யூனிட்டுகள் கிடைக்கும். ஆனாலும் அனுபவமிக்கவர்களின் ஆலோசனை நமக்குக் கிடைக்காமல் போகலாம்.

3. பங்குத் தரகர்கள்: உங்களுக்கு அருகில் உள்ள செபியிடம் பதிவுபெற்ற பங்குத் தரகர்களை அணுகலாம். NSE / BSE-யில் இவர்கள் மூலமாக பங்குகள் வாங்குவதுபோலவே மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளையும் வாங்கலாம்.

ELSS திட்டத்தில் நாம் முதலீடு செய்வதால், என்ன ஆதாயம்?

1. ஆண்டுக்கு 1.50 லட்சம் ரூபாய் வரையில் இந்தத் திட்டத்தின் கீழ் நாம் முதலீடு செய்யும் தொகைக்கு வருமான வரி கிடையாது. (இதன் மூலம் ஆண்டுக்கு 45,000 ரூபாய் வரை மிச்சம் செய்யலாம்.)
2. அவ்வப்போது இந்த முதலீட்டின் மீது நமக்குக் கிடைக்கக்கூடிய டிவிடெண்ட் வருவாய்க்கும் முழு வருமான வரிவிலக்கு உண்டு.
3. முதலீடு செய்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நம் முதலீட்டைத் திரும்பப் பெறும்போது, நாம் பெறும் முதலீட்டுத் தொகை மற்றும் அதன் மீதான ஆதாயத்துக்கும் வருமான வரியே கிடையாது.

P.P.F–க்கு இணையாக இந்த அளவுக்கு எல்லா வரிச்சலுகைகளையும் கொடுக்கக்கூடிய திட்டம் இது. PPF போல உத்தரவாதமான வருவாய் இல்லையெனினும், அதைவிடவும் அதிக ஆதாயம் தரக்கூடிய வாய்ப்பு உள்ள முதலீடு இது.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும்போது அதிகப் பலன்பெற நாம் கடைப்பிடிக்கவேண்டிய சில உத்திகள் இருக்கின்றன. அவை:

1. SIP: Systematic Investment Plan: முறைப்படுத்தப்பட்ட தவணைமுறை முதலீடு.

2. STP: Systematic Transfer Plan : முறைப்படுத்தப்பட்ட மாற்று முதலீட்டுத் திட்டம்.

3. SWP: Systematic Withdrawal Plan : தவணைமுறையில் திரும்பப் பெறும் திட்டம்.

முறைப்படுத்தப்பட்ட தவணைமுறை முதலீடு (SIP).

அறம் பொருள் இன்பம் - 10

சிம்பிளாகச் சொல்லவேண்டும் என்றால், இது ரெக்கரிங் டெபாசிட் போல. நமக்கு ஏற்ற நல்ல மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வது நல்லது. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமே நேரடியாக நம் வங்கியில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ளவும் நாம் அனுமதி கொடுக்கலாம்.

மொத்தமாக ஒரேமுறை முதலீடு செய்வதற்கும், இப்படித் தவணைமுறையில் கட்டுவதற்கும் என்ன வித்தியாசம்?

மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளின் மதிப்பு ஏற்ற-இறக்கங்களுக்கு உட்பட்டது எனச் சொன்னது நினைவிருக்கலாம். உதாரணமாக, நாம் முதலீடுசெய்ய உத்தேசித்திருக்கும் தொகை 12,000 ரூபாய் என வைத்துக்கொள்ளலாம். யூனிட்டுகளின் மதிப்பு அதிகமாக இருக்கும்போது முதலீடுசெய்தால், குறைவான என்ணிக்கையிலேயே நமக்கு யூனிட்டுகள் கிடைக்கும். ஆனால், யூனிட்டுகளின் மதிப்பு குறைவாக இருக்கும்போது முதலீடுசெய்தால், அதே தொகைக்கு ஈடாக அதிக யூனிட்டுகள் நமக்கு கிடைக்கும்.

யூனிட்டுகளின் மதிப்பு இப்போது கணிசமாகக் குறைந்திருக்கிறது என அனுமானித்து, அந்த நேரத்தில் மொத்தமாக முதலீடுசெய்வது என்பது, எல்லோருக்கும் சாத்தியமானது அல்ல. முதலீட்டில் நீண்ட அனுபவமிக்கவர்களுக்கேகூட அது கைவராத கலை. அப்படிக் கணித்து முதலீடு செய்த பிறகு, சந்தை மேலும் சரிந்ததன் காரணமாக, கணிப்புத் தவறி முதலீட்டில் பலத்த இழப்பைச் சந்தித்தவர்களும் உண்டு.

அறம் பொருள் இன்பம் - 10

எனவே, SIP முறையில் முதலீடுசெய்வதன் மூலம், இந்த ஏற்ற-இறக்கங்களை சமன்செய்து ஓரளவுக்குக் குறைவான விலையில் அதிக யூனிட்டுகளைப் பெற முடியும்.
எஸ்ஐபி முறையில் நாம் மாதாமாதம் முதலீடு செய்யும் தொகை அதேதான். மாறுவதே இல்லை. ஆனால், எப்போதெல்லாம் யூனிட்டின் மதிப்பு குறைகிறதோ, அப்போதெல்லாம் அதிக எண்ணிக்கையில் யூனிட்டுகள் வாங்கியிருப்போம். அதேசமயம், எப்போதெல்லாம் யூனிட்டின் மதிப்பு அதிகரித்திருக்கிறதோ அப்போதெல்லாம் குறைவான எண்ணிக்கையில்தான் யூனிட்டுகளை வாங்க முடியும். இதுதான் இந்தத் திட்டத்தின் மகத்துவம். இந்த டிசிப்ளின்தான் முக்கியம்.

இப்படிச் செய்வதன் மூலம், நீண்டகால அடிப்படையில் நம் யூனிட்டுகளின் சராசரி முதலீட்டு விலை, அப்போதைய சந்தை விலையைவிடக் கணிசமாகக் குறைவாக இருக்கும்.
சந்தையின் ஏற்ற-இறக்கத்தைக் கணிக்க முடியாதவர்கள் அல்லது அதற்கு நேரம் இல்லாதவர்கள் அதே சமயம் அதன் ஏற்ற-இறக்கங்களின் முழுப் பலனையும் ஓரளவாவது பெற வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஏற்றது இந்த SIP முதலீடே!

- பொருள் சேர்க்கலாம்...