Published:Updated:

அறம் பொருள் இன்பம் - 11

வ.நாகப்பன்

பிரீமியம் ஸ்டோரி
அறம் பொருள் இன்பம் - 11

ண்மையைச் சொல்லணும்னா, நம்ம எல்லோருக்கும் என்ன ஆசை தெரியுமா?

நம்முடைய மொத்தச் சேமிப்பும், பாதுகாப்பாக இருக்கக்கூடிய நல்ல முதலீடாக இருக்க வேண்டும் என்பதுதான். அதேசமயம், பணவீக்கத்தைத் தாண்டிய நல்ல வருவாயாகவும் அல்லது ஆதாயமாகவும் வேண்டும். அந்த வருவாய்/ ஆதாயத்தின் மீது வருமானவரி ஏதும் இல்லாமல் இருந்தால் ரொம்ப மகிழ்ச்சி. ஆனால், இவை மூன்றும் ஒருசேர இருக்கக்கூடிய முதலீடுகள் மிக மிக அரிது.

பி.பி.எஃப்-ஐ தவிர்த்துப்பார்த்தால், பெரும்பாலான பாதுகாப்பான முதலீடுகள் பெரிய ஆதாயத்தையோ அல்லது வரிச்சலுகை களுடன்கூடிய நல்ல வருவாயையோ தருவது இல்லை.

இ.எல்.எஸ்.எஸ் மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் வரிச்சலுகைகள் மற்றும் நல்ல ஆதாயம் இருக்கலாம் என்றாலும், முதலீட்டின் மீது முழுமையான உத்தரவாதம் இல்லை. சந்தையின் ஏற்ற-இறக்கத்துக்கு ஏற்ப லாபம் - நட்டம் அமையலாம்.

பொதுவாகப் பார்க்கையில், `நம் மொத்த முதலீட்டுக்கு பங்கம் வராமல் வருமான வரிச்சலுகைகளுடன்கூடிய நல்ல ஆதாயத்தைத் தர வாய்ப்பு உள்ள முதலீடுகள் இல்லையோ' எனத் தோன்றும். ஆனால், கொஞ்சம் நேரம் உட்கார்ந்து யோசித்தால் அந்த மாதிரி ஒரு திட்டத்தை நம்மால் உருவாக்க முடியும்... எப்படி?

உதாரணமாக, ராமநாதன் அடுத்த மாதம்தான் ஓய்வுபெறுகிறார் என வைத்துக்கொள்வோம். கையில் ஏற்கெனவே இருக்கும் சேமிப்பையும் சேர்த்து, ஓய்வுபெறும்போது அவருக்கு மொத்தமாக 40 லட்சம் ரூபாய் கிடைப்பதாகக் கருதுவோம். சொந்த வீடு. எனவே வீட்டு வாடகை கிடையாது. வீடு மீதான கடன் முழுவதும் ஏற்கெனவே அடைத்துவிட்டார். மனைவி மட்டும்தான் உடன் இருக்கிறார். பிள்ளைகள் எல்லோரும் செட்டில் ஆகி விட்டார்கள். இப்போதைக்கு அவரது மாதாந்திர செலவுகளுக்கான தேவை 24,000 ரூபாய்தான். ஆனால், அடுத்த சில ஆண்டுகளுக்கான பணவீக்கத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, மீதிப் பணத்திலோ அல்லது அதன் மீதான வருவாயிலோ அவர் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கத் தயார்... முதலுக்கே மோசம் வராத வரையில்!

அவர் என்ன செய்யலாம்? அவருக்கான தீர்வு இதோ...

CAPITAL PROTECTED PLAN/SCHEME:

* 30 லட்சம் ரூபாயை, மாநில அரசுக்கு முழுவதும் சொந்தமான நிறுவனங்களில் சிலவற்றில் டெபாசிட் செய்யலாம் அல்லது அதிக தரக் குறியீடு பெற்ற பாதுகாப்பான கம்பெனி டெபாசிட்களில் போடலாம். ஆண்டுக்கு 9.25 சதவிகிதம் வட்டி கொடுக்கும் இந்த நிறுவனங்கள், சீனியர் சிட்டிசன்களுக்கு மட்டும் சிறப்புச் சலுகையாக ஆண்டுக்கு 9.75 சதவிகிதம் வட்டி கொடுக்கிறார்கள். இதில் சௌகரியம் என்னவென்றால், ஆண்டுக்கு 9.25 சதவிகிதம் வட்டி எனக் கணக்கிட்டாலும், அதை 12 ஆகப் பிரித்து மாதாமாதம் கொடுக்கிறார்கள். எனவே, ராமநாதனின் 30 லட்சம் ரூபாய் டெபாசிட் மீது ஆண்டுக்கு சுமார் 2,92,500 ரூபாய் வட்டி கிடைக்கும் அல்லது மாதாமாதம் 24,375 ரூபாய்க்கு மேல் கிடைக்கும். இந்தத் தொகையைக்கொண்டு மாதச் செலவுகளை சுலபமாகச் சமாளிக்கலாம்.

*  மீதம் இருக்கும் 10 லட்சம் ரூபாயையும் இதே மாதிரி டெபாசிட்டில் முதலீடு செய்யலாம்; அதன் மீது ஆண்டுக்கு ரூபாய் 97,500 அல்லது மாதம் சுமார் 8,000 ரூபாய்க்குக் குறையாமல் கிடைக்கும். இந்தப் பணம், இப்போதைக்கு அவருக்குத் தேவை இல்லை. அப்படிக் கிடைக்கக்கூடிய 8,000 ரூபாயை, மாதாமாதம் ஒரு நல்ல மியூச்சுவல் ஃபண்டில் முதலீடுசெய்து வரலாம்.

ரிஸ்க் கொஞ்சம் குறைவாக இருக்கவேண்டும் எனில், அது ஒரு பேலன்ஸ்டு ஃபண்டாக இருக்கலாம். கொஞ்சம் அதிக ரிஸ்க் எடுக்கத் தயார் என்றால், அது டைவர்சிஃபைடு ஃபண்டாகவும் இருக்கலாம். இல்லையெனில், பங்குச்சந்தைக் குறியீட்டின் அடிப்படையிலான `இண்டெக்ஸ் ஃபண்ட்’களில் முதலீடு செய்யலாம். குறுகியகால அடிப்படையில் அவ்வப்போது ஏற்ற-இறக்கங்கள் இருந்து பயமுறுத்தினாலும் நீண்டகால அடிப்படையில் பார்க்கையில், கடந்த பல ஆண்டுகளாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பரந்த பங்குச்சந்தைக் குறியீடுகள், 1992-ம் ஆண்டு தொடங்கி கடந்த 25 ஆண்டுகளில் சராசரியாக சுமார் 15 சதவிகித ஆண்டு வருவாய் கொடுத் திருக்கின்றன, வருமான வரிச் சலுகைகளுடன்!

உத்தரவாதம் இல்லை யெனினும், எதிர்காலத்திலும் பணவீக்கத்தைத் தாண்டிய நல்ல வருவாயைக் கொடுக்கும் என நம்பலாம்.

இப்படிச் செய்வதால் என்ன வசதி?

1. மொத்த சேமிப்பும் முதலீடும் பாதுகாப்பான டெபாசிட்களில்.
2. அவருடைய அன்றாடச் செலவுகளுக்கான தொகை உறுதியாகக் கிடைத்து விடுகிறது.
3. உபரி வருவாயில் மட்டுமே கொஞ்சம் ரிஸ்க் எடுக்கிறார்.

ஒருவேளை மோசமான சூழல் ஏற்பட்டு சந்தை கீழே இறங்கினால் அல்லது ஏதாவது இழப்பு என்றால்கூட அந்த உபரி வருவாயின் (மாதம் ரூ. 8,000/-) மீது மட்டுமே. அதிலும், அதன் ஒரு சிறுபகுதி மட்டுமே இழக்கக் கூடிய வாய்ப்பு. ஆனால், மொத்த முதலீடான 40 லட்சம் ரூபாய் பாதுகாப்பாக இருக்கும். மாதம் வருவாய் 24,000 ரூபாய்க்கு எந்த பங்கமும் வராது. ரிஸ்க் எடுக்கும் மாதாந்திர முதலீட்டின் மீதான வருமானத்துக்கு எந்தவிதமான வருமானவரியும் கிடையாது என்பது எக்ஸ்ட்ரா போனஸ்.

கூழுக்கும் ஆசைப்படலாம்... மீசைக்கும் ஆசைப்படலாம் தைரியமாக!

முறைப்படுத்தப்பட்ட மாற்று முதலீட்டுத் திட்டம் (SYSTEMATIC TRANSFER PLAN).

மேலே சொன்ன திட்ட அடிப்படையில், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் அமல்படுத்தலாம். எப்படி?

1. கடன் சார்ந்த பாதுகாப்பான/மாதாமாதம் வருவாய் தரக்கூடிய திட்டங்களில் நம் பெரும் முதலீட்டைப் போட்டுவைப்பது, இந்த முதலீட்டின் மீது ஓரளவுக்குப் பாதுகாப்பான வருவாய் வரும். முதலுக்கும் பெரிதாக பங்கம் வர வாய்ப்புக் குறைவு.

2. அதன்மீது மாதாமாதமோ அவ்வப்போதோ வரக்கூடிய வருவாயை வேறு ஒரு திட்டத்துக்கு மாற்றி, அதில் முதலீடு செய்வது. அப்படி நாம் முதலீடு செய்யக்கூடிய திட்டம், அதிக வருவாய் தர வாய்ப்பு உள்ள பங்குச்சந்தை அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்டாக இருப்பது நல்லது.

அறம் பொருள் இன்பம் - 11

இதற்கு நேர்மாறாகவும் செய்யலாம்:

1. அதிக வருவாய் தர வாய்ப்பு உள்ள ரிஸ்க்கான மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் பெரும் முதலீட்டைப் போட்டுவைப்பது. ரிஸ்க் எடுக்கத் தயாராக உள்ள இளம் வயதினருக்கு ஏற்ற முதலீட்டு முறை இது எனச் சொல்லலாம்.

2. சந்தை கணிசமாக அதிகரித்து நல்ல ஆதாயம் கிடைக்கும்போது முதலீட்டின் ஒரு பகுதியை விற்று லாபத்தைப் பதிவுசெய்து, அந்தப் பணத்தைப் பாதுகாப்பான கடன்பத்திரங்கள் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களுக்கு மாற்றி முதலீடுசெய்வது.

ஏற்கெனவே நாம் விவாதித்த எஸ்.ஐ.பி முதலீட்டு முறைக்கு உறுதுணையாக இந்த முதலீட்டு முறை இருக்கும்.

மேற்சொன்ன முதலீட்டு முறைகளில் நமக்கு ஏற்றது எது? நம் வயது, வருவாய், சேமிப்பு, இதர பொறுப்புகள், ஓய்வுக் காலத்துக்கான காலம், ரிஸ்க் புரொஃபைலைப் பொறுத்து நமக்கு ஏற்ற முதலீட்டு முறையைத் தேர்ந்தெடுக்கலாம்.

 தவணை முறையில் திரும்பப் பெறும் திட்டம்  (SYSTEMATIC WITHDRAWAL PLAN)

பெரும்பாலும் முதலீட்டுக்கான ஆலோசனைகளையே ஊடகங்களில் அதிகம் பார்க்க முடிகிறது. ஆனால், அதே அளவு முக்கியமானது முதலீட்டை எப்போது வெளியே திரும்ப எடுப்பது என்பது. அதை பெரும்பாலோனோர் சொல்லித்தருவது இல்லை.

பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற கொஞ்சம் ரிஸ்க்கான முதலீடுகளில் இது அத்தியாவசியமும்கூட. அவ்வப்போது லாபத்தைப் பதிவுசெய்து முதலீட்டின் ஒரு பகுதியை பாதுகாப்பான முதலீடுகளுக்கு மாற்ற வேண்டும்.

`முதலீடு, நல்ல வருவாயைக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது ஏன் திரும்பப் பெற வேண்டும்?' – என்ற கேள்வி எழலாம். நன்கு செயல்பட்டுக்கொண்டிருக்கும் முதலீட்டை வெளியே எடுக்கத் தயக்கமாகத்தானே இருக்கும்? `அதுதான் நல்ல வருவாய் கொடுத்துக் கொண்டிருக்கிறதே. இப்போது ஏன் அதில் கை வைக்க வேண்டும்? அதுபாட்டுக்குக் கிடக்கட்டும்' எனத் தோன்றுவது சகஜம்.
அதேசமயம், சந்தைகள் வீழ்ச்சி கண்டு, முதலீட்டின் மதிப்பு கணிசமாகக் குறைந்துபோய், அதன் காரணமாக நம் வருவாய் குறைந்தாலோ அல்லது நின்றுபோனாலோ, பணத்தை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் எனத் தோன்றுவதும் சகஜம்தான்.

ஆனால், நல்ல முதலீட்டாளரைப் பொறுத்தவரையில் இரண்டுமே சரியில்லை.அவ்வப்போது கண்ணுக்கு நேரே தெரியக்கூடிய லாபத்தைப் பதிவுசெய்து, பணத்தை வெளியே எடுக்காமல் வேடிக்கை பார்த்துவிட்டு, பின்னால் வீழ்ச்சியின்போது புலம்புவது தவறு.

அறம் பொருள் இன்பம் - 11

அதே மாதிரி குறுகியகால வீழ்ச்சியின்போது, நம் முதலீட்டை வெளியே எடுத்து நஷ்டத்தை உறுதிசெய்வதும் தவறு. பின்னாட்களில் சந்தை அதிகரித்த பிறகு வருத்தப்படவேண்டிவரும்.
சந்தையைக் கூர்ந்து கவனித்து, எது ஏற்றம், எது வீழ்ச்சி எனக் கணித்து, அதன் அடிப்படையில் பணத்தைத் துல்லியமாகக் கையாள்வது என்பது பல சமயங்களில் தேர்ந்த முதலீட்டாளர் களுக்குக்கூடச் சிரமம்தான்.

ஒரு நல்ல மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைத் தேர்ந்தெடுத்து அதில் முதலீடு செய்வதோடு முடிவதில்லை நம் வேலை. அவ்வப்போது அதன் வளர்ச்சியையும் கண்காணிக்க வேண்டும். ஓரளவுக்கு மேல் அதிகரித்து நாம் எதிர்பார்த்த ஆதாயத்தைத் தர ஆரம்பித்துவிட்டால், அதில் ஒரு பகுதியையாவது விற்று லாபத்தைப் பதிவு செய்வது அவசியம். இதற்கான திட்டம்தான் `சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் ப்ளான்.'

இது எப்படிச் செயல்படுகிறது? சொல்கிறேன்...

- பொருள் சேர்க்கலாம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு