Published:Updated:

அறம் பொருள் இன்பம் - 12

அறம் பொருள் இன்பம் - 12
பிரீமியம் ஸ்டோரி
News
அறம் பொருள் இன்பம் - 12

வ.நாகப்பன்

அறம் பொருள் இன்பம் - 12

முதலுக்கு மோசம் வராமல் எப்படி ரிஸ்க் எடுப்பது என்பதை சென்ற வாரம் பார்த்தோம். பாதுகாப்பான முதலீட்டில் பணத்தைப் போட்டுவிட்டு, அது கொடுக்கும் வருமானத்தை மட்டும் வெளியே எடுத்து, கொஞ்சம் ரிஸ்க்கான முதலீடுகளில் போடுவதன் மூலம் நம் வருமானத்தை அதிகப்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்பது புரிந்திருக்கும். பணவீக்கத்தைத் தாண்டிய வருவாய் பெறுவதே இதன் முக்கிய நோக்கம்.

தவணைமுறை ஆதாயம்!


இனி, தவணைமுறையில் ஆதாயத்தை வெளியே எடுப்பதை நாம் எப்படிச் செயல்படுத்தலாம் என்பதைப் பார்க்கலாம். இதை, இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்த வேண்டும்.

1. முழுவதும் பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் பெரும் முதலீட்டைப் போட்டுவைக்க வேண்டும். அது டைவர்சிஃபைடு மியூச்சுவல் ஃபண்டு திட்டமாக இருக்கலாம். இல்லையெனில், பங்குச்சந்தை மற்றும் பாதுகாப்பான கடன் பத்திரங்களில் பிரித்து முதலீடு செய்யக்கூடிய பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டு திட்டமாகவும் இருக்கலாம். இந்தத் திட்டங்களில் நாம் கொடுக்கும் பணம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது என்பதால், ரிஸ்க் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதே சமயம், ஆதாயமும் வருவாயும் அதிகம் தர வாய்ப்பு உள்ளவை. பணத்தைப் போட்டாச்சு... சரி இனி என்ன?

2. பங்குச்சந்தை அதிகரிக்கும்போது, அதில் முதலீடு செய்துள்ள நம் மியூச்சுவல் ஃபண்டுகளின் யூனிட் மதிப்பும் அதற்கேற்ப உயரும். மாதாமாதம் அல்லது காலாண்டுக்கு/ஆண்டுக்கு ஒருமுறை என இதன் செயல்பாட்டை நாம் தொடர்ந்து ட்ராக் செய்ய வேண்டும். எப்போது எல்லாம் நம் முதலீட்டின் மதிப்பு கணிசமாக உயருகிறதோ, அப்போது எல்லாம் யூனிட்டுகளின் ஒரு பகுதியை விற்றுக் காசாக்கி, அந்த உபரித் தொகையான லாபத்தை வெளியே எடுக்க வேண்டும். அப்படி எடுக்கும் பணத்தை, பாதுகாப்பான வேறு முதலீடுகளில் போட்டுவைக்கலாம்.
ரிஸ்க்கும் எடுத்தாச்சு... லாபமும் பார்த்தாச்சு!

ரிஸ்க் எடுக்கத் தயாராக உள்ள இளம் வயதினருக்கும், ஓய்வுகாலத்துக்குத் திட்டமிடும் நடுத்தரவயதினருக்கும் ஏற்ற முதலீட்டுமுறை இது எனச் சொல்லலாம்.

* உதாரணமாக, ஒரு நல்ல டைவர்சிஃபைடு மியூச்சுவல் ஃபண்டாகத் தேர்ந்தெடுத்து, அதில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம். அன்றைய தேதியில் ஒரு யூனிட்டின் மதிப்பு 10 ரூபாய் எனில், நாம் போடக்கூடிய தொகைக்கு ஈடாக நமக்கு 10,000 யூனிட்டுகள் கிடைக்கும்.

*  ஓர் ஆண்டுக்குப் பிறகு, பங்குகளின் விலை அதிகரித்ததன் காரணமாக நம் முதலீட்டின் மதிப்பும் உயர்ந்து, யூனிட் ஒன்றின் மதிப்பு 12 ரூபாயாக இருப்பதாக வைத்துக்கொள்வோம். இப்போது அந்த லாபத் தொகையான 2 ரூபாயை நாம் வெளியில் எடுக்க வேண்டும். எப்படி?

*  யூனிட் ஒன்றின் இப்போதைய மதிப்பு  12 ரூபாய் எனில், நம் கைவசம் இருக்கும் 10,000 யூனிட்டுகளின் மொத்த மதிப்பு 1.20 லட்சம் ரூபாயாக இருக்கும் அல்லவா? இதில் இருந்து, 20,000 ரூபாய் மதிப்புக்கான யூனிட்டுகளை மற்றும் விற்றுக் காசாக்க வேண்டும்.

*  20,000/12 = 1,666 யூனிட்டுகளை மட்டும் விற்றாலே 20,000 ரூபாய் கிடைக்கும் (1666 x 12). இதை விற்ற பிறகு நம்மிடம் மீதம் இருப்பது 10,000 – 1,666 = 8,334 யூனிட்டுகள். அதன் இப்போதைய மதிப்பு 8,334 x 12 = 1 லட்சம் ரூபாய்.

சூப்பர் இல்லையா!!

`ஒரே கொழப்பமா இருக்கே!' என போன்செய்தார் ஷ்யாம். `இதுவரை நல்ல மியூச்சுவல் ஃபண்டில் பணத்தைப் போடலாம்னு தொடர்ந்து சொல்றீங்களே சார். எது நல்ல மியூச்சுவல் ஃபண்டுனு எப்படிக் கண்டுபிடிக்கிறது?' எனக் கேட்டார். நல்ல டாக்டர் யார் என எப்படிக் கண்டுபிடிக்கிறோம்? அதைப் போலத்தான் இதுவும்.

பங்குச்சந்தையில் நாமே நேரடியா முதலீடு பண்றதுங்கிறது நாமே கார் ஓட்டுவது மாதிரி என்றால், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு என்பது நல்ல அனுபவமிக்க ஒரு டிரைவரை அமர்த்திவிட்டு நாம் ஹாயாக வேடிக்கை பார்த்துக்கொண்டே காரில் பயணிப்பதுபோல.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நல்ல மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

1. நீண்டகால அனுபவம்

ஃபண்டு ஆரம்பித்து எத்தனை ஆண்டுகாலமாகச் செயல்பட்டுவருகிறது எனப் பார்க்க வேண்டும். ஓரளவுக்கு நீண்டகாலம் நடப்பில் இருக்கக்கூடிய திட்டமாக இருப்பது நல்லது. அதன் `ட்ராக் ரெக்கார்ட்' நமக்குத் தெரியும். ஆனால், அதன் கடந்தகால செயல்பாடுகளின் அடிப்படையில் மட்டுமே ஒரு ஃபண்டைத் தேர்ந்தெடுக்க முடியாது. இன்னும் வேறு சில காரணிகளும் இருக்கின்றன. அவற்றையும் பார்க்கலாம். அவை ஃபண்டின் இணையதளத்திலேயே இருக்கும். அவர்களின் விண்ணப்பப்படிவத்துடனும் இந்தத் தகவல் இருக்கும்.

2. ஃபண்ட் மேனேஜர்


ஒவ்வொரு ஃபண்டையும் நிர்வகிப்பது அதற்கு என நியமிக்கப்பட்டிருக்கும் ஒரு ஃபண்ட் மேனேஜர்தான். ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் செயல்பாடு அவரைப் பொறுத்துத்தான் இருக்கிறது. திட்டத்தின் வெற்றி-தோல்விக்கு அவர் பங்களிப்பு கணிசமானதாக இருக்கும். எனவே, ஃபண்ட் மேனேஜர் யார் எனப் பார்க்க வேண்டும். அவர் நிர்வகித்துவரும் இதர திட்டங்களின் செயல்பாடுகள் எப்படி எனவும் அலசலாம். இந்தத் தகவலும், மேலே சொன்ன மாதிரி எளிதாகக் கிடைக்கும்.

3. கடந்தகால ட்ராக் ரெக்கார்ட் – பெர்ஃபாமன்ஸ்

நாம் முதலீடு செய்ய `ஷார்ட் லிஸ்ட்' செய்துள்ள ஃபண்ட் மற்றும் அதன் நிர்வாகி ஆகியோரின் கடந்தகாலச் செயல்பாடுகளையும் அந்தத் திட்டங்கள் கொடுத்திருக்கும் வருமானம்/ஆதாயத்தையும் அதேபோன்ற ஏனைய திட்டங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

4. செக்டோரலா அல்லது டைவர்சிஃபைடா!

பொதுவாக டைவர்சிஃபைடு திட்டங்களில் போடுவது நல்லது. ரிஸ்க்கும் ஓரளவுக்கு குறைவாக இருக்கும். பணவீக்கத்தைத் தாண்டிய வருவாயை எதிர்பாக்கலாம். ஆனால், இளம் வயதினர் மற்றும் ஒரு குறிப்பிட்ட துறையைப் பற்றி நன்கு விவரம் அறிந்தவர்களுக்கு/ஆழ்ந்த அனுபவமிக்கவர்களுக்கு ஏற்ற திட்டம் செக்டோரல் ஃபண்டு. ரிஸ்க் அதிகம் என்றாலும் லாப-நட்டமும் அதற்கேற்ப இருக்கும்.

5. ஈக்விட்டியா, டெப்டா அல்லது பேலன்ஸ்டா!

இளம் வயதினருக்கு ஏற்றது ஈக்விட்டி ஃபண்ட். பங்குச்சந்தை சார்ந்த திட்டம். நடுவயதினருக்கு ஏற்றது பேலன்ஸ்டு திட்டம். மூத்த குடிமக்கள் பெரும்பாலும் டெப்ட் ஃபண்டில் போடுவது நல்லது. எனினும், இது ஆளுக்கு ஆள், அவர்களின் ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்து மாறுபடும்.

6. ஃபண்டில் முதலீடு செய்யும்போது எந்த ஆப்ஷனைத் தேர்ந்தெடுப்பது?


பொதுவாகவே க்ரோத் என்பது வளர்ச்சி அடிப்படையிலானது என்பதால், அதைத் தேர்ந்தெடுப்பதே பெட்டர். இங்கு ஒன்றை நினைவில்கொள்ள வேண்டும். மியூச்சுவல் ஃபண்டைப் பொறுத்தவரையில் டிவிடெண்ட் என்பது எல்லாம் வெறும் மாயை. நமக்கு டிவிடெண்ட் கொடுத்த பிறகு, எவ்வளவு டிவிடெண்ட் நமக்குக் கொடுத்தார்களோ அதே அளவுக்கு நம் யூனிட்டுகளின் மதிப்பும் சர்ரென குறைந்துவிடும். அதோடு மட்டும் அல்ல; டிவிடெண்ட் ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தால், இன்னொரு சிக்கலும் உண்டு. நாம் போட்ட முதல், இப்போது எவ்வளவு அதிகரித்திருக்கிறது என ஒப்பிட்டுக் கண்டுபிடிப்பது கொஞ்சம் சிக்கலாக இருக்கும். வளர்ச்சி அடிப்படையிலான க்ரோத் திட்டத்தில் டிவிடெண்ட் மூலம் பணம் வெளியில் எடுக்கப்படாததால், நம் முதலீடு மற்றும் அது ஈட்டிய வருவாய்/ஆதாயம் முழுவதும் அதற்குள்ளேயே இருக்கும். எனவே, நம்முடைய முதல் எவ்வளவு அதிகரித்திருக்கிறது என ஒப்பிட்டுப் பார்ப்பது சுலபமாகிறது.

மேலும் விவரங்களுக்கு `ஆம்ஃபி' மற்றும் `செபி' இணையதளங்களைப் பார்க்கலாம்; அருகில் உள்ள முகவரை/பங்குத்தரகரை அணுகலாம்.

- பொருள் சேர்க்கலாம்...

 ரூல் 72

ம் முதலீடு இருமடங்காகப் பெருக எத்தனை ஆண்டுகள் ஆகும் அல்லது எத்தனை சதவிகிதம் வட்டி ஈட்டினால் நம் முதலீடு குறிப்பிட்ட காலத்தில் இருமடங்காகப் பெருகும்?

கேள்வியைக் கேட்ட உடனே கண்ணைக் கட்டுதா... வட்டி, கூட்டுவட்டி என்றெல்லாம் ஒரே கன்ஃப்யூஷனா இருக்கா... கணக்குப் போட்டா குழப்பமா இருக்கா? இருக்கவே இருக்கு ரூல் 72.

அறம் பொருள் இன்பம் - 12

1. ஆண்டுக்கு 12 சதவிகித வருவாய் தரக்கூடிய உங்கள் முதலீடு, இருமடங்காகப் பெருக எத்தனை ஆண்டுகள் ஆகும்?

ரொம்ப சிம்பிள். 72-ஐ 12-ல் வகுத்தால் கிடைக்கும் விடைதான் உங்களுக்குக் கிடைக்கும் வருமானம்.

72 / 12 = 6 ஆண்டுகள்.

எனவே, ஆண்டுக்கு 12 சதவிகிதம் வட்டி வருவாய் ஈட்டக்கூடிய நம் முதலீடு, இருமடங்காகப் பெருக உத்தேசமாக ஆறு ஆண்டுகள் ஆகும்.

இப்போது இதையே வேறுவிதமாவும் மாத்திக் கேட்கலாம்.

2.   உங்கள் முதலீடு எட்டு ஆண்டுகளில் இருமடங்காகப் பெருக வேண்டும் என்றால், எத்தனை சதவிகிதம் வட்டி ஈட்ட வேண்டும்?

இது மேலே சொன்னதைவிட சிம்பிள். 72-ஐ 8-ல் வகுத்தால் கிடைப்பதுதான் நாம் எதிர்பார்க்கும் வட்டி.

72 / 8 = 9 சதவிகிதம்

அதாவது, ஆண்டுக்கு 9 சதவிகித வட்டி வருவாய் தரக்கூடிய முதலீடுகளில் நம் பணத்தைப் போட்டுவைத்தால், ஏறத்தாழ எட்டு ஆண்டுகளில் நம் பணம் இருமடங்காகப் பெருகும்.

(`அறம் பொருள் இன்பம்' தொடர்பான உங்கள் கேள்விகளை av@vikatan.com என்ற இ-மெயில் முகவரிக்கு எழுதி அனுப்புங்கள்.)