Published:Updated:

அறம் பொருள் இன்பம் - 13

அறம் பொருள் இன்பம் - 13
பிரீமியம் ஸ்டோரி
News
அறம் பொருள் இன்பம் - 13

வ.நாகப்பன்

அறம் பொருள் இன்பம் - 13

மீபத்தில் சென்னையில் ஆடித் தள்ளுபடி காரணமாக ஜவுளிக் கடையில் நடந்த தள்ளுமுள்ளு வீடியோ, வைரலாகப் பரவியது. அடேங்கப்பா! என்னா... மக்கள் கூட்டம்! அலைமோதல்... எல்லாம் எதுக்காக?

கையில இருக்கிற கொஞ்சநஞ்சக் காசையும் செலவு செய்யத்தான் இப்படி ஒரு போட்டாபோட்டி. `கவர்ச்சியான விளம்பரங்களால் தொடர்ந்து மனமாற்றம் செய்யப்படுகிறோம் என்பதைக்கூட உணராத கூட்டமாக மாறிவருகிறோமோ' என்னும் அச்சம் ஏற்படுகிறது.

ஆடித் `தள்ளு'படி Vs ஒன்றுமே வாங்காத தினம்!

`நம்ம ஊர்லதாங்க இப்படியெல்லாம்' என அலுத்துக்கொள்ள முடியாது. வளர்ந்த பல வெளிநாடுகளிலும் இதே நிலைதான். நம்ப முடிகிறதா?

தேங்க்ஸ் கிவ்விங் டே, கிறிஸ்துமஸ் என தள்ளுபடி விற்பனை நடக்கும்போது எல்லாம், அதிகாலையிலேயே கடைவாசலில் கூட்டம் கூடிவிடும். கடை திறக்கும் முன்னரே கூட்டம் வந்துவிடும். இன்னும் சொல்லப்போனால், பல இடங்களில் முதல் நாள் இரவே கடைக்கு வெளியே வரிசையாகப் பாய் விரித்துப் படுத்துவிடுவார்கள். காலையில் கடை திறந்தவுடன் அடித்துப்பிடித்துக்கொண்டு கடை உள்ளே மக்கள் ஓடுவதைப் பார்க்க வேண்டுமே! சிலசமயம், ஒரே பொருளுக்கு இரண்டு மூன்று பேர் அடித்துக்கொள்வதையும் பார்க்கலாம்.

எல்லாம் எதற்கு?

தேவையோ, தேவை இல்லையோ. . . விலை மலிவு என்ற காரணத்துக்காக மட்டுமே, வேண்டாத பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பதற்காக! ஒரு நிமிடம் ஒதுக்குங்கள்; சரியாக ஒரே ஒரு நிமிடம்தான். உங்களைச் சுற்றிப் பாருங்கள். எவ்வளவு பொருட்களை வாங்கிக் குவித்திருக்கிறோம். வாங்கும்போது அத்தியாவசியமாகத் தோன்றியவற்றை எல்லாம் சில நாட்களிலேயே அலுத்துப்போக, ஒதுக்கிவிடுகிறோம். தூக்கிப்போடவும் மனசு இல்லாமல் வீட்டுக்குள் எவ்வளவு குப்பைகள் சேர்ந்திருக்கின்றன?! இவற்றை வாங்க நாம் செலவழித்த பணத்தைப் பட்டியலிட்டால் எங்கேயோ போய் நிற்கும். செய்துதான் பாருங்களேன்! சில லட்சங்களில் இருக்கலாம். அதன் மீதான வருவாயும் போச்சு!

அது மட்டுமா? நமக்கு அத்தியாவசியத் தேவை இல்லாத பொருட்களை வாங்குவதன் மூலம், அது உண்மையிலேயே தேவையான ஒருவருக்குப் போய்ச் சேருவதைத் தடுக்கிறோம். தேவை இல்லாத பொருளை வாங்குவதன் மூலம் அதன் தேவையை அதிகரிக்கச்செய்து, பின்னாளில் சந்தையில் அதன் விலை அதிகரிப்பதற்கும் காரணமாகிறோம். இதனால், யாருக்கு என்ன லாபம்? கார்ப்பரேட்கள்தான் பணம் கொழிப்பார்கள்.

அறம் பொருள் இன்பம் - 13

`ஆடி விற்பனையின்போது கையில் காசு இல்லையா? கவலையே வேண்டாம், அதுதான் இருக்கிறதே கிரெடிட் கார்டு!' நம் மீதான அடுத்த தாக்குதல் இது. நம் சேமிப்பைக் கரைப்பதோடு மட்டும் அல்லாது நம்மைக் கடனாளியாக்கி, அவர்களுக்கு உழைக்கும்படி நம் ரத்தம் உறிஞ்சப்படும் – நம் ஆயுள் முழுவதும்!

மிக முக்கியமாக, உலகின் அரிதான இயற்கை வளங்களின் அழிவைத் துரிதப்படுத்துகிறோம். நமக்குத் தேவையான பொருட்கள் எல்லாமே இயற்கையிடம் இருந்து பெறப்பட்டவைதானே! நம் அடுத்த தலைமுறைக்குச் சொந்தமானதைத் திருட, நமக்கு என்ன உரிமை இருக்கிறது? திருமணங்கள், விசேஷங்களில்கூடப் பாருங்கள் – எவ்வளவு உணவு வீணாகிறது என்பதை.எல்லாம் வீண் பெருமைக்காக... எளிமை என்பதே மிஸ்ஸிங்.

இதைத்தான் `அதிநுகர்வுக் கலாசாரம்' என்கிறோம். இந்த அதிநுகர்வுக் கலாசாரத்துக்கு எதிராக உருவானதுதான் (Buy Nothing Day) `ஒன்றுமே வாங்காத தினம்'.

1990-களின் தொடக்கத்தில், கன்ஸ் யூமரிஸத்தின் உச்சமாக விளங்கும் வடஅமெரிக்காவில் தொடங்கப்பட்டதுதான் இந்த மூவ்மென்ட்... அதுவும் கனடாவில். ஒவ்வோர் ஆண்டும், நவம்பர் மாதம், தேங்க்ஸ் கிவ்விங் டே-யை ஒட்டி வரக்கூடிய பிளாக் ஃப்ரைடே அன்று இதைக் கொண்டாடுவார்கள். இந்தத் தினம் இன்று உலகம் முழுவதும் பரவலாகக் கொண்டாடப்படுகிறது. கொண்டாட்டம் என்பதைவிட அனுஷ்டிக்கப்படுகிறது என்றுகூடச் சொல்லலாம்.

சரி, அப்படி என்ன செய்வார்கள் அன்று?

ஒன்றுமே செய்ய மாட்டார்கள் என்றும் சொல்லலாம் – ஷாப்பிங்கைப் பொறுத்தவரையில். இதை மக்களுக்கு பலவிதமாக எடுத்துச் செல்கிறார்கள். உதாரணமாக:

* சாலையோர நாடகங்கள் மூலமாக அதிநுகர்வுக் கலாசாரத்தின் தாக்கம் புரியவைக்கப்படும்.

ஷாப்பிங் மால்களுக்குக் கூட்டம் கூட்டமாகச் சென்று, `ஒன்றுமே வாங்க வேண்டாம்' எனப் பிரசாரம் செய்வார்கள்.

அறம் பொருள் இன்பம் - 13

டெபிட் / கிரெடிட் கார்டை இரண்டாக வெட்டித் தூக்கி எறிவார்கள்.

ஸோம்பி வாக் – கடைக்குள் நுழைந்து ஒன்றுமே வாங்காமல் வெறும் ட்ராலியைத் தள்ளிக்கொண்டே போய், கடையின் வெளி கேட் அருகே விட்டுவிட்டு வந்துவிடுவார்கள்.

ஒன்றும் வாங்காததோடு மட்டும் அல்ல... சிலர் அன்றைய ஒரு தினம் மட்டும், வீட்டின் உள்ளே லைட், ஃபேன், ஏசி என எல்லாவற்றையும் சுவிட்ச் ஆஃப் செய்துவிடுவார்கள். டி.வி பார்ப்பது இல்லை; போனும் சுவிட்ச் ஆஃப்!

அதோடு நிற்பது இல்லை, அந்த நேரத்தை எப்படிச் செலவுசெய்வது என்பதிலும் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். சைக்கிளில் கும்பலாக வெளியே செல்வார்கள். அருகில் இருக்கும் நதியில் நீச்சல் அடிப்பார்கள் அல்லது மலையேற்றம் செல்வார்கள். பைசா செலவு இல்லாமல் என்ன எல்லாம் செய்ய முடியுமோ, அவை எல்லாம் செய்வார்கள்.

சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், பணம் செலவு செய்யாமல் இருப்பது மட்டும் அல்ல, ஏனைய வளங்களையும் பாதுகாப்பதன் மூலம் சேமிப்பையும் வளர்க்கிறார்கள்.

மூத்தோர் மட்டும் அல்ல, இன்றைய இளைய தலைமுறையும் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கியமான நாள் இது. தேவை இல்லாமல் அடிக்கடி புதுப்புது செல்போன்களை மாற்றுவது, டூ வீலர் அல்லது கார்களை மாற்றிக்கொண்டே இருப்பது, 100 ரூபாய்க்கு பாப்கார்ன் சாப்பிடுவது என ஆரோக்கியத்தையும் கெடுத்துக்கொள்ளாமல், வித்தியாசமாக யோசித்துச் செயல்படுவதன் மூலம், நம் பர்ஸுக்கும் பாதுகாப்பு; ஆரோக்கியத்துக்கும் பாதுகாப்பு; சேமிப்பும் உயரும்; நிம்மதியான எதிர்காலம் உறுதி!

எளிமையே உச்சபட்ச அழகு. என்ன... ஒவ்வொரு மாதமும் ஒருநாளை ஒன்றுமே வாங்காத தினமாகக் கொண்டாடுவோமா?

- பொருள் சேர்க்கலாம்...

ரூல் 115

நீங்க முதலீடு செய்யும் பணம் எத்தனை வருடங்களில் இரண்டு மடங்காகப் பெருகும் என்பதைத் தெரிந்துகொள்ள, `ரூல் 72' பயன்படும் எனப் பார்த்தோம். இப்போது அதே முதலீடு, எத்தனை வருடங்களில் மூன்று மடங்காகப் பெருகும் என்பது தெரிய வேண்டுமா? அதற்காக இருக்கிறது `ரூல் 115'. கொஞ்சம் அதிகமாக ஆசைப்படுபவர்களுக்கான விதி இது.

டவுட் 1:

வருடத்துக்கு 8 சதவிகித வட்டி ஈட்டுவதுபோல ஃபிக்ஸட் டெபாசிட்டில் பணம் போட்டு வைத்திருப்பதாக வைத்துக்கொள்வோம். அப்படியெனில், போட்ட பணம் எத்தனை வருடங்களில் மூன்று மடங்காகப் பெருகும்?

விடை: ரொம்ப சுலபம். 115 என்ற எண்ணை, வட்டி சதவிகித எண்ணால் வகுக்க வேண்டும். என்ன விடை வருகிறதோ அத்தனை வருடங்கள் ஆகும், நம் முதலீடு மூன்று மடங்காகப் பெருகுவதற்கு.
அதாவது, 115 / 8 = 14.37

ஆண்டுக்கு 8 சதவிகித வருவாய் ஈட்டக்கூடிய நம் முதலீடு மும்மடங்காகப் பெருக, சுமார் 14 வருடங்களுக்கு மேல் ஆகும்.

கூட்டுவட்டி என்றெல்லாம் கால்குலேட்டரைக் கையில் வைத்துக்கொண்டு குழம்ப வேண்டாம்.

டவுட் 2 : 

இதையே வேறுவிதமாகப் பார்க்கலாமா?

நம் முதலீடு பணம் 10 வருடங்களில் மூன்று மடங்காகப் பெருக, ஆண்டுக்கு எத்தனை சதவிகிதம் வருவாய் இருந்தால் அது சாத்தியம்? அதாவது, எத்தனை சதவிகிதம் வருவாய் வருவதுபோல, முதலீட்டில் நம் பணத்தைப் போட்டுவைத்தால் அது 10 வருடங்களில் மூன்று மடங்காகும்?

விடை: 115 என்ற எண்ணை, எத்தனை வருடங்களில் நம் முதலீடு மூன்று மடங்காகப் பெருக வேண்டும் என நினைக்கிறோமோ, அந்த எண்ணால் வகுக்க வேண்டும். கடைசியில் என்ன எண் விடையாக வருகிறதோ, அதுதான் நம் முதலீடு ஈட்டவேண்டிய வட்டி விகிதம்.

அதாவது, 115 / 10 = 11.50
 
10 ஆண்டுகளில் நம் முதலீடு மும்மடங்காகப் பெருக, அது ஈட்டவேண்டிய ஆண்டு வருவாய் 11.50 சதவிகிதம். அவ்வளவுதான்!

இதேபோல ரூல் 144 என்ற ஒன்று இருக்கிறது. அது என்ன என்று கொஞ்சம் ஹோம்வொர்க் செய்து பாருங்களேன்!