லைஃப்ஸ்டைல்
Published:Updated:

அறம் பொருள் இன்பம் - 14

அறம் பொருள் இன்பம் - 14
பிரீமியம் ஸ்டோரி
News
அறம் பொருள் இன்பம் - 14

வ.நாகப்பன்

அறம் பொருள் இன்பம் - 14

ணத்தைச் சேமிக்க வேண்டும் என்கிற எண்ணம் காதலிக்கும்போது அல்ல, திருமணம் நெருங்கும்போதுதான் பலருக்கும் வருகிறது. சமீபத்தில் உறவினர் ஒருவரின் வீட்டுக்குப் போயிருந்தேன். அங்கே அஷ்வின் என்கிற ஐ.டி இளைஞர் என்னைச் சந்தித்தார். ``சார், எனக்கு 25 வயசு. இன்னும் சில மாசங்கள்ல கல்யாணம். இதுவரைக்கும் ஒண்ணும் சேர்க்கலை. இனிமேல் அப்படி இருக்க முடியாது. என்ன பண்ணலாம்?'' என்ற கேள்வியை சில விநாடிகளில் கேட்டுவிட்டு, பதிலை அதைவிட வேகமாக எதிர்பார்த்தார்.

அஷ்வினின் கேள்விதான் இதைப் படிக்கும் பல இளைஞர்களுக்கும் இருக்கும். அதற்கு நீங்கள் முதலில் செய்யவேண்டியது இதுதான்.

 உடனே தொடங்குங்கள்!

`Start early' என்பார்கள். அதன் பலன் அபரிமிதமானது. சிறு வயதிலேயே சேமிக்கத் தொடங்க வேண்டும். `பவர் ஆஃப் காம்பவுண்டிங்' அதாவது `கூட்டுவட்டி என்பது உலகின் 8-வது அதிசயம்' என ஐன்ஸ்டீன் சொன்னதாகச் சொல்வார்கள். அதன் மகத்துவத்தைச் சரியாகப் புரிந்துகொண்டவர்கள் அதை `ஈட்டுவார்கள்'. புரிந்துகொள்ளாதவர்கள் அதைக் `கட்டுவார்கள்'. ஓர் உதாரணத்தின் மூலம் இதை ஈஸியாகத் தெரிந்துகொள்ளலாம்.

அஷ்வினின் தோழி ஷ்ரேயா, கெட்டிக்காரர்; 25 வயதிலேயே சேமிக்கத் தொடங்கியவர். ஆண்டுக்கு 10,000 ரூபாய் (அல்லது மாதாமாதம் சுமார் 835 ரூபாய் என வைத்துக்கொள்ளலாம்) அவர் 60 வயதில் ஓய்வுபெறுவார் என எடுத்துக் கொண்டால், அடுத்த 35 ஆண்டுகாலம் இந்தச் சேமிப்பு தொடரும். 60 வயதில் அவர் சேமித்த மொத்தத் தொகை 3,50,700 ரூபாயாக இருக்கும் அல்லவா!
ஆனால் அஷ்வினோ, கொஞ்சம் ஊதாரி; சேமிப்பின் முக்கியத்துவத்தைத் தாமதமாகத்தான் உணர்கிறார். இதற்குள் அவர் திருமணமும் முடிந்து கையில் குழந்தை வேறு! சேமிக்கத் தொடங்கும்போது அவருக்கு வயதோ 30. ஷ்ரேயாவைப் போலவே அஷ்வினும் ஆண்டுக்கு 10,000 ரூபாய் சேமிக்கத் தொடங்கு கிறார். ஓய்வுபெறும் வயதான 60-க்கு இன்னும் 30 ஆண்டுகாலம் இருக்கிறது. ஓய்வுபெறும்போது அவர் சேமித்த மொத்தத் தொகை மூன்று லட்சம் ரூபாயாக இருக்கும் .

இதுவரை எல்லாம் சரி;  ஐந்து ஆண்டுகள் முன்னதாகவே தொடங்கிய ஷ்ரேயா, அதிகத் தொகை சேமித்திருக்கிறார். மொத்தத்தில் அஷ்வினைவிட  50 ஆயிரம் ரூபாய் கூடுதல் சேமிப்பு ஷ்ரேயாவிடம். இது ஒருபக்கம் இருக்கட்டும். அதன் மீதான வருவாய்?

இருவரும் ஒரே மாதிரியான முதலீட்டுத் திட்டத்தில்தான் பணம் போட்டிருக்கிறார்கள். பங்குச்சந்தை குறியீடு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் அது. கொஞ்சம் ரிஸ்க் இருந்தாலும் நீண்டகால அடிப்படையில் சராசரியாக 15 சதவிகித வருவாய் மற்றும் ஆதாயம் தர வாய்ப்பு உள்ளது. இருவரும் சேமித்த முதல் மற்றும் அது ஈட்டிய வருவாயையும் ஆதாயத்தையும் சேர்த்துக் கணக்கிட்டால் வரும் வித்தியாசம் கொஞ்சம் மலைப்பாகத்தான் இருக்கும்.

ஓய்வுபெறும் வயதில் அஷ்வினின் வசம் 49 லட்சம் ரூபாய் மட்டுமே இருக்கும். ஆனால், ஷ்ரேயாவின் முதலீடோ பல்கிப்பெருகி ஒரு கோடி ரூபாயைத் தாண்டியிருக்கும். கவனியுங்கள், இருவரின் சேமிப்புத் தொகையில் வித்தியாசம் வெறும் 50 ஆயிரம் மட்டுமே. ஆனால், அது ஈட்டிய வருவாய், அதன் மீதான தொடர் வருவாய் காரணமாக இறுதியில் மொத்த வித்தியாசம் என்பது, அரை கோடி ரூபாய்க்கு மேல். அம்மாடியோவ்..! இதுதான் கூட்டுவட்டியின் மகத்துவம்.

நமக்கு முக்கியமான பாடம் என்னவெனில், கல்லூரிப் படிப்பு முடித்து வேலையில் சேர்ந்த உடனேயே சேமிக்கத் தொடங்க வேண்டும். கோயிலுக்குச் செல்வதைப்போல, பேப்பர் படிப்பதைப்போல, டி.வி பார்ப்பதைப்போல சேமிப்பையும் வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். நம் ஆரம்ப வாழ்க்கையிலேயே அதை முக்கிய அங்கமாக்கிவிட வேண்டும்.

21 வயது தொடங்கி மாதாமாதம் 1,000 ரூபாய் மியூச்சுவல் ஃபண்டில் போட்டுவந்தால், ரிட்டையராகும்போது கோடிக்கணக்கில் பணம் புரளவைக்க முடியும். இது சாத்தியம். கொஞ்சம் திட்டமிடுதலும் ஆலோசனையும் அவசியம், அவ்வளவுதான்.

சம்பாதிக்க ஆரம்பிச்சாச்சா... இனியும் தள்ளிப்போடாதீர்கள். இப்போதே, தொடங்குங்கள் உங்கள் சேமிப்பை. நாம் தள்ளிப்போடவேண்டியது செலவைத்தான், சேமிப்பை அல்ல!

- பொருள் சேர்க்கலாம்...

பணத்தைப் பெருக்கும் ஃபார்முலாக்கள்:

இதுவரை பார்த்தவை...

1. ரூல் 72 = நம் பணம் எத்தனை வருடங்களில் இருமடங்கு ஆகும் என்று, கால அளவைக் கணக்கிட உதவும்.

2. ரூல் 114 அல்லது 115 = நம் முதலீடு எத்தனை வருடங்களில் மும்மடங்காகப் பெருகும் என்று, கால அளவைக் கணக்கிட உதவும்.

இனி . . .

ரூல் 144 என்பது, நம் முதலீடு நான்கு மடங்காகப் பெருக எடுத்துக்கொள்ளும் கால அளவைக் கணக்கிட உதவும். எப்படி?

144 என்ற எண்ணை, நம் முதலீடு இப்போது ஈட்டிக்கொண்டிருக்கும் வட்டி சதவிகிதத்தால் வகுத்தால் கிடைக்கும் எண்தான் அந்த விடை.

உதாரணமாக, நம் பணத்தை ஆண்டுக்கு 8 சதவிகித வட்டி கிடைக்கும்படி முதலீடு செய்திருப்பதாக வைத்துக்கொள்வோம். எண் 144-ஐ 8-ஆல் வகுக்க வேண்டும். கிடைக்கும் விடை என்னவோ ஏறத்தாழ அத்தனை ஆண்டுகள் ஆகும், நம் பணம் நான்கு மடங்காகப் பெருகுவதற்கு.

144 / 8 = 18

ஆண்டுக்கு 8 சதவிகித வட்டி தரக்கூடிய முதலீட்டில் நம் பணத்தைப் போட்டுவைத்தால், அது சுமார் 18 ஆண்டுகளில் நான்கு மடங்காகப் பெருகும். என்ன ஒன்று, இந்தக் காலகட்டத்தில் வட்டி விகிதம் மாறக் கூடாது. அதற்குத்தக்க கூடவோ, குறையவோ செய்யலாம்.

இந்த ஃபார்முலாவை வேறுவிதமாகவும் பயன்படுத்தலாம்.

நம் பணம், பத்தே ஆண்டுகளில் நான்கு மடங்காகப் பெருக வேண்டும் என்றால், வருடத்துக்கு எத்தனை சதவிகிதம் வட்டி தரக்கூடிய முதலீட்டில் போட வேண்டும்? எண் 144-ஐ, ஆண்டுகளால் வகுக்க வேண்டும். அதாவது, 144-ஐ 10-ஆல் வகுக்க வேண்டும்.

144 / 10 = 14.40

ஆண்டுக்கு 14.40 சதவிகித வட்டி தரக்கூடிய முதலீட்டில் போட்டால் மட்டுமே சுமார் பத்து ஆண்டுகளில் நம் பணம் நான்கு மடங்காகப் பெருகும்.

எல்லாம் சரி, முதலீடு செய்ய பணத்துக்கு எங்கே போவது என்கிறீர்களா? ஆடி மாதம் மட்டும் அநாவசியமாக எதுவுமே வாங்குவது இல்லை என முடிவு எடுத்தால் சேமிக்கலாம். பின்னர் எல்லா மாதமுமே அது பழக்கமாகிவிடும்!

ரூல் 72, 115, 144 ஆகியவற்றைப் பயன்படுத்தி உத்தேசமாக நம் பணம் இருமடங்காக அல்லது மும்மடங்காக அல்லது நான்கு மடங்காகப் பெருகுவதற்கு எடுத்துக்கொள்ளும் ஆண்டுகள் எத்தனை எனக் கணக்கிட்டுப் பட்டியலிடலாமா?

அறம் பொருள் இன்பம் - 14

இந்த மாதிரி ஒரு டேபிள் வொர்க்அவுட் செய்து கையில் வைத்துக்கொண்டால், உதவிகரமாக இருக்கும்; பல முதலீடுகளை ஒப்பிட்டுப் பார்த்து முடிவு எடுக்க வசதியாக இருக்கும்.

அஷ்வினுக்கு, சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கான செக்லிஸ்ட்:

 1. முழுக்குடும்பத்தையும் இன்வால்வ் செய்ய வேண்டும். அவர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் சேமிக்க முடியாது; செல்வம் சேர்க்க முடியாது.

 2. சிக்கனம் தேவை. அத்தியாவசியச் செலவுக்கு யோசிக்கவே கூடாது. அதே சமயம் அநாவசியச் செலவுகளைத் தவிர்க்க வேண்டும்.

 3. வரவு – செலவு = சேமிப்பு என்பது, பழைய ஃபார்முலா. வரவு – சேமிப்பு = செலவு இதுதான் புதிய ஃபார்முலா.

 4. காப்பீடு, நம் முதலீட்டைப் பாதுகாக்கும். எனவே,  வரவு – காப்பீடு – சேமிப்பு = செலவு. இது சூப்பர் ஃபார்முலா!

 5. மாதாமாதம் சேமிப்பதைக் கட்டாயமாக்குங்கள், சம்பளம் வாங்குவதைப்போல!

 6. முதலீட்டுக் கலையைக் கற்றுக்கொள்ளுங்கள். ரொம்ப கஷ்டம் எல்லாம் கிடையாது. மென்டல் ப்ளாக் எல்லாம் மனதில்தான். பழகப்பழக எளிதாகப் புரியும். எதுவும் இலவசம் அல்ல.

 7. பல திட்டங்களை சீர்தூக்கிப் பாருங்கள், பின்னர் முடிவு எடுங்கள்.

 8. பல்வகை முதலீடுகளில் பிரித்து முதலீடு செய்து, ரிஸ்க்கைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

 9. இன்ஷூரன்ஸ் முகவர் முதல் ப்ரீமியம் கட்டுகிறார் என்பதற்காக, கண்களை மூடிக்கொண்டு முதலீடு செய்யாதீர்கள்.

10. ஓரளவுக்கு ரிஸ்க் எடுக்கத் தயங்காதீர்கள். ரிஸ்க்கே எடுக்காமல் இருப்பதுதான் வாழ்க்கையில் மிகப்பெரிய ரிஸ்க்!

11. முதலீடுகளை அவ்வப்போது மறுபரிசீலனை செய்யுங்கள். தவறான முதலீடு எனத் தெரியவந்தால் யோசிக்காமல் களை எடுங்கள்!

12. ஒரு ரூபாய் சேமித்தால்... அது ஒரு ரூபாய் சேமிப்பு மட்டும் அல்ல, அந்த ஒரு ரூபாய் எதிர்காலத்தில் ஈட்டக்கூடிய வட்டியையும் சேர்த்துச் சேமித்ததாக அர்த்தம்.

13. முக்கியமாக, வரிச்சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யுங்கள்.

14. அதிமுக்கியமாக பணவீக்கத்தைத் தாண்டிய முதலீடுகளில் பணத்தைப் போடவும்.

15. முடியும் என்ற பாசிட்டிவ் எண்ணத்தோடு திட்டமிடுங்கள்.