Published:Updated:

அறம் பொருள் இன்பம் - 16

அறம் பொருள் இன்பம் - 16
பிரீமியம் ஸ்டோரி
News
அறம் பொருள் இன்பம் - 16

வ.நாகப்பன்

அறம் பொருள் இன்பம் - 16

ப்போது எல்லாம் மகாதேவன் ரொம்ப பிஸி... அதுவும் ஆன்லைனில்!

நம் சேமிப்பை நிர்வகிப்பதற்கு ஆன்லைன் இணையதளங்களை எப்படிப் பயன்படுத்தலாம் என, அவருடைய மகன் ஷ்யாம் சொல்லிக்கொடுத்ததில் இருந்துதான் இப்படி! என்ன ஒன்று, மொபைல் போனில் `ஆப்' டவுன்லோடு செய்து பயன்படுத்துவது மட்டும், இன்னமும் கொஞ்சம் சரிவரப் பிடிபடவில்லை. மற்றபடி ஹைடெக்தான்.

ஆனாலும், உள்மனதில் அவருக்கு ஒரு சின்ன சந்தேகம். இந்த மொத்த விவரங்களும் அப்படியே ஒருநாள் ஆன்லைனிலேயே தொலைந்து போய்விட்டால்?

“கவலையேபடாதீங்கப்பா... இருக்கவே இருக்கு பேக்அப். நாம் அதில் உள்ளீடுசெய்த மொத்த விவரங்களையும் அப்படியே `சேவ்' செய்து நம் கம்ப்யூட்டரிலேயே வெச்சுக்கிற வசதியும் இருக்கு. அதை ஒரு `எக்செல்' ஷீட்டாகவே டவுன்லோடு பண்ணிக்கலாம். தேவைப்பட்டா, அவ்வப்போது அதை ஒரு ப்ரின்ட் அவுட் எடுத்தும், ஃபைல் செஞ்சு வெச்சுக்கலாம்.

அப்படி டவுன்லோடு செய்ததை, கூகுள் டிரைவிலும் சேமிச்சுவெச்சுக்கலாம்; எங்கே பயணம் செய்தாலும் பார்த்துக்க முடியும்’’ என அப்பாவுக்குத் தெளிவுபடுத்தினார் ஷ்யாம். 

“அது மட்டும் இல்லப்பா... நாம செய்த முதலீடு மீது அன்றைய தேதியில் எவ்வளவு வருவாய் அல்லது லாபம் போன்ற விவரங்களையும், உடனடியாகப் பெற முடியும் என்பதுதான் இதன் முக்கிய வசதி. இன்றைய தேதியில் நம் நிகரச் சொத்து மதிப்பு என்ன என்பதை முழுமையாகப் பார்க்க முடியும்’’ எனச் சொல்லிக்கொண்டு வரும்போதே மகாதேவன் முகம் மாறுவதைக் கவனித்தான் ஷ்யாம்.

“என்னப்பா... ஏதோ யோசனை?”

“இல்ல…. நம்ம சேமிப்பு/முதலீடு விவரங்களை எல்லாம் பொதுவெளியில் போட்டுவைக்கிறதுல ஆபத்து இல்லையா? யார் வேணும்னாலும் பார்க்க முடியுமே?” என்றார் கொஞ்சம் யோசனையுடன்.
“உண்மைதான். நமக்குனு பாஸ்வேர்டு எல்லாம் கொடுத்து பாதுகாப்பா நாம மட்டுமே பார்க்க முடியும்னு சொன்னாலும், இந்தச் சேவையை வழங்கக்கூடிய பெரும்பான்மையான நிறுவனங்கள் இந்தத் தகவல்களை அணுக முடியும். இந்தக் கணக்கைத் திறக்கும் முன்பே, அதற்கான அனுமதியை நம்மிடமே பெற்றுவிடுகிறார்கள். நாம்தான் எல்லாவற்றுக்கும் `ஐ அக்ரீ’னு க்ளிக் செஞ்சுடறோம்ல.”

``அப்படின்னா யாரும் பார்க்காம நாம மட்டும் பார்க்கிறமாதிரி சாஃப்ட்வேர் இல்லையா?”
 
“இருக்குப்பா... ஆனால், அதில் ரெண்டு விஷயங்கள். ஒன்று, மேலே சொன்ன இணையதளங்களைப்போல அவை இலவசமாகக் கிடைப்பது இல்லை. விலைகொடுத்து வாங்க வேண்டும். அதனால, நம்ம மொத்த முதலீட்டைக் கணக்குல எடுத்துக்கிட்டு, அதுக்கு இந்த சாஃப்ட்வேர் வேணுமானு யோசிக்கணும்; என்னோடது சின்ன போர்ட்ஃபோலியோங் கிறதால், பாதுகாப்பைப் பற்றி நான் அதிகம் கவலைப்படலை'' என்றான் ஷ்யாம்.

“இதுவரைக்கும் நீ சொன்னது எல்லாம் வெச்சு யோசிச்சுப்பார்த்தேன்... `பணம் சேமிக்க ஆன்லைன் அருமையான டூல்’னு சொல்ற. ஆனா, நம் சேமிப்பையும் முதலீட்டையும் நிர்வாகம் பண்றதுக்குத்தான் அது பயன்படும்போல. ஆனா, இதுல சேமிப்பு எதுவும் இல்லையே?”

“ `என்னடா... நீங்க இன்னும் இந்தக் கேள்வியைக் கேட்கலையே?’னு நெனச்சேன்; கேட்டுட்டீங்க... நிறையச் சேமிப்பு இருக்குப்பா. ஒவ்வொண்ணா சொல்லட்டுமா?”என ஆரம்பித்தான் ஷ்யாம் உற்சாகமாக.

“முதல்ல இன்ஷூரன்ஸை எடுத்துக்குவோம்.எனக்கு இன்ஷூரன்ஸ் தேவைங்கிறது மட்டுமே தெரியும். ஆனா, எனக்கு ஏற்ற இன்ஷூரன்ஸ் எது? எவ்வளவு தொகைக்கு நான் இன்ஷூரன்ஸ் பண்ணணும்? எத்தனை வருடங்களுக்குப் பண்ண முடியும்? இதெல்லாம் எப்படித் தெரிஞ்சுக்கிறது? இந்த மாதிரி விஷயங்களைப் பொதுவா காப்பீட்டு முகவர்கள்கிட்டதானே கேட்டுப் பெறுவோம்?

இன்னைக்கு இருக்கிற பிஸியில அப்படிச் செய்யணும்னா, ஒரு விடுமுறை நாள்லதான முடியும். ஒருவேளை இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் வந்தாலும், வேண்டாவெறுப்பா ஏதேதோ பேசி அனுப்பிடுறோம். ஏன்னா, நமக்கு பாதி விஷயங்கள் புரியறதே இல்லை; அதற்கு நேரமும் இல்லை. கட்டாயத்தின் காரணமா, பல சமயங்கள்ல நமக்குத் தேவையே இல்லாத பாலிசியை எடுத்துடுவோம். அப்படி எல்லாம் இல்லாம, அவசரப்படுத்தாம, நம்மைக் கட்டாயப்படுத்தாம, நமக்கு ஃப்ரீயா நேரம் கிடைக்கும்போது, நம்மைக் கைபிடித்து அழைத்துச்செல்ல விவரமான ஒருவர் இருந்தா எப்படி இருக்கும்? இன்டர்நெட்ல அது முடியும்” என்றார் ஷ்யாம்.

“அது எப்படி?”

“பல இணையதளங்கள் இருக்குப்பா; உதாரணம்... பாலிசி பஜார்.காம்.

இது சூப்பர் மார்க்கெட் மாதிரி. பொதுவாக, ஒரு காப்பீட்டு முகவர் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் பாலிசிகளைக் கொடுக்க முயற்சி செய்வார். ஆனால், இங்க அதற்கு நேர்மாறா, பல்வேறு இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் வழங்கக்கூடிய பாலிசிகள், அதன் ப்ரீமியம் தொகை பற்றிய எல்லா விவரங்களும் இருக்கும். நமக்குப் பிடித்த நிறுவனத்தைத் தேர்ந் தெடுக்கலாம்.

அதுமட்டும் அல்ல; நம் வயசு, ஆணா – பெண்ணா, எந்த மாதிரி பாலிசி வேணும்னு சில விவரங்களைப் பதிவுசெய்தால், பல்வேறு வகைப்பட்ட பாலிசிகள் அலசி ஆராயப்பட்டு, நமக்குத் தேவையான பாலிசிகளையும் அதற்கான கட்டணங்களையும் பரிந்துரைசெய்வதும் உண்டு.

இப்படி பல்வேறு நிறுவனங்கள் வழங்கக்கூடிய ஒரே மாதிரியான பாலிசிக்கான ப்ரீமியம் கட்டணத்தை ஒப்பிட்டுப்பார்த்து, எது மிகக் குறைவான ப்ரீமியம் எனச் சொல்வதால், நமக்கு உட்கார்ந்த இடத்தில் இருந்தே பணம் மிச்சமாகிறது. அலைச்சலும் இல்லை. பலபேரைப் பார்த்து கலெக்ட் செய்யவேண்டிய விவரங்கள் அனைத்தும் ஒருசேர ஒரே இடத்தில் கிடைக்கின்றன. இன்றைய தேதியில் ஏறத்தாழ 25-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் 250-க்கும் மேற்பட்ட பல்வேறு பாலிசிகளை அதன் மூலமாக அலசி ஆராய முடியும். 

அறம் பொருள் இன்பம் - 16

உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? கேன்சருக்கு மட்டும் அல்லாது டெங்கு காய்ச்சலுக்கும் காப்பீடு இருக்குங்கிறதே இதைப் பார்த்துத்தான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்’’ என முடித்தார் ஷ்யாம்.
மகாதேவன் விடவில்லை...

 “லைஃப் இன்ஷூரன்ஸ் மட்டும்தான் இப்படி ஆன்லைனா?” என்றார்.

``கிட்டத்தட்ட எல்லாக் காப்பீடுகளுமே இப்படி ஆன்லைன்ல கிடைக்குது. அந்தந்த நிறுவனத்தின் வெப்சைட்டுக்குப் போயும் பார்க்கலாம். ஆனா, அவங்களோட விவரம் மட்டும்தான் அங்க இருக்கும். இந்த பாலிசி பஜார் வெப்சைட்டுக்குப் போனா பல நிறுவனங்கள் பற்றின விவரங்களையும் பாக்கலாம். அதுமட்டும் இல்லை; கார் இன்ஷூரன்ஸ், டூ வீலர் இன்ஷூரன்ஸ், வீட்டுக்கு இன்ஷூரன்ஸ், ஹெல்த் இன்ஷூரன்ஸ், வரிச் சேமிப்பு இன்ஷூரன்ஸ் திட்டங்கள், ஓய்வுகால பென்ஷன் திட்டங்கள் உள்ளிட்ட பல விவரங்களும் ஒருசேரக் கிடைக்கும். ரொம்ப வசதி” என்றான் ஷ்யாம்.

“அப்படின்னா இனிமே இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டே தேவை இல்லை; நாமளே நேர வாங்கிக்கலாம்போல?” என்றார் மகாதேவன்.

“அப்படிச் சொல்ல முடியாதுப்பா; இன்னைக்கும்கூட பலருக்கு ஒரு தனிப்பட்ட ஹ்யூமன் டச் தேவை. நம் குடும்பச் சூழலை முழுமையாப் புரிஞ்சுக்கிட்டு நமக்கு மிகப் பொருத்தமான பாலிசியைத் தேர்ந்தெடுக்க நல்ல ஆலோசகர்கள் தேவை. ஆனால், அவர்களை அணுகும் முன்பே, நம்மை நாம் தயார்ப்படுத்திக்க வேணாமா? ஒண்ணுமே தெரியாம ஒருவரிடம் ஆலோசனை கேட்பதைவிட, ஒரு விஷயத்தைப் பற்றி ஓரளவுக்காவது தெரிஞ்சுக்கிட்டு பின்னர் அவரை அணுகுறது நல்லது இல்லையா? நாம் ஏமாறாமல் இருக்கவும் அது உதவுமே.”

``இதேமாதிரி கடன் வாங்க/டெபாசிட் செய்ய வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்த்து சாமர்த்தியமா பணத்தைக் கையாள, பேங்க் பஜார் மற்றும் பைசா பஜார்னு சில இணையதளங்கள் இருக்குப்பா. அதெல்லாம் இன்னொரு நாள் சொல்றேன்” என நெட் ஃப்ளிக்ஸை ஆன் செய்தான் ஷ்யாம்! 

- பொருள் சேர்க்கலாம்...