அறம் பொருள் இன்பம் - 18

ரிச்சலுகைகளோடு பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் பெறுவது எப்படி என்பதைத்தான் இதுவரை பார்த்துவந்தோம். என்ன செய்தாலும் முறையாக ஆவணப்படுத்தாமல் விட்டால் பிரச்னைதான்.

முதலீடு சம்பந்தமான ஒரு செக்லிஸ்ட் இது:

1. முதலீடு தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பாக ஓர் இடத்தில் வைக்க வேண்டும். அதை அவசியம் குடும்பத்தினருக்குத் தெரிவிக்க வேண்டும்.

2. முதலீட்டு ஆவணங்களை ஸ்கேன்செய்து நம் கம்ப்யூட்டரிலோ, கூகுள் டிரைவிலோ ஸ்டோர் செய்து வைக்க வேண்டும்.  சி.டி.எஸ்.எல் மற்றும் மத்திய அரசே வழங்கும் `இ-லாக்கர்' வசதியிலும்  சேமித்துவைக்கலாம்.

3. பான் அட்டை, பாஸ்போர்ட், திருமணச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, காப்பீடுகள் போன்றவற்றையும் ஸ்கேன் செய்து கம்ப்யூட்டர் மற்றும் மொபைல்போனில் வைத்துக்கொள்வதோடு, அசல் ஆவணங்களை பாதுகாப்பான இடத்தில் வைப்பது நல்லது.

4. நாம் என்ன மாதிரியான ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை எடுத்திருக்கிறோம், எவ்வளவு தொகைக்கு எடுத்திருக்கிறோம், எந்தக் காப்பீட்டு நிறுவனத்தில் எடுத்திருக்கிறோம், அந்த நிறுவனம் மற்றும் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டின் பெயர், முகவரி, தொலைபேசி எண், மின் அஞ்சல் முகவரி, பாலிசி எண் என்ன, பாலிசி தேதி என்ன போன்ற முழு விவரங்களையும் குடும்பத்தினருக்குத் தெரிவிக்கவேண்டியது முக்கியம்.

5. ஓய்வுகால பென்ஷன், பொது சேமநல நிதி குறித்த கணக்கு விவரங்களையும் வீட்டில் இருப்போரிடம் பகிர்ந்துகொள்ளவும். அந்தக் கணக்கு எங்கு இருக்கிறது, அதை எப்படிப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட தகவல்களையும் குறிப்பிடலாம்.

6. நம்முடைய முழுச் சொத்து விவரங்கள், பட்டா, சிட்டா, அடங்கல், வரி ரசீது, வாட்டர் டாக்ஸ், தாய்ப்பத்திரம்/மூலப் பத்திரம் ஆகியவற்றையும் பத்திரமாக ஸ்கேன்செய்து வைத்துக்கொள்வதோடு விவரங்களையும் குடும்பத்தினருக்குச் சொல்லிவைக்கவும்.

7. வங்கிக்கணக்கு எண், சேமிப்புக்கணக்கு மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட் விவரங்கள், கிளை முகவரி, தொலைபேசி எண், மின் அஞ்சல் ஆகியவற்றையும் குறிப்பிட்டுவைக்கவும்.

8. லாக்கர் விவரங்கள், அதில் என்ன இருக்கின்றன என்பன போன்ற தகவல்களைப் பதிவிடுவது நல்லது.

9. பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள், டீமேட் கணக்கு எண், ஸ்டாக் புரோக்கர் முகவரி, போன் நம்பர் போன்ற விவரங்களையும் பதிவிட வேண்டும்.

10. வீட்டுக் கடன், வாகனக் கடன், பெர்சனல் லோன் போன்று யாரிடமாவது கடன் வாங்கி இருந்தால், கடன் தொகை எவ்வளவு, எப்போது வாங்கியது, வட்டி எவ்வளவு, இதுவரை திருப்பிக் கட்டிய பணம் எவ்வளவு, மீதம் உள்ள  தொகை எவ்வளவு போன்ற விவரங்களைக் குறித்துவைக்க வேண்டும்.

11. யாருக்காவது கடன் கொடுத்திருந்தால், அவர் பெயர், முகவரி, தொலைபேசி எண், கடன் தொகை, கொடுத்த தேதி, வட்டி சதவிகிதம், இதுவரை வசூலித்த தொகை, உள்ளிட்ட விவரங்களை எழுதிவைக்க வேண்டும்.

அறம் பொருள் இன்பம் - 18

12. எல்லா முதலீடுகளுக்கும் நாமினேஷன் பதிவுசெய்வது நல்லது. நமக்குப் பிறகு நம் `நாமினி' யார் என்பதை வங்கிக்கணக்கு, டெபாசிட், மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை முதலீடுகள் உள்ளிட்ட பல முதலீடுகளுக்குப் பதிவுசெய்ய முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட `நாமினி'க்களையும் குறிப்பிட முடியும். அதிலும், ஒவ்வொரு நாமினிக்கும் ஆளுக்கு எவ்வளவு தொகை போய்ச் சேர வேண்டும் என்பதை சதவிகிதக் கணக்கிலும் குறிப்பிடலாம்.

13. முதலீடுகள் முதிர்வு அடையலாம் அல்லது கடன்கள் திருப்பிக் கட்டப்பட்டிருக்கலாம். கால ஓட்டத்தில் இவற்றில் ஏதாவது மாறுதல் ஏற்பட்டால், அதை அவ்வப்போது மாற்றி பதிவு செய்துவைத்துக்கொள்ள வேண்டும்.

14. ரகசியமாக இருக்கவேண்டிய விஷயங்கள் அப்படியே தொடர வேண்டும். எனினும், முக்கியமானவற்றை முக்கியமானவர்களுடன் மட்டுமாவது பகிர்ந்துகொள்வது நல்லது. `வில்' எழுதியும் வைக்கலாம்.
 
15. இதை, பொதுவெளியில் பகிராதீர்கள். வீட்டில் முக்கியமான, விவரமான ஒருவருடன் மட்டுமே பகிருங்கள்.

இது முழுமையான பட்டியல் அல்ல. தேவையானவற்றை இணைத்துக்கொள்ளலாம்.

சாமர்த்தியமாக முதலீடுகள் செய்வது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் அவற்றைக் கணக்குவழக்குப் பார்த்து பத்திரமாக அடுத்த சந்ததியினரிடம் சேர்ப்பது.
முதலீடுகள் செழிக்க வாழ்த்துகள்!

- நிறைந்தது.

அறம் பொருள் இன்பம் - 18

கையடக்க கணக்குப் பிள்ளை!

நாம் செய்யும் செலவை  எல்லாம்  தினசரி,   கணக்கு   எழுதி  வெச்சுக்கிட்டா நல்லாத்தான் இருக்கும். எங்கே அதிகமா செலவு செய்யுறோம்கிறதைக் கண்டுபிடிச்சு தேவை இல்லாத செலவைக் குறைச்சுக்கலாம். அநாவசியச் செலவு களைக் குறைச்சு அதையே சேமிப்பா மாத்தலாம். சொல்றது ஈஸி. ஆனா, பிராக்டிக்கலா எப்படிச் செய்யுறது?

`Money view' என்கிற ஆண்ட்ராய்டு செயலி இதைத்தான் செய்கிறது. ரொம்ப சௌகரியம். கிரெடிட் / டெபிட் கார்டு மூலமாக நாம் அவ்வப்போது செய்யக்கூடிய செலவுகள், வங்கியில் காசோலை மூலமாக நாம் எடுக்கும் பணம், டெலிபோன் பில், மின்சார பில், மளிகை மற்றும் பெட்ரோல் செலவு என, பல செலவுகளை ஒருசேர கணக்கு வைத்துக்கொள்வதோடு, செலவினங்களையும் இனவாரியாகப் பிரித்தும் காட்டுகிறது. நாம் எந்தெந்த பில்களை எப்போது கட்ட வேண்டும் எனவும் நமக்கு முன்கூட்டியே நினைவூட்டுகிறது. இனி, பில்லைக் கட்டாமல் தவறவிட்டு தவிக்கவேண்டிய அவசியமோ, பயமோ இல்லை. வங்கிக்கணக்கில் எவ்வளவு பணம் இருப்பு இருக்கிறது எனவும் காட்டும். மொத்தத்தில் போனிலேயே நமக்கே நமக்கு என ஒரு பெர்சனல் கணக்குப்பிள்ளை!

இதில் சிறப்பு அம்சம் என்ன தெரியுமா? உங்களுக்கு வேண்டிய மொழியைத் தேர்வுசெய்துகொள்ளும் வசதியும் உள்ளது. தமிழிலும் கணக்குப் பார்க்கலாம்.

`நாம் என்னென்ன செலவு எல்லாம் செய்கிறோம் என்று இவர்களுக்கு எப்படித் தெரிந்தது?' என ஆச்சர்யமாகக்கூட இருக்கலாம்.

ஆனால், இதில் ரகசியம் ஒன்றும் இல்லை. இந்த `ஆப்'பை இன்ஸ்டால் செய்யும்போதே நம் எஸ்.எம்.எஸ் மற்றும் இ-மெயிலை அணுக அனுமதி கேட்கும். கிரெடிட் கார்டு மூலமாக நாம் ஒவ்வொரு செலவு செய்யும்போதும், நமக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அல்லது இமெயில் அலெர்ட் வரும் அல்லவா? அதைப் படித்துத்தான் இந்தத் தகவலைச் சேர்க்கிறது இந்த ஆப். அவ்வளவுதான் விஷயம்!