Published:Updated:

கடன் நல்லது!

பார்த்தசாரதி ரெங்கராஜ் - ஓவியம்: கோ.ராமமூர்த்தி

பிரீமியம் ஸ்டோரி
கடன் நல்லது!

பெரியகுளம்... இது புரட்டாசியா அல்லது சித்திரையா என்று கேட்குமளவுக்கு  காலை ஒன்பது மணிக்கே வெயில் வேட்டையாடிக் கொண்டிருந்தது. தூசும் புகையும் வெயிலுக்கு விளக்குப் பிடித்துக்கொண்டிருந்தது. வாகனங்களின் டயர்களுக்கு வாய் இருந்தால் கண்டிப்பாக ஒப்பாரி வைத்து அழும். அந்த அளவுக்கு அவற்றின் முகத்தில் வெயிலில் கொதித்த தார் படிந்திருந்தது. இட்லி வடை  விற்கும் அந்தத் தள்ளு வண்டிக்காரரின் வண்டிக்குக் கீழிருந்து ஒரு தவளை கத்தியது. “மழையைக் கேட்டு தவளைகூட கத்துது பாருங்க “ என்றார் ஒருவர் சாம்பாரை இட்லிக்கு தொட்டுக்கொண்டே.

இந்தக் கொடும் வெயிலிலும் தேனி ரோட்டில், பெட்ரோல் பங்கின் எதிரே காலை ஒன்பது மணிக்கே களைகட்டியிருந்தது ‘அபிராமி ஹார்டுவேர்ஸ்’ கடை வியாபாரம். கட்டுமானத் தொழில் சம்பந்தமான அனைத்துப் பொருட்களையும் வாங்கி விற்கும் கடைகளை ஹார்டுவேர்ஸ் கடை என்றழைப்பார்கள். சில எலெக்ட்ரிக்கல் பொருட்கள் தவிர, சிமென்ட் , பெயின்ட், அனைத்து இரும்பு மற்றும் ஸ்டீல் பொருட்கள், சில்லறைப் பொருட்கள் என எல்லாமே கிடைக்கும். அபிராமி ஹார்டுவேர்ஸ், கடந்த இருபது வருடங்களாக பெரியகுளம் சுற்று வட்டாரத்தில் பெயர் எடுத்த கடை. இதற்கு முக்கிய காரணம், இவர்கள் கடையில் இல்லை என்ற பொருளே இல்லை.

பொருட்கள் வாங்க வருபவர்கள், பொதுவாக ஒரு சீட்டைப் போட்டு எடுத்து வருவார்கள். இங்கொன்று அங்கொன்று என்று அலையாமல் ஒரே இடத்தில் அனைத்தும் கிடைக்குமென்றால், அவர்களுக்கு அலைச்சல் மற்றும்  செலவு மிச்சம். மேலும், கட்டட வேலையானது கட்டுமானப்  பொருட்களுக்காக நிற்கும் நிலைமை வராது.

இதுதான் வியாபார தந்திரம் என்றால் அனைவருமே இதை செய்யலாமே! ஏன் அபிராமி ஹார்டுவேர்ஸ் மட்டும் இதில் சிறப்பாகச் செயல்பட முடிகிறது என்று நீங்கள் கேட்பதில் தவறில்லை. ஆனால், அனைத்துக் கடைகளிலும்  அபிராமி கடை முதலாளி சீனிவாசன் வைத்திருப்பதுபோல, பணம் இருக்க வேண்டுமே! பணத்தைத் தண்ணியாக செலவு செய்து, கடை முழுவதும் பொருட்களை அள்ளி குவித்திருக்கிறார் என்று ஊருக்குள் பேச்சு.

இப்போதெல்லாம் சீனிவாசன் கடைக்கு வருவது மிகவும் குறைந்துவிட்டது. தேனிக்கு அருகே லட்சுமியாபுரத்தில் உள்ள தோட்ட வீட்டில் இருந்துகொண்டு விவசாயத்தை மும்முரமாகப் பார்க்கிறாராம். ‘வருமானம் குறைவாக இருந்தாலும், மனதுக்கு நிறைவாக இருக்கிறது’ என பார்த்தவர்களிடம் எல்லாம் சொல்கிறாராம்.

அபிராமி ஹார்டுவேர்ஸ் கடையை தற்போது நிர்வகிப்பது அவரின் மகன் வெங்கடேஷன்தான்.

கடன் நல்லது!

வெங்கடேஷனும் சாதாரணப்பட்டவர் அல்ல.   படிப்பில் கெட்டி. உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனத்தில் மேலாண்மைத் துறையில் முதுகலை முடித்தவர். வாரம் ஒரு நாள் இருவரும் கடையில்  சந்திப்பார்கள். என்னதான் படித்திருந்தாலும், அனுபவஸ்தரான சீனிவாசனின் அறிவுரைகளை நல்ல முறையில் எடுத்துக்கொண்டு வெங்கடேஷன் செயல்படுவதாலேயே கடை வியாபாரம் மென்மேலும் பெருகிவருகிறது என்பது வெங்கடேஷனுக்கே தெரியும்.  வாடிக்கையாளர்கள் இப்போது தேனி, கம்பம் வரை பரந்திருக்்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இன்று சனிக்கிழமை, அப்பாவும்  மகனும் கடைக்கு வந்துள்ளனர். “தம்பி முத்துராசா, நீ போயி ஒரு டீ சாப்பிட்டிட்டு, எனக்கு  ஒரு லெமன் சோடா வாங்கிட்டு வா. வெயிலு தாளலை’’  என்று சொல்லிக்கொண்டே ஒரு பெரிய சைஸ் லெட்ஜரை கையில் எடுத்தார். ஏதோ ஒரு பழைய சினிமாப் பாட்டை  அவர் பாடிக்கொண்டிருப்பது முனகல் போல கேட்டது. பொதுவாக, அவர் கணக்கு வழக்கு பார்க்கும்போது இந்த மாதிரி ஏதாவது செய்து கொண்டேதான் இருப்பார்.

‘‘வெங்கடேஷா, வியாபாரம் எல்லாம் நல்லாத் தானே போகுது? எதுவும் பிரச்னையில்லையே?’’ என்று மகனைப் பார்த்தார். “போன வருடத்தை விட 30% வளர்ச்சியில இருக்குறோம்பா’’ என்று யதார்த்தமாகச் சொன்ன வெங்கடேஷன் திடீரென அதிர்ச்சியாகி, “என்னப்பா, திடீர்ன்னு இப்படி ஒரு சந்தேகம்?’’ என்று கேட்டான்.

“சேசே... சந்தேகமெல்லாம் கெடையாது.  நமக்கு சப்ளை பண்ற கம்பெனிகளுக்கு கொடுக்க வேண்டிய பணம் எப்பவுமே 80 லட்சம்  இருக்கும். இப்ப வியாபாரம் வேற வளர்ந்திருக்குன்னு சொல்ற.  ஆனா, கணக்குல 40 லட்சம்தானே காட்டுது” என்றார் சற்று கவலையுடன்.

“ஓ அதுவா, லயபிலிட்டி கணக்குக்குப் பதிலா, பர்ச்சேஸ் கணக்கு பாருங்க. நம்ம வளர்ச்சிக்கு ஏத்த மாதிரி , நம்ம கொள்முதலும் அதிகரிச்சிருக்கு’’  என்றான் வெங்கடேஷன் பெருமையுடன்.

சீனிவாசன் அந்தப் பதிலில் திருப்தி அடைந்தவராகத் தெரியவில்லை “அது புரியுது வெங்கடேஷா. நான் கேக்குறது அதில்ல” என்றவாறே தலையைத் தூக்கி வெங்கடேசனை உற்று நோக்கினார்.  “நாம சப்ளை பண்றவங்களுக்கு  கொடுக்கவேண்டிய பணம் எப்படி கொறஞ்சுது?” சற்று உறுதியான குரலில் கேட்டார்.

சற்று தெளிந்தவனாக, “அப்பா, சப்ளையர் ரெண்டு மூணு மாச கடனுக்குக் கொடுத்திட்டு இருந்தாங்க. நான்தான் அதை நிப்பாட்டிட்டு அதுக்குப் பதிலா கேஸ் டிஸ்கவுன்ட், அதிக மார்ஜின்னு வாங்கிட்டு இருக்கேன்’’ என்றான்.

சீனிவாசனின் முகத்தைப் பார்த்து அவர் சந்தோஷமாக இருக்கிறாரா, இல்லையா என்று சொல்வது கடினம். ஆனால், அவர் வாயில் முனகிக்கொண்டிருந்த பாட்டு நின்றது. அவர் நிச்சயமாக சந்தோஷமான மனநிலையில் இல்லை என்பதை உணர்த்தியது.
“ஏன் வெங்கடேஷா, எதுக்கு அப்படி பண்ணினே?’’ என்றார் நிதானமாக. மகனாக இருந்தாலும், இந்த மாதிரி தருணங்களில் மிக நேர்த்தியாக பேசவேண்டும் என்பதை உணர்ந்தவர் அவர் என்பதை அவர் குரல் தெளிவாகக் காட்டியது.

“ எல்லாம் ஒண்ணுதானேப்பா! அந்த அறுபது நாள் கடனோட வட்டி ஒரு ரெண்டு பர்சன்ட் வருமா? நான் அதே  அளவுக்கு கேஷ் டிஸ்கவுன்ட் வாங்கியிருக்கேன். கிரெடிட் காசாகாது. ஆனா, கேஷ் டிஸ்கவுன்ட் பணமா மாறுமே!’’ என்று தந்தையை நோக்கினான்.

அவர் சற்று அமைதியாக இருந்ததை பார்த்து, “இதில தப்பேதும் இல்லையே அப்பா” என்றான். அதே நேரத்தில் சீனிவாசனுடைய செல்போன் ஒலித்தது. ஒருவித எரிச்சலுடன் இருந்தவர் போன்  டிஸ்ப்ளேயைப் பார்த்ததும், புன்னகையுடன் பேச ஆரம்பித்தார்.

 “குரு, எப்பிடி இருக்கீங்க, என்ன பம்பாய்க்குப் போனதுக்கப்றம் எங்களையெல்லாம் மறந்துட்டீங்க போலிருக்கு’’ என்று பேசிக்கொண்டே மகனை அங்கேயே உட்காருமாறு  சைகையில் காட்டினார். குரு, ஒரு தனியார் நிறுவன சேல்ஸ் மானேஜர். இவருடைய நெருங்கிய நண்பர். தொழிலைப் பற்றி இருவரும் பேசினால், கேட்பவருக்கு ஒன்றுமே புரியாது. அவ்வளவு ஆழமாக பேசிக் கொள்வார்கள் . “குரு , சாயந்தரமா கூப்பிடுறேன்.  ஒரு அர்ஜென்ட் வேலை வந்திருச்சு’’ என்றவாறே போனை கட் செய்தார்.

“வெங்கடேஷா, நம்ம கடைக்கும் மற்ற கடைகளுக்கும் என்ன வித்தியாசம்? ஏன் நம்ம கடைக்கு கஸ்டமர்ஸ் அதிகமாக வர்றாங்க?’’  என்றபடி அவனைப் பார்த்தார்

கடன் நல்லது!

“நல்லா தெரிஞ்ச விஷயம்தானேப்பா. நாம  நிறையப் பொருட்களை வச்சி விக்கிறோம்.  எல்லாமே ஒரே இடத்தில கிடைக்கும் அப்படீங்கிற ஒரு நல்ல பெயர் நமக்கு இருக்கிறதனாலதான எல்லாரும் நம்மைத் தேடி வர்றாங்க’’ என்றான் வெங்கடேஷன்.
“ மத்த  கடைகளை போலதான்  நானும் முதல் போட்டேன் ஆரம்பத்துல. பின்ன எப்பிடி என்னால மட்டும் இவ்வளவு பொருட்களை வாங்கி வைக்க முடிஞ்சது? எல்லாமே வச்சு விக்கிறதுக்கு  நெறைய முதலீடு தேவைப்படும் இல்லையா?’’ என்றார் சீனிவாசன் ஒரு அர்த்தத்துடன்.

சற்று குழப்பத்துடன், “ஆமாம், நெறைய முதலீடு தேவைப்படும். ஆனா, நீங்க மத்தவங்கள மாதிரி கொஞ்ச முதலீட்டலதான் தொழில் தொடங்குனதா சொல்றீங்க. அப்புறம் எப்பிடி இவ்வளவு பொருட்களை உங்களால வாங்கி விக்க முடிஞ்சது?’’
சீனிவாசன், “நான் கேட்ட கேள்வியை, எனக்கே கேக்குற பாத்தியா?” என்று சிரித்து, சற்று இறுக்கத்தைக் குறைத்தார். மேலும் அவனை சோதிக்காமல் அவரே சொல்லத் தொடங்கினார்.

“வெங்கடேஷா, ஒரு சாதாரண வியாபாரிக்கு  ரெண்டு மாச கிரெடிட்டும், ரெண்டு பர்சன்ட்  வட்டியும் ஒண்ணுதான். அதுல எந்தவொரு   சந்தேகமும் இல்ல. ஆனா, என்னைப் பொறுத்தவரை, ரெண்டு மாத கிரெடிட்டுதான் பெருசு. நம்மளோட மாச வியாபாரம் 40 லட்சம். ஒரு மாச சரக்கு நம்மகிட்ட ஸ்டாக்கா இருக்கு. ரெண்டு மாசம் கிரெடிட்ல சரக்கு  வாங்குனா நம்ம முதலீடு என்ன?’’

புன்னகையுடன் தொடர்ந்தார்.  “நம்ம  முதலீடு  ஒரு பைசாகூட கெடையாது. அதில்லாம இன்னொரு 40 லட்சம் வட்டியில்லாம கிடைக்குது. அந்த 40 லட்சத்துலதான் நான் மெதுவா விக்கிற அதாவது, ஸ்லொ மூவிங் சரக்குகளையும்  வாங்கி வைக்கிறேன். இதனால மத்த கடையில இல்லாத சரக்கும் நம்ம கடையில கெடைக்குது. நீ ஒரு பர்சன்ட் பார்க்குற அதே முதலீட்டு தொகையில் நான் முப்பது பர்சன்ட் பாத்துருவேன். ஒன்னோட கணக்குல பணம் உன்னோடது. என்னோட கணக்குல பணம் சப்ளை பண்றவங்களோடது’’ என்று முடித்தார்.

கடன் நல்லது என்று வெங்கடேஷனுக்கு இப்போது நன்றாகப் புரிந்தது. இப்படி ஒரு  மனிதர் இப்போது விவசாயம் பார்க்கிறேன் என்று கிளம்பி, கிராமத்தில் போய் உட்கார்ந்திருக்கிறார் என்றால்  அதில் ஏதாவது விஷயம் இல்லாமலா இருக்கும்?
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு