Published:Updated:

தொழில் முன்னேற்றத்துக்கு துணைநிற்கும் மூன்று கேள்விகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தொழில் முன்னேற்றத்துக்கு துணைநிற்கும் மூன்று கேள்விகள்!
தொழில் முன்னேற்றத்துக்கு துணைநிற்கும் மூன்று கேள்விகள்!

நாணயம் லைப்ரரி!

பிரீமியம் ஸ்டோரி
தொழில் முன்னேற்றத்துக்கு துணைநிற்கும் மூன்று கேள்விகள்!

புத்தகத்தின் பெயர்: டேக்கிங் பீப்பிள் வித் யு (Taking People With you)

தொழில் முன்னேற்றத்துக்கு துணைநிற்கும் மூன்று கேள்விகள்!ஆசிரியர்: டேவிட் நோவாக் (David Novak)

பதிப்பகம்: பென்குவின் (Penguin USA)

வேலை பார்க்கும் பணியாளர்களை அரவணைத்து, நம்முடைய வியாபார இலக்கை நோக்கிப் பயணிக்கும்போதுதான் சாதனைகளை நிகழ்த்த முடியும் என்பதைச் சொல்லும் புத்தகம்தான் டேவிட் நோவாக் எழுதிய ‘டேக்கிங் பீப்பிள் வித் யூ.’

 ஒரு பிசினஸில் வெற்றி பெற, அதில் பங்கேற்கும் பணியாளர் அத்தனை பேருமே ஏதாவது ஒரு விதத்தில் உதவிகரமாக இருக்கின்றனர். ஒரு தலைவனாக ‘என் வழி தனி வழி’ என்று பயணிக்க ஆரம்பித்தால், கொஞ்ச தூரம் மட்டுமே பயணிக்க முடியும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட புத்தகம் இது.

திறமையான பணியாளர்கள்!

ஒரு பிசினஸை ஆரம்பிக்கவேண்டுமா? உங்கள் தயாரிப்பை அல்லது சர்வீஸை நல்ல முறையில் புரமோஷன் செய்யவேண்டுமா, ஒரு புதிய பொருளை தயாரிக்க அல்லது தயாரித்த பொருளை சந்தையில் அறிமுகப்படுத்தவேண்டுமா? இல்லை, உங்கள் நிறுவனம் பயணிக்கும் பாதையை மாற்றி அமைக்க வேண்டுமா? உங்கள் நிறுவனம் வியாபாரம் செய்யும் ஏரியாவை அதிகப்படுத்தவேண்டுமா? அட, இதையெல்லாம் விடுங்கள். ஒரு நல்ல காரியத்துகாக நன்கொடை வசூலிக்கவேண்டுமா? இப்படி இத்தனை வேலைகளையும் செய்வதற்கு உங்களிடம் திறமை வாய்ந்த நபர்கள் இருக்கவேண்டும். சரியான நபர்கள் உங்களிடம் இல்லாவிட்டால் நீங்கள் ஜெயிப்பது கடினம். தனியாகப் போவேன் என்று சொன்னால், பிசினஸில் நீங்கள் எதையும் சாதிக்க முடியாது. இதை தன்னுடைய வாழ்க்கைச் சம்பவங்களில் இருந்து தெளிவாக எடுத்துச் சொல்கிறார் புத்தகத்தின் ஆசிரியர்.

அவர், செயின்ட் லூயிஸ் என்ற இடத்தில் பெப்சி நிறுவனத்தின் பாட்லிங் பிளான்ட் ஆப்ரேஷன்களின் தலைவராக வேலை பார்த்தபோது ஒரு கூட்டம் நடந்ததாம். அந்த நிர்வாக கூட்டத்தில் ‘மெர்ச்சன்டைசிங்’ குறித்த (கடைகளில்/ஸ்டோர்களில் குளிர்பானங்களை கண்ணில் தெரியும்படி வைத்தல்) கேள்வி ஒன்றைக் கேட்டாராம்.

‘‘மெர்ச்சன்டைசிங்கில் எது வொர்க் அவுட் ஆகும், எது ஒர்க்-அவுட் ஆகாது என்று இதுவரை நீங்கள் பெற்ற அனுபவத்தில் இருந்து சொல்லுங்கள்’’ என்பதுதான் அவர் கேட்ட கேள்வி. கேள்விக் கேட்கப்பட்டவுடனேயே கூட்டத்தில் இருந்த ஒவ்வொரு நிர்வாக அதிகாரியும், ‘‘இதுபற்றி பாப் (வேறு ஒரு நிர்வாக அதிகாரி) என்பவரிடம் கேளுங்கள். அவர்தான் இதை கரைத்துக் குடித்தவர். நாங்கள் இரண்டு வருடம் ஃபீல்டில் வேலை பார்த்துக் கற்றுக்கொண்டதைவிட, அவரிடமிருந்து அதிக விஷயங்கள் கற்றுக்கொண்டுள்ளோம்’’ என்று சொன்னார்களாம்.

உடனே அவர் பார்வை பாப்பை நோக்கித் திரும்பியது. கம்பீரமாக, கர்வத்துடன் பாப் இருப்பார் என்று நினைத்துப் பார்த்தால், பாப் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாராம்.

‘ஏன் அழறீங்க’ என்று அவர் கேட்க, ‘‘நாற்பது வருடங்களாக இங்கே நான் வேலை பார்க்கிறேன். இன்னும் இரண்டு வாரத்தில் ஓய்வுபெறப் போகிறேன். நான் இவர்களுக்கெல்லாம் இவ்வளவு உதவியாக இருந்திருக்கிறேன் என்று இப்போது இவர்கள் சொல்லித்தான் தெரிகிறது’’ என்றாராம்.

அந்த கூட்டம் முடிந்த பின்னர், ஆசிரியரிடம் ஒருமாதிரி அசெளகரியம் தொற்றிக்கொண்டது. ‘‘ஒரு கார்ப்பரேட் நிறுவனமாக ஒரு மனிதனின் திறமையை 40 வருடம் அங்கீகரிக்காமலேயே இருந்திருக்கிறோம். அதை விடுங்கள். லாப நோக்கில் சிந்தித்தாலுமே இவ்வளவு பெரிய நிபுணரை வைத்துக்கொண்டு அவரைக் கண்டுகொள்ளாமல் விட்டதால் எவ்வளவு நேரம், சக்தி வீணாகப் போனது. பல பிளான்ட்களுக்கும் பல ஊர்களுக்கும் அனுப்பி, பல நிர்வாகிகளுக்கு அவருக்குத் தெரிந்ததை கற்றுக் கொடுத்திருக்கலாமே என்ற எண்ணமும் மனதில் மேலோங்கியது.

எவ்வளவு விரயம் செய்திருக்கிறோம். ஒரு நல்ல தலைவனாக இருந்த பாப் போன்றவர்களை இறுதி வரை நன்றி சொல்லாமல் அனுப்பப்படக்கூடாது. அங்கேதான் நிர்வாக மாற்றத்துக்கான விதை விதைக்கப்பட்டது. பணியாளர்கள் நம்முடைய பங்களிப்பு என்ன என்பதைத் தெரிந்துகொள்ளும் வகையில் நிர்வாகம் நடக்கவேண்டும். தலைமை எவ்வழியோ தொண்டர்களும் அவ்வழியே. எனவே, நான் இனி சரியான பங்களிப்புக்கு அங்கீகாரம் என்ற வழியை பின்பற்றுவேன். என்னுடன் இருக்கும் நபர்களும் அதையே பின்பற்ற விழைவார்கள் என்று நினைத்துச் செயல்பட ஆரம்பித்தேன்’’ என்கிறார் ஆசிரியர்.

தொழில் முன்னேற்றத்துக்கு துணைநிற்கும் மூன்று கேள்விகள்!

மூன்று கேள்விகள்!

மூன்று கேள்விகளே இது போன்ற நிறுவனங்களை உருவாக்கும் என்கிறார் ஆசிரியர்.

முதல் கேள்வி:
எது உங்களுடைய பிசினஸை பெரிய அளவில் வளரச் செய்து (இலக்கு), உங்களுடைய வாழ்க்கையை பெரிய அளவில் (இலக்கு) மாற்றி அமைக்கும் என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். கேள்வியைப் பார்க்க சுலபமாகத் தெரிந்தாலும், இதற்குப் பதில் சொல்வதொன்றும் அவ்வளவு சுலபமில்லை.

இரண்டாவது கேள்வி: உங்களுடைய இந்த பெரிய இலக்குக்கான டார்கெட் ஆடியன்ஸ் யார் என்பது. நீங்கள் தனியொருவனாக இந்தப் பெரிய இலக்கை எட்டிப் பிடிக்க முடியுமா? முடியாது இல்லையா! அதனால் உங்களுடைய இலக்கை நோக்கிய பயணத்தில் யாரையெல்லாம் கவர்ந்து நல்ல விதத்தில் பாதிப்படையச் செய்வீர்கள் (Affect), யாருடைய கவனத்தை எல்லாம் திருப்ப முயற்சிப்பீர்கள் (Influence), யாரையெல்லாம் கூட்டுச் சேர்த்துக்கொண்டு பயணிப்பீர்கள் (Take with you) என்ற கேள்விக்கு பதிலளிப்பதுதான் இரண்டாவது கேள்வியின் விளக்கம்.

மூன்றாவது கேள்வி : இரண்டாவது கேள்வியில் சொல்லப்பட்டிருக்கும் நபர்கள் எல்லாம் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது. உங்கள் பணியாளர் என்ன நினைக்கிறார், உங்கள் வாடிக்கையாளர் என்ன நினைக்கிறார் என்பதை விளக்கவேண்டிய கேள்வி இது.

எந்தத் தொழிலை செய்யப்போனாலும் இந்த மூன்று கேள்விகளுக்கும் பதிலைத் தேடுங்கள். தேடிக் கண்டுபிடித்து விடையைத் தெளிவாக எழுதிக்கொள்ளுங்கள்.

ஒரு தலைவனாக வெற்றி பெற நீங்கள் என்ன செய்யவேண்டும்? தலைமைப் பண்பின் மிக அடிப்படையான விஷயமே, ‘நீ, நீயாக இரு’ என்பதே. நீங்கள் நடிக்க ஆரம்பித்தால், ஊர் உலகம் சுலபத்தில் அதைக் கண்டுபிடித்துவிடும் என்கிறார் ஆசிரியர். நாம் நாமாக இருப்பது, சுலபமான காரியமில்லை என்றாலும் அதற்காக முயற்சித்துப் பார்க்கலாமே என்கிறார்.

உன்னை அறிந்தால்..!

அடுத்தபடியாக, உங்களை அறிந்து கொள்ளுங்கள். நம்முடைய வாழ்வின் மிகப் பெரிய பிரச்னையே நாம் நம்மை முழுமையாக அறிந்துகொள்ளாமல் இருப்பதே. உன்னைப் பற்றி நீ தெளிவாக அறிந்துகொண்டால், நீ பிசினஸ் உலகத்தில் அழகாக வீரத்துடன் போராடலாம். இதுவும் சுலபம் இல்லை.  செய்யும் வேலைக்குத் தேவையான நம்பிக்கை மற்றும் அறிவைப் பெற நீண்ட நாட்கள் பிடிக்கவே செய்யும். எம்பிஏ படிப்பு இல்லாமல் வேலைக்குச் சேர்ந்த ஆசிரியர், ‘‘பெருமை வாய்ந்த எம்பிஏ கல்லூரிகளில் படித்தவர்களுடன் பணியாற்றினேன். நினைத்தால் சிரிப்பாக வருகிறது. எப்போதெல்லாம் என்னுடன் பணியாற்றுபவர்கள் எம்பிஏ குறித்து பேசுகிறார்களோ, அப்போதெல்லாம் ‘நான் பாத்ரூம் போகிறேன்’ என்று எக்ஸ்க்யூஸ் கேட்டுவிட்டு போய்விடுவேன். ஏனென்றால், ‘எங்கே எம்பிஏ படித்தாய்’ என்ற கேள்விக்கு என்னால் பதில் சொல்லமுடியாதே!  பின்னால்தான் புரிந்தது, எம்பிஏ என்பது என்னிடம் இல்லை என்றாலும் செய்யும் தொழிலை செவ்வனே செய்யத் தேவையான அறிவு என்னிடம் இருந்தது’’ என்கிறார். 

நீங்கள் வளர வேண்டும் என்றால் என்ன செய்வது..? யாரை அணுகுவது..? உங்களை வளர்த்துக்கொள்ள உங்களைவிட கருத்தாக செயல்படும் நபர்கள் இந்த உலகில் யாருமில்லை. நான் இன்றைக்கு யார், நாளை எப்படி இன்னமும் மேம்படுவேன் என்ற கேள்வியை வருடத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில் நாம் அனைவருமே கேட்டுக்கொள்ளவேண்டும்.  ‘நாம் நாமாகவே தொடர்ந்து இருந்துகொண்டு, நாம் யாராக மாறவேண்டும் என்று கனவு காண்கிறோமோ, அதுபோல் மாற நிச்சயமாக முடியாது இல்லையா’ என்று கிண்டலடிக்கிறார் ஆசிரியர்.

தொழில் முன்னேற்றத்துக்கு துணைநிற்கும் மூன்று கேள்விகள்!

கவன ஈர்ப்பு அவசியம்!

இறுதியாக, தான் கண்ட ஒரு காட்சியுடன் புத்தகத்தை முடிக்கிறார் ஆசிரியர். ‘‘ஒரு ஹோட்டலின் நீச்சல் குளத்தின் அருகே உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தேன். நீச்சல் குளத்துக்கு வந்த பெண்மணி ஒருவர், முதலில் காலை நனைத்து பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீருக்குள்   மெதுவாக இறங்கினார். அவர் நீச்சல் குளத்தில் இறங்கியதால், குளத்தில் பெரிய சலனமேதுமில்லை. ஆனால், மெள்ள மெள்ள இறங்குவதற்கு அதிக நேரம் பிடித்தது. அவ்வளவு நேரமும் அவர் குளிரால் நடுங்கிக்கொண்டே இருந்தார். கொஞ்ச நேரம் கழித்துவந்த சிறுமி, ஒரே வினாடியில் நீச்சல் குளத்தில் குதித்தாள். பெரிய அலை உருவானது. அப்படியே நீந்திப் போய் மறுகரை சேர்ந்துவிட்டாள்.

இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு, அதில் இருக்கும் ஐடியாக்களை அந்தப் பெண்மணியைப் போல, அவ்வப்போது உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்திப் பார்க்கலாம். அல்லது அந்தச் சிறுமியைப் போல, ஒரேயடியாக குதித்து மொத்த ஐடியாக்களை யும் நீங்கள் ஒரே மூச்சாக உபயோகிக்க ஆரம்பிக்கலாம். நீச்சல் குளத்தில் குதித்த சிறுமியே அலையை எழுப்பி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தாள். பிசினஸ் என்பதே அனைவரின் கவனத்தையும் கவர்வதுதானே’’ என்று சொல்லி முடிக்கிறார் ஆசிரியர்.

பிசினஸ் லீடர் ஆக நினைக்கும் அனைவரும் படிக்கவேண்டிய புத்தகம் இது.

- நாணயம் டீம்

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங்  வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு