Published:Updated:

ஐ.எஃப்.சி.ஐ... தொடரும் சிக்கல்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஐ.எஃப்.சி.ஐ... தொடரும் சிக்கல்கள்!
ஐ.எஃப்.சி.ஐ... தொடரும் சிக்கல்கள்!

மு.சா.கெளதமன்

பிரீமியம் ஸ்டோரி
ஐ.எஃப்.சி.ஐ... தொடரும் சிக்கல்கள்!

ஐ.எஃப்.சி.ஐ... பத்து ஆண்டுகளுக்கு முன்பு பலரும் வாங்கிய பங்கு. ‘இண்டஸ்ட்ரியல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்’ என்கிற அரசு நிறுவனத்தின் பங்கான இது, இப்போது தொடர் சிக்கலில் மாட்டித் தவிக்கிறது. இது நீண்ட காலத்துக்கு கடன் வழங்கும் நிதி நிறுவனம். இந்த நிறுவனத்தில் என்னதான் பிரச்னை?

பிரச்னையின் தொடக்கம்!

ஐந்து வருடங்களுக்கு முன்பு,  ஐ.எஃப்.சி.ஐ மீது இந்தியாவின் புகழ் பெற்ற வழக்கறிஞரான பிரஷாந்த் பூஷண் நடத்திவரும் பொதுநல வழக்கு மையம் (Centre for Public Interest Litigation) ஒரு வழக்கைப் பதிவு செய்தது. அந்த வழக்கில் இரண்டு கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தன. முதல் கோரிக்கை, இந்த நிறுவனத்தின் அப்போதைய நிர்வாக இயக்குநரான அதுல்ராயை நீக்கவேண்டும். இரண்டாவது கோரிக்கை, அரசிடம் இருக்கும் ஐ.எஃப்.சி.ஐ-யின் ‘ஆப்ஷனலி கன்வெர்டிபிள் டிபெஞ்சர்’களை பங்குகளாக மாற்றவேண்டும். 

கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இருதரப்பு வாதங்களைக் கேட்ட பிறகு, ஆர்பிஐ மற்றும் செபி இணைந்து, இந்த நிறுவனத்தை புதிதாக மீண்டும் விசாரித்து அறிக்கைகளை சமர்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தனர். ஆர்பிஐ மற்றும் செபி இணைந்து விசாரிக்க வேண்டிய மூன்று முக்கிய விஷயங்கள் : 1. அன்றைய எம்.சி.எக்ஸ் நிறுவனத்தின் பங்குகளை 35 ரூபாய்க்கு வாங்கி ரூ.168 கோடி நஷ்டமடையச் செய்தது.       2. ப்ளூ கோஸ்ட் ஹோட்டல் என்கிற நிறுவனத்தில் முதலீடு செய்தது. 3.சத்யம் நிறுவனத்தில் முதலீடு செய்தது.

ஏற்கெனவே நடந்த விசாரணை!


இதில் வேடிக்கை என்ன என்றால், 2013-ம் ஆண்டே கம்பெனிகளுக்கான ரெஜிஸ்ட்ரார் ஆஃப் கம்பெனீஸ் (RoC) இந்த பிரச்னைகளை விசாரித்து நீதிமன்றத்திடம் ஒரு அறிக்கையை சமர்பித்திருக்கிறது. இனி ஆர்.ஓ.சியின் அறிக்கையில் இருந்து...

 எம்.சி.எக்ஸ் பிரச்னை!

அன்றைய ராஜ்ய சபா உறுப்பினர் முகமது அஜீப், அப்போதே பிரதமர் மன்மோகன் சிங்கிடம், ‘ஐ.எஃப்.சி.ஐ நிறுவனம், எம்.சி.எக்ஸ் பங்கை அதிக விலை கொடுத்து வாங்கியது’ என்று பதிவு செய்திருக்கிறார். அந்த அறிக்கை ரெஜிஸ்ட்ரார் ஆஃப் கம்பெனீஸிடம் கிடைக்க, அது அதை உறுதி செய்தது. அதோடு சரிவர தரவுகளை கவனிக்காமல் அதிக விலை கொடுத்து எம்.சி.எக்ஸ் பங்குகளை வாங்கி இருக்கிறது ஐ.எஃப்.சி.ஐ என்பதையும் தெளிவாகக் குறிப்பிட்டது.

ப்ளூகோஸ்ட் ஹோட்டல்ஸ்!

இந்த நிறுவனத்துக்கு ஐ.எஃப்.சி.ஐ நிறுவனம் 150 கோடி ரூபாய் கடன் வழங்கியது. அதில் ரூ.72.5 கோடியை, அந்த ஹோட்டல் தனக்கிருந்த கடன்களை அடைக்கவும், மீதமிருந்த 85 கோடி ரூபாயை சில்வர் ரிசார்ட் ஹோட்டல் என்கிற துணை நிறுவனத்தில் முதலீடு செய்யவும் பயன்படுத்தியது. இதில் வேடிக்கை என்னவெனில், சில்வர் ரிசார்ட் ஹோட்டல் நிறுவனத்தின், அதிக பங்குகளை வைத்திருக்கும் பெரிய பங்குதாரர் ஐ.எஃப்.சி.ஐ. ஆக, தனது பணத்தை, தான் ஏற்கெனவே அதிக அளவில் பங்கு வைத்திருக்கும் நிறுவனத்திலேயே முதலீடு செய்தது. இதன்பிறகு சில்வர் ரிசார்ட் நிறுவனத்தின் புரமோட்டர்களின் கைவசம் இருக்கும் பங்குகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்ததை ஆர்.ஓ.சி கண்டுபிடித்தது.

 சத்யம் குழுமத்தில் முதலீடு!

சத்யம் நிறுவனத்தின் நிறுவனர் ராமலிங்க ராஜூ, சத்யம் மற்றும் சத்யம் நிறுவனத்தின் மற்றொரு துணை நிறுவனமான மைதாஸ் நிறுவனத்தின் பங்குகள் மற்றும் சில நிலங்களை ஐ.எஃப்.சி.ஐ-யிடம் அடமானம் வைத்து, 85 கோடி ரூபாய் திரட்டினார். அதுவும் அவர் மாட்டிக் கொள்வதற்கு சில தினங்கள் முன்புதான் 85 கோடி கடன் வாங்கி இருக்கிறார்.

இது மட்டுமின்றி, பட்டியலிடப்படாத நிறுவன பங்குகளில் ரூ.2500 கோடி அளவுக்கு முதலீடு செய்திருப்பது, 2008 - 09, 2009 - 10, 2010 - 11 ஆகிய நிதி ஆண்டுகளில் வாராக் கடன் ரூ.1,000 கோடியைத் தள்ளுபடி செய்ததையும் ஆர்.ஓ.சி கண்டுபிடித்தது.
இந்தப் பிரச்னைகளை எல்லாம் குறிப்பிட்டு, மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் துறை, ஐ.எஃப்.சி.ஐ-ன் புதிய இயக்குநர்கள் குழுவிடம் கேட்க, “அப்படி எந்தப் பிரச்னையும் இல்லை; முறைகேடுகளும் இல்லை’’ என்று ஒற்றை வரியில் பதில் சொல்லி இருக்கிறது.

இத்தனை சச்சரவுகளுக்கு பிறகுதான் உச்ச நீதிமன்றத்தின் புதிய உத்தரவு இப்போது வந்துள்ளது. 

லேட்டஸ்ட் மாற்றங்கள்!


வழக்கு தாக்கல் செய்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், சில மாற்றங்களை ஐ.எஃப்.சி.ஐ நிறுவனத்தில் பார்க்க முடிகிறது. அரசிடம் இருந்த டிபெஞ்சர்கள், ஈக்விட்டிகளாக மாற்றப்பட்டுவிட்டன. தற்போது ஐ.எஃப்.சி.ஐ நிறுவனத்தின் 55.53 சதவிகிதப் பங்குகள் அரசிடம்தான் இருக்கிறது. இருப்பினும் நிதிநிலை இன்னும் திருப்தி அளிக்கும் விதத்தில் மாறவில்லை. 

தற்போது வந்திருக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவினால், கடந்த சில வாரங்களில் இந்தப் பங்கு விலை சுமார் 10 சதவிகிதத்துக்கு மேல் இறங்கி உள்ளது. உஷார் முதலீட்டாளர்களே... உஷார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு