Published:Updated:

இல்லை என்று சொல்லும் கலை!

நாணயம் லைப்ரரி!

பிரீமியம் ஸ்டோரி
இல்லை என்று சொல்லும் கலை!

புத்தகத்தின் பெயர் : த பவர் ஆஃப் எ பாசிட்டிவ் நோ (The Power of A Positive No)

இல்லை என்று சொல்லும் கலை!ஆசிரியர் : வில்லியம் யூரி

பதிப்பாளர் : Bantam

ல்லை, முடியாது (No) என்ற சொற்கள் நம்முடைய மொழியில் மிகவும் பவர்ஃபுல்லான வார்த்தைகள். அன்றாடம் நாம் வேலை பார்க்கும் அலுவலகம், வீடு, மற்றும் நம்முடைய சுற்றத்தாரிடம் சொல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் வார்த்தை. ஏனென்றால் இந்த வார்த்தையே நம்மை பல சூழ்நிலைகளில் காப்பாற்றுவதாக இருக்கும். ‘நோ’ என்ற வார்த்தையை கோபத்தைத் தூண்டாமலும், உறவுகளை முறித்துக்கொள்ளாமலும் மற்றவர்களிடம் சொல்வது என்பது மிகப் பெரிய சாதுர்யமான விஷயம். இப்படி சாதுர்யமாக ‘நோ’ சொல்லும் (பாசிட்டிவ் நோ) கலையைச் சொல்லித் தருகிறது வில்லியம் யூரி எழுதிய ‘த பவர் ஆஃப் எ பாசிட்டிவ் நோ’ என்னும் புத்தகம்.

‘நோ’ எனும் வார்த்தை மிகவும் அதிக சக்தி கொண்டதொரு வார்த்தை. ஏனென்றால், அதனுடைய அழிக்கும் சக்தி (சுமூகமான உறவுகளை) மிகமிக அதிகம். அதனாலேயே நம்மில் பலரும் அதனைச் சொல்லத் தயங்குகிறோம்.

ஆனால், ஒவ்வொரு நாளும் ‘நோ’ எனும் வார்த்தையைச் சொல்லவேண்டிய் கட்டாயத்தைத் தரும் சூழ்நிலைகளை நாம் பலதடவை எதிர் கொள்கிறோம். அதிலும் நாம் சார்ந்திருக்கும் நபர்களிடத்தில் ‘நோ’ சொல்லவேண்டியிருந்தால் நிலைமை மிகவும் மோசம்.

காலையில் அலுவலகத்துக்குள் வருகிறீர்கள்.  உங்கள் பாஸ் உங்களை கூப்பிட்டு, ‘இந்த வேலையை இந்த வாரத்துக்குள் முடித்தேயாகவேண்டும். சனி மற்றும் ஞாயிறன்றுகூட வேலை பார்த்து முடிக்கிறோம்’ என்கிறார். அந்த விடுமுறை நாட்களில்தான் நீண்ட நாளைக்குபின் ஜாலியாக ஒரு பயணம் போகலாம் என குடும்பத்தினரிடம் சொல்லி இருக்கிறீர்கள். இப்போது எப்படி பாஸின் மனம் நோகாமல் (அடுத்து உங்கள் புரமோஷன் வரவேண்டிய நேரம் என்பதால், அதற்கும் பாதகம் வராமல்) ‘நோ’ சொல்வது. இப்படி அன்றாடம் பல இக்கட்டான ‘நோ’ சொல்லும் சூழல்கள் நமக்கு வரவே செய்கிறது. அதுவும் பரபரப்பான இன்றைய உலகில் ‘நோ’ என்பது கட்டாயம் சொல்லவேண்டிய வார்த்தையாக ஆகிக்கொண்டே வருகிறது.

வேலைச்சுமை அதிகமாகிக்கொண்டே போகும் இந்த உலகில்  தனிமனித எல்லைகளை வகுத்துக் கொள்ள முடிவதே இல்லை. எப்படியாவது எல்லாவற்றையும் தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்பதே ‘நோ’ சொல்வது பலருக்கும் பெரும் பிரச்னையாக இருக்கிறது. ஏன் ‘நோ’ சொல்ல முடியவில்லை என்று கேட்டால், அந்த டீலை எப்படியாவது முடித்தே ஆகவேண்டும் என்று நாம் நினைக்கிறோம். ஏன் உறவை கெடுத்துக் கொள்ளவேண்டும், இப்போது ‘நோ’ சொல்லிடலாம். ஆனால், அதன் விளைவுகள் எப்படி இருக்குமோ என்று நினைத்தால், பயமாக அல்லவா இருக்கிறது? ‘வேலை போயிடும் பாஸ், மனசு குறுகுறுங்குது, எதுக்கு ‘நோ’ சொல்லி சங்கடப்படுத்தவேண்டும்’ போன்ற பதில்களே பெரும்பாலும் வருகின்றன.

‘நோ’ என்பது உங்களுடைய  உரிமைக்கும் உறவுக்கும் நடுவே நடக்கும் போராட்டம் ஆகும்.  உரிமையை நிலைநாட்ட நினைத்தால், உறவு கெட்டுப் போய்விடுமோ என்ற குழப்பமே ‘நோ’ சொல்வதைத் தடுக்கிறது. இந்தக் குழப்பத்தை தெளிவாக்க மூன்று வழிமுறைகளையே நாம் கையாளுகிறோம்.  

வளைந்து கொடுக்கும் ‘யெஸ்’ (Accommodate)

சரி கொஞ்சம்   வளைந்து கொடுத்து உதவுவோம் என்று நினைத்து, ‘நோ’ சொல்ல வேண்டிய சூழலிலும் ‘எஸ்’ என்று சொல்லிவைப்பது.  உறவை காப்பாற்ற நினைக்கும் முறை இது. கொஞ்சம் பயத்தினால் வருவதே இந்த வகை ‘நோ’ சொல்லுதல். வளைந்துகொடுத்து உதவுவது என்பது ஒரு நல்ல முறையல்ல. கொஞ்ச நாளைக்கு அது நிம்மதியைத் தருவதாய் இருக்கும். அப்புறம், உங்கள் குழந்தை பொம்மை கேட்டு ‘ப்ளீஸ்...’ என்று கெஞ்சும்போது  வாங்கித் தந்தால் அதுவே வழக்கமாகிவிடும்.

உங்கள் பாஸ் எல்லா வாரக் கடைசியிலும் வேலைக்கு வரச்சொல்வார். இது அடிக்கடி நடக்கும்போது நமக்கு டென்ஷன் எகிறும்.  புரமோஷன் குறித்து கவலைப்பட்ட நமக்கு பிற்பாடு, இந்த அலுவலகத்தில் நாம் மட்டும்தான்  சம்பளம் வாங்குகிறோமா என்ற எண்ணம் தோன்றும். உறவைக் காப்பாற்ற ‘நோ’  சொல்லத் தவறினால் பின்னர் அதே உறவில் பெரிய அளவில் பாதிப்பு வருமளவுக்கே நம்முடைய நடவடிக்கைகள் இருந்துவிடும். அது ‘நோ’ சொல்வதற்குப் பதிலாக ‘எஸ்’ சொல்லும்போது நாம் கொடுக்கும் மிகப் பெரிய விலையாகிவிடும்.

நெத்தியடி ‘நோ’ (Attack)

இரண்டாவதாக நாம் கடைப்பிடிக்கும் நடைமுறை சொல்லும் ‘நோ’வை  நெத்தியில் அடித்த மாதிரி சொல்வது. ‘உறவு என்ன பெரிய புடலங்காய். மனுசன் படுற பாடு யாருக்குத் தெரியுது’ என்று போட்டு உடைப்பது. இந்த  வளைந்து கொடுக்கும் ‘நோ’ (‘நோ’ என்கிற ‘யெஸ்’) பயத்தினால் சொல்லப்படுகிறது என்றால் அட்டாக் வகை ‘நோ’ கோபத்தினால் சொல்லப்படுகிறது.  ‘நோ’ சொல்லவேண்டிய இடத்தில் ‘யெஸ்’ சொல்வதானால் எண்ணிக்கை ரீதியாக நிறையப் பிரச்னைகளை நாம் சந்திக்கிறோம் என்றால், கோபத்துடன் கடுமையாகச் சொல்லும் ‘நோ’க்களினால் பூதாகரமான பிரச்னைகளை நாம் எதிர்கொள்கிறோம். குடும்பமோ, அலுவலகமோ பிரச்னைகளுக்கு ஊற்று என்ன என்று கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் இந்த வகைக் கடுமையான ‘நோ’க்களாகவே இருக்கும். உலகத்தில் நிலவும் பல்வேறு வகை சண்டைகளுக்கும்/பிரச்னை களுக்கும் மையக்கருவே இந்த வகை அட்டாக் ரக ‘நோ’க்கள்தான்.

‘நோ’ சொல்வதை தவிர்த்தல் (Avoid) மூன்றாவதாக நாம் கடைப்பிடிக்கும் நடைமுறை ‘நோ’ சொல்வதற்குப் பதில், பதிலே சொல்லாமல் இருத்தல். கொஞ்சம் சிக்கலான ‘யெஸ்/நோ’ பதில் தேவைப்படும் கேள்விகளுக்கு பெரும்பாலும் பதில் சொல்லாமல் தவிர்த்தல் என்ற முறையே அனைவராலும் கையாளப்படுகிறது. அலுவலக மானாலும் சரி,  வீடானாலும் சரி இந்த வகை சமாளிப்பே பெரும்பாலானோரால் செய்யப் படுகிறது. எதுக்கு நோ சொல்லி  பிரச்னையை வளர்த்துக்கொண்டு போகவேண்டும். கொஞ்ச நாள் அமைதியாகப் பதில் சொல்லாமல் இருந்தால், அதுவாகவே பிரச்னை தீர்ந்துவிடும் அல்லது திசை மாறிவிடும் என்கிற நினைப்பில் செய்யப்படும் உத்தி இது. இந்த வகை நடைமுறை ஒரு அட்டூழியம்.  கூட இருக்கிறவர்களின் நலனைப் பற்றி கொஞ்சம் கூட சிந்திக்காமல் நம்முடைய அதிகாரத்தை (நிலையை) துஷ்பிரயோகம் செய்யும்வகையில் செயல்படும் நடைமுறை இது.

இல்லை என்று சொல்லும் கலை!

இது தவிர, மேலே சொன்ன மூன்று வகையையும் பல்வேறு விகிதாசாரத்தில் கலந்து செய்யும் நிலைப்பாட்டையும் நாம் அன்றாடம் எடுக்கிறோம். எந்த முறையானாலும் அது நமக்கோ அல்லது மற்றவருக்கோ பிரச்னையைத் தருவதாகத்தான் இருக்கிறது. இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்கவே ‘பாசிட்டிவ் நோ’ என்னும் முறை. பொதுவாக, நாம் நினைப்பது உரிமை அல்லது உறவு என்ற இரண்டில் ஒன்றையே நாம்  சுமூகமாக வைத்திருக்க முடியும் என்று நாம் மிகவும் தீர்க்கமாக நம்புகிறோம். உரிமையை நிலைநாட்டி உறவையும் வளப்படுத்த   ஆக்கபூர்வமான மற்றும்  மதிப்பளிக்கிற வகையிலான பிரச்னைகளை எதிர்கொள்ளும் நடைமுறையை உபயோகப்படுத்த நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.  

சனி, ஞாயிறெல்லாம் வேலை பார்க்க முடியாது; அப்படி செஞ்சா எனக்கு என்ன சிலையா வைக்கப்போறீங்க என சொல்வது ‘நோ’. ஏதாவது செய்து வார நாட்களிலேயே வேலையை முடித்துவிடுவோம். கொஞ்சம் பிள்ளை குட்டிகளையும் பார்க்கவேண்டியிருக்கிறதே.   ரொம்பவும் தனிமையாக இருப்பதாக ஃபீல் பண்றாங்க... என பதமான பதில் பாசிட்டிவ் ‘நோ’.  இந்த இரண்டு பதிலுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

பாசிட்டிவ் ‘நோ’வில் முக்கியமான பங்கெடுப்பது மரியாதை.  நாம் அனைவருமே ‘நோ’ சொல்லும்போது கொஞ்சம் எமோஷனலாக மாறிவிடுகிறோம். அதனாலேயே Accommodate, Attack, Avoid என்ற நிலைகளை நாம் அடைகிறோம். நம்முடைய கோபதாபங்களையே நம்மால் கட்டுப்படுத்த  முடியாது என்கின்ற நிலையில் நாம் இருந்தால், நம்மால் எப்படி அடுத்தவர்களுடைய  மனதில்  செல்வாக்கான இடம்பிடித்து  அவர்களை மாற்ற முடியும்? ‘நோ’ சொல்கிற நாம் எமோஷனலாக மாறும்போது அந்த ‘நோ’வை கேட்கும் நபர் என்ன விதமான எமோஷனல் ரியாக்‌ஷனுக்கு உள்ளாவார் என்று சிந்திக்கவேண்டும். அதானாலேயே நாம்  ‘நோ’ சொல்லும்போது அதன் காரண காரியங்களையும், அதன் மீதான நம்முடைய உறுதியான நிலையையும் விளக்கும் வண்ணம் சொல்லவேண்டியிருக்கிறது. 

சரி. பதமாக ‘நோ’ சொல்லத் தெரிந்துகொண்டு விட்டால் போதுமா? என்றால் அதுதான் இல்லை. உங்கள் ‘நோ’-வுக்கு அதைக்கேட்கும் நபரை யெஸ் சொல்ல வைக்கும் வித்தையையும் நீங்கள் கற்றுக்கொள்ளத்தான் வேண்டும். பொதுவாக, சொல்லப்படும் ‘நோ’க்களில் நீ எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்ற தொனியே இருக்கிறது. அதுவே பிரச்னைக்கு வழிவகுக்கவும் செய்கிறது. ‘நோ’ என்பதைவிட அதில் தொனிக்கும் எனக்கு உன்னைப் பற்றி கவலை இல்லை எனும் தொனியே மிகவும் கொடுரமாக தாக்கும் விஷயமாகும். அதனாலேயெ உறவுகள் முறிகின்றன. மாறாக, ‘நோ’ என்பது மரியாதையுடன் சொல்லப் பட்டால் என்னவாகும்? ‘நோ’ சொல்லப்படும் தொனியில் அதிகரிக்கப்படும் மரியாதை எதிராளியின் மூளையையும் மனதையும் சமாதானமடையச் செய்யவல்லதாய் இருக்கிறது.

பாசிட்டிவ் ‘நோ’ என்பதைச் சொல்ல திடமான மனது, மதிநுட்பம், பச்சாதாபம், தைரியம்,  பொறுமை போன்ற நற்குணங்களும், இவை அனைத்தையும் விடாப்பிடியாகக் கடைப்பிடிக்கும் தன்மையும் தேவைப்படும் என்று முடிக்கிறார் ஆசிரியர். இன்றைய பிஸியான மற்றும் பரபரப்பான உலக சூழலில் உறவுகளை மேம்படுத்த அனைவரும் ஒரு முறை படிக்கவேண்டிய புத்தகம் எனலாம்.

- நாணயம் டீம்

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங்  வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு