Published:Updated:

‘பொன்ப்யூர் கெமிக்கல்’ பொன்னுசாமியின் வெற்றிக் கதை

‘பொன்ப்யூர் கெமிக்கல்’ பொன்னுசாமியின் வெற்றிக் கதை
பிரீமியம் ஸ்டோரி
‘பொன்ப்யூர் கெமிக்கல்’ பொன்னுசாமியின் வெற்றிக் கதை

ஜீரோ To ஹீரோ... - ரூ.36,000 To ரூ.1800 கோடி!மா.பாண்டியராஜன்

‘பொன்ப்யூர் கெமிக்கல்’ பொன்னுசாமியின் வெற்றிக் கதை

ஜீரோ To ஹீரோ... - ரூ.36,000 To ரூ.1800 கோடி!மா.பாண்டியராஜன்

Published:Updated:
‘பொன்ப்யூர் கெமிக்கல்’ பொன்னுசாமியின் வெற்றிக் கதை
பிரீமியம் ஸ்டோரி
‘பொன்ப்யூர் கெமிக்கல்’ பொன்னுசாமியின் வெற்றிக் கதை
‘பொன்ப்யூர் கெமிக்கல்’ பொன்னுசாமியின் வெற்றிக் கதை

சூர்யவம்சம் படத்தில் ஒரே பாட்டில் பணக்காரராகும் வரத்தை சரத்குமாருக்கு விக்ரமன் கொடுத்ததுபோல், எந்தக் கடவுளும் நமக்கு கொடுக்கப்போவது இல்லை. செய்யும் தொழிலில் ஒரே நோக்கத்தோடு உண்மையாக உழைத்தால், ஒரு நாள் வெற்றி நம்மைத் தேடி வரும் என்பதற்கு உதாரணமாக இருந்து உழைத்தவர், ‘பொன்ப்யூர் கெமிக்கல்’ இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அதிபர் பொன்னுசாமி. அவரது வெற்றிப் பயணத்தின் கதை அவரே சொல்கிறார்.

குக்கிராமம்!

“30 ஓலை வீடுகள் மட்டுமே இருந்த கொக்கராயன்பேட்டை புதூர்தான் என் சொந்த ஊர். எங்க ஊரில் இருந்து திருசெங்கோட்டுக்கும் ஈரோட்டுக்கும் 19 கிலோ மீட்டர். என் பெற்றோர் படிக்காத விவசாயிகள். 15 ஏக்கர் நிலம் வச்சிருந்து, அதில் விவசாயம் செஞ்சாங்க. நாங்க அஞ்சு பசங்க. நான் கடைசிப் பையன். எங்க வீட்டுல பெண் குழந்தை இல்லாததுனால நாங்கதான் என் அம்மாவுக்கு உதவியா இருப்போம்.  

நான் எஸ்எஸ்எல்சி படிச்சப்ப, என் அப்பா இறந்துட்டாரு. அஞ்சு பசங்கள்ல ஒருத்தர் கல்யாணத்தைக்கூட பார்க்காம எங்க அப்பா இறந்ததால, எங்க ஊர் மக்கள் எல்லாமும் ரொம்ப வருத்தப்பட்டாங்க. எஸ்எஸ்எல்சி  முடிச்சதுக்குப் பின்னாடி எனக்கு வேதியியல் (கெமிஸ்ட்ரி) படிக்கணும்ங்கிற ஆசை இருந்ததுனால, கோயம்புத்தூர்ல போய் படிச்சேன். அங்க போனதும் நண்பர்கள், பொழுதுபோக்குனு படிப்புல என்னால கவனம் செலுத்த முடியலை. இருந்தாலும், ஃபர்ஸ்ட் க்ளாஸ்ல பாஸ் பண்ணுனேன். படிச்சு முடிச்ச வுடன் சென்னையில வேலை பார்த்துக்கிட்டு இருந்த எங்க பெரியப்பா மகனிடம் வேலை கேட்டு லெட்டர் போட்டேன். அவரும் சென்னைக்கு வான்னு சொன்னார். இருபது வயசுல பெட்டிப் படுக்கையோடு சென்னைக்கு வந்தேன்.

சென்னையில் வேலை..!


சென்னைக்கு வந்து கண் மை, குங்குமப் பொட்டு தயாரிக்கிற ஒரு கம்பெனியில ரூ.150 சம்பளத்துல வேலைக்குச் சேர்ந்தேன். அங்க என்னையும் என் முதலாளியையும் தவிர, மற்ற எல்லாரும் பெண்கள். அவங்களை எப்படி வேலை வாங்குறதுனு தெரியாம அந்த வேலையை விட்டுட்டு, வேற வேலைக்குப் போனேன். அங்கேயும் சரிபட்டு வராததால, சென்னையே வேண்டாம்னு ஊருக்குப் போயிட்டேன். அங்க போனா, ‘நீ நல்லா படிச்சு, நல்ல வேலைக்கு போய் எங்க எல்லாரையும் பார்த்துக்குவேன்னு பார்த்தா, நீ இப்படி வந்து நிக்கிறியே’ன்னு சொல்லி, மறுபடியும் என்னை சென்னைக்கே ரயில் ஏத்தி விட்டுட்டாங்க. திரும்பவும் சென்னைக்கு வந்து எங்க பெரியப்பா மகனின் கம்பெனியில வேலைக்குச் சேர்ந்தேன்.

‘பொன்ப்யூர் கெமிக்கல்’ பொன்னுசாமியின் வெற்றிக் கதை

தொழில் செய்..!

அஞ்சு வருஷம் அந்த கம்பெனியில வேலை பார்த்தேன். அந்த அனுபவம் எனக்கு தொழில்னா என்னான்னு கத்துக் கொடுத்தது. 1980-ல எனக்குக் கல்யாணம் நடந்து, ஒரு ஆண் குழந்தையும் பிறந்துச்சு. அப்ப எனக்கு ரூ.650 சம்பளம். ‘‘இந்த சம்பளத்தை வச்சு உன்னால குடும்பத்தை சமாளிக்க முடியாது. நீயே சொந்தமா தொழில் பண்ணு; நாங்க உதவி பண்றோம்’’னு சகோதரர்கள் சொன்னார்கள். எனது மாமனாரும் அதையே சொன்னார். ஊர்ல தெரிஞ்சவங்க சிலர்கிட்ட கொஞ்ச கொஞ்சமா பணம் கடன் வாங்கி, மொத்தமா ரூ.36,000 சேர்த்தேன். கடன் தந்தவர் களிடம் முறையா பத்திரம் எழுதிக் கொடுத்துட்டு, சென்னைக்கு வந்தேன்.

கெமிக்கல் வாங்கி விற்கிற தொழில் செய்யலாம்னு பெரம்பூர்ல சின்னதா ஒரு இடத்தை வாடகைக்குப் பிடிச்சு தொழிலை ஆரம்பிச்சேன். 165 சதுர அடி செட்டுக்கு  வாடகை 160 ரூபாய். ஒரு மூன்று சக்கர சைக்கிள், அலுவலக மேசையை வாங்கியதுடன், ‘முர்ரே அண்ட் கோ’-வில் செகன்ட் ஹாண்ட் ராஜ்தூத் ஸ்கூட்டரை ஏலத்தில் வாங்கினேன்.

அப்பல்லாம் யாரும் நெனைச்சாக்கூட போன் வாங்க முடியாது. ஆனா, வாடகைக்கு எனக்கு இடம் குடுத்தவர்கிட்ட ஒரு போன் இருந்தது. அவர்கிட்ட அவரோட போன் நம்பரை என் விசிட்டிங் கார்டுல போட்டுக்கலாமான்னு கேட்டேன். ஓகேன்னுட்டார். எனக்கு போன் வந்தா, அவர் ஒரு பெல்லை அடிப்பார். நான் ஓடிப் போயி பேசிடுவேன். இதனால நிறைய ஆர்டர்களை வாங்கி, நல்லா சப்ளை செய்ய முடிஞ்சது.

புதுசா பிசினஸ் தொடங்கிய இந்த காலகட்டத்துல எனக்கு மிகவும் உறு துணையாக இருந்தது என் துணைவியார் தான். அவர் குடும்பத்தைப் பொறுப்போடு கவனித்துக் கொண்டதால்தான் என்னால் பிசினஸில் முழுக் கவனத்தையும் செலுத்த முடிந்தது. எனக்குச் சிரமம் ஏற்பட்டபோதெல்லாம் தைரியமும் ஆறுதலும் சொல்லி எனக்குப் பக்கத் துணையாக இருந்தவர் அவர்தான்.

முதல் லாபம்..!

பிசினஸ் தொடங்கி மூணு பேரை வேலைக்கு சேர்த்து செஞ்சதுல, முதல் வியாபாரத்துலயே ரூ.360 லாபம் கிடைச்சுது. ஒரே வருஷத்துலயே வாங்கின கடனை எல்லாம் அடைச்சேன். முதலீடும் வேலையாட்களும் குறைவா இருந்ததுனால, குறைவான தொகைக்குதான் வியாபாரம் பண்ணினேன். முதல் வருஷத்துல ரூ.12 லட்சத்துக்கு வியாபாரம் பண்ணினேன். அதில் ரூ.1 லட்சம் லாபம் கிடைச்சது.

‘பொன்ப்யூர் கெமிக்கல்’ பொன்னுசாமியின் வெற்றிக் கதை

தேடி வந்த வாய்ப்பு!

என் மும்பை நண்பர் ஒருவர், திருச்சியில் இருந்த ‘திருச்சி டிஸ்டில்லரீஸ் அண்ட் கெமிக்கல் லிமிடெட்’ என்கிற கம்பெனிக்கு கெமிக்கல்களை நிரப்பும் கேன்களை (கார்பாய்) சப்ளை செய்ய, ஆர்டர் பிடித்துத்தர உதவும்படி கேட்டார். அவருக்காக ஆர்டர் வாங்க நான் அந்த கம்பெனிக்குச் சென்றேன். அவர்கள் என்னிடம் பேசிக் கொண்டிருந்தபோது, ‘‘நாங்கள் அசெட்டிக் ஆஸிட் தயாரிக்கிறோம். அதை நீங்கள் ஏன் எங்களிடமிருந்து வாங்கி விற்கக் கூடாது?’’ என்று கேட்டார்கள். அந்தக் காலத்தில் விநியோக உரிமை கிடைப்பது கடினம். அப்படியொரு வாய்ப்பு என்னைத் தேடி வந்தபோது மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன். பிசினஸில் இப்படி திடீர் திடீரென புதுப்புது வாய்ப்புகள் வரும். இந்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்பவர்கள்தான் தங்கள் பிசினஸை சரியாக வளர்த்தெடுத்து, பிற்பாடு பெரிய பிசினஸ்மேனாக வருவார்கள்.

செலவைக் குறைத்த யோசனை!

அதுமட்டுமல்ல, செலவைக் குறைக்க இன்னொரு புதுமையையும் நாங்கள் செய்தோம். சென்னையில் பழைய கேன் வாங்கி, அதை நன்கு சுத்தம் செய்து, திருச்சியில் உள்ள கம்பெனிக்கு அசெட்டிக் ஆஸிட் வாங்க அனுப்புவோம். சென்னையிலிருந்து இரும்புத் தாள் (Iron Sheet) ஏற்றிக்கொண்டு திருச்சி செல்லும் லாரியில் காலி கேன்களை ஏற்றி அனுப்புவோம். திரும்பிவரும்போது அந்த கேன்களில் கெமிக்கலை நிரப்பிட்டு, தனியாக ஒரு லாரியில கொண்டு வருவோம். இதனால் எங்களுக்குப் போக்குவரத்துச் செலவு வெகுவாகக் குறைந்தது. எங்கள் லாபம் பெருகியதுடன், வாடிக்கையாளர்களுக்கு  விலையைக் குறைத்துத் தரவும் முடிந்தது.

ஊருக்கு ஊர் கிளைகள்!

திருச்சியில் கெமிக்கல்களை வாங்கி, அதை தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் அனுப்பி வந்தோம். ஈரோட்டில் இருந்து ஆர்டர் வந்தால், அதை சென்னையில் இருந்து கொண்டு போய் கொடுத்தோம். திருச்சியிலிருந்து சென்னைக்குக் கொண்டுவந்து, பிறகு சென்னையில் இருந்து ஈரோட்டுக்குக் கொண்டு போவது தலையைச் சுற்றி மூக்கைப் பிடிப்பதாக இருந்தது. இதற்கு பதிலா ஈரோட்டிலேயே ஒரு கிளையைத் தொடங்கி விட்டால், திருச்சியில் இருந்து நேரடியாக ஈரோட்டுக்குக் கொண்டு போய்க் கொடுத்து விடலாமே என்பதே என் பிளான். இந்த ஐடியா வந்தவுடன், முதல் கிளையை ஈரோட்டில் ஆரம்பித்தேன்.

1990-ல நாலு, அஞ்சு கிளை ஆரம்பிச்சுட்டேன். எங்கள் பிசினஸ், சுமார் ஐந்து கோடி ரூபாய்க்கு அளவுக்கு உயர்ந்தது. இந்தியாவுல புதுசா யார் கெமிக்கல் தயாரிச்சாலும் எங்ககிட்ட கொடுத்துத் தான் விநியோகிக்க சொல்வாங்க. நிறைய பேர் எங்க கம்பெனிக்கு டிஸ்ட்ரிபியூஷன் கொடுக்கச் சொல்லிப் பரிந்துரைக்கவும் செஞ்சாங்க. 1991-க்கு அப்பறம் பெங்களூர், பாண்டிச்சேரி, கொச்சி, ஹைதராபாத்துன்னு மற்ற மாநில நகரங்களிலும் கிளைகளை நிறுவினோம். தமிழ்நாட்டுல எப்படி நல்ல பெயர் எடுத்தோமோ, அதேமாதிரி தென் இந்தியா முழுவதிலும் நல்ல பெயர் எடுக்கணும்னு அதிகமா உழைச்சோம்.

நேர்த்திக்குக் கிடைத்த அங்கீகாரம்!

1988-ல குஜராத் கம்பெனி ஒன்று தயாரிக்கும் கெமிக்கல்களை வாங்கி விற்பனை செய்ய அனுமதி கேட்டுப் போனேன். பல பெரிய நிறுவனங்களைச் சேர்ந்தவுங்க அங்கே வந்திருந்தாங்க. ஆனா, நாங்க கம்மியா வியாபாரம் பண்ணியிருந்தாலும், நாங்க வேலை செய்ற நேர்த்தியைப் பார்த்துட்டு, அந்த கம்பெனி எங்களுக்கு பெரிய வாய்ப்பைக் கொடுத்தது. அந்த வாய்ப்பைச் சரியா பயன்படுத்தி, தென் இந்தியா முழுக்க கிளைகளை நிறுவினோம். மும்பையில இருந்து 8, 9 நாள்ல கொண்டு வரக்கூடிய கெமிக்கலை மூணே நாள்ல கொண்டு வரவைக்க மும்பையில கிளை ஆரம்பிச்சோம். மும்பைக் கிளையில நல்ல லாபம் கிடைச்சதனால டெல்லியிலும் புது ஆபீஸ் ஆரம்பிச்சோம்.

காலதாமத்தைக் குறைக்க..!

இப்ப இருக்கிற மாதிரி அப்பல்லாம் நினைச்ச நேரத்துல வங்கி மூலமாவோ, இன்டர்நெட் மூலமாவோ பணத்தை அனுப்ப முடியாது. பேங்கல டிடி எடுத்து அனுப்பித்தான் பொருளை வாங்கணும். இந்த டிடியை தபால்ல அனுப்பினா, குஜராத்ல இருக்கிற கம்பெனிக்கு போய் சேர்றதுக்கு நாளாகும். நாங்களே ரயில்ல கொண்டு போனாலும் செலவுதான். எனவே, ஒரு ஐடியா செஞ்சோம். டிடி எடுத்துட்டு நேரா சென்னை விமான நிலையத்துக்குப் போனோம். மும்பை போற விமானத்துல யாரையாவது பிடிச்சி, ‘இந்த டிடியை மும்பை விமான நிலையத்துல எங்க ஆள்கிட்ட தயவு  செஞ்சுக் குடுத்துடுங்க’ என்று கேட்டோம். உடனே எங்க மும்பைப் பிரதிநிதிக்கு போன் பண்ணி, ‘‘இன்னார்கிட்ட டிடியைக் குடுத்துருக்கோம். வாங்கிக்கங்க’’ன்னு போன் பண்ணிச் சொல்லிடு வோம். அவரும் அதை வாங்கிட்டு, அன்றிரவே பரோடாவுக்கு ரயில் ஏறி, மறுநாள் காலை அந்த கம்பெனியில குடுத்து, பொருளை வாங்கி அனுப்பிடுவார். இப்படி புதுமையா யோசிச்சதால எங்களால நேரத்தை மிச்சப்படுத்த முடிஞ்சது. குறைஞ்ச காலத்துல நிறைய பிசினஸும் செய்ய முடிஞ்சது. அப்ப செஞ்ச விஷயங்களை இப்ப நெனைச்சுப் பார்த்தா ஆச்சர்யமாத்தான் இருக்கு. 

‘பொன்ப்யூர் கெமிக்கல்’ பொன்னுசாமியின் வெற்றிக் கதை

புரஃபஷனலாக மாறினோம்! 

இப்படிப் போயிட்டு இருந்த தொழில்ல ஒரு சின்ன மாற்றம் கொண்டு வந்தோம். பி.இ கெமிக்கல்  மற்றும் எம்.பி.ஏ படிச்சிருந்த ஒருத்தரை அட்வைஸரா வேலைக்குச் சேர்த்தோம். அதுவரைக்கும் படிக்கலைனாலும் எங்களுக்கு தெரிஞ்சவங்க சொல்ற ஆட்களை வேலைக்குச் சேர்த்து பயிற்சி தந்து வந்தோம். ஆனா, புதுசா அட்வைஸரா சேர்ந்த எம்பிஏ அதிகாரி, ‘இனிமே கெமிக்கல் மற்றும் எம்பிஏ படிச்சவங்களை வேலைக்கு எடுங்க. தமிழ்நாட்டைச் சேர்ந்தவங்கள மட்டும் வேலைக்கு எடுக்காம, எல்லா மாநிலத்து ஆட்களையும் வேலைக்கு எடுங்க’ன்னு சொன்னார். அவர் சொன்ன ஐடியாபடி சில பேரை வேலைக்கு எடுத்தோம். அவங்க எல்லாரும் நல்லா வேலை செஞ்சாங்க. புதுப்புது ஐடியாக்கள் கொடுத்தாங்க. அது லாபகரமாகவும் எல்லா வேலைகளையும் சீக்கிரம் முடிக்கக்கூடியதாகவும் இருந்துச்சு.  நல்ல லாபம் கிடைச்சதுனால, எல்லா ஊர்லயும் இடம் வாங்கி சொந்தமா குடோன் வச்சோம். 2000-ம் ஆண்டுல  ரூ.100 கோடிக்கு டேர்ன் ஓவர் பண்ற அளவுக்கு உயர்ந்தோம்.

உயர வைத்த எக்ஸான்!

எங்களுக்கு ஒரு பெரும் ஒரு திருப்பு முனையா அமைஞ்சது, உலக முன்னணி கெமிக்கல் நிறுவனமான எக்ஸான் மொபில் (Exxon mobile) தயாரிக்கிற கம்பெனியில இருந்து எங்களுக்கு ஏஜென்ஸி கிடைச்சதுதான். அதுக்காக எம்.பி.ஏ படிச்ச இளைஞர்களை வேலைக்கு எடுத்தோம். அவங்க எல்லாரும் துறுதுறுனு வேலை பார்த்து, பிசினஸை வளர்த்தாங்க. எங்க மொத்த பிசினஸ்ல எக்ஸான் மொபில் தயாரிப்புகள் மட்டுமே 20% இருக்கிற அளவுக்கு வளர்ந்தோம்.

எங்கள் பிசினஸ் நன்றாக வளர்ந்ததற்கு முக்கிய காரணம், தரம். எந்தவொரு கட்டத்திலும் தரத்தில் எந்தக் குறையும் இருந்துவிடக்கூடாது என்பதில் நாங்க கவனமாக இருந்தோம். சுத்தமான கெமிக்கல் என்றால் அது சுத்தமாகத்தான் இருக்கவேண்டும் என்பதில் குறியாக இருந்தோம். அளவில் ஒரு கிராம்கூட குறையக்கூடாது என்பதில் கறாராக இருந்தோம். தவிர, கெமிக்கல்களைப் பயன்படுத்தும்போது பின்பற்றவேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை எங்கள் கஸ்டமர்களுக்கு கற்றுத்தந்தோம். 

2004-ல் என்னோட பசங்களும் படிப்பை முடிச்சுட்டு எனக்கு உதவியா பிசினஸ்ல சேர்ந்துக்கிட்டாங்க. பசங்க புதுப்புது தொழில் நுட்பத்தைக் கொண்டு வந்தாங்க. நாங்க கம்ப்யூட்டருக்கு மாறினோம். அது ரொம்ப ஈஸியா இருந்தது. இந்திய அளவில நல்ல முன்னேற்றம் கிடைச்ச பின்னாடி, வெளி நாட்டில் இருந்தும் தொழில் பண்ணலாம்னு துபாய்ல ஒரு கிளையை ஆரம்பிச்சோம். ஆரம்பத்தில் கொஞ்சம் நஷ்டம் வந்தாலும் அதுக்கப்புறம் நல்லா போச்சு.

ஏற்றமும், இறக்கமும்!


2008-ல் பெரிய விலைச்சரிவு ஏற்பட்டது. நாங்க அதிக காசு கொடுத்து வாங்கி வச்ச கெமிக்கல் எல்லாம் பாதிக்கு பாதியா விலை குறைஞ்சு நஷ்டமும் ஆகிடுச்சு. எங்களுக்குக் கடன் கொடுத்த சில வங்கிகள் பயந்தாங்க.  அடுத்த ஒரு வருஷத்துல அந்தப் பிரச்னை சரி ஆயிடுச்சு. ஆனா, 2012-ல் மறுபடியும் பெரிய விலைச்சரிவு வந்தது. அந்த நேரத்துல வியாபாரத்தை பெருக்காம, ஒரே மாதிரி சீரா கொண்டுபோனோம். அதனால பல சிக்கல்ல  இருந்து தப்பிச்சோம். 

இப்ப இலங்கை, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா என வெளிநாடுகளில் கிளைகள் ஆரம்பிச்சு ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு. ஒண்ணுமே தெரியாம, இங்கிலிஷ் பேசக்கூடக் கஷ்டப்பட்டுட்டு, இந்த தொழிலுக்குள் வந்தோம். இப்ப உலக அளவில் சிறந்த கெமிக்கல் கம்பெனிகளின் பட்டியல்ல 51-வது இடத்தில் இருக்கோம். 36,000 ரூபாய் முதலீட்டில் தொடங்கி, இன்றைக்கு ஆண்டுக்கு ரூ.1,800 கோடி டேர்ன் ஓவர் செய்கிறோம்.

கெமிக்கல் தொழிலில் எல்லா வேலைகளையும் நாங்களே பண்ற மாதிரி எங்களை வளர்த்துட்டு வர்றோம். எங்ககிட்ட வர்த்தகம் பண்ற கஸ்டமர்ஸ் சந்தோஷமா இருக்கணும், அவங்க லாபம் சம்பாதிக்கணும். இதைதான் ஆரம்பத்தில் இருந்து எங்களோட நோக்கமா வைத்திருக்கிறோம்” என்று மிகப் பெரிய உயரத்துக்குப் போனாலும் இன்னும் உழைக்கும் துடிப்பு குறையாமல் பேசினார், ப்யூர் கெமிக்கல் நிறுவனத்தின் நிறுவனர் பொன்னுசாமி. 

அவரது அயராத உழைப்பு இன்று அவரை சிஐஐ-யின் சென்னை மண்டலத் தலைவராக உயர்த்தி இருக்கிறது.

படங்கள் : சொ.பாலசுப்ரமணியன்

வரி கட்டினால் பிசினஸில் ஜெயிக்கலாம்!

பிசினஸ் தொடங்கிய காலத்தில் இருந்தே எந்த வகையிலும் வரி ஏய்ப்பு செய்யாமல் வருமான வரி கட்டி வருபவர் பொன் ப்யூர் பொன்னுசாமி. 1994-95-ம் ஆண்டு முதல் 1998-99 வரையிலான ஆண்டுகளில் சென்னை பிராந்தியத்தில் மிக அதிகமான வருமான வரியைக் கட்டியதற்காக ‘ராஷ்ட்ரிய சம்மான் பத்ரா’ என்கிற நற்சான்றிதழை வருமான வரித் துறையே இவருக்கு அளித்திருக்கிறது. ‘‘சரியான கணக்கைத் தாக்கல் செய்ததினால், வங்கியில் கடன் கிடைத்தது. பிசினஸில் ஜெயிக்க வேண்டும் என்றால் வரியை சரியாகக் கட்டுங்கள்’’ என்கிறார் பொன்னுசாமி!