Published:Updated:

பணமில்லா பரிவர்த்தனை... முன்மாதிரியாகத் திகழும் ஹட்சன்!

பணமில்லா பரிவர்த்தனை... முன்மாதிரியாகத் திகழும் ஹட்சன்!
பிரீமியம் ஸ்டோரி
பணமில்லா பரிவர்த்தனை... முன்மாதிரியாகத் திகழும் ஹட்சன்!

ஞா.சக்திவேல் முருகன்

பணமில்லா பரிவர்த்தனை... முன்மாதிரியாகத் திகழும் ஹட்சன்!

ஞா.சக்திவேல் முருகன்

Published:Updated:
பணமில்லா பரிவர்த்தனை... முன்மாதிரியாகத் திகழும் ஹட்சன்!
பிரீமியம் ஸ்டோரி
பணமில்லா பரிவர்த்தனை... முன்மாதிரியாகத் திகழும் ஹட்சன்!
பணமில்லா பரிவர்த்தனை... முன்மாதிரியாகத் திகழும் ஹட்சன்!

‘‘500, 1,000 ரூபாயை செல்லாமல் ஆக்கிவிட்டீர்களே, மக்கள் இனி எப்படி செலவு செய்வார்கள்..? வங்கி சலான்களைக்கூட நிரப்பத் தெரியாதவர்கள் எப்படிப் பணமில்லா பரிவர்த்தனையைச் (Caseless Transaction)  செய்வார்கள்..?’’ இப்படியெல்லாம் சிலர் உணர்ச்சி வசப்பட்டு பேசிக்கொண்டிருக்க, கிராமங்களில் இருக்கும் சாதாரண விவசாயிகள்கூட ஆன்லைன் மூலம் பணத்தைப் பெறுகிறார்கள் என்றால் ஆச்சர்யமான விஷயம்தானே! அந்த சாதனையை நிகழ்த்திக் காட்டியதுடன், இந்த விஷயத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு உதாரணமாகவும் திகழ்கிறது ஹட்சன் அக்ரோ நிறுவனம். இது எப்படி சாத்தியமானது என அந்த நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சந்திரமோகனிடம் கேட்டோம்.

“நாங்கள் தென் இந்தியாவில் பத்தாயிரம் கொள்முதல் நிலையங்களை அமைத்து  மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து பால் வாங்கி வருகிறோம். ஒரு மாதத்துக்கு ரூ.200 கோடி அளவுக்கு பால் உற்பத்தியாளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்கிறோம். ஒவ்வொரு மாதமும் ரூ.200 கோடியை மூன்று லட்சம் பேருக்குப் பிரித்து கொடுப்பது எங்களுக்கு பெரிய வேலையாக இருந்தது. இவ்வளவு பணத்தை வண்டியில் எடுத்துக்கொண்டு போக வேண்டும். இந்த வண்டி என்றைக்கு வரும், எப்போது பணம் தருவார்கள், எவ்வளவு பணம் வரும் என்றெல்லாம் யோசித்துக்கொண்டே இருப்பார்கள். கூடவே பணம் எடுத்துக்கொண்டு போகும்போது பாதுகாப்பும் அவசியமாகிறது. களவு போன்ற பிரச்னைகள் இருக்கின்றன. விவசாயிகளுக்கு உடனுக்குடன் பணம் கிடைக்காததால், அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்படுகிறது.  

இதனை எல்லாம் மாற்றுவோமே என்கிற அடிப்படையில்தான் வங்கிச் சேவையினை, நாங்கள் பால் கொள்முதல் செய்யும் அனைத்து விவசாயிகளிடமும் அறிமுகப்படுத்தினோம்.  பத்து நாளைக்கு ஒருமுறை, பாலுக்கான பணத்தை அவர்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைப்பதாகச் சொன்னோம். முதலில் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். எங்களுக்கு வங்கிக்குச் செல்லும் பழக்கம் இல்லை என்றார்கள். பணத்தை நேரடியாகத் தந்தால்தான் பால் விற்போம் என்றார்கள். நாங்கள் அவர் களுக்குப் புரிகிற மாதிரி எடுத்துச் சொல்லி வங்கிச் சேவையினை அறிமுகப்படுத்தினோம். கடந்த ஒன்றரை வருடமாக வங்கி மூலமாகவே நாங்கள் விவசாயிகளுக்கான பணத்தைத் தந்து வருகிறோம். இந்திய விவசாயத் துறையில் இந்த சேவையினை நாங்கள்தான் முதல்முறையாக அறிமுகப்படுத்தினோம்.

பணமில்லா பரிவர்த்தனை... முன்மாதிரியாகத் திகழும் ஹட்சன்!

பால் ஊற்றுபவர்களுக்கு, அன்றைக்கு எவ்வளவு பால் ஊற்றி இருக்கிறார்கள், எவ்வளவு விலை, மொத்தத் தொகை எவ்வளவு என்ற விவரங்கள் பாலை ஊற்றியவுடன் அவர்களின் மொபைல் போனுக்கு எஸ்எம்எஸ்-ஆக சென்று விடும். பத்து நாட்களுக்கு அவர்கள் கணக்கில் எவ்வளவு தொகை சேர்ந்திருக்கிறது என்கிற விவரங்களை எஸ்எம்எஸ் அனுப்பி, அந்தத் தொகையை யும் அவர்களின் வங்கிக் கணக்கில் ஆன்லைன் மூலமாக அனுப்பிவிடுகிறோம். 

பணத்தை நேரடியாக கையில் கொடுப்பதற்குப் பதிலாக, வங்கி மூலம் தரத் தொடங்கியபின்பு நல்ல பலனை அனுபவித்து வருகிறார்கள் பால் விவசாயிகள். விவசாயத்தை மேம்படுத்தவும், பால் மாடு வாங்கவும், பசங்களைப் படிக்க வைக்கவும், இதர தேவைகளுக்கும் எளிதில் வங்கிக்குச் சென்று லோன் வாங்க முடிகிறது. மேலும், பால் பணம் வங்கிக் கணக்கில் இருக்கும்போது வட்டியும் கிடைக்கிறது. இப்போது நாங்களே பழைய மாதிரி பத்து நாளைக்கு பணம் தருகிறோம் என்று சொன்னாலும்கூட அவர்கள் மாற மாட்டார்கள். அந்த அளவுக்கு வங்கிச் சேவையுடன் இணைந்து

பணமில்லா பரிவர்த்தனை... முன்மாதிரியாகத் திகழும் ஹட்சன்!

விட்டார்கள்.

இப்படிச் செய்ததன் மூலம் விவசாயிகளை  தண்டல்காரர்களிடமிருந்து மீட்டிருக்கிறோம்.  இடைத் தரகர்களிடமிருந்து வெளியே எடுத்து வந்திருக்கிறோம். இதனால் எங்களுடைய பணிச் சுமையும் குறைந்திருக்கிறது. இதுதான் எங்கள் வெற்றியாகக் கருதுகிறோம்” என்றார்.

வங்கி மூலம் பணம் பெறுவது குறித்து பால் விவசாயிகள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள கோவை குமாரபாளையத்தைச் சேர்ந்த பொன்னுசாமியைச் சந்தித்தோம்.

“நாங்கள்  பரம்பரையாக விவசாயம்தான் செய்து வருகிறோம். பத்து மாடு வைத்திருக்கிறேன். ஆரம்பத்தில் வேறு சொசைட்டியில் பால் ஊற்றி வந்தோம்.  கடந்த எட்டு வருடங்களாக ஹட்சனுக்கு பால் ஊற்றி வருகிறோம். கடந்த ஒன்றரை  வருடமாக வங்கியில் பணத்தைப் போட்டு விடுகிறார்கள்.

ஆரம்பத்தில் கஷ்டமாகத்தான் இருந்தது. எப்படி வங்கிக்குப் போய் பணம் எடுப்பது என நானே பிரச்னை செய்தேன். எட்டு வருடங்களாக பால் ஊற்றி எதுவும் மிஞ்சவில்லை. முன்பெல்லாம்  இரண்டு வட்டி, மூன்று வட்டி என்று வட்டிக்கு பணம் வாங்கித்தான் மாடே வாங்குவோம். பின்பு பால் ஊற்றி வட்டி கட்டினோம். கையில் காசு கிடைத்தால் உடனுக்குடன் செலவானதால்  எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தோம்.  இப்போது வங்கிச் சேவையினைப் பயன்படுத்திய பின் இந்த நடைமுறை எங்களுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. வங்கி மூலம் பணம் கிடைக்கத் தொடங்கிய பிறகு ஏதாவது அத்தியாவசியத் தேவை இருந்தால் மட்டுமே நாங்கள் பணம் எடுக்கிறோம்.  விவசாயத்தில் வரும் பணத்தை செலவுக்குப் பயன்படுத்துவோம். செலவு எதுவும் இல்லை எனில், அப்படியே சேமிப்போம்.

பத்து நாளைக்கு ஒரு முறை பத்தாயிரம் ரூபாய் கிடைக்கிறது. பத்து தடவை பணத்தை எடுக்காமல் வைத்திருந்தால், ஒரு லட்சம் ரூபாய் சேர்ந்துவிடும்.  அதனை எடுத்து இதர விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்தி வருகிறேன். நாங்கள் விற்ற பாலுக்கான பணம் வங்கி வழியாக வருவதால், ‘உங்களுக்கு ஏதாவது லோன் வேண்டுமா’ என்று வங்கி அதிகாரிகளே கேட்கிறார்கள். வங்கியில் குறைந்த வட்டியில் கடன் கிடைப்பதால், பெரிய அளவில் கஷ்டம் குறைந்திருக்கிறது. 

பணமில்லா பரிவர்த்தனை... முன்மாதிரியாகத் திகழும் ஹட்சன்!

இப்போது 500, 1,000 நோட்டு செல்லாது என்று அறிவித்திருக்கிறார்கள். எங்கள் பணம்  சேமிப்புக் கணக்கில் இருப்பதால், எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. சென்னையில் பணம் போட்டால், அடுத்த ஒன்றிரண்டு நிமிடங் களிலேயே எங்கள் வங்கிக் கணக்கில் ஏறிவிடுகிறது. ஊரில் உள்ள இதர பால் சேகரிப்பாளர்கள் பணமாகத்தான் தருகிறார்கள். அவர்களுக்கு பால் ஊற்றியவர்கள் இப்போது பணத்தை மாற்ற முடியாமல் சிரமப்படுகிறார்கள்’’ என்றார்.

இன்னொரு பால் விவசாயி சண்முக சுந்தரத்துடன் பேசினோம். “கடந்த எட்டு வருடங்களாக பால் ஊற்றி வருகிறேன். ஐந்து மாடுகளை வைத்திருக்கேன். பணம் வங்கியில் இருப்பதால், தேவைப்பட்டபோது எடுக்கலாம். இல்லையென்றால் அப்படியே சேமிப்பில் இருக்கும். அதற்கு வட்டியும் கிடைக்கிறது. பாலை ஊற்றிய இரண்டாவது நிமிடத்திலேயே எங்களுக்கு எஸ்எம்எஸ் வந்துவிடுகிறது. நாங்கள் வங்கிக்கு சென்றவுடன் பணம் வழங்குகிறார்கள். மற்ற சொசைட்டிகளில் அவர்கள் பணம் கொடுக்கும் வரை காத்திருக்க வேண்டும். அதுவும் குறிப்பிட்ட நாளில் பணம் வராது. கறவை மாடு வாங்கக் கடனும் கிடைப்பதால், நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம்’’ என்றார்.

இந்த விஷயத்தின் முன்மாதிரியாக விளங்கும் ஹட்சனை எல்லா நிறுவனங்களும் பின்பற்றலாமே!

படங்கள்: தி.விஜய், ஹரிஹரன்.