Published:Updated:

நொடித்த பஸ் பாடி பிசினஸ்... - நிமிரவைத்த எல்.இ.டி லைட்!

நொடித்த பஸ் பாடி பிசினஸ்... - நிமிரவைத்த எல்.இ.டி லைட்!
பிரீமியம் ஸ்டோரி
நொடித்த பஸ் பாடி பிசினஸ்... - நிமிரவைத்த எல்.இ.டி லைட்!

இதுவும் கடந்துபோகும்..! - புதிய பகுதிதுரை. வேம்பையன்

நொடித்த பஸ் பாடி பிசினஸ்... - நிமிரவைத்த எல்.இ.டி லைட்!

இதுவும் கடந்துபோகும்..! - புதிய பகுதிதுரை. வேம்பையன்

Published:Updated:
நொடித்த பஸ் பாடி பிசினஸ்... - நிமிரவைத்த எல்.இ.டி லைட்!
பிரீமியம் ஸ்டோரி
நொடித்த பஸ் பாடி பிசினஸ்... - நிமிரவைத்த எல்.இ.டி லைட்!

கொஞ்சம் கவனமாக செய்யவில்லை என்றால் தொழில் நடத்துவதும் பரமபத விளையாட்டு போன்றதுதான். சிலரை சட்டென்று மேலே ஏற்றிவிடும். பலரை அதளபாதாளத்தில் தள்ளிவிடும். கரூர் டி.செல்லாண்டி பாளையத்தைச் சேர்ந்த பன்னீருக்கோ, பஸ் பாடி கட்டுவதற்கான உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழில் ஆரம்பத்தில் நல்ல லாபத்தைத் தந்து தூக்கிவிட்டது, பின்பு  சடாரென்று கீழே தள்ளியது. சுதாரித்துக் கொண்ட அவர், இப்போது எல்.இ.டி லைட்டுகள் தயாரிக்கும் தொழிலில் இறங்கி, முன்பு தொலைத்த செல்வத்தை மறுபடியும் சேர்க்கத் தொடங்கும் அளவுக்கு மீண்டு(ம்) வந்திருக்கிறார்.

நொடித்த பஸ் பாடி பிசினஸ்... - நிமிரவைத்த எல்.இ.டி லைட்!


கரூர் டி.செல்லாண்டிபாளையத்தில் உள்ள அவரது சிறிய தொழிற்சாலையில் அவரைச் சந்தித்தோம். தனது தொழில் வாழ்க்கையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள் போலவே, தனது வார்த்தைகளையும் ஏற்ற இறக்கமாகப் பேசுகிறார்.

“எனக்கு சொந்த ஊரு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர்.  படிப்பு முடிச்ச நான், 1988-ம் ஆண்டு கரூரில் உள்ள எல்.ஜி.பாலகிருஷ்ணன் அண்ட் பிரதர்ஸ் கம்பெனியில் ஆராய்ச்சிப் பிரிவுல வேலைக்குச் சேர்ந்தேன். அங்க நல்ல சம்பளத்துல வேலை பார்த்தாலும், மனசுக்குள்ள சொந்தமா தொழில் தொடங்கணும்ங்கிற எண்ணம் அரிச்சுக்கிட்டே இருந்துச்சு. அதனால  ஊர்ல உள்ள நிலபுலத்தை வித்தும், என் சேமிப்பைப் போட்டும் அஞ்சு லட்சம் முதலீட்டுல, 1996-ம் வருஷம் பஸ் பாடி கட்டும் கம்பெனிகளுக்கு உதிரிப்பாகங்கள் தயாரித்துக் கொடுக்கும் தொழிற்சாலையைத் தொடங்கினேன். 15 ஊழியர்களை வைத்து வேலை வாங்கும் அளவுக்கு வளர்ந்தேன். கரூர், புதுக்கோட்டை, திருச்சி நகரங்களில் உள்ள பிரபல தனியார் பஸ் பாடி கட்டும் நிறுவனங்கள் எனக்குத் தங்கு தடை இல்லாமல் ஆர்டர் தரும் அளவுக்கு கம்பெனி நல்லா டெவலப் ஆச்சு. அந்த வருமானத்துல, பிளாட்டுகள், நகைகள்னு வாங்கிப் போட்டேன். ஊழியர்களையும் நல்லபடியா வச்சுச்கிட்டேன்.
   
இந்த நிலையில, 2010-ம் வருடம் தொழிலை விருத்தி பண்றதுக்காக, பேங்க்ல 20 லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன். தொழிலை வளர்த்தெடுக்கும் முயற்சியில் இறங்கினப்ப, 2011-ம் வருடம் மெள்ள தொழிலுக்கு ஆபத்து வர ஆரம்பிச்சுச்சு. ஆட்கள் பற்றாக்குறை, மின்சார பற்றாக்குறைன்னு தொழிலுக்கு வேட்டு வைக்கும் பூதங்கள் ஒவ்வொண்ணா கிளம்புச்சு.

நொடித்த பஸ் பாடி பிசினஸ்... - நிமிரவைத்த எல்.இ.டி லைட்!

மின்சாரப் பற்றாக்குறையை சரிபண்ண 1.5 லட்சம் ரூபாய்ல ஜெனரேட்டர் வாங்கிப் போட்டேன். அதுக்குள்ள கரூர்ல பஸ் பாடி கட்டும் தொழிலும் நசிஞ்சுபோக ஆரம்பிக்க, எனக்கு ரெகுலரா வந்துக்கிட்டு இருந்த ஆர்டர் குறைஞ்சு, கடைசியில ஒரு ஆர்டர்கூட இல்லாம போயிடுச்சு. இதனால் டெவலப்மென்ட்டுக்காக லோன் பணத்தை தாம்தூம்னு செலவு பண்ணியதில், முதலுக்கே மோசம் வந்துடுச்சு. வங்கிக் கடன் தவணையையும் திரும்பக் கட்ட முடியலை.
   
பேங்கில் இருந்து நோட்டீஸ் வந்துச்சு. வட்டியையாவது கட்டலாம்னா, அதுக்கும் தோது படல. என் மனைவி மகாலட்சுமியும், ரெண்டு பெண் பிள்ளைகளும் அதுவரை வசதியா வாழ்ந்தாங்க. என் கடன் சுமை, தொழில் நசிவு அவர்களையும் பாதிக்க, ஒட்டுமொத்தக் குடும்பமுமே அல்லாட்டத்தில் நின்னோம். அடுத்து என்ன பண்றது, கழுத்தை நெரிக்கும் கடனை எப்படி அடைக்கிறது, எதிர்காலம் என்னன்னு ஒண்ணும் தெரியாம திகைச்சு நின்னோம்.

‘முதல்ல கடனை ஒழுங்கா அடைப்போம், பிற்பாடு ஏதாச்சும் தொழில் பண்ணலாம்னு முடிவு பண்ணி, என் பொண்ணுங்க கல்யாணத்துக்காக வாங்கிச் வெச்சிருந்த பிளாட்டுகள், நகைகள்ன்னு சகலத்தையும் வித்து பேங்க் கடனை அடைச்சேன். ஆனா, அடுத்த வேலை சோறுக்கு என்ன பண்றதுன்னு தெரியலை. இப்படியே மூணு வருஷம் ஓடுச்சு. அப்புறம் உட்கார்ந்து ஆர அமர யோசிச்சேன். மறுபடியும், அதே பேங்குல போய் வேறு தொழில் தொடங்க கடன் கேட்டேன். முதல்ல யோசித்தாலும், கடைசியில்  10 ரூபாய் லட்சம் தர்றதா சொன்னாங்க. அதை வச்சு என்ன தொழில் தொடங்குறதுன்னு தெரியாம குழம்பிப் போனேன். இருந்தாலும், நமக்கு தெரிஞ்ச தொழிலையே வேறு வடிவத்துல பண்ணுவோம்னு முடிவு செஞ்சேன். 2014-ம் வருடம் எல்.இ.டி.-ல யாரும் பண்ணாத புது தொழில்நுட்பத்தை எனக்கிருந்த அறிவைக் கொண்டு ஆராய்ந்து புகுத்தி, புதுமையா எல்.இ.டி சம்மந்தமான பொருட்களை செய்ற தொழிலைத் தொடங்கினேன்.

எல்.இ.டி என்பது ஃபாரின் சமாச்சாரம் என்றாலும், அதில் பலதை அங்கேயே செய்யாத புதுமுறையில் நான் வடிவமைச்சேன். எல்.இ.டி முகம் பார்க்கும் கண்ணாடிகள், எல்.இ..டி சாமிப் படங்கள், எல்.இ.டி கடிகாரங்கள்னு புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கினேன்.

நொடித்த பஸ் பாடி பிசினஸ்... - நிமிரவைத்த எல்.இ.டி லைட்!பொதுவா, அதில் ஓடும் எல்.இ.டி அலங்கார லைட்டுகள் ஃபாரின்காரன் கண்டுபிடிச்சதில், அதிகப்பட்சமா 25 விதமான ரொட்டேஷன்தான் இருக்கும். ஆனா, 250 விதமா ரொட்டேஷன் ஆகிற லைட் சுழற்சியை எல்.இ.டியில் உருவாக்கி இருக்கேன்.

ரெண்டு வருஷத்துல இந்தத் தொழில் பிக்கப் ஆகி, நான் நஷ்டப்பட்ட பணத்தைவிட  இரண்டு மடங்கு அதிகமா சம்பாதிச்சுருக்கேன்.  நான் கொஞ்சம் சுணங்கி இருந்தேனா, என் குடும்பமே இன்னைக்கு இல்லாம போயிருக்கும். ஒரு தொழிலில் பட்ட அடிகளை முயற்சிப் படிகளாக்கி, வேறு தொழிலுக்கு மாறி, மெல்ல மெல்ல பழைய நிலைக்கு மீண்டு வந்துகிட்டு இருக்கேன்.
   
வால் கிளாக் விற்பனையில் தென்னிந்திய அளவில் பிரபலமான டீலர் என்னை அணுகி, தனக்கு எல்.இ.டி வால்கிளாக்குகள் மொத்தமா உற்பத்தி பண்ணி தரச் சொல்லி இருக்கார். கரூர் டவுனுல முக்கிய இடத்துல என் தயாரிப்புகளை விற்க பெரிய ஷோரூம் திறக்கும் முயற்சி தனியா நடந்துக்கிட்டு இருக்கு. இந்தத் தொழில் புதுசு. இதுல வேற ஆட்கள் கால் எடுத்து வைக்குறதுக்குள்ள, எங்க கம்பெனி இந்திய அளவுல நம்பர் ஒன் கம்பெனியா மாறி இருக்கும்.  ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை பார்க்கும் கம்பெனியாகவும் இது மாறி இருக்கும். அந்த இலக்கை நோக்கித்தான் ஓடிக்கிட்டு இருக்கேன்” என்று நம்பிக்கை டாலடிக்கும் வார்த்தைகளில் முடித்தார்.
   
தொழில் பரமபத விளையாட்டில் முன்னேறும் வித்தையில் பன்னீர் பிரமாதமாக தேறிவிட்டார். இனி நல்லதே நடக்கட்டும்!

நம்பிக்கை டிப்ஸ்

1. சொந்தமா தொழில் தொடங்கி, அதில் சறுக்குனா மனசை மட்டும் சறுக்கவிட்டுடாதீங்க. ஆன்மபலதோடு போராடுங்க.
 
2. எங்கே தவறு நடந்தது, நாம் செய்த பிசகுகள் என்னன்னு உட்கார்ந்து யோசிங்க. இந்த முறை அந்த குறைகளை களைந்துவிட்டு, நூறு சதவிகிதம் நம்பிக்கையோடு தொழிலில் மறுகால் வையுங்க.

3. விடாமுயற்சியும், தன்னம் பிக்கையும் இருந்தால்தான் பீனிக்ஸ் பறவை மாதிரி உங்களால எழுந்து வரமுடியும்.