Published:Updated:

மணி மேனேஜ்மென்ட்! - 1

மணி மேனேஜ்மென்ட்! - 1
பிரீமியம் ஸ்டோரி
மணி மேனேஜ்மென்ட்! - 1

உங்கள் பணம் உங்களுக்காக உழைக்கட்டும்சி.சரவணன்

மணி மேனேஜ்மென்ட்! - 1

உங்கள் பணம் உங்களுக்காக உழைக்கட்டும்சி.சரவணன்

Published:Updated:
மணி மேனேஜ்மென்ட்! - 1
பிரீமியம் ஸ்டோரி
மணி மேனேஜ்மென்ட்! - 1
மணி மேனேஜ்மென்ட்! - 1

யிரம் வரிகளில் சொல்ல நினைக்கும் விஷயத்தை அரை நிமிடத்தில் நமக்குப் புரிய வைத்துவிடுபவைதான் விளம்பரங்கள். அப்படியொரு அருமையான விளம்பரத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டது பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம். (வீடியோவைப் பார்க்க விரும்புகிறவர்கள் https://youtu.be/CbM1JF4NkOw என்ற லிங்க்கை சொடுக்கவும்)

அந்த விளம்பரத்தில், பிசினஸ்மேன் ஒருவர் தன்னுடைய அலுவலகத்தில் இருந்து குறட்டைச் சத்தம் வருவதைக் கேட்பார். அலுவலகத்தில் யாரும் தூங்காதபோது எப்படி அந்த குறட்டைச் சத்தம் வருகிறது என்று தேடித் தேடிப் பார்ப்பார். கடைசியில், அந்த குறட்டைச் சத்தம் இரும்புப் பெட்டியில் இருந்து வருவதைக் கண்டுபிடித்து, அதன் கதவைத் திறக்க, இரும்புப் பெட்டிக்குள் கட்டுக் கட்டாக பணம் தூங்கிக் கொண்டிருக்கும். தூங்கும் அந்தப் பணத்தைத் தொட்டவுடன்  குறட்டைச் சத்தம் அடங்கிவிடும். ‘பயன்படுத்தப் படாமல் பீரோவுக்குள் தூங்கும் பணத்தினால் எந்தப் பயனும் இல்லை. எனவே, அந்தப் பணத்தை எடுத்து பயன்படுத்துங்கள்’ என்கிற கருத்தைச் சொல்லவே இந்த விளம்பரம்.

நம் வீடுகளில்கூட இது மாதிரியான குறட்டைச் சத்தம் வருவதை கடந்த மாதங்களில் நீங்கள் கேட்டிருக்கலாம். ஆனால், மத்திய அரசாங்கம் இப்போது 500, 1,000 ரூபாய்களின் மதிப்பை செல்லாமல் ஆக்கி இருப்பதினால், குறட்டைப்   போட்டுத் தூங்கிய பணமெல்லாம் இப்போது தன் தூக்கத்தைக் கலைத்து வெளியே வந்திருக்கிறது. எதிர்காலத்திலும் நாம் மீண்டும் இதே மாதிரிதான் செய்யப் போகிறோமா?

நிச்சயம் கூடாது என்பதைச் சொல்லவே இந்தத் தொடர். பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பீரோவில் பூட்டி வைப்பதைவிட, அதை எப்படி புத்திசாலித்தனமாக நிர்வாகம் செய்யலாம் என்பதைச் சொல்லவே இந்தத் தொடர்.

பணத்தை எப்படி நிர்வாகம் செய்வது என்று நமக்கு சரியாகத் தெரியாததால்தான், அதைக் கண்டபடி செலவு செய்கிறோம். பாதுகாப்பு என்று நினைத்து எஃப்.டி.யில் அடைத்து வைக்கிறோம். டபுள் ஆகும், ட்ரிபிள் ஆகும் என்று நம்பி,  மோசடித் திட்டங்களில் போட்டு, மோசம் போகிறோம். பங்குச் சந்தையின் அடிப்படைகளை புரிந்துகொள்ளாமல், அதில் பணத்தைப் போட்டு விட்டு, பிற்பாடு அது ஒரு சூதாட்டம் என்று புலம்பு கிறோம். தவறை நம்மிடம் வைத்துக்கொண்டு, பிறரைப் பழி சொல்லி என்ன பிரயோஜனம்?

திருநெல்வேலியை சேர்ந்தவர் இசக்கிமுத்து. நண்பரின் ஆலோசனையின் பேரில், பங்கு ஒன்றில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தார். அவர் முதலீடு செய்த நேரம், சர்வதேச சூழ்நிலை காரணமாக சந்தை இறங்கியது. அவர் முதலீடு செய்த தொகையும் குறைந்தது. ‘அய்யய்யோ, பணம் போச்சே!’ என்று பதறிப் போய் அத்தனை பங்கு களையும் விற்றார். சில மாதங்களில் சந்தை உயர்ந்து, அவர் முதலீடு செய்ததைவிட 20% லாபம் கிடைத்தது. பங்கு முதலீடு நீண்ட காலத்துக்கானது. குறுகிய காலத்தில் அதில் அதிக ஏற்ற இறக்கம் இருக்கும் என்பதை அவர்  அறியாத தால் வந்த நஷ்டம்தானே இது?

வேலைக்குச் சேர்ந்த புதிதில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்பினார் சுமதி. தன் உயர் அதிகாரி ஜெனிபர் முதலீடு செய்திருந்த ஃபண்ட் ஒன்றில் முதலீடு செய்தார். ஓராண்டு கழித்து அவசரத் தேவைக்கு அந்த ஃபண்ட்  யூனிட்களை விற்கப் போனால், ‘மூன்று ஆண்டுகள் விற்க முடியாது’ என்றார்கள். அது வருமான வரிச் சலுகை அளிக்கும் ஃபண்ட் என்பது அப்போதுதான் சுமதிக்கு புரிந்தது. அவரின் உயர் அதிகாரிக்கு வருமானம் அதிகம். அவர் வரிச்சலுகை பெற அந்த ஃபண்டில் முதலீடு செய்திருந்தார். ஆனால், சுமதிக்கு சம்பளம் குறைவு. அவர் அந்த ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மதுரையைச் சேர்ந்த முத்துபாண்டி இன்ஷூரன்ஸ் பாலிசி ஒன்றை எடுத்தார். பாலிசி எடுத்து, ஐந்தாறு ஆண்டுகள் கழித்து, திடீரென அவர் இறந்ததால், 5 லட்ச ரூபாய் அவர் குடும்பத்துக்கு இழப்பீடாகக் கிடைத்தது. அதை வங்கி எஃப்.டி.யில் போட்டு, அதன் மூலம் வட்டியாகக் கிடைத்த ரூ.5 ஆயிரத்தை வைத்து, முத்துபாண்டியின் மனைவி வீட்டு வாடகை தருவாரா,  குழந்தைகளைப் படிக்க வைப்பாரா?

நம்மில் பலர் கஷ்டப்பட்டு உழைத்தும் போதிய பலனை அனுபவிக்க முடியாமல் போகக் காரணம், பணத்தை எப்படி நிர்வாகம் செய்வது என்பது நமக்குத் தெரியாமல் போனதே. அதனால்தான் நாம் ஏழைகளாகவே இருக்கிறோம். பணத்தை நாம் சரியாக நிர்வாகம் செய்யத் தெரிந்துகொண்டு விட்டால், நம் வளர்ச்சிக்காக நாம் மட்டும் உழைக்கத் தேவையில்லை; நம் பணமும் நம் வளர்ச்சிக்காக உழைக்கும். நம் பணத்தை நமக்காக எப்படி உழைக்க வைப்பது என்பதற்கான சூட்சமங்களை இனி பார்ப்போம்.

(பணம் பெருகும்)