
சுந்தர், சாஃப்ட்வேர் கம்பெனி ஒன்றில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்து வந்தார். அவருடைய மனைவி அரசு வேலையில் இருக்கிறார். சுந்தரின் நிறுவனம் கணிசமான அளவுக்கு ‘ஈசாப்’ பங்குகளை அவருக்குத் தந்திருந்தது. சுந்தருக்கும் அவர் மனைவிக்கும் சென்னை மயிலாப்பூரில் பிரமாண்டமான வீடு வாங்க வேண்டும் என்பது வாழ்நாள் கனவு. 2007-ம் ஆண்டு வீடு வாங்க அவர்கள் முடிவெடுத்தபோது, தாங்கள் மிகப் பெரிய சுழலில் சிக்கப் போகிறோம் என்பதை அறிந்திருக்கவில்லை.
75 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டை வீட்டுக் கடன் மூலம் வாங்கினார் சுந்தர். அந்த சமயத்தில், அவருக்கான ‘ஈசாப்’ பங்குகள் நல்ல லாபத்தில்தான் இருந்தன. ஆனாலும், அவை இன்னும் ஏறட்டும் என நினைத்து, கடன் வாங்கி வீடு வாங்கினார். அவருக்கு கெட்ட நேரம் ஆரம்பமானது. திடீரென அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தை இன்னொரு பெரிய நிறுவனம் வாங்கி, தனது நிறுவனத்துடன் இணைத்துக் கொண்டது. 2008-ல் பங்குச் சந்தையில் புயல் வீசத் தொடங்கிய தருணம் அது. பல நிறுவனப் பங்குகள் அதலபாதாளத்துக்குப் போனது. சுந்தரின் ‘ஈசாப்’ பங்குகளும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டன. மனம் ஒடிந்துபோன சுந்தருக்கு அடுத்த அடியும் விழுந்தது.
புதிய நிர்வாகம் பலரையும் பணி நீக்கம் செய்ய ஆரம்பித்தது. அப்படித் தூக்கி வீசப்பட்ட பலரில் சுந்தரும் ஒருவர். அவர் வேலை போனது. வீட்டுக் கடனைக் கட்டவே வருமானம் இல்லாமல் பரிதவித்துப் போனார். ஆடம்பரமாக வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்ட சுந்தரின் குடும்பம், வருமானம் இல்லாமல் நிலைகுலைந்து போனது. தொடர் முயற்சிக்குப் பிறகு மிகச் சுமாரான கம்பெனி ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார். அப்போதுதான் அடுத்த சிக்கலில் சிக்கினார்.
அவருக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் பிளஸ் டு முடித்திருந்தான். அவனை ஐஐடி-யில் படிக்க வைக்க ஆசைப்பட்டார். பையன் மிகக் குறைந்த மதிப்பெண்களே வாங்கி இருந்தான். வேறு வழியில்லாமல் மேனேஜ்மென்ட் கோட்டாவில் இன்ஜினீயரிங் சேர்க்க வேண்டிய நிலை. அதற்காக மீண்டும் பெரிய தொகையைக் கடன் வாங்கினார்.
நிலைமை இன்னும் மோசமாகவே, மயிலாப்பூர் வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு, புறநகர் பகுதியில் சிறிய வாடகை வீட்டுக்கு குடும்பம் மாறியது. வாடகை வருமானம் இஎம்ஐ கட்டவே போதவில்லை. இந்த நிலையில்தான் 2012-ல் பையனை அமெரிக்காவுக்குப் படிக்க அனுப்ப முயற்சி செய்தார். வெளிநாட்டுக்கு பையனை அனுப்புவதைக் கெளரவமாக நினைத்தார். ஆனால், அவரது அமெரிக்கக் கனவு கைகூடவில்லை. யூ.கே-வுக்கு அனுப்பினார். அதற்காக ரூ.25 லட்சம் கல்விக் கடன் வாங்கினார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
படிப்பை முடித்ததும் யூகே-வில் பையனுக்கு சரியான வேலை அமைய வில்லை. இந்தியாவுக்கு வந்து விட்டான். ஆனால், யூகே படிப்புக்கான வேலை இங்கேயும் அமையவில்லை. வேறு வழியில்லாமல் சாதாரண சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தான். அவன் சம்பளம், அவனுக்காக வாங்கிய கடனை செலுத்தவே சரியாக இருந்தது. இந்தச் சூறாவளியில் இரண்டாவது மகனின் படிப்பைக் கவனிக்காமல் விட்டுவிடவே, அவன் சுமாராகப் படித்து சொற்ப சம்பளத்தில் வேலைக்குப் போக வேண்டிய நிலை.
2016-ல் குடும்பம் மிக மோசமான பொருளாதாரத்துக்குத் தள்ளப்பட்டது. கடன் கழுத்தை நெரித்தது. வேறு வழி தெரியாமல் என்னைச் சந்தித்தார். எல்லா வழிகளும் அடைத்துக்கொண்ட பிறகு, அவரை தப்பிக்க வைக்க உடனடியாக மயிலாப்பூர் வீட்டை விற்று கடனை அடைக்கச் சொன்னேன்.
கனவு வீட்டை விற்கத் தயங்கினார். கடன் சுமையிலிருந்து தப்ப வேறு எந்த வழியும் இல்லை என்பதை அவருக்கு கஷ்டப்பட்டுத்தான் புரிய வைத்தேன். வீட்டை விற்று மொத்தக் கடனையும் அடைத்த பிறகு, பாதி நிம்மதி அவருக்குத் திரும்பி வந்தது. அவருக்கு இப்போது 55 வயது . ஓய்வுக்காலத்துக்கு முறையாக சேர்த்து வைக்கவில்லை.அவர் மனைவிக்கு பென்ஷன் கிடைக்கும் என்பது மட்டுமே சின்ன ஆறுதல்.
சுந்தர் என்ன தவறு செய்தார்..?
நல்ல வருமானம் வரும்போது, குழந்தைகளின் கல்வி, திருமணம், ஓய்வுக்காலம் என முக்கிய இலக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து முதலீட்டை தொடங்காமல் ஆடம்பரமாக இருந்ததே அடிப்படையாக அவர் செய்த தவறு. அடுத்து, கடனைத் திரும்பக் கட்டும் தகுதிக்கு மீறிய பெரிய வீட்டை வாங்கியது.
அடுத்து, கையில் பெரிய மதிப்பில் ‘ஈசாப்’ பங்குகள் இருந்தும் முழுத் தொகையையும் கடன் வாங்கியது. லாக்-இன் பிரீயட் முடிந்த நிலையில், பங்குகளை நல்ல லாபத்தில் விற்கும் சூழல் இருந்தும், பாதியளவு பங்குகளைக் கூட விற்றுப் பயன்படுத்தாமல் இன்னும் வளரட்டும் என ஆசைப்பட்டது தவறு.
பல முதலீட்டாளர்கள் பங்கு விலை உயரட்டும் என நினைக்கிறார்களே தவிர, முதலீடு செய்துள்ள நிறுவனத்தின் அடிப்படை விஷயங்களை கவனிப்பதில்லை.
எப்போதுமே ஒரே நிறுவனத்தில் வேலை மற்றும் பங்குகள் என்பது டபுள் ரிஸ்க். நிறுவனம் ஏதாவது சிக்கலில் சிக்கும்போது இரண்டும் போய்விடும். எனவே, லாக்-இன் பிரீயட் முடிந்ததும் பங்குகளை டைவர்சிஃபைடு செய்து கொள்வதே பாதுகாப்பானது. அதை சுந்தர் செய்யாமல்விட்டது தவறு.
அடுத்து, சிக்கலான சூழலில் கெளரவத்துக்காக கடன் வாங்கி பையனை வெளிநாட்டுக்குப் படிக்க அனுப்பியது தவறு. இதுபோன்ற சூழல்களில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் அதற்கான முன்னேற்பாடுகளை செய்துகொள்ள பலரும் தவறிவிடுகிறார்கள்.
இனிஅவருக்கு சொல்ல வேண்டியது பெரிதாக எதுவுமில்லை. மகன்களின் எதிர்காலத்துக்காகவாவது இனி சரியாகத் திட்டமிட வேண்டும். தனித்தனி இலக்குகளுக்கு தனித்தனி முதலீடுகளைச் செய்ய பையன்களை பழக்க வேண்டியதே அவர் செய்ய வேண்டியது. அடுத்து, சூழ்நிலை கைகூடும்போது இரண்டாவது பையனுக்கு பொருளாதார ரீதியாக சப்போர்ட் பண்ண வேண்டிய பொறுப்பும் சுந்தருக்கு இருக்கிறது.
சுந்தரின் தவறான முடிவுகள் நம் எல்லோருக்கும் நல்ல பாடம்!
(கற்போம்)