
மு.சா.கெளதமன்

கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையைக் கண்டு மிகவும் பயந்து போயிருப்பவர்கள் யார் எனில், சிறு வியாபாரிகள்தான். இனி எல்லா விற்பனைகளையும் வரவு, செலவுக் கணக்கில் கொண்டுவந்தால், வருமான வரி கட்ட வேண்டியிருக்குமோ, கணக்குவழக்குகளை எழுத தனியாக நியமிக்கும் நபருக்கு சம்பளம், கம்ப்யூட்டர் வாங்க முதலீடு செய்வது என, கிடைக்கும் லாபம் குறையுமோ என பல்வேறு கேள்விகள் சிறு வியாபாரிகளிடம் எழுந்து அவர்களைக் குழப்புகிறது. அவர்களுக்குத் தெளிவான பதிலைத் தந்தார் சென்னையைச் சேர்ந்த முன்னணி ஆடிட்டர் எஸ்.சதீஷ்குமார்.

“முதலில், அரசுக்குக் கட்ட வேண்டிய வரியை இனி சரியாகக் கட்டிவிடுவது என்கிற முடிவினை எடுத்தாலே போதும், மற்ற விஷயங்களை எல்லாம் எளிதாக செய்துவிட முடியும்.
நாம் யார்?
வருமான வரித் துறையைப் பொறுத்தவரை, நாம் எந்த வகை நிறுவனத்தை நடத்தி வருகிறோம் என்பதையே முதலில் பார்ப்பார்கள். தனி நபர் (Sole propreitor), கூட்டாண்மை நிறுவனம் (Partnership firm), தனியார் நிறுவனம் (Private Limited Company), பொதுத்துறை நிறுவனம் (Public limited Company), இந்துக் கூட்டுக் குடும்பம் (Hindu Undivided Family) என இதில் 5 வகை உண்டு. இதில் தனி நபர் நிறுவனங்கள் மற்றும் இந்து கூட்டுக் குடும்பங்களுக்கு மட்டும்தான் தனி நபர்களுக்கான வருமான வரி வரம்புகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மற்ற வகை நிறுவனங்கள் நேரடியாக 30% வருமான வரி கட்ட வேண்டியிருக்கும். அதேபோல, தனிநபர்கள் அவர்களின் நிறுவனங்களின் பெயரில் பான் அட்டை வாங்க வேண்டாம். தனி நபர்களுக்கு வழங்கப் பட்டிருக்கும் பான் அட்டைகளே போது மானது. ஆனால், மற்ற நான்கு வகை நிறுவனங்களும் அவற்றின் பெயரில் பான் அட்டை வாங்க வேண்டும்.

டேர்ன் ஓவர் ரூ.10 லட்சம்!
நிதி ஆண்டில் பிசினஸ் டேர்ன் ஓவர் ரூ.10 லட்சத்துக்குள் நடக்கிறது எனில், அவருக்கு டின் (TIN) எண் தேவை இல்லை மற்றும் சேவை வரியைக் கட்டத் தேவை இல்லை. ஆனால், 9 லட்சம் ரூபாய்க்கு மேல் டேர்ன் ஓவர் ஆகத் தொடங்கியவுடன் டின் எண் மற்றும் சேவை வரிக்கான எண்களை வாங்கிக் கொள்ள வேண்டும். 10 லட்சம் ரூபாய்க்கு மேல் டேர்ன் ஓவர் இருக்கிறது எனில், விற்பனை மற்றும் சேவை வரிகளைக் கட்டத் தொடங்க வேண்டும்.
கணக்கு வழக்குகள்!
நிதி ஆண்டில் ரூ.1 கோடிக்கு கீழ் டேர்ன் ஓவர் ஆகும் கடைகள் மற்றும் நிறுவனங்கள், தங்களின் கணக்குவழக்கு புத்தகங்களை தாங்களே சரியாகக் கண்காணித்து வந்தாலே போதும். ஆடிட்டர்கள் இந்தக் கணக்குவழக்கு புத்தகங்களை முறைப்படுத்தி இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. எனினும், ஆடிட்டர்களை வைத்து கணக்கு வழக்குகளை சரியாகக் கண்காணித்து வைத்துக் கொள்வது ஒரு நல்ல நிறுவனத்துக்கு அடையாளம். அடுத்து வரும் ஆண்டுகளில் திடீரென வங்கிகளிலோ அல்லது ஏஞ்சல் இன்வெஸ்ட்டர், பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள் மற்றும் வென்சர் கேப்பிட்டல் நிறுவனங்களிடம் இருந்து முதலீடு களைப் பெறவேண்டும் என்னும்போது இது மிகவும் உதவியாக இருக்கும்.

ரூ.1 கோடிக்கு வரி!
ரூ.1 கோடிக்கு கீழ் நிதி ஆண்டில் டேர்ன் ஓவர் ஆகும் கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு வருமான வரிச் சட்டம் 44 AD என்கிற விதிமுறைப் படி நேரடியாக டேர்ன் ஓவரில் 8 சதவிகிதத்தை லாபமாகக் கருதி, வருமான வரி வரம்பின்படி வரி செலுத்த வேண்டும். ஆனால், உண்மையாகக் கிடைத்திருக்கும் லாபம், சட்டத்தில் குறிப்பிட்டிருக்கும் 8 சதவிகிதத்தைவிட கூடுதல் எனில், அந்த லாபத்தை நேர்மையாகக் கணக்கில் காட்டி வரி செலுத்த வேண்டும். அதாவது, வருமான வரிச் சட்டம் 44 AD-ன்படி உண்மையான வருமானம் அல்லது 8% இதில் எது அதிகமோ, அதைக் கணக்கு காட்டி வரி செலுத்த வேண்டும். உதாரணமாக, குரு அண்ட் கோ என்கிற கடையை அன்பு என்பவர் நடத்தி வருகிறார். அவரது நிதி ஆண்டுக்கான டேர்ன் ஓவர் ரூ.99 லட்சமாக இருக்கிறது. அந்த நிதி ஆண்டுக்கு லாபமாக வருமான வரிச் சட்டம் 44 AD-ன்படி, மொத்த டேர்ன் ஓவரில் 8% என்றால், ரூ.7.92 லட்சத்துக்கு மொத்தம் ரூ.83,400 கட்ட வேண்டும். (பார்க்க அட்டவணை)
குறைந்த லாபம் கிடைத்தால்..?
பிசினஸில் சிலருக்கு அதிக லாபம் கிடைக்கலாம்; சிலருக்கு குறைந்த லாபம் கிடைக்கலாம். ஒருவர் ஆண்டுக்கு 99 லட்சம் டேர்ன் ஓவர் செய்து, அரசு விதித்திருக்கும் 8 சதவிகித லாபம் கிடைக்காமல் வெறும் 3 சதவிகிதமே கிடைத்தால் வருமான வரிச் சட்டம் 3 CA / 3 CB & 3CD ஆகிய படிவங்களைப் பூர்த்தி செய்து, நாம் எவ்வளவு லாபமாக காட்டுகிறோமோ, அந்தத் தொகைக்கு மட்டும் வரி கணக்கிடப்படும்.

ரூ.1 கோடிக்கு மேல்!
ஒரு நிறுவனத்தில், ஒரு நிதி ஆண்டில் ரூ.1 கோடிக்கு மேல் டேர்ன் ஓவர் ஆகிறது எனில், அந்த நிறுவனத்தின் கணக்குவழக்குகள் அனைத்தையும் ஆடிட்டர் ஒருவரிடம் காட்டி, விற்பனைக் கணக்கு, லாப நஷ்டக் கணக்கு, பற்று இருப்புக் கணக்கு தயார் செய்யப்பட்டு, அது ஆடிட்டரால் கையெழுத்திடப்பட்டு இருக்க வேண்டும். அதோடு, பர்சேஸ் புக், சேல்ஸ் புக் என்று சொல்லப்படும் வாங்குவது மற்றும் விற்்பதற்கான கணக்குவழக்கு புத்தகங்கள் கச்சிதமாகப் பராமரிக்கப்பட வேண்டும். இதற்கு 3 CB & 3 CD ஆகிய படிவங்களைப் பூர்த்தி செய்து வரி கணக்கிடப்படும். குறிப்பாக, ஒரு நிதி ஆண்டில் ரூ.1 கோடிக்கு மேல் டேர்ன் ஓவர் ஆகும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சர்சார்ஜ் என்கிற பெயரில் செலுத்த வேண்டிய வரி தொகையின் மீது 15.45% கூடுதல் வரி விதிக்கப்படும். அரசின் வழிகாட்டுதல்கள்படி, நிறுவனம் சம்பாதிக்கும் லாபத்தைப் பொறுத்து சர்சார்ஜ் மாறுகிறது. எனவே, மேற்கொண்டு தெளிவான சர்சார்ஜ் விவரங்களைத் தெரிந்துகொள்ள தங்களின் ஆடிட்டர்களை அணுகவும்.
வரி கட்டவில்லை எனில்?
பிசினஸின் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு நாம் சரியாக வரி கட்டவில்லையெனில், நாம் வாங்கியிருக்கும் வீடு, தங்கம், வாகனங்கள், வீட்டு உபயோக பொருட்களை எல்லாம் எப்படி வாங்கினீர்கள் என வருமான வரித்துறை கேள்வி கேட்கும். அதற்கு தக்க பதில் தரவில்லையெனில், நம் சொத்துக்கள் வருமானமாகக் கருதப்பட்டு, அதற்கு வரி விதிக்கப்படும்.

உதாரணமாக, குரு & கோவை நடத்திவரும் அன்புக்கு 99 லட்சம் டேர்ன் ஓவர் ஆகிறது. அவர் 44 AD என்கிற சட்டத்தின்படி, ரூ.7.92 லட்சம் வருமானமாக எடுத்துக்கொள்ளப்பட்டு, அன்பு தனிநபர் என்பதால் ரூ.83,400 மட்டுமே வரியாகச் செலுத்துகிறார். ஆனால், அதே ஆண்டில் அவர் ரூ.40 லட்சத்துக்கு வீடு வாங்குகிறார் என்றால் வரித் துறை சந்தேகத்தின் அடிப்படையில், அந்த சொத்துக்கான பணம் எங்கிருந்து வந்தது என்று கேட்கும். இதற்கு சரியான விளக்கம் இல்லை என்றால் அந்தத் தொகை, அன்பு நடத்தும் பிசினஸில் இருந்துதான் வந்தது என்று ரூ.7.92 லட்சம் ரூபாய் + ரூ.40 லட்சம் சேர்ந்து ரூ.47.92 லட்சத்துக்கு வரி செலுத்த வேண்டியிருக்கும். ஆக, வருமானத்தை மறைத்து வரி கட்டாமல் விடுவதன் மூலம் என்றைக்காவது ஒருநாள் நாம் வருமான வரித் துறையிடம் மாட்ட வேண்டியிருக்கும். அப்போது அல்லல்படுவதைவிட, அந்தந்த ஆண்டுக்கான வரியை அந்தந்த ஆண்டிலேயே கட்டிவிடுவதுதான் சரி’’ என்று முடித்தார் ஆடிட்டர் சதீஷ்குமார்.
இனியாவது சிறு வியாபாரிகள் தானாக முன்வந்து வரியைக் கட்டி, நிம்மதியாக பிசினஸ் செய்யட்டும்!