
கோவையைச் சேர்ந்த கணேஷ், சாஃப்ட்வேர் கம்பெனி ஒன்றின் உயர் பொறுப்பில் இருக்கிறார். வயது 41. மாதம் ரூ.3 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்குகிறார். அவருடைய மனைவி ஜானகி, பட்டப் படிப்பு படித்தவர். குடும்பப் பொறுப்புகளைக் கவனித்துக்கொள்கிறார். ஆனால், மாதாந்திர பட்ஜெட், குடும்ப வரவு செலவுக் கணக்குகளில் தலையிடுவதுமில்லை; ஈடுபாடு காட்டுவதுமில்லை. ஐந்து, நான்கு வயதுகளில் இரண்டு குழந்தைகள்.
அலுவலகத்தில் 50 பேர் கொண்ட குழுவுக்குத் தலைவராக இருக்கும் கணேஷுக்குப் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என்ற டார்கெட். அதனால் தனக்குக் கீழ் பணிபுரிவர்களை ஊக்கப்படுத்துவதற்காக வீக் எண்ட் பார்ட்டிகளை தன் சொந்த செலவில் நடத்துவதைப் பழக்கமாக்கிக் கொண்டார். ஒவ்வொரு வாரமும் பத்துப் பத்து பேராக அழைத்துப் போய் பார்ட்டி கொடுத்தார். மாதம் ரூ.40 ஆயிரம் வரை இதற்கே செலவானது.
கணேஷின் அப்பா பெரிய அளவில் பிசினஸ் செய்துபிறகு நொடிந்துப்போனவர். சொத்து எதனையும் சேர்த்து வைக்கவில்லை. எனவே, அப்பாவைப் போல் ஆகிவிடக் கூடாது என்பதற்காக நிறைய பணத்தை நிலத்தில் முதலீடு செய்துள்ளார். நண்பர்களுடன் சேர்ந்து புறநகர், பகுதிகளிலும், கிராமப்புறப் பகுதிகளிலும் மனைகளை எட்டு மனைகளை வாங்கிப் போட்டு உள்ளார். நண்பர்களுடன் கூட்டாகச் சேர்ந்து விவசாய நிலமும் வாங்கியுள்ளார். இந்த வகையில் கடன் மட்டுமே ரூ.75 லட்சத்துக்கு வாங்கியுள்ளார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தான் வாங்கும் கடனுக்கும், மனைகளின் மதிப்பு, வளர்ச்சிக்கும் சம்பந்தமே இல்லை என்பதை அவர் கணக்குப் போட்டு பார்க்கவில்லை. அவர் உருப்படியாக, மதிப்புமிக்க சொத்து வாங்கி உள்ளார் என்றால், நகருக்குள் வாங்கியுள்ள ஃபிளாட் மட்டும்தான். அவசர செலவுக்கு என எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை. அவருடைய அப்பாவுக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட, அவரால் விடுமுறை போட்டுவிட்டு கவனிக்க முடியாத நிலை. அப்பாவைப் பார்த்துக்கொள்ள வேலைக்கு ஆளை நியமித்தார். அதற்கும் கூடுதல் செலவானது.
எந்தவிதமான நிதி சார்ந்த முதலீடுகளும் இல்லாத சூழலில்தான் கணேஷ் என்னைச் சந்தித்தார். அவருடைய எல்லாவித செயல்பாடு களையும் உள்வாங்கிக்கொண்டேன். அவர் செய்த தவறுகள் பளிச்செனத் தெரிந்தது. அவருக்கு நான் இட்ட முதல் கட்டளை, பணியாளர்களின் வேலைத்திறனை மேம்படுத்த சொந்தப் பணத்தை செலவு செய்வதை முதலில் நிறுத்துங்கள் என்றேன். நான் சொல்லியபடி செய்தார். இதனால் மாதம் ரூ.40 ஆயிரம் சுலபமாக மிச்சமானது.
வாங்கிப் போட்டுள்ள மனைகளில் நான்கை விற்றுக் கடனை அடைக்கும்படி சொன்னேன். விற்றார். அவருடைய ஃபிளாட் நல்ல மதிப்பில் இருந்ததால், டாப் அப் லோன் வாங்கச் சொன் னேன். கிடைத்த மொத்தப் பணத்தையும் கொண்டு கடனை அடைக்கச் சொன்னேன். இப்போது மீதமுள்ள கடன் இஎம்ஐ-யாக மாற்றப் பட்டதால், அவர் பெரிய சுமையிலிருந்து வெளியில் வந்தார்.
முதலில் ரூ.40 ஆயிரத்தை முதலீடு செய்ய ஆரம்பித்தார். பிறகு அவருக்கே ஆசை வந்து, ரூ.75 ஆயிரம் முதலீடு செய்தார். தற்போது மியூச்சுவல் ஃபண்டில் ரூ.23 லட்சம் வரை முதலீடு செய்துள்ளார்.
விற்றதுபோக மீதியுள்ள மனைகளை கணேஷுடைய ஓய்வுக்காலத்துக்கு என ஒதுக்கிவிடச் சொன்னேன். அதனால் அவர் எல்லா முதலீடுகளையும் குழந்தைகளுக்காக செய்து வருகிறார்.
கணேஷ் குடும்பத்தில் நடந்த நிதித் தவறுகளுக்கு முக்கியமான காரணம், அவர் மனைவி நிதி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் காட்டாததே. இதைச் சொன்னபின், பட்ஜெட் போட்டு செலவு செய்ய ஆரம்பித்த ஜானகி, இன்றைக்கு எல்லா முதலீட்டு முடிவுகளையும் எடுப்பவராக மாறி இருக்கிறார். கணவன் மனைவியின் புதிய நிதிக் கூட்டணி, வசந்த காலத்தை நோக்கி அவர்களை அழைத்துச் செல்வதாகவே நான் பார்க்கிறேன்.
(கற்போம்)
நீங்களும் உங்கள் நிதித் தவறுகளைச் சொல்லித் தீர்வு பெறலாம். அனுப்ப வேண்டிய மெயில் முகவரி : finplan@vikatan.com