நடப்பு
Published:Updated:

மணி மேனேஜ்மென்ட்! - 7 - வங்கி எஃப்டி-யை ஏன் அதிகம் விரும்புகிறோம்?

மணி மேனேஜ்மென்ட்! - 7 - வங்கி  எஃப்டி-யை ஏன் அதிகம்  விரும்புகிறோம்?
பிரீமியம் ஸ்டோரி
News
மணி மேனேஜ்மென்ட்! - 7 - வங்கி எஃப்டி-யை ஏன் அதிகம் விரும்புகிறோம்?

உங்கள் பணம் உங்களுக்காக உழைக்கட்டும்...சி.சரவணன்

மணி மேனேஜ்மென்ட்! - 7 - வங்கி  எஃப்டி-யை ஏன் அதிகம்  விரும்புகிறோம்?

ம் மக்களின் சேமிப்பு மற்றும் முதலீடு எதில் அதிகம் இருக்கிறது என்று பார்த்தால், ஃபிக்ஸட் டெபாசிட்தான் முதல் இடத்தில் இருக்கிறது. நம் மக்களின் முதலீடு சுமார் ரூ.99 லட்சம் கோடி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் இருக்கிறது. இது மியூச்சுவல் ஃபண்டில் முதலீடான ரூ.16 லட்சம் கோடியுடன் ஒப்பிடும்போது மிக மிக அதிகம்.

நம் மக்கள் எஃப்டி முதலீட்டுக்கு அதிக முக்கியத்துவம் தர மூன்று முக்கியக் காரணங்கள் உண்டு.

1. முதலீடு செய்வது எளிது. (அதிக ஆவணங்கள் தேவையில்லை மற்றும் சுலபமான நடைமுறை).

2. நிலையான, உறுதியான வட்டி  வருமானம்.   
   
3. ரிஸ்க் இல்லாத முதலீடு.       

இதில் மூன்றாவதாக சொல்லப்பட்ட காரணத்தில்  உண்மை இல்லை என்பது பலருக்கும் தெரியாத விஷயம். ரிஸ்க்கே இல்லை என்று நாம் நினைக்கும் எஃப்டி முதலீட்டில்  ரிஸ்க் இருக்கவே செய்கிறது. அதாவது, வங்கி திவாலாகும்போது அதில் போட்டிருக்கும் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு வட்டியுடன் சேர்த்து, ரூ.1 லட்சத்துக்குதான் இன்ஷூரன்ஸ் இருக்கிறது. அதற்கு மேற்பட்ட தொகை கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதனால் அதிகத் தொகையை வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட் ஆக போடுபவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் பிரித்துப் போடுவது நல்லது;  அல்லது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் முதலீட்டைப் பிரித்து மேற்கொள்ளலாம்.   
   
  வட்டி!        

வங்கிச் சேமிப்பு வட்டியைவிடக் (ஆண்டுக்கு 4%) கூடுதலாக வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் வட்டி கிடைக்கும். இந்த வட்டி என்பது முதலீட்டுக் காலத்தைப் பொறுத்து மாறுபடும். பொதுவாக, இந்த வட்டியானது தற்போதைய நிலையில் 5.5% முதல் 7% வரை இருக்கிறது. மூன்று மாதத்துக்கு ஒரு முறை வட்டி விகிதம் மாற வாய்ப்புண்டு.

  முதலீட்டுக் காலம்!       

முதலீட்டுக் காலம் என்று எடுத்துக் கொண்டால், 7 நாட்கள் தொடங்கி 10 ஆண்டுகள் வரை செல்கிறது. தற்போதைய நிலையில், குறுகிய காலத்துக்குதான் வங்கிகளுக்கு நிதி தேவைப்படு கிறது. இதனால் குறுகிய கால முதலீட்டுக்குதான் வங்கிகள் அதிக வட்டி அளிக்கின்றன. எனவே, இப்போதைக்கு நீண்ட காலத்தைத் தவிர்த்து, குறுகிய கால முதலீட்டைத் தேர்வு செய்வது நல்லது.

வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டை ஆரம்பிக்கும் போது நீங்கள் தேர்வு செய்யும் காலத்துக்கு என்ன வட்டி தருகிறோம் என வங்கி ஆரம்பத்தில் சொல்கிறதோ, அந்த வட்டியை முதிர்வுக்காலம் வரை தரும். இடையில் வட்டி ஏறினாலோ, இறங்கினாலோ நீங்கள் போட்டிருக்கும் எஃப்டி-க்கான வட்டியில் மாற்றம் இருக்காது.

மணி மேனேஜ்மென்ட்! - 7 - வங்கி  எஃப்டி-யை ஏன் அதிகம்  விரும்புகிறோம்?

  எஃப்டி கணக்கை எப்படி ஆரம்பிப்பது?

உங்களுக்கு ஏற்கெனவே வங்கிச் சேமிப்பு கணக்கு இருக்கும்பட்சத்தில், அதே வங்கியில் எஃப்டி கணக்கை சுலபமாகத் தொடங்கிவிடலாம். இல்லை என்றால் அடையாளத்துக்கான ஆதாரம் (ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், ஆதார் கார்டு போன்ற வற்றில் ஏதாவது ஒன்றின் நகல்), முகவரிக்கான ஆதாரம் (ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், டெலிபோன் பில், மின்சார அட்டை, டிரைவிங் லைசென்ஸ், ஆதார் கார்டு போன்றவற்றில் ஏதாவது ஒன்றின் நகல்) மற்றும் இரண்டு பாஸ் போர்ட் அளவு புகைப்படங்கள் தேவைப்படும்.
     
18 வயதுக்குக் கீழ் உள்ள மைனர் பெயரில் எஃப்டி கணக்கைத் தொடங்குகிறீர்கள் எனில், பிறப்புச் சான்றிதழ் அல்லது 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வயதுக்கான ஆதாரமாக தேவைப்படும். ஏற்கெனவே வங்கிக் கணக்கு இருந்து, நெட்பேங்கிங் வசதி இருக்கும்பட்சத்தில், ஆன்லைன் மூலமாக இருந்த இடத்தில் இருந்தே எஃப்டி-யை ஆரம்பித்துவிட முடியும்.
    
  யாரெல்லாம் கணக்குத் தொடங்கலாம்?    

தனி மனிதர்கள், இந்து கூட்டுக் குடும்பம், மைனர்கள், நிறுவனங்கள், சங்கங்கள், அறக்கட்டளைகள்.

  நாமினி வசதி!

வங்கி எஃப்டி முதலீட்டுக்கு நாமினி நியமன வசதி இருக்கிறது. நாமினியை நியமிக்கவில்லை எனில், முதலீட்டாளர் மரணம் அடைந்து விட்டால், சட்டப்படியான வாரிசுகளுக்கு இந்தத் தொகை போய் சேரும். கூடியவரையில் கணக்கு ஆரம்பிக்கும்போதே நாமினியை நியமித்து, விண்ணப்பத்தில் குறிப்பிட்டுவிடுவது நல்லது. இந்த நாமினி சட்டப்படியான வாரிசாக இருக்கும் பட்சத்தில், எதிர்காலத்தில் சிக்கல் இருக்க வாய்ப்பு இல்லை.

  அடமானக் கடன்!
    
வங்கி எஃப்டி பத்திரத்தை அடமானமாக வைத்துக் கடன் வாங்க முடியும். கடன் வாங்கப் போகும் நிலையில், எஃப்டி-யில் உள்ள தொகையில் சுமார் 80% முதல் 90% வரை கடன் கிடைக்கும். இந்தக் கடனுக்கான வட்டி, எஃப்டி முதலீட்டுக்கான வட்டியைவிட 1  முதல் 2% அதிகமாக இருக்கும். இது வங்கிகளைப் பொறுத்து மாறுபடக்கூடும்.  

மணி மேனேஜ்மென்ட்! - 7 - வங்கி  எஃப்டி-யை ஏன் அதிகம்  விரும்புகிறோம்?

குறைந்தபட்ச முதலீடு!
       
பொதுத் துறை வங்கிகளில் ரூ.1,000 இருந்தால், எஃப்டி-யை ஆரம்பிக்க முடியும். தனியார் வங்கி களில் இது ரூ.5,000 அல்லது ரூ.10,000-ஆக இருக்கிறது.
    
  முதிர்வுக்கு முன்பே பணத்தை எடுத்தால்..?

ஃபிக்ஸட் டெபாசிட்டில் உள்ள பணத்தை முதிர்வுக் காலத்துக்கு முன்பே எடுக்க நினைத்தால், இரண்டு இழப்புகள் ஏற்படும். ஒன்று, முன்கூட்டியே முடிப்பதற்கான அபராதம். இது 0.5-1 சதவிகிதமாக இருக்கும். இரண்டாவது, எவ்வளவு காலம் முதலீடு இருந்ததோ, அதற்கான வட்டிதான் கணக்கிட்டுத் தரப்படும்.  எஃப்டி-யில் இருந்து பணத்தைத் திரும்ப எடுக்க நினைக்கிறவர்கள் மொத்தத் தொகையை ஒரே ஃபிக்ஸட் டெபாசிட் ஆக போடாமல், 3 முதல் 4 டெபாசிட் ஆகப் பிரித்துப் போடலாம். இடையில் ஏதாவது திடீர் பணத் தேவை ஏற்பட்டால், ஏதாவது ஒரு எஃப்டி கணக்கிலிருந்து பணத்தை எடுக்கலாம்.
 
  வருமான வரி!       

எஃப்டி-யைப் பொறுத்தவரையில், முதலீடு, வட்டி வருமானம், முதிர்வுத் தொகை என அனைத்து நிலையிலும் வருமான வரிச் சலுகை கிடையாது.    
   
ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டி வருமானம், ஒருவரின் சம்பளம் அல்லது வருமானத்துடன் இதர வருமானமாகச் சேர்க்கப்பட்டு, அடிப்படை வருமான வரம்புக்கு ஏற்ப (10%, 20% அல்லது 30%) வரி கட்ட வேண்டிவரும். ஒரு நிதி ஆண்டில் ஒருவர் மேற்கொண்டிருக்கும் அனைத்து ஃபிக்ஸட் டெபாசிட்கள் மற்றும் ஆர்டி-கள் மூலமான வட்டி வருமானம் 10,000 ரூபாயைத் தாண்டும்போது 10% டிடிஎஸ் பிடிக்கப்படும். பான் எண் தரவில்லை என்றால், 20% டிடிஎஸ் பிடிப்பார்கள். வருமான வரி வரம்புக்குள் வராதவர்கள் இந்த வரிப் பிடித்தத்தைத் தவிர்க்க வழி இருக்கிறது.  பொதுப் பிரிவினர் 15G படிவத்தையும், மூத்தக் குடிமக்கள், 15H படிவத்தையும் வங்கியில் நிரப்பித் தருவதன் மூலம் டிடிஎஸ் பிடிப்பதைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் கணவன், மனைவி என எஃப்டி முதலீட்டைப் பிரித்து முதலீடு செய்வதன் மூலமும் டிடிஎஸ் பிடிப்பதைத் தவிர்க்க வாய்ப்பு இருக்கிறது. 
       
(பணம் பெருகும்)