Published:Updated:

வெற்றி பெற திறமையுடன் அதிர்ஷ்டமும் வேண்டும்!

வெற்றி பெற  திறமையுடன்  அதிர்ஷ்டமும் வேண்டும்!
பிரீமியம் ஸ்டோரி
News
வெற்றி பெற திறமையுடன் அதிர்ஷ்டமும் வேண்டும்!

நாணயம் லைப்ரரி!

வெற்றி பெற  திறமையுடன்  அதிர்ஷ்டமும் வேண்டும்!

புத்தகத்தின் பெயர்: சக்சஸ் அண்ட் லக் (Success and Luck)

ஆசிரியர்: ராபர்ட் ஹெச் ஃப்ராங்க் (Robert H. Frank)

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பதிப்பகம்: Princeton University Press

 புத்தகத்தின் நோக்கம்!

வெற்றி பெற்றவர்கள், அவர்களுடைய வெற்றியில் அதிர்ஷ்டத்தின் பங்கு குறித்து ஒப்புக்கொள்ள ஏன் மறுக்கின்றனர்; அதிர்ஷ்டமின்மை என்பது எப்படி அனைவரையும்  (சிலபல  சமயங்களில் பணக்காரர்களையுமே) பாதிக்கிறது; ஒரு விஷயத்தில் நடக்கும் சிறிய அனுகூலங்கள் நாளடைவில் எப்படி பெரிய அளவில் வெற்றியை அளிக்கிறது; ஆணித்தரமான எதிர்மறை ஆதாரங்கள் இருந்தாலும் அதிர்ஷ்டம் குறித்த மூடநம்பிக்கைகள் எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் நிலவுகிறது என்பதை எல்லாம் விளக்கமாக எடுத்துச் சொல்லி, அதிர்ஷ்டம் குறித்த ஒரு தெளிவை ஏற்படுத்த முயல்கிறது இந்தப் புத்தகம்.
‘உழைப்பே உயர்வு’ என்ற நம்பிக்கையையும் தாண்டி அதிர்ஷ்டம் என்ற ஒன்று உண்டு. அது அதுவாக அமைய வேண்டும் என்பதற்கு உதாரணமாக, மைக்கேல் லூயிஸ் என்னும் வெற்றிகரமான எழுத்தாளரை குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

வெற்றி பெற  திறமையுடன்  அதிர்ஷ்டமும் வேண்டும்!  அதிர்ஷ்டம் தந்த வாய்ப்பு!


மைக்கேல் லூயிஸ், ப்ரீஸ்டன் (Prestone) பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசும்போது, சில அதிர்ஷ்ட நிகழ்வுகளே தன்னை உயர்த்தியது என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு டின்னரில் கலந்துகொண்டபோது அவரருகே அமர்ந்து உணவருந்திய ஒரு பெண்மணி, மைக்கேலை வேலைக்குச் சேர்த்துக்கொள்ளுமாறு அவரது கணவரிடம் பரிந்துரை செய்தாராம். அந்தப் பெண்ணின் கணவர் பணிபுரிந்த நிறுவனம் வால் ஸ்ட்ரீட்டின் மிகப் பெரிய நிறுவனமான சாலமன் பிரதர்ஸ் ஆகும்.

‘‘அந்த நிறுவனத்தின் பெயரைத் தவிர, அப்போது வேறு எதுவும் எனக்குத் தெரியாது. அந்தப் பெண்மணி அவருடைய கணவரிடம் எனக்காகப் பரிந்துரை செய்ய, எனக்கும் வேலை கிடைத்தது. அந்த நிறுவனத்தில் நான் வேலைக்குச் சேர்ந்த போது, என்னை ஒரு முக்கிய துறையில் வேலை பார்க்கச் சொன்னார்கள். ஒன்றரை வருடம் கழித்து எனக்கு பல ஆயிரம் டாலர்களை சம்பளமாகத் தந்தார்கள். எதற்குத் தெரியுமா? அவர்களுடைய புரஃபஷனல் வாடிக்கையாளர் களுக்கு ஊக வணிகம் (Derivatives) குறித்த ஆலோசனை  வழங்கியதற்காக!

நான் வேலை பார்த்த அந்த அனுபவத்தை வைத்து, 1989-ல் ‘லையர்ஸ் போக்கர்’ (Liar’s Poker) என்கிற புத்தகத்தை எழுதினேன். அப்போது எனக்கு வயது 28. ஒரு மில்லியன் காப்பிகள் விற்றது அந்தப் புத்தகம். அந்த டின்னரில் அந்தப் பெண்மணிக்கு அருகே நான் உட்கார வாய்ப்பு கிடைக்காமல் போயிருந்தால், அந்தப் பெண்மணி என்னை சாலமன் பிரதர்ஸ் நிறுவனத்தில் வேலைக்குச் சேர பரிந்துரை செய்யாமல் போயிருந்தால், அந்த நிறுவனத்தில் பணியில் சேர்ந்து ஊக வணிகத் துறையில் என்னைப் பணிக்கு அமர்த்தாமல் போயிருந்தால், நான் உங்கள் முன்னால் ஒரு வெற்றிகரமான மனிதனாக நின்றிருக்க மாட்டேன். என்னை வைத்தே நீங்கள் வெற்றி என்பது எப்படிப் பார்க்கப்படுகிறது என்பதைப்  புரிந்துகொள்ளுங்கள். 

வெற்றி பெற்ற பலரும் தங்கள் வெற்றியில் அதிர்ஷ்டத்தின் பங்கு அதிகம் என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர். ஒருவரின் வெற்றி அதிகரிக்க அதிகரிக்க, ‘நான் வெற்றி பெறப் பிறந்தவன்’ என்று மனிதர்கள் தங்களை நினைத்துக் கொள்ள ஆரம்பித்துவிடுகின்றனர். அவர்கள் வாழ்க்கையில் நடந்த அதிர்ஷ்டகரமான விபத்துகளே அவர்களது முன்னேற்றத்தில் பெரும்பங்கு வகிக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். 

  மற்றவர்களின் துரதிர்ஷ்டம்!

வெற்றி பெற்றவர்களின் அனுகூலங்கள் மட்டுமே அவர்களை வெற்றி பெறச் செய்வதில்லை. ஏனையவர்களின் துரதிர்ஷ்டங்களுமே அவர்களின் வெற்றிக்குக் காரணம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். அதற்கு ஒரு உதாரணத்தைச் சொல்கிறார் ஆசிரியர். 

ரிக் காஃப் என்பவர் ஐந்து வயதில் தாயை இழந்தார். குடிகார அப்பா, ரிக் காஃபையும் அவருடைய மூன்று தம்பி, தங்கைகளையும் கவனிக்கவே இல்லை. காஃபுடன் பழகியவர்கள் அனைவருமே அவர் நல்ல தோழன் என்று சொல்லும் அளவுக்கு அவர் நல்ல மனிதர்.  பள்ளியில் அவருக்குப் படிப்பு ஏறவில்லை. பத்தாம் வகுப்பில் படிப்பை நிறுத்திவிட்டு, மரம் அறுக்கும் வேலைக்குப் போனார். அதன் பின்னால் கார்களுக்கு பெயின்ட் அடிக்கும் பெயின்டராக ஆனார். ஆனால், ஒரு விபத்தில் அவர் கை மிக மோசமாகப் பாதிப்படைந்தது. அதற்கான இன்ஷூரன்ஸ் இழப்பீட்டைப் பெற அவர் அல்லாடினார். ஜூலை 2015-ல் அகால மரணம் அடைந்தார். ஏன் தெரியுமா? மருந்து செலவுக்கு வைத்திருந்த 600 டாலர்களை ஏற்கெனவே விவகாரத்து செய்த தன் மனைவியின் அவசரச் செலவுக்கு கொடுத்ததுதான் காரணம். காஃபின் வாழ்க்கையில் தோல்வியைத் தீர்மானித்தது அவரது திறமையா, துரதிர்ஷ்டமா?

வெற்றி பெற  திறமையுடன்  அதிர்ஷ்டமும் வேண்டும்!

  யார் தலைவர்? 

வாழ்க்கை என்பது நீங்கள் தேர்ந்தெடுக்கும் சரியான தேர்வில்தான் இருக்கிறது என்று சொல்லும் நபரா நீங்கள்? ப்ரீஸ்டன் பல்கலைக்கழகத்தின் சுவாரஸ்யமான ஆராய்ச்சி முடிவைப் படியுங்கள்.

ஒரு அறையில் தங்கியிருக்கும் மூன்று இளைஞர்களில் ஒருவரை குலுக்கல் முறையில் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். அந்த ரூமில் நான்கு குக்கீஸ் (பிஸ்கெட்) அடங்கிய தட்டை வைத்துச் சாப்பிடுங்கள் என்று சொல்லி விட்டு, அரை மணி நேரம் கழித்துச் சென்று, இரண்டு குக்கீஸ் (3 நபர்  - 4 குக்கீஸ்) சாப்பிட்டது யார் என்று கேட்டால், குலுக்கல் முறையில் தலைவராகத்் தேர்ந்தெடுக்கப்பட்ட நபராகவே இருந்தார். முப்பது நிமிடங் களுக்கு முன், மூவரில் யார் வேண்டு மென்றாலும் தலைவராக வர வாய்ப்பு இருந்தது. குலுக்கல் முறையில்  தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் கூடுதலாக இருக்கும் பிஸ்கெட் தனக்குத்தான் சொந்தம் என்கிற எண்ணம் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட நபருக்கு வந்து விடுகிறது என்கிறது ஆய்வு முடிவு.

  இதயத் துடிப்பு முடக்கம்!

ஒரு சமயம், இப்புத்தக ஆசிரியர் தனது நண்பருடன் டென்னிஸ் விளையாடிக்கொண்டிருந்தபோது மயக்கமாக வருகிறது என்று சொல்லி மயங்கி விழ, நண்பர் ஆம்புலன்ஸுக்கு போன் செய்துவிட்டு, ஆசிரியரின் நாடித் துடிப்பைப் பிடித்துப் பார்த்தபோது அது சுத்தமாக நின்றிருந்ததாம். சினிமாவில் பார்த்ததை அடிப்படையாக வைத்து, நண்பர் ஆசிரியருடைய நெஞ்சில் வேகமாகக் குத்தி, இதயத்தை இயக்க முயற்சித்த வேளையில் ஆம்புலன்ஸ் வந்து, அருகே இருக்கும் மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றதாம். (சாதாரணமாக ஆம்புலன்ஸ் ஐந்து மைல் தொலைவில் இருந்து வர வேண்டுமாம். ஆனால், ஆசிரியரின் நேரம்  ஆம்புலன்ஸ் உடனே வந்து சேர்ந்தது).

ஆசிரியர் மிக மோசமாக பாதிப்படைந்திருப்பதை அறிந்த டாக்டர், அவரை ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸில் பென்சில்வேனியாவுக்குக் கொண்டு சென்று, ஒரு இரவு முழுவதும் சிகிச்சைகளை செய்து, அவரை உயிர் பிழைக்க  வைத்தார்களாம். 

‘‘ஆம்புலன்ஸ் எப்படிக் கூப்பிட்ட வுடன் வந்தது?’’ என்று கேட்டால், ‘‘அதிர்ஷ்டம்தான், வேறென்ன சொல்ல?’’ என்கிறார் ஆசிரியர். நண்பர்களோ, அது ஒரு தெய்வீக நிகழ்வு என்றார்கள். ‘‘நண்பர்கள் சொன்னதை நான் மறுக்கவில்லை என்றாலும் அந்த சமயத்தில் ஆம்புலன்ஸ் வந்தது எனக்குக் கிடைத்த ஒரு வாய்ப்புதான். வேலையானாலும் சரி, ஒலிம்பிக்ஸ் போட்டி ஆனாலும் சரி, வெற்றிகளிலும் சாதனைகளிலும் அதிர்ஷ்டத்தின் பங்கு இருக்கவே செய்கிறது.

ஒலிம்பிக்ஸில் செய்யப்பட்ட சாதனைகள் பலவற்றிலும் அது நிகழ்த்தப்பட்ட வேளையில் காற்று வீசிய திசை சாதனையாளருக்கு சாதகமாக இருந்தது. நீங்கள் எங்கே பிறக்கிறீர்கள் என்பதே அதிர்ஷ்டம் சம்பந்தப்பட்டதுதானே! வளர்ந்த நாடுகளில் இருக்கும் திறமையான மனிதர்களைவிட, ஏழ்மை நிறைந்த நாட்டில் திறமையான ஆளாக நீங்கள் பிறந்து என்ன பயன்? பணரீதியாக பெரிதாக சாதிக்க முடியாது இல்லையா?’’ என்று கேட்கிறார் ஆசிரியர்.

தன் சொந்த அனுபவங்களைக் கொண்டும் ஆய்வு முடிவுகளை மேற்கோள் காட்டி  எழுதப்பட்டிருக்கும் இந்தப் புத்தகத்தை, அனைவரும் ஒருமுறை படித்து, நம் வாழ்வில் அதிர்ஷ்டம் செய்யும் ஆதிக்கத்தைப் புரிந்துகொண்டு வாழ முயற்சிக்கலாம்.

- நாணயம் டீம்

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங்  வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.)