Published:Updated:

மானியத்தில் வீட்டுக் கடன்... மோடியின் அறிவிப்பால் யாருக்கு நன்மை?

மானியத்தில் வீட்டுக் கடன்... மோடியின் அறிவிப்பால் யாருக்கு நன்மை?
பிரீமியம் ஸ்டோரி
News
மானியத்தில் வீட்டுக் கடன்... மோடியின் அறிவிப்பால் யாருக்கு நன்மை?

ஞா.சக்திவேல் முருகன்

மானியத்தில் வீட்டுக் கடன்... மோடியின் அறிவிப்பால் யாருக்கு நன்மை?

பிரதமர் நரேந்திர மோடி, தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் கீழ் வீட்டுக் கடனுக்கு பல்வேறு மானியங்களை அறிவித்து இருக்கிறார். இதன் மூலம் வீட்டுக் கடன் வாங்கும்போது கணிசமான மானியத்தைப் பெறலாம் என்கிறார். 

மத்திய அரசின் ‘அனைவருக்கும் வீடு’ திட்டமான ‘பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா’ குறிப்பிட்ட, வளர்ந்து வரும் நகர்ப்பகுதிகளில் மட்டும் செயல்படுத்தப் பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், நகர்ப்பகுதியில் உள்ள குறைந்த மற்றும் நடுத்தர வருமானப் பிரிவினர் பயன் பெற முடியும்.

மற்றும் வங்கிக் கடன் பெறுபவர்களுக்கு 6.5% வட்டி மானியம், அதாவது 2,30,000 ரூபாய் வரை மானியம் பெறலாம். தற்போது பிரதமர் அறிவித்துள்ள திட்டத்தின்படி, கிராமப்புறத்தில் உள்ளவர்களும் பயன் பெற முடியும். இந்தத் திட்டத்தின் கீழ், 2017-ம் ஆண்டில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் (ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்கள்) வீட்டுக் கடனாக  ரூ.9 லட்சம் வரை பெறுபவர்களுக்கு 4% வட்டி மானியமும், நடுத்தர வருமானப் பிரிவினர் (ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்குக் குறைவாக உள்ளவர்கள்) ரூ.12 லட்சம் ரூபாய் வரை கடன் பெறுபவர்களுக்கு 3% வட்டி மானியமும் கிடைக்கும்.

மானியத்தில் வீட்டுக் கடன்... மோடியின் அறிவிப்பால் யாருக்கு நன்மை?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz


கிராமப் பகுதியில் உள்ள வீட்டை மாற்றி அமைப்பதற்குப் பெறப்படும் கடன் தொகை 2 லட்சம் ரூபாய்க்கு 3% வட்டி மானியம் பெறலாம் (ரூ.6 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள்) என்றும் அறிவித்து இருக்கிறார் பிரதமர். இந்த வீடுகள் அனைத்தும் அப்ரூவல் பெற்றுக் கட்டப்படுபவையாக, கட்டப் பட்டவையாக இருக்க வேண்டும். 

“தற்போது அனைத்து வங்கிகளிலும் வட்டி விகிதத்தைக் குறைத்து வருகிறார்கள். இதன் மூலம் வட்டி விகிதம் சுமார் 8% என்ற வகையில் வருகிறது. பிரதமர் அறிவித்த திட்டத்தின் கீழ், கிராமப் பகுதியில் வீட்டுக் கடனுக்கு வட்டி மானியமாக 4% பெறும்போது, 4% வட்டியை மட்டுமே செலுத்த வேண்டி இருக்கும். இதன் மூலம் 1 லட்சம் ரூபாய்க்கு 500 ரூபாய் மாதத் தவணையாகச் செலுத்த வேண்டும். ரூ.9 லட்சத்துக்கு ரூ.4,500 மாதத் தவணையாகச் செலுத்த வேண்டி இருக்கும்.

கிராமப் பகுதியில் வீடு கட்டுவதாக இருந்தால் குறைந்தபட்சம் 30 சதுர மீட்டரில் (323 சதுர அடி) வீடு இருக்க வேண்டும். இப்போது இந்தத் திட்டத்தின் கீழ் கொஞ்சம் பெரிய வீட்டைக் கட்டிக் கொள்ளலாம். இந்த வீட்டைக் கட்ட ரூ.9 லட்சம் என்பது போதுமானதாகவே இருக்கும். இது நல்ல திட்டம்தான். இதனை எப்படிச் செயல்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே இந்தத் திட்டத்தின் வெற்றி இருக்கும்” என்றார் தமிழ்நாடு ஃப்ளாட் மற்றும் ஹவுஸிங் புரோமேட்டர்ஸ் சங்கத்தின் தலைவர் மணிசங்கர்.

பிரதமர் அறிவித்த திட்டத்தை தேசிய அளவில் செயல்படுத்தி வரும் தேசிய வீட்டு வசதி வங்கியின் சென்னை அலுவலகத்தில் இந்தத் திட்டம் குறித்து விசாரித்தபோது, ‘‘அனைவருக்கும் வீடு’ என்ற ‘பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா’ திட்டத்தில் பயன் பெற பொருளாதார அளவில் பின்தங்கி இருப்பவர்கள், ஏற்கெனவே வீடு இல்லாத நிலையில், வீடு வாங்கும்போது அல்லது புதிதாக வீடு கட்டும்போது இந்தத் திட்டத்தில் பயன் பெற முடியும். இந்தத் திட்டம் அறிவித்து, ஒரு வருடம் ஆன நிலையில், இப்போதுதான் பல வங்கிகளும் செயல்படுத்த முனைப்பு காட்டி வருகின்றன. தற்போது 300 கோடி ரூபாய் வரை வங்கிகளுக்கு மானியமாக வழங்கி இருக்கிறோம். தற்போது கிராமப் பகுதியும் சேர்ந்து இருப்பதால், இனிவரும் காலங்களில் பயனாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்கிறார்கள்.

மானியத்தில் வீட்டுக் கடன்... மோடியின் அறிவிப்பால் யாருக்கு நன்மை?



இதுகுறித்து பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஓய்வு பெற்ற மேலாளர் அழகப்பன் கிருஷ்ணனிடம் பேசியபோது, “பிரதமர் நல்ல திட்டங்களை அறிவித்திருக்கிறார். இந்தத் திட்டங்கள் நடைமுறைக்கு வருவதற்கு இன்னும் ஆறு மாதம் ஆகும். இந்தத் திட்டங்கள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவெடுப்பார்கள். தற்போது அறிவித்த திட்டம் ஏற்கெனவே ‘இந்திரா அவாஸ் யோஜனா’ என்ற பெயரில் இருந்த திட்டம்தான் இப்போது பெயர் மாறி இருக்கிறது. வட்டி விகிதங்கள் ஒன்றிரண்டு சதவிகிதம் மாறி இருக்கிறது. இந்தத் திட்டம் குறித்து மக்கள்தான் வங்கியில் சென்று கேட்டுப் பயன் பெற வேண்டும்” என்றார்.

திருநெல்வேலியில் வீடு கட்டுமானப் பணியினை மேற்கொண்டு வரும் தயாசங்கர், “எங்கள் பகுதியில் 1,200 சதுர அடி மனையில் 800 முதல் 900 சதுர அடி அளவுள்ள வீட்டையும், அதனுடன் சுற்றுச் சுவர், மின்சார இணைப்பு போன்றவற்றை எல்லாம் சேர்த்து வீடு கட்ட ரூ.12 முதல் ரூ.15 லட்சம் வரை செலவாகிறது. பிரதமரின் இந்தத் திட்டம் ஊரகப் பகுதியில் மாத வருமானம் பெறுபவர்கள் வங்கியில் கடனை வாங்கி வீடு வாங்க, கட்ட பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

பிரதமர் அறிவித்துள்ள வீட்டு மானியத் திட்டம் குறித்து பல்வேறு வங்கிகளை அணுகியபோது, “இதுகுறித்து எங்களுக்கு இதுவரை எந்த அரசாணையும் வரவில்லை. இன்னும் இரண்டு வாரங்களுக்குள் எங்களுக்கு அரசாணை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அந்த அரசாணையில் வீட்டுக் கடன் மானியத்தைப் பெறுவதற்கான விதிமுறைகள் இடம்பெற்றிருக்கும். அதன் அடிப்படையில் கடன் வழங்குவோம்” என்றார்கள்.

என்றாலும், தகுதி உள்ளவர்கள் வங்கியை அணுகி, இந்தக் கடனை வாங்கி, சொந்தமாக ஒரு வீட்டை உருவாக்கிக்கொள்ளலாமே!

மானியத்தில் வீட்டுக் கடன்... மோடியின் அறிவிப்பால் யாருக்கு நன்மை?

மூத்தக் குடிமக்களுக்கு 8% வட்டி வழங்கும் முதலீட்டுத் திட்டம் லாபமா?

பிரதமர் நரேந்திர மோடி புத்தாண்டை ஒட்டி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ‘‘மூத்தக் குடிமக்கள் 10 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளும் முதலீட்டுக்கு ஆண்டுக்கு 8% வட்டி வழங்கப்படும். இதில் அதிகபட்சம் ரூ.7.5 லட்சம் முதலீடு செய்யலாம்’’ என அறிவித்தார். தற்போது ஐந்தாண்டு முதலீட்டுத் திட்டமான மூத்தக் குடிமக்கள் சேமிப்புத் திட்டத்துக்கு ஆண்டுக்கு 8.5% வட்டி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், 8% வட்டி லாபகரமான முதலீடா என நிதி ஆலோசகர் அனிதா பட் விளக்கி சொன்னார்.

மானியத்தில் வீட்டுக் கடன்... மோடியின் அறிவிப்பால் யாருக்கு நன்மை?


‘‘தற்போதைய நிலையில், தபால் அலுவலக சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்களில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டி விகிதம் மாற்றி அளிக்கப்பட்டு வருகிறது. வருங்காலத்தில் வட்டியும் குறையவே அதிக வாய்ப்பு உள்ளது. தபால் அலுவலக மூத்தக் குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் ஆண்டுக்கு 8.5% வட்டி வழங்கப்படுகிறது. இதில் ஒருவர் அதிகபட்சம் ரூ.15 லட்சம் முதலீடு செய்யலாம்.

அடுத்த ஐந்தாண்டுகளுக்குப் பிறகு தபால் அலுவலக சேமிப்புக்கான வட்டி விகிதம் நிச்சயம் 8 சதவிகிதத்தைவிட குறைவாகவே இருக்கும். அந்த வகையில், 10 ஆண்டு கால நீண்ட முதலீட்டை விரும்பும் மூத்தக் குடிமக்கள் 10 ஆண்டுகளுக்கு 8% வட்டி என்கிற புதிய திட்டத்தில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். அடுத்த லாபம், ஏற்கெனவே மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் முழுமையாக ரூ.15 லட்சம் முதலீடு செய்திருப்பவர்கள், இப்போது ரூ.7.5 லட்சம் கூடுதலாக முதலீடு செய்ய முடியும்” என்றார் நிதி ஆலோசகர் அனிதா பட்.

தேவை இருப்பவர்கள் பிரதமரின் புதிய திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

_ சேனா சரவணன்