Published:Updated:

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 7

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 7
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 7

வந்தது பதவி... போனது நிம்மதி!சுரேஷ் பார்த்தசாரதி, Founder, Myassetsconsolidation.com Registered investment advisor, INA200000878

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 7

னந்த் சர்மா பெங்களூருவில் உள்ள பெரிய நிறுவனமொன்றில் சாஃப்ட்வேர் டெவலப்பராக  வேலை பார்த்து வந்தார். தன் துறையில் சூப்பர்மேனாக ஜொலித்தார். அலுவலக நிர்வாகத்திலும் சந்தர்ப்பங்கள் அமையும்போது எல்லாம் பல வித்தைகளைக் காட்டி பிரமிக்க வைத்தார். மனைவி சரளா மற்றும் மகன் ஹிருத்திக், மகள் நிஷா என குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்தார்.

எந்தப் பிரச்னையும் இல்லாமல் போய்க் கொண்டிருந்த அவரது வாழ்க்கையில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது அந்த நிகழ்வு. ஒரு இக்கட்டான சூழலில் அவரது கம்பெனி நிர்வாகம் மாட்டிக்கொண்டு திணறியபோது, தனது வியூகத்திறனைப் பயன்படுத்தி ஆனந்த் ஐடியா தர,  பல கோடி இழப்பிலிருந்து மீண்டது கம்பெனி.

எல்லோரும் ஆனந்த் சர்மாவை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடினார்கள். இதற்குப் பதிலாக, கம்பெனி நிர்வாகம் அவருக்கு அளித்த பரிசு மிகப் பெரியது. ஆமாம்,  சிஇஓ நாற்காலியில் அவரை நிர்வாகம் அமர்த்தியது. ஆனந்த் சர்மாவும் பெரிய பதவி கிடைத்த மகிழ்ச்சியில் பூரிப்புடன் அந்தப் பதவியை ஏற்றுக்கொண்டார்.

ஃபைனான்ஷியல் தவறுகள்... பளிச் தீர்வுகள்! - 7

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quizஆனால், ஒரு கம்பெனியை நிர்வகிப்பது அவர் நினைத்த மாதிரி அத்தனை எளிதான விஷயமாக அவருக்கு இல்லை. அந்தந்தப் பிரிவுக்கு தகுதியான ஆட்கள் நியமனம், சம்பளப் பிரச்னை, விற்பனை, ஆடிட்டிங், பங்குதாரர்கள் என பல கோணத்திலும் செயல்படக்கூடிய அந்தப் பொறுப்பு அவருக்கு டென்ஷனாக இருந்தது.

எப்போதும் நேரடியாகவும், வெளிப்படை யாகவும் பேசவும் செயல்படவும்கூடிய அவருக்கு நிர்வாகத்தில் இருக்கும் சில நெளிவுசுளிவுகள் புரிபடவில்லை. அலுவலக அரசியலை எதிர் கொள்ளத் திணறினார். சீனியர்களை சமாளிக்க முடியாமல் கஷ்டப்பட்டார். பல முனைகளில் இருந்தும் பிரச்னைகள் தலைதூக்க ஆரம்பிக்கவே, கம்பெனி நிர்வாகம் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நன்றாகச் செயல்பட்டு வந்த கம்பெனியில் பிரச்னைகள் ஏற்படுவதை நிர்வாகம் விரும்பவில்லை.

ஆனந்தை அந்த கம்பெனியிலிருந்து மாற்றி, அந்தக் குழுமத்தின் இன்னொரு புதிய கம்பெனிக்கு சிஇஓ ஆக்கியது. அவரும், தான் வகித்த பதவிக்கு ஆபத்து இல்லை என்பதால், புதிய கம்பெனியின் பொறுப்பை ஏற்றார். ஆனால், அங்கும் அவரால் பிரச்னையைச் சமாளிக்க முடியவில்லை. கம்பெனியின் பங்குதாரர்களுடன் ஏற்பட்ட பிரச்னை பெரும் தலைவலியாக மாறியது.

வேலைச் சூழலில் அவருக்கு ஏற்பட்ட குளறுபடி களால் மனம் அதிலேயே எப்போதும் லயித்துக் கிடக்கவே, அவர் தனது சொந்த முதலீடுகளைக் கவனிக்காமல் விட்டுவிட்டார். இந்த நிலையில்தான் அவர் என்னை சந்தித்தார்.

ஆனந்த் செய்த தவறுகள் என்னென்ன, அந்தத் தவறுகளுக்கான காரணங்கள் என்னென்ன என்பதை நான் தெளிவாகப் புரிந்துகொண்டேன். அவருக்கான எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம், ஒர்க் பிரஷர். முதலில் அதிலிருந்து மீளவேண்டும். எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், எவ்வளவு சம்பாதித்தாலும் சரியான வாழ்க்கைப் பாதையை வகுத்துக்கொள்ளவில்லை எனில், எந்தப் பயனும் இல்லை என்பதைப் புரிய வைத்தேன். முதலில் வேலைச் சுமையிலிருந்து விடுதலையாகச்  சொன்னேன். ‘‘உங்கள் துறையில் அபாரத்  திறமை வாய்ந்தவர் நீங்கள். ஃப்ரீலேன்ஸ் கன்சல்ட்டன்ட் ஆக சாஃப்ட்வேர் கம்பெனிகளுக்கு வேலை பாருங்கள்’’ என ஆலோசனை சொன்னேன்.

சிஇஓ வேலையை விட்டுவிடக் கொஞ்சம் தயங்கினார். ‘‘மன நிம்மதியைக் கொடுக்காத, பண நிர்வகிப்பைச் செய்ய நேரம் ஒதுக்க இயலாத சிஇஓ  வேலை உங்களுக்குத் தேவையில்லையே... மனதுக்குப் பிடித்த, உங்களின் தனித்திறனை மிளிரச் செய்யக்கூடிய சாஃப்ட்வேர் டெவலப்பிங் வேலையை ஒப்பந்த அடிப்படையில் எடுத்துச் செய்யுங்கள்’’ என நம்பிக்கையூட்டினேன்.

அடுத்ததாக, முதலீடுகளை இலக்கு சார்ந்ததாக நிர்ணயிக்குமாறு சொன்னேன். குழந்தைகளின் படிப்புக்கு, திருமணத்துக்கு, தனது ஓய்வு காலத்துக்கு என முக்கியத் தேவைகளுக்கு இலக்கை நிர்ணயம் செய்யும்போதுதான் அந்த முதலீடுகளின் மீதான பிடிப்பு அதிகரிக்கும். கவனிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் என்பதை நான் சொன்னதும் அவர் சட்டெனப் புரிந்துகொண்டார்.

குறுகிய காலத்துக்குள் மூன்று கம்பெனிகளுக்கு டெவலப்பிங் செய்து கொடுத்து அசத்தினார். முன்பைவிட அதிகமாக சம்பாதிக்க ஆரம்பித்தார். அவருடைய மகன் ஹிருத்திக் எம்.எஸ் முடித்துவிட்டார். அமெரிக்காவில் வேலையும் கிடைத்துவிட்டது. இன்னும் ஒரு மாதத்தில் பணியில் சேர்ந்துவிடுவார் என்பதால், மகனைப் பற்றிய கவலை எதுவும் ஆனந்துக்கு இல்லை.

மகள் நிஷாவுக்கு திருமணம் முடித்ததும் அவருடைய 53-ம் வயதில் ஓய்வுபெற நினைக்கிறார். அவர் 2013-ல் என்னிடம் ஆலோசனைக் கேட்டு வந்தபோது, நிஷா 9-ம் வகுப்பு படித்துவந்தார். நிஷாவின் மேற்படிப்புக்காக ஏற்கெனவே 22 லட்சம் ஃபிக்ஸட் டெபாசிட்டில் வைத்திருந்தார். மூன்று வருடம் கால அவகாசம் இருப்பதால், 30% ஃபிக்ஸட் டெபாசிட்டிலும், 70% மியூச்சுவல் ஃபண்டிலும் மாற்றச் சொன்னேன். நிஷாவின் திருமணத்தை எளிமையாக நடத்தவே விரும்பினார். 2023-ல் 15 லட்சம் ரூபாய் தேவைப்படும் என ஆனந்த் சொன்னார். நான் 20 லட்சம் ரூபாய் இலக்கு வைத்து, மாதம் 29,000 ரூபாய் முதலீடு செய்யச் சொன்னேன். அவருக்கு செலவுகள் போக மாதம் மீதப்படும் தொகையே ரூ.2 லட்சம் வரை இருப்பதால், முதலீடு செய்ய சிரமப்படவில்லை.

ஆனந்த் 53 வயதில் ஓய்வுபெறும்போது மாதம் ரூ.50 ஆயிரம் தேவை என்றார். பணவீக்க விகிதப்படிப் பார்த்தால், அவருக்கு ஓய்வுபெறும் காலத்தில் மாதம் ரூ.1.25 லட்சம் தேவைப்படும். அதற்கு கார்பஸ் தொகையாக அவர் ரூ.2.8 கோடி சேர்க்க வேண்டும்.

ஏற்கெனவே அவர் மியூச்சுவல் ஃபண்டுகளில் ரூ.15.5 லட்சமும், பங்குச் சந்தையில் ரூ.17 லட்சமும், பிபிஎஃப்-ல் ரூ.14 லட்சமும்  முதலீடு செய்திருந்தார். அதன் மூலம் ரூ.1 கோடி கிடைக்கும். மேற்கொண்டு  தேவைப்படும் கார்பஸ் தொகைக்கு முதலீட்டு வழிகளை ஏற்படுத்திக் கொடுத்தேன்.

அவருடைய நண்பர்கள் செய்யும் ஸ்டார்ட் அப் பிசினஸில் ரூ.25 லட்சம் முதலீடு செய்திருந்தார். அந்த பிசினஸ் நன்றாகப் போய்கொண்டிருந்தது. ஓய்வு பெறும்போது அதன் மூலம் ரூ.55 லட்சம் கிடைக்கக்கூடும். ஓய்வு பெற்றதும் அவர் என்ஜிஓ ஆரம்பிக்க ஆசைப்படுகிறார். அந்தப் பணத்தில் 50% எடுத்து அவர் தனது என்ஜிஒ கனவை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

நான் சொன்னபடி செய்த ஆனந்த், இப்போது நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார். 
             
(கற்போம்)

நீங்களும் உங்கள் நிதித் தவறுகளைச் சொல்லித் தீர்வு பெறலாம். அனுப்ப வேண்டிய மெயில்
முகவரி : finplan@vikatan.com