
?நான் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்.. ஆண்டுதோறும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்து வருகிறேன். நடப்பு நிதி ஆண்டில், கடந்த மாதம் வரை ரூபாய் 6.50 லட்சம் வரை கமிஷன் வாங்கியுள்ளேன். எனக்கு பங்குச் சந்தையில் ஆழ்ந்த அனுபவம் உள்ளது. எனவே, எனக்கு வந்துள்ள கமிஷன் பணத்தில் 5 லட்சம் ரூபாயும், மேலும் கடனாக 10 லட்சம் ரூபாய் பெற்றும், குறுகிய கால பங்கு வர்த்தகத்தில் தினமும் ஈடுபட உள்ளேன். இதன் மூலம் கிடைக்கும் லாபத்துக்கு எப்படி வரி கட்ட வேண்டும்?


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
எஸ்.ஆனந்தன், வேலூர்
கே.ஆர்.சத்தியநாரயணன், ஆடிட்டர்.
“ரூபாய் 6.50 லட்சம் கமிஷன் என்னும்போது அது வணிக வருவாயாகக் கருதப்படும். ஆகையால் இதற்கு வருமான வரி செலுத்த வேண்டி வரும். இன்ஷூரன்ஸ் சேவை வழங்க செலவிடப்பட்ட பணத்துக்கு வருமான வரிக்காக, உங்களுடைய வருவாயில் இருந்து கழித்துக்கொள்ளலாம். உதாரணத்துக்கு, பயணச் செலவு, ஜெராக்ஸ் செலவு, தொலைபேசி செலவு, சேல்ஸ் புரமோஷன் செலவு உள்பட பல தரப்பட்ட செலவுகளுக்கும் பில் இருந்தால், அவற்றை ஆதாரமாகக் காட்டி கிளெய்ம் செய்துகொள்ளலாம். மீதிப் பணத்தை மட்டும் வருவாயாகக் காட்டலாம்.
குறுகிய கால பங்கு வணிகத்தில் ஈடுபட்டு, அதிலிருந்து லாபம் வந்தால், அது வர்த்தகமாகக் கருதப்பட்டு, அதற்கு 20% வரி விதிக்கப்படும். அதே நேரத்தில், கடன் வாங்கி முதலீடு செய்வதால், வரும் லாபத்தை வட்டியிலிருந்து கழித்து, மீதமுள்ள லாபத்துக்கு வரி கட்டினால் போதும்.
ஆனாலும், கடன் வாங்கி பங்கு வர்த்தகம் செய்வது சரியான யோசனை அல்ல. பங்கு வர்த்தகம் என்பது மிகுந்த ரிஸ்க் உடையது என்பதால், கடன் வாங்கி அதை பங்குச் சந்தையில் போட்டு வர்த்தகம் செய்வது கூடாது.”
?கரூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட (நிறுவனப் பதிவு) நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அரசாங்கத்தைப் பொறுத்தவரை, ஆர்பிஐயிடம் பதிவு செய்துகொண்ட என்.பி.எஃப்.சி. நிறுவனங்களே பதிவு பெற்ற நிதி நிறுவனங்களாக அங்கீகரிக்கப்படுகின்றன. நிதி நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியில் எவ்வாறு பதிவு செய்து அனுமதி பெறுவது, இதற்கு எவ்வளவு செலவாகும்?

பாலசுப்ரமணியன், கரூர்,
சொக்கலிங்கம் பழனியப்பன், இயக்குநர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட்.
“இந்தியாவில் நிதி சார்ந்த தொழில் செய்வதற்கு வங்கிசாரா நிதி நிறுவனமாக (NBFC – Non-Banking Financial Company) மத்திய ரிசர்வ் வங்கியில் நீங்கள் முதலில் பதிவு செய்துகொள்ள வேண்டும். டெபாசிட் எடுக்காத (Non Deposit Taking) நிதி நிறுவனமாகத்தான் நீங்கள் பதிவு செய்ய முடியும். புதிதாகத் துவங்கும் நிறுவனங்களை டெபாசிட் திரட்டுவதற்கு ரிசர்வ் வங்கி அனுமதிப்பதில்லை.
நீங்கள் என்.பி.எஃப்.சி ஆக பதிவு செய்வதற்கு உங்கள் நிறுவனம் பிரைவேட் லிமிடெட் அல்லது பப்ளிக் லிமிடெட் ஆக பதிவு செய்திருக்க வேண்டும். குறைந்தபட்ச மூலதனம் ரூ.2 கோடியாக (மைக்ரோ ஃபைனான்ஸ் என்.பி.எஃப்.சி-க்கு ரூ.5 கோடி) இருக்க வேண்டும். ஆர்பிஐ-க்கு உங்கள் விண்ணப்பத்தை https://cosmos.rbi.org.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் பதிவு செய்துவிடலாம். என்.பி.எஃப்.சி ஆரம்பிப்பது தொடர்பாக மேலும் விவரம் அறிந்துகொள்ள https://www.rbi.org.in/Scripts/FAQView.aspx?Id=92 என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.”
?நான் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு குறைந்தது மாதம் 10,000 ரூபாய், கடன் சார்ந்த ஃபண்டுகளில் முதலீட்டை மேற்கொள்ளலாம் என திட்டமிட்டுள்ளேன். இது சரியான அணுகுமுறையா?

செல்வராஜ், கன்னியாகுமரி
ராம.பெரியண்ணன், நிதி ஆலோசகர்
“மாதம் 10,000 ரூபாய் முதலீட்டை மேற்கொள்வதற்கு கீழ்வரும் ஃபண்டுகளில் ஒவ்வொரு ஃபண்டிலும் தலா 2,500 ரூபாயாகப் பிரித்து முதலீட்டினை மேற்கொள்ளலாம். ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் கார்ப்பரேட் பாண்ட் ஃபண்ட், ஃபிராங்கிளின் இந்தியா கார்ப்பரேட் பாண்ட் ஃபண்ட் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி கார்ப்பரேட் பாண்ட் ஃபண்டில் முதலீடு மேற்கொள்ளலாம். இவை ஆண்டுக்கு 10% முதல் 11% வருமானம் தரக்கூடியவை. இவை தவிர்த்து, யூடிஐ இன்கம் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், ரிலையன்ஸ் ரெகுலர் சேவிங்ஸ் டெட் மற்றும் பிர்லா சன் லைஃப் மீடியம் டேர்ம் ஃபண்ட் ஆகிய ஃபண்டுகளில் முதலீட்டை மேற்கொள்ளலாம். இவையும் ஆண்டுக்கு 10-11% வரை வருமானம் தரக்கூடியது.”
?என் வங்கிக் கணக்கில் இருந்து வீட்டுக் கடனைச் செலுத்தி வருகிறேன். வீட்டுக் கடனுடன் எனது மனைவியின் வங்கிக் கணக்கையும் இணைத்து, அந்தக் கணக்கில் இருந்தும் கடனைச் செலுத்த முடியுமா? இதற்கான நடைமுறை என்ன?

சண்முகநாதன், மதுரை,
ஈ.எஸ்.முருகானந்தம், ஆடிட்டர், ஈரோடு
“உங்கள் மனையும், வீடும் உங்கள் பெயரில் இருக்கும்பட்சத்தில், நீங்கள் செலுத்தும் வங்கி, கடனுக்கான வட்டி மற்றும் அசல் தொகையை உங்கள் வருமானத்திலிருந்து மட்டுமே கழித்துக் கொள்ள இயலும்.
மனைவியின் வங்கிக் கணக்கிலிருந்து, உங்கள் வீட்டுக் கடனுக்குச் செலுத்தப்படும் தொகைக்கு வருமான வரிக் கழிவு கிடைக்காது. நீங்கள் வருமான வரி செலுத்துபவராக இல்லாதபட்சத்தில், உங்கள் மனைவியின் வங்கிக் கணக்கை உங்களது வீட்டுக் கடனுடன் இணைத்துக் கொள்வதில் தவறில்லை. இதற்கான வழிமுறைகளை வங்கிகளில் கேட்டு அறிந்துகொள்ளுங்கள்.’’
?என்னுடைய வணிகத்துக்காக பிஓஎஸ் இயந்திரம் வாங்கலாம் எனத் திட்டமிட்டுள்ளேன். இதை எங்கே, எப்படி, யாரிடம் வாங்குவது? இதை வங்கிக் கணக்குடன் இணைப்பது எப்படி? இதற்கான நடைமுறைகள் என்ன?

அர்ஜூன் விழுப்புரம்,
சந்தீப், தனியார் வங்கி அதிகாரி
“வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் பிஓஎஸ் இயந்திரங்களை விநியோகம் செய்கின்றன. பிஓஎஸ் இயந்திரங்களை வங்கியிடம் வாங்குவதிலும், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களிடம் வாங்குவதிலும் வித்தியாசம் உள்ளது. வங்கி அல்லாத நிதி நிறுவனத்திடம் வாங்கினால் பணப் பரிவர்த்தனை தாமதம் ஆகும். அதாவது, உங்களுடைய வங்கிக் கணக்குக்குத் தாமதாகப் பணம் வந்தடையும்.
பிஓஎஸ் இயந்திரம் வாங்க, உங்களுக்கு எந்த வங்கியில் கணக்கு உள்ளதோ, அந்த வங்கிக் கிளைக்கு சென்று, கேஒய்சி ஆவணங்களைச் சமர்ப்பித்து வாங்கிக் கொள்ளலாம். இல்லையெனில் வேறு ஒரு வங்கியிடம் பெற்றுக்கொள்ளலாம். பிஓஎஸ் இயந்திரங்களைப் பொறுத்தவரை, மாத வாடகையாக ரூ.150-லிருந்து ரூ.650 வரை இருக்கும். உங்களுக்கு பிஓஎஸ் இயந்திரங்களை வழங்குகிறவர்களே, உங்கள் வங்கிக்கணக்கை பிஓஎஸ் இயந்திரங்களுடன் இணைத்துக் கொடுப்பார்கள்.”
போன் மூலமாகவும் கேள்வி கேட்கலாம்!
இனி நீங்கள் போன் மூலமாகவும் கேள்விகளை பதிவு செய்யலாம். அதற்கு 044- 66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழி காட்டும்; அதன்படி உங்கள் குரலிலேயே கேள்விகளை பதிவு செய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த ஒரு நிமிடம் முழுக்க முழுக்க உங்களுக்கே!
உங்கள் எண்ணங்களை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்!
facebook.com/naanayamvikatan

twitter.com/nanayamvikatan
எவ்வித கட்டணமும் இல்லாமல் ஏராளமான தகவல்களைப் படித்து பயன்பெறுங்கள்!
nanayam.vikatan.com
கேள்விகளை அனுப்புகிறவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com.