மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்ட பல்வேறு பாதிப்புகளை, சென்னையில் நடந்த அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் நடந்த கூட்டத்தில் புட்டுப்புட்டு வைத்தார்கள் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள். இந்தக்கூட்டத்தில் பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயா, முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன், வணிகர் சங்கப் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா உள்பட பலரும் கலந்துகொண்டு பேசினார்கள். முதலில் பேசிய பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயா, ‘‘கறுப்புப் பணத்தை ஒழிக்க ரூபாய் நோட்டுகளைச் செல்லாமல் ஆக்கியது அபத்தமானது. மொத்தத்தில் 5-6% மட்டுமே கறுப்புப் பணம் என்கிறது ஆய்வு. அப்படி இருக்கும் போது, ரூபாய் நோட்டுகளைச் செல்லாமல் ஆக்கியது ஒருபோதும் கறுப்புப் பணத்தை ஒழிக்காது” என்றார்.

அடுத்ததாகப் பேசிய முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன், “இந்த நடவடிக்கை கறுப்புப் பணத்தை ஒழித்திருக்கிறதா, இல்லையா என்பது விவாதத்துக்குரியது. ஆனால், ரூபாய் நோட்டுகளைச் செல்லாமல் ஆக்கியதைத் தொடர்ந்து, கேஷ்லெஸ் எகானமி முன்னெடுப்பு கணிசமாக பல துறைகளின் வளர்ச்சிக்குச் சாதகமாக இருக்கும்” என்றார்.
வணிகர் சங்கப் பேரவை தலைவர் விக்கிரமராஜா, “அரசின் நடவடிக்கையால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப் பட்டார்கள். கேஷ்லெஸ் எகனாமி என்கிறார்கள். அதற்கு ஸ்வைப் மெஷின், மின்சாரம், நெட்வொர்க் முழுமையாக வரவில்லை” என்று பேசினார். தொழில்முனைவோர் கூட்டமைப்பின் தலைவர் ரகுநாதன், “தொழில்முனைவோர் தங்களது தொழிலாளர்களுக்குப் பணம் தரமுடியாமல் தவிக்கிறார்கள். இதனால் அனைத்துத் துறைகளிலும் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.
இறுதியாக பேசிய அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கத் தலைவர் தாமஸ் ஃப்ரான்கோ, ‘‘இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” என்று முடித்தார்.
படம்: ப.சரவணகுமார்
