Published:Updated:

மோடி அதிரடி... காணாமல் போகும் வட்டிக் கடைகள்!

மோடி அதிரடி... காணாமல் போகும்  வட்டிக் கடைகள்!
பிரீமியம் ஸ்டோரி
மோடி அதிரடி... காணாமல் போகும் வட்டிக் கடைகள்!

துரை.வேம்பையன்

மோடி அதிரடி... காணாமல் போகும் வட்டிக் கடைகள்!

துரை.வேம்பையன்

Published:Updated:
மோடி அதிரடி... காணாமல் போகும்  வட்டிக் கடைகள்!
பிரீமியம் ஸ்டோரி
மோடி அதிரடி... காணாமல் போகும் வட்டிக் கடைகள்!
மோடி அதிரடி... காணாமல் போகும்  வட்டிக் கடைகள்!

பிரதமர் மோடியின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையினால் சாதாரண மக்களுக்கு பல பாதிப்புகள் ஏற்பட்டாலும், முக்கியமானதொரு விஷயமும் நடந்திருக்கிறது. வட்டிக் கடைகள் ஏறக்குறைய முடிவுக்கு வந்திருப்பதுதான் அது. முக்கியமாக, கொங்கு மண்டலத்தில் ஜோராக நடந்துவந்த வட்டிக்கடைகள் இன்று செயல்பட முடியாத நிலையை அடைந்துள்ளன.

கரூர் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த கோபால் இப்படிச் சொன்னார். “கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையினால நாங்க ரொம்ப பாதிக்கப் பட்டிருக்கோம். பேங்குல நாங்க போட்ட பணத்தையே திரும்ப எடுக்குறதுக்குள்ள படாதபாடு படறப்ப, பேங்க் மூலமா புதுசா கடன் வாங்குறதுக்கு வாய்ப்பே இல்லை. பேங்க்ல எங்களுக்குக் கடன் கிடைக்காதப்ப எல்லாம், எங்களுக்கு நம்பிக்கையின் பேரில், பணம் கொடுத்து வந்தது ஃபைனான்ஸ் கம்பெனிங்கதான். ஆனா, கடந்த இரண்டு மாசமா வட்டிக்கடைங்களோட செயல்பாடு கால்வாசியா குறைஞ்சுடுச்சு. இதனால அவசரத் தேவைக்குப் பணம் கிடைக்காம நாங்க சிரமப்படுகிறோம்.

பேங்குகளைவிட வட்டி இரண்டு மடங்கு அதிகம்னாலும், போன உடனே பணம் கிடைக்கும். பே சிலிப், வீடு மற்றும் நிலப் பத்திரங்கள், ஜாமீன் கையெழுத்துப் போட ஆட்கள்ன்னு வங்கிகளில் கேட்கும் நடைமுறை விஷயங்கள் எதையும் கேட்க மாட்டங்க. அப்படிப்பட்ட  நிறுவனங்கள் இப்ப இல்லாமப் போனதால, பொதுமக்களாகிய நாங்க அவசரத் தேவைக்கு பணம் கிடைக்காம அல்லாடிக் கிடக்குறோம்’’ என்று கசந்துகொண்டார்.

வட்டிக்கடை நடத்துவதில் என்ன பிரச்னை என்பதைத் தெரிந்துகொள்ள, அந்தத் தொழில் செய்துவரும் பலரை சந்தித்துப் பேசினோம். இது சம்மந்தமாக நம்மிடம் பேசினார் கரூர் மாவட்ட அனைத்து வர்த்தகச் சங்கக் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவரும், ராஜா ஃபைனான்ஸ் உரிமையாளருமான வழக்கறிஞர் ராஜுவுடன் பேசினோம்.

“தமிழகத்தில் வடக்கே இருந்துவந்த மார்வாடிகள்தான் வட்டிக்கடை பிசினஸை தமிழகத்தில் அதிகம் தொடங்கி நடத்தினார்கள். அவர்களைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட சில சமூகத்தினர் வட்டித் தொழில் பிசினஸில் குதித்தார்கள். வட்டியும் ஓரளவு நியாயமாக வாங்கினார்கள். நாங்களும் அவர்களைத் தொடர்ந்து நியாயமான வட்டிக்குப் பணம் கொடுக்கத் தொடங்கினோம்.

தற்போது கரூரில் மட்டும் சின்னதும், பெரிதுமாக 4,000 ஃபைனான்ஸ் கம்பெனிகள் இருக்கின்றன. இவை தவிர, வெளியில் தெரியாமல் வட்டிக்குப் பணம் கொடுப்பவர்கள் 5,000 பேர் இந்த மாவட்டத்தில் மட்டுமே இருக்கிறார்கள். இன்னும் ஈரோடு, நாமக்கல், திருப்பூர், சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பல லட்சம் பேர்  வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலை செய்து வந்தார்கள்.   

மோடியின் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையால் மற்ற எல்லா தொழில்களை விடவும் எங்க தொழில் சுத்தமாக முடங்கிப் போனது. அதிக அளவில் பணம் புழங்கும் வங்கிகளிலேயே பணத்தட்டுப்பாடு ஏகத்துக்கும் தலைவிரித்தாடும்போது, எங்கள் நிலைமை இன்னும் மோசம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மோடி அதிரடி... காணாமல் போகும்  வட்டிக் கடைகள்!

சாதாரண காலத்திலேயே பலரும்  வாங்கிய பணத்தைத் திருப்பி தரமாட்டார்கள்.  இப்போ,  பணத்தட்டுப்பாடு வேறு நிலவுவதால், எங்களிடம் கடன் பெற்ற 75 சதவிகித மக்களால் பணத்தை திருப்பிச் செலுத்த முடியவில்லை. வட்டியைக்கூட பலர் இரண்டு மாதங்களாகக் கட்டவில்லை. இதனால் பணம் முடங்கிப் போய்விட்டது. அதனால்,  எங்களால் புதிதாக யாருக்கும் கடன் தரவும் முடியவில்லை.

இந்தத் தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கணக்கு காட்டுவதிலும் சிக்கல் இருக்கிறது. இந்தத் தொழில் கடந்த இரண்டு மாதங்களாக அழிவுப்பாதைக்குப் போய்க்கிட்டிருக்கு. இனி இந்தத் தொழிலை மீட்டெடுக்க முடியுமான்னு தெரியலை. பலரும் வாங்கிய கடனுக்கு உண்டான அசலையோ, வட்டியையோ செக் மூலமா தர்றாங்க. அவை வங்கிகளில் பணம் இல்லைன்னு திரும்பும்போது, எங்களால் கோர்ட்டில் மட்டுமே கேஸ் போடக்கூடிய நிலைமை. அந்த வழக்குகளும் வருடக் கணக்கில் இழுத்தடிக்கப்படுகின்றன. இதனால் பணவிரயமும், காலவிரயமும், மன உளைச்சலும் எங்களுக்கு ஏற்படுது.

கடந்த இரண்டு மாதமாக செக் பவுண்ஸ் பிரச்னை 30 மடங்கு அதிகமாகி இருக்கிறது.  அதனால், பலரும் இந்தத் தொழிலை விட்டுவிடக்கூடிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்காங்க.     

போக்குவரத்துத் தொழில் செய்பவர்கள் எங்களிடம் அதிகம் வரவு, செலவு வைத்துள்ளார்கள். அவர்களுக்கு நாங்கள் கடன் கொடுப்பது குறைந்ததால், ரொக்கமாக அவர்களுக்குப் பண ரொட்டேஷன் கிடைப்பது தடைப்பட்டு, அதனால் ஏற்றுமதி, இறக்குமதி வரி கொடுப்பது, மாமூல் கொடுப்பது, டிரைவர் பேட்டா, வாகனங்களுக்கு டீசல் அடிப்பது, ஏத்துக்கூலி, இறக்குக்கூலி கொடுப்பதுன்னு பல விஷயங்களுக்கும் பிரச்னை ஏற்படுறதா சொல்றாங்க.

அதேபோல், கிராமங்களில் உடனடியாக ஏற்பாடு செய்யப்படும் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள், அபகாரியங்களின்போது உடனே அவர்கள் பணம் பெறுவது எங்களிடம்தான். திருமணத்துக்குக் கொடுக்கும்போது 1.5% வட்டியாக வாங்குகிறோம். வாகனங்களுக்குக் கடன் தொகை அதிகம் இருப்பதால், அதில் கொஞ்சம் கூடுதல் வட்டி கேட்போம். இப்ப உள்ள நிலைமையைப் பார்த்துட்டு நாங்களும் தொழிலை மாத்திக்கலாமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கோம்” என்றார்.

பட்டுக்கோட்டையில் வட்டித் தொழில் செய்துவரும் கரூர் ஈசநத்தம் பகுதியைச் சேர்ந்த ரவி, “கடந்த இரண்டு மாசமா பண ரொட்டேஷன் குறைஞ்சுட்டதால், இப்போ புதிதாக யாருக்கும் கடன் கொடுப்பதில்லை. இந்த நடவடிக்கையால இனி நாங்க விரும்பினாலும் இந்தத் தொழிலை செய்ய முடியாது போலிருக்கிறது.

மத்திய அரசு கொண்டுவர உள்ள பணமில்லாப் பரிவர்த்தனையாலும் எங்க தொழிலை சுத்தமா நடத்த முடியாத சூழல் ஏற்படப் போகுது. இனி ஸ்வைப்பிங் மெஷின் மூலம் பணம் கொடுத்தாலும், இதை வியாபாரமாகக் காட்ட முடியாது. இதை வட்டித் தொழிலாக காட்டும்போது, இப்போது நாங்கள் வாங்கும் வட்டியை (மாதம் 3%) வாங்க முடியாது. வட்டியை நாங்கள் குறைக்க நேர்ந்தால், எங்களுக்கு இந்தத் தொழிலில் பலத்த நஷ்டம் ஏற்படும்.

தவிர, நாங்கள் இந்தத் தொழிலில் சம்பாதித்த பணத்தைக் கணக்கு காட்டுவதிலும் பல சிக்கல் இருக்கு. அப்படியே காட்டினாலும், பெருமளவு அபராதம் கட்டணும். இதனால் நாங்கள் கடனில் மூழ்கும் நிலை வரும். இனி தொழில் செய்தாலும், அதில் வரும் வருமானத்துக்கு வரி கட்டணும். அதை ஈடுகட்ட நாங்கள் மக்களிடம்தான் அதிக வட்டி வாங்க நேரிடும். அதனால், நாங்கள் வேறு தொழிலுக்கு மாறக்கூடிய சூழல் உள்ளது.

நான் கொஞ்சம் நிலம் வாங்கிப் போட்டிருக்கேன். அதை வைத்து நான்  இந்தத் தொழிலை விட்டுவிட்டு விவசாயத்துக்கு தாவிவிட முடியும். அதேபோல், மற்ற வட்டித் தொழில் பிசினஸ் செய்பவர்களும் உடனே வேறு தொழிலுக்கு போய்விட முடியும்.

வட்டித் தொழில் செய்பவர்களில் 60% பேர் ஏற்கெனவே மாற்றுத் தொழில் செய்துகொண்டு வருபவர்களாகவே இருக்கிறார்கள். அதனால் இந்த வட்டிக்கடை தொழில் அழிந்தால், அதிகம் பாதிக்கப்பட போவது எங்களையே நம்பி இருந்த பல லட்சம் அடித்தட்டு, நடுத்தர வர்க்க மக்கள்தான். அவசரத் தேவைக்கு உடனடிப் பணம் கிடைக்காமல் அவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகப் போவது உறுதி.

ஆனால், இந்த தொழிலில் இருந்து எங்களை அப்புறப்படுத்திவிட்டு, பிற்பாடு பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு இந்தத் தொழிலை செய்ய அனுமதிக்கக்கூடாது. அவர்கள் கைகளில் இந்தத் தொழில் சென்றால், எங்களைவிட பல மடங்கு வட்டியை மக்கள் கொடுக்குற மாதிரி இருக்கும்.

பணத்தைத் திருப்பிப் பெறுவதிலும் மக்களிடம் அடாவடியை வெளிப்படுத்துவார்கள். மக்களுக்கு ஏற்படும் பிரச்னையைக் கணக்கில் கொண்டாவது எங்கள் தொழிலுக்கு மத்திய அரசு சில சலுகைகளை அறிவிக்க வேண்டும்” என்றார்.   

சாதாரண மக்களுக்கு நியாயமான வட்டியில் எளிதில் கடன் கிடைக்க மத்திய அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?

படங்கள்: செ.ராபர்ட்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism