Published:Updated:

அன்று க்ளீனர்... இன்று முதலாளி! - வியக்கவைக்கும் ஃப்ளாஷ்பேக்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அன்று க்ளீனர்... இன்று முதலாளி! - வியக்கவைக்கும் ஃப்ளாஷ்பேக்...
அன்று க்ளீனர்... இன்று முதலாளி! - வியக்கவைக்கும் ஃப்ளாஷ்பேக்...

உ.சுதர்சன் காந்தி

பிரீமியம் ஸ்டோரி
அன்று க்ளீனர்... இன்று முதலாளி! - வியக்கவைக்கும் ஃப்ளாஷ்பேக்...

நாமக்கல் - கோழிமுட்டை உற்பத்தியும் லாரி தொழிலும் கொடிகட்டிப் பறக்கும் மாவட்டம். இங்கு இருக்கும் லாரிகள் மூலமாகத்தான் இந்தியா முழுவதும் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்தத் தொழிலை நல்லபடியாகச் செய்வது மிகவும் சவாலான ஒன்று. இந்தத் தொழிலை 15 வருடங்களுக்கு  மேலாக சிறப்புடன் நடத்தி, அதில் பல இன்னல்களைச் சந்தித்து, இப்போது நல்ல நிலைமையில் உள்ள ஒருவரைச் சந்தித்தோம்.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள தொட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி, 15 வருடங்களாக லாரி போக்குவரத்து தொழிலை நடத்திவருகிறார். அவர் தனது அனுபவங்களையும் அவர் கடந்துவந்த முள்பாதைகளையும் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

``நான்  படிப்பை 12-ம் வகுப்புடன் முடிச்சுட்டேன். அதுக்கு மேல படிக்க வீட்ல வசதியும் இல்லை, எனக்கும் படிப்பு ஏறலை. அதனால், மோட்டார் தொழிலுக்கு வந்துட்டேன். இதுக்குக் காரணம், என் சொந்தக்காரர் சுப்பிரமணிதான். அவர் லாரி டிரைவராக வேலை செய்தார். அவரைப் பார்த்து எனக்கும் அவரைப் போல் சம்பாதிக்க நினைத்தேன். அதனால் அவருடன் ஒருமுறை நாமக்கல்லில் இருந்து டெல்லி வரை போனேன். அப்போது அவர் என்னவெல்லாம் செய்தார்ன்னு கவனித்தேன்.

கடைசியாக அவர் சம்பளம் வாங்கினபோது ‘நானும் இந்த மாதிரி சம்பாதிக்க என்ன பண்ணனும்’னு கேட்டேன்.  அதற்கு, ‘நீ என்னைப் போல் ஆகணும்’ என்றார். அவர் பேச்சைக் கேட்டுத் துணிந்து இந்தத் தொழிலில் இறங்கினேன்.

 1985-ல் லாரி க்ளீனராக வாழ்க்கையை ஆரம்பித்தேன். இரவு பகல் பார்க்காமல், வீட்டுக்குக்கூட போகாமல் கடுமையாக உழைத்து, வருமானத்தைப் பார்க்கணுங்கிற ஒரே நோக்கத்தோடு ரெண்டு வருஷம் கஷ்டப்பட்டு, 1987-ல் லாரி டிரைவர் ஆனேன். கொஞ்சம் அனுபவம் இருக்கிறது என்று என்னை நம்பி பொருட்களை என்னிடம் கொடுத்து அனுப்பினார் என் முதலாளி.

இப்படியே வாழ்க்கை கொஞ்ச நாளைக்கு ஓடியது. என் முதலாளியைப் பார்த்து,  தனியா ஒரு லாரி வாங்கி அதை நடத்துனா என்ன என்ற கேள்வி எனக்குள்ள எழ ஆரம்பிச்சுது. அப்புறம் என் முதலாளியிடம் போய், ‘எனக்கு ஒரு வண்டி வாங்க உதவி பண்ணுங்க’ன்னு கேட்டேன். ஆரம்பத்தில் அவர் எனக்கு உதவி செய்யத் தயங்கினார். ஏன்னா, இவன் இந்தத் தொழிலை எப்படி  நடத்துவானோங்கிற பயம்தான். அப்புறம் நல்லா யோசிச்சு சரின்னு சொன்னார்.       KA 01 5893-தான் என் பேருல வாங்கின முதல் வண்டியின் ரிஜிஸ்டர் நம்பர்.  1994-ல் வாங்கின இந்த வண்டிக்கு 1997-ல் தவணை முடிஞ்சுது. அப்ப என்னை நம்பி எனக்கு உதவி செஞ்சது என் முதலாளிதான்” என்று உணர்ச்சி பொங்க தன் முதலாளியின் மேல் இருந்த விசுவாசத்தை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து பேசிய பெரியசாமி, ``வங்கியில் கடன் பெற்று, அந்த லாரியின் மூலம் வந்த கொஞ்ச பணத்தை வைத்து அடுத்து ஒரு லாரி வாங்கினேன்.  எப்பவும் ஏற்றுவதுபோல் அரிசி லோடு ஏற்றி டிரைவர் லாரியை ஓட்டிச்சென்றார். கோவில்பட்டி அருகே ஒரு இடத்தில் வருமான வரியினர் சோதனை செஞ்சப்ப, எங்க லாரில இருந்த அரிசி ரேஷன் அரிசின்னு தெரிய வந்துச்சு. இந்த காரணத்தினால லாரியையும் டிரைவரையும் கைது செஞ்சுட்டாங்க. இந்த பிரச்னையில எனக்கு ரெண்டு லட்சம் ரூபாய் நஷ்டமாச்சு. இதுல மனம் நொந்து நமக்கு இந்தத் தொழில் சரிவராது, திரும்பவும் டிரைவராகவே போயிடலாம்னு நினைச்சு பயந்தேன்.

அப்பதான் பக்கத்து ஊரைச் சேர்ந்த ஷங்கர் என்னும் நண்பர் என்னுடன் பங்குதாரராகச் சேர்ந்து, அவருடைய உழைப்பும் என்னுடைய உழைப்பும் சேர, இன்னொரு லாரி வாங்கினோம். ஒருமுறை இங்கிருந்து வட மாநிலத்துக்கு முந்திரி பருப்பை ஏற்றிக்கொண்டு லாரி சென்றது. அப்போது இரவில் டிரைவர் தூங்கிக் கொண்டிருந்தபோது, திருடர்கள் வந்து முந்திரிப் பருப்பு மூட்டையைத் திருடிச்சென்றனர். இதனால் ரூ.3 லட்சம் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. மேலும், ஒரு பங்குதாரரை மலைபோல் நம்பியிருந்தேன். ஆனால், அவர் நம்பிக்கை வீண்போகும் விதமாக நடந்துகொண்டார். இதனால் ரூ.4.5 லட்சம் எனக்கு இழப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்துக்குப் பிறகு, நான் யாரையும் நம்புவதில்லை. யாரையும் பங்குதாரராக நான் சேர்த்துக்கொள்ளவில்லை. பின், தனியாக பணம் போட்டு கடன் வாங்கி தொழிலை நடத்தி, படிப்படியாக உயர்ந்தேன். இன்றைக்கு என்னிடம் 15 லாரிகள் உள்ளன’’ என்று அவர் தன் வளர்ச்சியைப் பற்றி சொல்லும் போது, அவர் கண்களில் ஒரு சாதித்த உணர்வு தெரிந்தது.

“நான் இந்த அளவு வளர்ந்திருக்கிறேன் என்றால், அதற்கு முக்கிய பங்கு டிரைவர்களையே சாரும். இந்தத் தொழிலில் முக்கிய பிரச்னை, ஓட்டுநர் பற்றாக்குறை. இதைச் சமாளிக்க அவர்களின் குடும்பச் செலவுகளையும் பார்த்து வருகிறேன், இதனால் ஓட்டுநர்கள் மத்தியில் நல்ல மதிப்பு கிடைத்துள்ளது. முதலாளி தொழிலாளி என நான் பாகுபாடு பார்ப்பதில்லை. எப்போதாவது டிரைவர்  இல்லாதபட்சத்தில் நானே வண்டியை ஓட்டிச்சென்று பொருட்களை நல்லபடியாக சேர்த்து விடுவேன்’’ என்று உற்சாகம் குறையாமல் பேசினார் பெரியசாமி. 

‘‘நான் தொழில் செய்யத் தொடங்கியபிறகு வீட்டுக்கே அதிகம் செல்லமாட்டேன். அப்போது என் மனைவி லட்சுமிதான் வீட்டை நல்லபடியாக பார்த்துக் கொண்டார்.  ஆரம்ப காலங்களில் என் குழந்தைக்கு இரண்டே இரண்டு செட் துணிகள் மட்டுமே இருந்தன. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நன்றாகப் படித்தான்’’ என்று தன் குடும்பத்தைப் பற்றி பெருமை பொங்கப் பேசிய பெரியசாமியை எவ்வளவு பாராட்டினாலும் நிச்சயம் தகும்.

படம்:  க.சுகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு