Published:Updated:

முன்னேற வைக்கும் முடிவெடுக்கும் கலை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
முன்னேற வைக்கும் முடிவெடுக்கும் கலை!
முன்னேற வைக்கும் முடிவெடுக்கும் கலை!

நாணயம் லைப்ரரி!

பிரீமியம் ஸ்டோரி
முன்னேற வைக்கும் முடிவெடுக்கும் கலை!

புத்தகத்தின் பெயர்: த பவர் ஆஃப் ஃபிஃப்டி பிட்ஸ் (The Power of Fifty Bits)

முன்னேற வைக்கும் முடிவெடுக்கும் கலை!ஆசிரியர்: Bob Nease

பதிப்பாளர்: ஹார்பர் காலின்ஸ்

ல்ல எண்ணங்களை நல்ல நடைமுறை பலன்களாக மாற்றிக்கொள்வது எப்படி என்பதைச் சொல்லும் புத்தகம்தான் ‘த பவர் ஆஃப் ஃபிஃப்டி பிட்ஸ்.’

புத்தகத்தின் நோக்கம்!

மனிதன் இயல்பாகவே வாழ்வில் பிரச்னைகளை சுலபத்தில் ஏற்படுத்திக்கொள்பவன். வியாபாரம், நிதி, உடலைப்பேணுதல், உறவுகள் என்ற எதிலும் பிரச்னைகளைச் சுலபத்தில் ஏற்படுத்திக் கொள்வதில் மனிதனுக்கு நிகர் மனிதனேதான்.  பிரச்னைகளை ஏற்படுத்திக்கொண்டபின், அதைப் பற்றி கவலைப்படாமல் இருக்கிறோமா என்றால் அதுவும் இல்லை. நாமே பிரச்னைக்கு மூலகாரணமாக இருந்துகொண்டு பிரச்னையைப் பற்றியே கவலைப்படுகிறோம். ஏன்?

நிமிடத்துக்கு 10 மில்லியன் பிட்ஸ்!

நமது மூளை ஒரு நிமிடத்துக்கு பத்து மில்லியன் பிட்ஸ் அளவிலான தகவல்களை கையாளவல்லது. ஆனால், நம் அன்றாடச் செயல்பாடுகளின்போது 50 பிட்ஸ் அளவிலான தகவல்களை மட்டுமே கையாண்டு செயல்படுகிறோம். அதாவது, அந்த அளவுக்கான கவனக்குறைபாடுடனும், சற்று சோம்பேறித்தனத்துடனும் செயல்படுகிறோம். அதனாலேயேதான் நாம் எதிர்பார்ப்பதற்கும், நம் செயல்பாடுகளுக்கும் இடையே பெரிய இடைவெளி வந்துவிடுகிறது. 

மனிதர்கள் தர்க்கரீதியாக யோசித்து, காரண காரியங்களின் அடிப்படையில் முடிவுகள் எடுப்பதில்லை என்று கண்டுபிடித்தது இன்று, நேற்றல்ல. இப்போது நடக்கும் ஆராய்ச்சிகள் மூலம் இது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இப்படி பல்லாண்டு, பல்லாண்டு பல நூறு ஆண்டுகளாக இருந்துவரும் மனித மூளையின் ஆட்டோமேட்டிக்கான உள்ளுணர்வு ரீதியான செயல்பாடுகளை எப்படி மாற்றிக்கொள்வது என்பதற்கான வழிகளைச் சொல்வதுதான் இந்தப் புத்தகம்.

வளர்ப்பு நாயும், தெரு நாயும்!


எப்படியெல்லாம் நாம் சுலபத்தில் முடிவெடுக்கிறோம் என்று பாருங்கள். ஒரு இணையதளம் வாயிலாகப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் உங்களுடைய பர்ச்சேஸை முடிக்கும் தருவாயில் ஆதரவில்லாத வளர்ப்புப் பிராணிகளின் தங்குமிடத்துக்கான திட்டத்துக்காக  ஆதரவளிக்க விரும்பினால், கொஞ்சம் பணம் தாருங்கள் என்று கேட்டால், தந்துவிடுவீர்கள். அதே சமயம், தெருவில் திரியும்  பிராணிகளுக்கு தங்குமிடத்துக்கான திட்டத்துக்காக உதவுங்கள் என்றால், பணம் தரத் தயங்குகிறோம். ஏனென்றால், வளர்ப்புப் பிராணி என்றால், ‘‘அய்யோ பாவம், செல்லமாக வளர்ந்த பிராணி கஷ்டப்படுகிறதே’’ என நினைக்கிறோம். தெருவில் வளரும் பிராணி என்றால், அது ஏற்கனவே கஷ்டப்படுகிறதுதானே என்ற எண்ணம் வந்துவிடுகிறது.

 லாபம் பார்ப்பது, நஷ்டம் தவிர்ப்பது!

இரண்டாவது, மனிதர்கள் செயல்பாடு குறித்து மற்றொன்றைச் சொல்லலாம். லாபம் வருவதற்காகப் பாடுபடுவது, நஷ்டம் தவிர்ப்பதற்காகப் பாடுபடுவது என்ற இரண்டு நிலைகளில் பெரும்பாலான மனிதர்கள் நஷ்டத்தைத் தவிர்க்கவே பாடுபட முயற்சிப்பார்கள். குறைந்த விலைப் பொருள் ஒன்றை உயர்ந்த விலைப் பொருளுடன் ஒப்பிடும்போது, இது அதை விட விலை குறைந்தது என்று சொல்லி விற்பனைக்கு முயலாமல், இதைத் தேர்வு செய்வதன் (குறைந்த விலை பொருளை) மூலம் இவ்வளவு நஷ்டத்தைத் தவிர்க்கிறீர்கள் என்று சொன்னாலே, அதிகம் பேர் அதை நம்புகின்றனர் என்கிறது ஆய்வுகள்.

 அமேசான் ப்ரைம்!


‘அமேசான் ப்ரைம்’ என்ற சர்வீஸ் இருக்கிறது. அதில் குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாகச் செலுத்திவிட்டால், ஒரு வருடத்துக்கு நீங்கள் வாங்கும் பொருட்கள் பலவும் இலவசமாக டெலிவரி செய்யப்படும். ப்ரைம் வசதிக்கு கட்டணம் செலுத்திவிட்டு, பின்னால் ஒவ்வொரு முறை பொருட்கள் வாங்க முயலும்போதும் இந்தெந்தப் பொருட்களுக்கு ‘ஷிப்பிங் ஃப்ரீ’ என்று அமேசான் இணையதளம் ஆசை காட்டும். ஆர்டர் செய்யும்போதும் ‘ஷிப்பிங் ஃப்ரீ’ என்று உங்களுக்கு நினைவூட்டும். அமேசான் இதில் என்ன செய்கிறது? உங்களுக்கு அடுத்த வருடம் வரக்கூடிய நஷ்டத்தை பண்டல் செய்து வாங்கிக் கொண்டு லாபங்களை அவ்வப்போது கணக்கில் காட்டுகிறது.

இதுபோன்ற  எண்ணத்துக்கும்  செயல்பாட்டுக்கும் இடையே ஏற்படும் நடத்தை ரீதியிலான  இந்த இடைவெளி கவனக்குறைவாலும் சோம்பேறித் தனத்தாலும் மட்டுமே ஏற்படுகிறது என்கின்றன ஆய்வுகள். ஆனால், ஒவ்வொரு தனிமனிதனும் வெளிஉலகுக்கு எப்படித் தெரிய விரும்புகிறான்? எக்கச்சக்கமான தகவல்களை உள்வாங்கிக் கொண்டு முடிவுகளை எடுக்கத்துடிக்கும் ஒரு மனிதனாகத்தான். அடிப்படையில் குறைந்த தகவல்களை பிராசஸ் செய்வதும், முடிவுகளை எடுக்க சோம்பேறித்தனத்துடன் திரியும் மனிதன் வெளியில் சூப்பராக சீன் போடுவதும் தொடர்ந்து நடக்கிறது.

 எதற்கு முக்கியத்துவம்?

சாதாரணமாக நாம் எதில் கவனம் செலுத்து கிறோம்? இன்றைக்கு முடிக்காவிட்டால் தலை போய்விடும் என்கிற அளவுக்கு இருக்கிற பிரச்னைகளிலும், நாம் என்ஜாய் பண்ணி  சந்தோஷமாகச் செய்யும் விஷயங்களில் மட்டுமே. மனதில் அப்படியாக வேண்டும், இப்படியாக வேண்டும் என்றெல்லாம் கோட்டை கட்டும் நாம், அதற்கான வேலைகளைச் செய்யும்போது எதையெல்லாம் செய்கிறோம்? கோட்டைகளை மனதில் கட்டிக்கொண்டிருக்கும்போதே இன்றைக்கு இதை வேறு முடித்தாக வேண்டுமே, கொஞ்ச நேரம் சோஷியல் மீடியாவில் என்ன இருக்கிறது எனப் பார்ப்போமே  என கட்டாயம் அல்லது ஜாலி என்ற இரண்டுக்கும் நடுவிலேயே நம்முடைய எல்லைகள் வகுக்கப்பட்டு இருக்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது?

மனக்கோட்டைகள் கட்டிக்கொண்டே இன்றைய வேலைகளைப் பார்க்கும்போது, இன்றைய வேலைகள் என்பது மிகுந்த அசிரத்தை யுடனும் கவனக்குறைவுடனும் செய்யப்படுகிறது. இந்த நிலைமை தகர்த்தெரியப்படாவிட்டால் நமக்கு முன்னேற்றம் என்பது மனக்கோட்டையில் மட்டுமே இருக்குமே தவிர, நிஜத்தில் வராது. இதைப் புரிந்துகொண்டால் எண்ணத்துக்கும்  செயல்பாட்டுக்கும் இடையே இருக்கும் இடைவெளி நமக்குத் தெளிவாகப் புரிந்துவிடும்.

நன்கு புரிகிற மாதிரி சொன்னால், எண்ணம் உயர்வாக இருக்க வேண்டும் என்று சொல்வ தெல்லாம் கதைக்கு உதவாது. நாம் அனைவருமே உயர்ந்த லட்சியங்களைக் கொண்டவர்களாகவே திகழ்கிறோம். பொருளாதார ரீதியாகப் பார்த்தால், பங்களா வாங்கணும், கார் வாங்கணும், அந்தஸ்து உயரணும் என்ற எண்ணம் இல்லாத மனிதர்களே உலகில் இல்லை. அந்த எண்ணத்தைப் பூர்த்தி செய்ய என்னென்ன செயல்களைச் செய்து உள்ளோம் என்று பார்த்தால், அது பலருக்கும் பூஜ்யத்துக்கு வெகு அருகேயே இருக்கும். எண்ணம் உயர்வாக இருந்தால் மட்டும் போதாது. செயல்பாடுகள் அதற்கு ஏற்ப இருக்க வேண்டும். நம்மில் பெரும்பாலோருக்கும் எண்ண மாறுதல்கள் தேவையில்லை. செயல்பாடு மாற்றங்களே தேவை என்பதை நாம் இனியாவது உணர வேண்டும்.

ஓர் உதாரணத்துடன் இதைப் பார்த்தால், இன்னமும் புரியும். ரத்த அழுத்தத்துக்குத் தொடர்ந்து மருந்துகள் எடுத்துக்கொள்ளும் நோயாளிகளை ஆய்வுசெய்ததில் அவர்கள் பல சமயம் மருந்துகளை சரிவர எடுத்துக்கொள்வதில்லை என்று தெரியவந்தது. ஏன் என்று ஆராய்ந்தால், யாரும் வேண்டும்  என்றே அதைச் செய்யவில்லை. மருந்து உட்கொள்வது தற்செயலாகத் தடைப்படுகிறது. 70 சதவிகிதத்தினர் மருந்து தீரும் வேளையில் வாங்கி வைத்துக்கொள்வதில்லை. இப்ப, அப்ப என்று தள்ளிப்போட்டும், கடை வழியாகப் போகும்போதுகூட வாங்க மறந்தும், கடைசியாக தீர்ந்தே போகிறது என்கின்றனர். மீதமிருக்கும் 30 சதவிகிதத்தினரே விலை மற்றும் மருந்துகளின் பக்க விளைவுகளை நினைத்து உட்கொள்ளத் தவிர்க்கின்றனர் என்கின்றன ஆய்வுகள். இந்த ஃபிஃப்டி பிட்ஸ் முறை என்பது இதுபோன்ற விஷயங்களை (70 சதவிகிதத்தினர் செய்த தவறுகளை) சரிசெய்ய மிக மிக உதவியாக இருக்கும்.

‘‘அட, இதை எப்படியாவது சரி செய்துகொள்ள வேண்டும். நாம் பிழைக்கும் பிழைப்பு ரொம்பவும் கேவலமாக இருக்கிறதே!’’ என நினைக்கிறீர்களா?

 மூளைதான் காரணம்! 


இதற்குக் காரணம், நீங்கள் இல்லை. மூளை என்பதன் பரிணாம வளர்ச்சியின் பிரச்னைகளே இதற்கு காரணம். என்னதான் இன்டர்நெட், சோஷியல் மீடியா, இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் என பல தொழில்நுட்பங்கள் இருக்கும் காலத்தில் நாம் வாழ்ந்தாலும் மனிதமூளை என்பது பழைய காலத்திலேயே குத்திட்டு நின்றுகொண்டிருக்கிறது.

உதாரணத்துக்கு, பாம்பு மற்றும் பெரிய விஷச் சிலந்திகளைக்கண்டு நாம் பயப்படுகிறோம்.  ஏன், அது கடித்தல் உயிர் போய்விடும் என்று. இன்றைக்கு அமெரிக்காவில் வருடத்துக்குப் பாம்பு கடித்து உயிரைவிடுவது ஐந்து முதல் ஏழு நபர்களே என்றால் நம்ப முடிகிறதா?

2001 முதல் 2005 வரையிலான காலகட்டத்தில் சிலந்தி கடித்து உயிரைவிட்டவர்கள் இரண்டே பேர்தான். அதே சமயம், சைக்கிள் விபத்தில் இறக்கிறவர்கள் வருடத்துக்கு ஆறு லட்சம் பேர்.  என்றைக்கோ மனிதனுக்கு பாம்பும், சிலந்தியும் சாவுக்குக் காரணமாக இருந்தது. அதற்கு இன்றைக்குப் பயப்படும் நாம், இன்றைக்கு சாவுக்கு காரணமாக இருக்கும் சைக்கிள் ஓட்டுதல், புகை பிடித்தல்,  கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல் என்பதைப் பற்றி கிட்டத்தட்ட பயப்படுவதே இல்லை. இது பயத்தைப் பற்றிய விஷயமில்லை. மூளையின் செயல்பாடு குறித்தது. இல்லாத முடிவடைந்த பிரச்னைகளுக்கே நாம் பயப்படுகிறோம்.

பல நேரங்களில் நம்முன்னே வரும் கேள்விகளுக்கும், நாம் எதிர்கொள்ளும் பிரச்னை களுக்கும் விடைகாணும்போது நாம் ஏன் தவறான விடைகளைச் சென்றடைகிறோம்? சரியான விடையைச் சென்றடைவது  அவ்வளவு கடினமான காரியமா என்றால் அதுதான் இல்லை. தவறான விடையைச் சென்றடைவது என்பது மிக மிக சுலபமானது என்பதே காரணம். ஏனென்றால் சுலபமான விஷயங்களே நம் மனதில் முதலில் வந்து நிற்கிறது என்று முடிக்கிறார் ஆசிரியர்.

- நாணயம் டீம்


(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு