Published:Updated:

அனில் அகர்வால்: சர்ச்சைகளை சாதகமாக்கிய வித்தகர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அனில் அகர்வால்: சர்ச்சைகளை சாதகமாக்கிய வித்தகர்!
அனில் அகர்வால்: சர்ச்சைகளை சாதகமாக்கிய வித்தகர்!

பிசினஸ் சூப்பர் ஸ்டார்கள்!ஜெ.சரவணன் - ஓவியம்: கோ.ராமமூர்த்தி

பிரீமியம் ஸ்டோரி
அனில் அகர்வால்: சர்ச்சைகளை சாதகமாக்கிய வித்தகர்!

ந்தியாவில் பிறந்து, வெளிநாட்டில் செட்டில் ஆனவர்கள், அந்த நாட்டிலேயே தங்களது தொழிலை ஆரம்பித்து, வெற்றி கண்டார்கள் என்றுதான் நாம் பெரும்பாலும் படித்திருப்போம்.  ஆனால், வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வாலின் கதையே வேறு. இந்தியாவில் பிறந்தாலும் குடும்பத்துடன் லண்டனில் செட்டில் ஆனவர். ஆனாலும், இந்தியாவிலேயே தனது தொழிலை நிறுவியதோடு, தனது 40 வருட கடும் உழைப்பால் அசைக்க முடியாத பிசினஸ் சாம்ராஜ்யத்தை தனிமனிதனாக உருவாக்கி சாதனை படைத்தவர் அனில் அகர்வால். இவரது தொழில் பயணம் மிக மிக அசாத்தியமானது.

  பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டவர்!

பீகார் தலைநகர் பாட்னாவில் 1954-ல் சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் அனில் அகர்வால். 15 வயதான அனில், உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயம் அது. அவரது  அப்பா நடத்தி வந்த மின்கடத்தி (Conductor) உற்பத்தி பிசினஸில் உதவியாக இருப்பதற்காகப் படிப்பைப் பாதியிலேயே விட்டு வெளிவந்தார். அவரது அப்பா பிசினஸ் செய்து வந்தாலும், மிக மோசமான நிதி நிலையில்தான் இருந்தது அவரது குடும்பம். படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு, அப்பாவுக்கு உதவியாக இருந்து வேலை பார்க்கத் தொடங்கிய பின்பும் பிசினஸில் எந்த முன்னேற்றமும் இல்லை. மீண்டும் படிப்பைத் தொடர்ந்தார். ஒரு வழியாகப் பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர், தன் எதிர்காலத்தைத் தேடி பாட்னாவிலிருந்து மும்பைக்கு வந்தார்.

  டிரேடர் டு தொழிலதிபர்!

மும்பைக்கு வந்தவர் பழைய காப்பர், ஜிங்க், அலுமினியம் மற்றும் இரும்பு போன்றவற்றை வாங்கி விற்பனை செய்யும் தொழிலைச் செய்ய ஆரம்பித்தார். கையில் இருந்த கொஞ்சப் பணத்தை வைத்து, தொடர்ந்து அதைப் புரட்டுவதன் மூலம் பழைய இரும்புகளை வாங்கி விற்கும் தொழிலை செய்துவந்தார். மெட்டல் துறையில் இருந்த அனைத்து வாய்ப்புகளையும் கொஞ்சம் கொஞ்சமாகப் பயன்படுத்தி வளரத் தொடங்கினார். ‘ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ்’ என்ற பெயரில் அவர் தொடங்கிய நிறுவனம், பிற்பாடு வேதாந்தா குழுமமாக மாறியது. ‘வேத்’ என்பது அவரது அம்மாவின் பெயர், அவருக்கு மரியாதை செய்யும் பொருட்டு, வேதாந்தா என்ற பெயரை வைத்தார்.

  ஓபராய் ஹோட்டலில் ஒரு நாள்!


இந்த உயரத்தை அவர் அவ்வளவு எளிதில் அடைந்துவிடவில்லை. அவர் பாட்னாவில் இருந்து மும்பைக்கு வந்தபோது இருக்க இடம் தேடி அலைந்தார். அப்போது ஓபராய் ஹோட்டலை கடந்துபோனவர், அதன் பிரம்மாண்ட தோற்றத்தைப் பார்த்து ஒரு நாளாவது இந்த ஹோட்டலில் தங்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால், உள்ளே நுழையவே பயந்தார். ஏனெனில் அவருக்கு துளிகூட ஆங்கிலம் தெரியாது.

ஆனால், பயந்துகொண்டே இருந்தால், கடைசிவரை பயந்துகொண்டேதான் இருக்க வேண்டும் என்று நினைத்தவர், அடுத்த வழி என்ன என்று யோசித்தார். அங்கு வந்த வேறு ஒருவரின் உதவியோடு ஹோட்டலுக்குள் நுழைந்து, அறையை புக் செய்து தங்கி, தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டார். தான் விரும்பியதை அடையும் வரை பின்வாங்கக்கூடாது என்பதில் எப்போதும் உறுதியாக இருப்பார் அனில் அகர்வால்.

ஓபராய் ஹோட்டலில் ஆசைக்காக மட்டுமே அவர் தங்கவில்லை. அங்கு தங்கிய ஒரே நாளில் அந்த இடத்தை நமது பிசினஸுக்காக ஏன் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது என்று நினைத்தார். தனது பிசினஸுக்காகச் சந்திக்க வேண்டியவர்களை அங்கு வரவழைத்து சந்தித்துப் பேசினார். அந்த இடம் அவர் மீதான பார்வையையே மாற்றியதோடு, அவருடைய தொழிலுக்கும் சாதகமாக மாறியது. தொழில் வளர்ந்தது. ஒரு நாளுக்கு 200 ரூபாய் வாடகை என மூன்று மாதங்கள் அங்கு தங்கி தொழில் செய்தார். செலவுகளைக் குறைப்பதற்காக உணவு, லாண்டரி சேவை போன்றவற்றை எல்லாம் ஹோட்டலுக்கு வெளியேதான் எடுத்துக் கொண்டார். பிறகு மும்பை முழுவதும் சுற்றி, சந்தையை நன்கு ஆராய்ந்து தனது நிறுவனத்தைத் தொடங்கினார்.

அனில் அகர்வால்: சர்ச்சைகளை சாதகமாக்கிய வித்தகர்!

  கடனும் கையகப்படுத்துதலும்!

ஒரு தொழிலில் ஜாம்பவானாக இருக்க வேண்டுமென்றால், அந்தத் தொழிலை முதன் முதலில் தொடங்கியது நாமாக இருக்க வேண்டும். அல்லது, அந்தத் தொழிலில் பெரும்பான்மை சந்தையை நாம் பிடித்தாக வேண்டும். அதற்கு தொழிலை விரிவுபடுத்துவது மிகவும் முக்கியம். ஏற்கெனவே அந்தத் துறையில் போட்டியாளர்கள் அதிகமாக இருந்தால், விரிவுபடுத்துதல் என்பது லாபம் தரக்கூடியதாக இருக்குமா என்பது சந்தேகம்.

ஆனால், அனில் அகர்வால் தொடர்ந்து தனது நிறுவனத்தை விரிவுபடுத்திக்கொண்டே இருந்தார். ஆரம்பத்தில் அவர் சிண்டிகேட் வங்கியில் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கினார். அந்த பணத்தை வைத்து, முதன்முதலில் ‘சாம்ஷெர் ஸ்டெர்லிங் கார்ப்பரேஷன்’ என்ற நிறுவனத்தை வாங்கினார். அடுத்த பத்து ஆண்டுகள் தனது இரண்டு நிறுவனங்களையும் வளர்த்தெடுக்க அவர், அயராமல் உழைத்தார். ரூ.50 ஆயிரத்துக்கு வாங்கிய சாம்ஷெர் ஸ்டெர்லிங் நிறுவனம் தொடங்கி, இன்று பல ஆயிரம் கோடிக்கு கெய்ர்ன் இந்தியாவை வாங்கியது வரை தனது தொழிலின் வேரை உலகெங்கும் பரப்ப, அவர் பல நிறுவனங்களைக் கையகப்படுத்தி உள்ளார்.  

மெட்டல்களை வாங்கி தொழில் செய்து கொண்டிருந்தவர், தனது செலவுகளைக் குறைப்பதற்காக, தானே உற்பத்தி செய்ய ஆரம்பித்தார். 1986-ல் ஜெல்லி நிரப்பப்பட்ட கேபிள்களை உற்பத்தி செய்யும் ஆலையை ரூ.7 கோடியில் உருவாக்கினார். தொடங்கிய சில ஆண்டுகளிலேயே காப்பர் உருக்காலையில் இந்தியாவிலேயே முதன்மை நிறுவனமாக வளர்ந்தது ஸ்டெர்லைட்.

திவாலாகிப் போன மெட்ராஸ் அலுமினியம் நிறுவனத்தை 1995-ல் அனில் அகர்வால் வாங்கினார். அடுத்தடுத்து மால்கோ, பால்கோ ஆகிய நிறுவனங்களையும் வாங்கித் தள்ளினார்.

  திருப்பம் வந்த தருணம்!

வேதாந்தாவை மேலும்மேலும் வளர்க்க விரும்பியவருக்கு போதிய பணம் இல்லை. அப்போது நிதித் திரட்டுவதும் எளிதான விஷயமாக இல்லை. இதனால் பல தொழில்கள் சந்தையில் நல்ல வாய்ப்பு இருந்தும் வளர முடியாமல் போனது.

பிறரைப் போல, தானும் வாய்ப்பை விட்டுவிட்டு, பின்னால் வருந்தக்கூடாது என்று நினைத்த அனில் அகர்வால், கொஞ்சம் மாற்றி யோசித்தார். எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு இருக்கிறது என்பது எப்படி உண்மையோ, அதே போல்தான் எல்லாப் பிரச்னைகளுக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட தீர்வுகளும் உள்ளன. அவருடைய மாற்று யோசனை அவருடைய பிசினஸ் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. தனது வேதாந்தா குழுமத்தின் தலைமை இடத்தை லண்டனில் அமைத்தார். அதற்காகவே அவர் லண்டனுக்கு இடம் பெயர்ந்தார். அங்கு நிறுவனத்தைப் பதிவு செய்ததன் மூலம் அவரால் லண்டன் பங்குச் சந்தையில் வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தைப் பொதுப் பங்கு வெளியிட்டு, பட்டியலிடவும் முடிந்தது. லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிட்டதன் மூலம் அவர் திரட்டிய நிதி இன்றைய மதிப்பில் ரூ.6,000 கோடி (876 மில்லியன் டாலர்). அந்த நிதியை வைத்து அவரால் பல நாடுகளில் தனது தொழிலை நிறுவ முடிந்தது. பிறகு நியூயார்க் பங்குச் சந்தையிலும், இந்தியப் பங்குச் சந்தையிலும் பட்டியலிட்டார். தொடர்ந்து தனது தொழிலை வளர்ப்பதும் விரிவுபடுத்துவதுமாகவே இருந்தார் அனில்.

  சர்ச்சைகளின் மன்னன்!

இவருடைய அனைத்துத் தொழில்களும் இயற்கை வளங்கள் சார்ந்தது என்பதால், தொடர் எதிர்ப்பு களும் சர்ச்சைகளும் இவரைச் சுற்றி எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். இவரைச் சுற்றி இன்னும்கூட சர்ச்சைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. ஆனாலும் அத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி தனது தொழிலை நடத்தி வெற்றிகண்டார்.

ஒரு தொழிலதிபர் தொடர்ந்து வளர வேண்டுமென்றால், அதற்குத் தேவையான அனைத்துக் காரணிகளும் அவருக்கு சாதகமாக இருக்க வேண்டும். ஆனால், இவருக்குச் சாதகமாக இல்லாத விஷயங் களையும் எப்படியாவது முயற்சி செய்து சாத்தியமாக்கிக் கொள்வது இவரிடம் மட்டுமே உள்ள திறமை.

இந்தத் துறையில் போட்டியாளர்கள் அதிகரித்தபோதும் சரி, மந்தநிலை வந்த போதும் சரி, அவரிடம் எப்படி சமாளிக்கப் போகிறீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில், “எல்லோரும் ஒரு நாள் சாகத்தான் போகிறோம். ஆனால், நான் கடைசியாகத் தான் சாவேன் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்பதுதான். 

தற்போது வேதாந்தா மற்றும் ஸ்டெர்லைட் நிறுவனங்கள் சுரங்கம், காப்பர் உள்ளிட்ட பெரும்பாலான மெட்டல்கள் மற்றும் ஆற்றல் சார் வளங்கள் தொடர்பான பல தொழில்களைச் செய்துவருகிறது.

  13 மடங்கு வளர்ச்சி!

கடந்த பத்து வருடங்களில் வேதாந்தா குழுமத்தின் வருவாய் 1 பில்லியன் டாலரிலிருந்து 13 பில்லியன் டாலருக்கு உயர்ந்திருக்கிறது. அவருடைய சொத்து மதிப்பு மட்டுமே 3 பில்லியன் டாலர். பங்குச் சந்தையில் இதுவரை பல லட்சம் கோடி ரூபாயை திரட்டி உள்ளது வேதாந்தா குழுமம். மேலும், இதுவரை 60 லட்சம் வேலை வாய்ப்புகளை வேதாந்தா குழுமம் உருவாக்கி உள்ளது.

வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வதும், அவற்றை முழுமையாகப் பயன்படுத்தி வளர்வதும்தான் அனில் அகர்வாலின் வெற்றியைச் சாத்தியமாக்கியது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு