Published:Updated:

நீண்டகால தொழில் வெற்றிக்கு துணை நிற்கும் 5 குணாதிசயங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நீண்டகால தொழில் வெற்றிக்கு துணை நிற்கும்  5 குணாதிசயங்கள்!
நீண்டகால தொழில் வெற்றிக்கு துணை நிற்கும் 5 குணாதிசயங்கள்!

டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

பிரீமியம் ஸ்டோரி
நீண்டகால தொழில் வெற்றிக்கு துணை நிற்கும்  5 குணாதிசயங்கள்!

தொழிலில் தொடர்ந்து நீண்டகாலத்துக்கு  வெற்றி பெறத் தேவையானது என்ன?

வாடிக்கையாளர்கள் மத்தியில் போட்டியாளர் களைவிட நமக்கென இருக்கும் ஸ்பெஷல் அனுகூலம் (Competitive Advantage) என்று நீங்கள் எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால், இது மட்டுமே போதுமானதா என்றால், நிச்சயம் போதாது.

சில வருடங்களுக்கு முன்பு வரை மிகவும் பிரபலமாக இருந்தது குறுந்தகடு (சிடி). இந்தக் குறுந்தகடைக் கண்டுபிடித்தவர் யார்? இந்தக் கேள்விக்கான பதில் பலருக்கும் தெரியாது. ஏனென்றால், சிடியை உற்பத்தி செய்வது  கடினமான காரியமல்ல. இன்றைக்குப் பெரும்பாலான தொழிலில் இப்படிப்பட்ட போக்குதான் இருக்கிறது. அதிக லாபம் இருக்கும் துறைகளில் போட்டிகள் பெருகி,  போகிறவர்கள், வருகிறவர்கள் எல்லாம் அந்தப் பொருளை உற்பத்தி செய்து லாபத்தை குறைக்கவோ அல்லது தொழிலையே சிதைக்கவோதான் செய்கிறார்கள்.  எந்தத் துறையிலும் அதிலிருக்கும் லாபமே  அனைவருடைய கண்ணையும் உறுத்துகிறது.

என்னதான் திறமையாகக் கஷ்டப்பட்டு புதிதாக சில கண்டுபிடிப்புகளை நாம் உருவாக்கினாலும் அதற்கான காப்புரிமைகள் முடிந்தவுடன் பலரும் அதேபோன்ற பொருட்களை உற்பத்தி செய்யத் தொடங்கிவிடுவார்கள். அதனால் வெறுமனே போட்டி வாய்ப்புள்ள தொழில் வாய்ப்புகளை மட்டுமே தேடித் திரியாமல், நீண்ட காலத்துக்குத் தொடரும் அனுகூலம் கொண்ட தொழில் வாய்ப்புகளைக் கண்டறிய முயற்சிக்க வேண்டும்.  மற்றவர்கள் காப்பி அடிக்க விரும்பாத தொழில்களையோ அல்லது காப்பி அடிக்க முடியாத தொழில்களையோ செய்ய விரும்புவதே நீண்ட கால அடிப்படையில் நிலைத்து நிற்க விரும்பும் தொழில் முனைவோருக்கு ஏற்றதாகும்.

‘சும்மா காமெடி பண்ணாதீங்க! இவ்வளவு பெரிய உலகில் மற்றவர்கள் காப்பி அடிக்க முடியாத தொழில் அல்லது பொருளைக் கண்டுபிடிக்கிறது நடக்கிற காரியமா?’ என்பீர்கள். கஷ்டம்தான் என்றாலும், நீண்ட காலத்துக்கு நமது தொழிலைத் தொடரும் தொழில் போட்டியினாலான அனுகூலத்தை  நமது ஐந்துவிதமான நடவடிக்கைகளினால் நாம்  பெற முடியும். அந்த ஐந்து நடவடிக்கைகளை இனி சொல்கிறேன்.

போட்டியாளாரைவிட வேகமாக உங்கள் தொழிலைப் புரிந்துகொள்ளுதல்!

நீங்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டியது, உலகத்தில் உள்ள தொழிலதிபர்களின் புத்திசாலித்தனம் குறைந்தபட்சம் இருபது வருடத்துக்கு  முந்தையதாக இருக்கிறது. அதாவது, அவர்கள் கற்றுக்கொண்ட தொழில் புத்திசாலித்தனம் இருபது வருடத்துக்கு முந்தையது. அதை வைத்துக்கொண்டு, அன்றாடம் மாறும் தொழில் உலகில் போட்டிபோட நினைப்பது  முட்டாள்தனம்தானே!

நீங்கள் ஐம்பது வயதைக் கடந்தவராக இருந்தால், கோடக் நிறுவனத்தை (போட்டோகிராபி தொழில்) மறந்திருக்கமாட்டீர்கள். 1980-களில் செய்ய வேண்டிய டிஜிட்டல் முயற்சிகளை 2000-ங்களில் முயற்சி செய்ததுதான் கோடக் செய்த பெரும் தவறு. அதாவது, செய்யும் தொழிலில் நாம் லீடராக இருப்பதால் (லீடர் என்ற நம்பிகை), அந்தத் தொழிலில் மாறுதல் வரும் என்பதை உணரவிடாமல் செய்துவிடுகிறது.

போட்டியாளர்களைவிட  வாடிக்கையாளர்களை தெளிவாகப் புரிந்துவைத்தல்!

சமீபத்தில் உலக அளவில் செய்யப்பட்ட ஆய்வு,  ‘மியூச்சுவல் ஃபண்ட் மேனேஜர்களில் 45 சதவிகிதத்துக்கும் மேலானவர்கள், அவர்கள் நிர்வாகம் செய்யும் ஃபண்டுகளில் முதலீடுகள் வைத்திருப்பதில்லை’ என்கிறது. பெரிய ஹோட்டல் செயின்களில் வேலை பார்க்கும் எத்தனை பேர் ஒரு சாதாரண வாடிக்கையாளராக அவர்களுடைய வேறு கிளையை சென்று பார்க்கிறார்கள்? எத்தனை ஏர்லைன் நிறுவனத்தின் தலைவர்கள் ஒரு  சாதாரண பயணியாகப் பயணித்து லக்கேஜை தொலைக்கின்றனர்?

வாடிக்கையாளர்களின் அனுபவத்தை நாமே வாடிக்கையாளராக மாறி பெற்றால் அன்றி, அதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. இதைப் புரிந்துகொள்ள அதிக புத்திசாலித்தனம் ஒன்றும் தேவை இல்லை. பெரிய எழுத்தாளர்கள் பலரும்  தீவிர வாசகர்களாக இருப்பார்கள். அப்போதுதான் அவர்களால் சிறந்த எழுத்தாளராக இருக்க முடியும். அதே போல்தான் தொழிலும்.

போட்டியாளர்களைவிட சிறந்த வாடிக்கையாளர் தொடர்பு!

ஒரு தொழிலில் வெற்றி பெற, சிறந்த  பொருட்களையோ/சேவையையோ வழங்கவேண்டும் என்றில்லை. நிறைய வெற்றிகரமான தொழிலதிபர்களும்/முதலீட்டாளர்களும்  நல்ல அட்வைஸர்களாக இருந்துவிட வாய்ப்புக் குறைவே. இவர்கள் ஒரு புத்தகம் எழுதினாலும்கூட அவர்களால் சிறப்பான கம்யூனிகேஷனை வாசகர்களுடன் ஏற்படுத்திக்கொள்ளமுடியாது போகும்.  தொழிலைத் திறமையாகச் செய்யும் அளவுக்கு சொல்லத் தெரியாது. அவர்கள் புத்தகத்தில் சொல்வதை வாசகர்கள் புரிந்துகொள்வது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும் அளவுக்கே அவர்களுடைய கம்யூனிகேஷன் திறமை இருக்கும். 

இதை அறிவினால் வரும் சாபம் எனலாம். அடுத்தவர்களுடைய அறிவும் அனுபவமும் நம்முடையதைப் போன்று இருக்காது. நாம் சொல்வதை அவர்களால் அப்படியே நாம் நினைக்கும் வண்ணமே புரிந்துகொள்ள இயலாது என்பதையே இவர்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள்.

தொழிலில் நம்பிக்கையும் எளிமையுமே ஜெயிக்கும்.  வாடிக்கையாளருக்கு நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் ஏன், எதற்காக செய்கிறீர் கள் என்பதைத் தெளிவாகப் புரியும் அளவுக்கு சொன்னாலே போதும், வாடிக்கையாளர்கள் உங்கள் கூடவே பயணிப்பார்கள்.

போட்டியாளர்களைவிட நீங்கள் அதிகமுறை தோற்றல்!

என்னது, தொழிலில் தோல்வியா என்று ஆச்சர்யப்படாதீர்கள். தோல்விகள் எப்போது வரும்? அதிக சோதனை முயற்சிகள் நடத்தப்படும் போது மட்டுமே. ‘தோல்வி என்பது எங்களுக்கு சகஜமப்பா’ என்று சொல்லும் நிறுவனங்களே அனுபவம் செரிந்ததாகவும்,  தொடர்ந்து சிறப்பாகச்  செயல்படுவதாகவும் இருக்கின்றன. சின்னச் சின்ன தோல்விகளை முகம் சுளிக்காமல் ஏற்றுக்கொள்வதே பெரிய வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

போட்டியாளர்களைவிட அதிக நேரம் காத்திருக்கும் மனநிலை!


தொழிலில் குறுகிய காலத்தில் வரும் வெற்றிகள் அனைத்தும் சிறியதாகவும், நீண்ட  நாட்களுக்குப்பின் வரும் வெற்றிகள் பெரியதாகவுமே எப்போதுமே இருக்கும். நீண்ட காலத்துக்கான போட்டி அனுகூலம் என்பது காத்திருக்கும் தன்மை அதிகரிக்க அதிகரிக்க அதிகமாகிக்கொண்டே போகும் தன்மையுடையது. நீண்டகாலக் காத்திருப்பு என்பது நிறைய அனுபவங்களைத் தரும். பிரச்னைகள் குறித்து தீர்க்கமாகச் சிந்தித்து முடிவெடுக்க அவகாசம் தரும்.

மாறாக, குறுகிய கால வெற்றிக்காகப் போராடினால் அதிகமான குழப்பமே மிஞ்சும். சுருக்கமாக, உங்கள் தொழிலில் போட்டியாளர்கள் இரண்டு வருடம் காத்திருக்கத் தயாராக இருந்தால், நீங்கள் ஐந்து வருடம் காத்திருக்கத் தயாராக இருக்க வேண்டும். அப்படி இருந்தால், அது இரண்டு மடங்கான பயன்களைத் தரும்.  போட்டியாளர்கள் எந்த அளவுக்கு திறமையும் வசதியும் கொண்டிருந்தா லுமே, அதைவிட பவர்ஃபுல்லான அனுகூலங்களை இந்த அதிக நேரம் காத்திருக்கும் தகுதி உங்களுக்கு வழங்கும். ஏனென்றால், குறுகிய காலத்தில் நாம் செய்யும் தவறுகள் அவற்றை திருத்திக்கொள்ளவும்,  அவற்றிலிருந்து அனுபவத்தைக் கற்றுக்கொள்ளவும் வைக்கும். 

இந்த ஐந்து குணாதிசயங்களையும் நீங்கள் உங்கள் தொழிலில் கொண்டு வந்தால், உங்களுக்கு  நீண்ட கால தொழில் வெற்றி நிச்சயமாகக் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு