
புதுக்கோட்டை, திருச்சியில் விழிப்பு உணர்வு நிகழ்ச்சி... சி.சரவணன்

நாணயம் விகடன், இன்டகிரேட்டட், என்எஸ்டிஎல், என்எஸ்இ, சிட்டி யூனியன் பேங்க் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய ‘செல்வம் சேர்க்கும் சூப்பர் ஃபார்முலா... அஸெட் அலோகேஷன்’ முதலீட்டு விழிப்பு உணர்வுக் கூட்டங்கள் அண்மையில் புதுக்கோட்டை மற்றும் திருச்சி நகரங்களில் நடந்தன.
இந்தக் கூட்டங்களில், அஸெட் அலோகேஷன் குறித்து நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி சிறப்புரை ஆற்றினார். மியூச்சுவல் ஃபண்ட் பற்றி இன்டகிரேட்டட் உதவிப் பொது மேலாளர் ஆர்.ரவிச்சந்திரன், இன்ஷூரன்ஸ் பற்றி இன்டகிரேட்டட் இன்ஷூரன்ஸ் உதவிப் பொது மேலாளர் ஆர்.குருராஜன் பேசினர். டீமேட் கணக்கு பற்றி என்எஸ்டிஎல் உதவி மேலாளர் பி.ஏ.சிவப்பழம், இ-வேலட் பற்றி சிட்டி யூனியன் பேங்க் பிசினஸ் டெவலப்மென்ட் சென்டர் துணை மேலாளர் பிரசன்னா ஆகியோர் விளக்கினார்கள்.
ரவிச்சந்திரன் பேசும்போது, “பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கம் என்பதை ஒரு ரிஸ்க் ஆகப் பார்க்கக் கூடாது. அது முதலீட்டுக்கான வாய்ப்பு என அறிந்துகொண்டால், முதலீட்டின் மூலம் எளிதாக லாபம் பார்க்க முடியும். தொடர்ந்து ஆறு காலாண்டுகளாக, ஒரு ஈக்விட்டி ஃபண்ட் அதன் பெஞ்ச் மார்க்கைவிட குறைவான வருமானம் தரும்போது மட்டுமே அதனை மாற்றுவது பற்றி யோசிக்க வேண்டும்” என்றார்.

குருராஜன் பேசும்போது, ‘‘ஒரு குடும்பத்தின் தலைவர் உயிருடன் இல்லை என்றால், அந்தக் குடும்பத்தின் செலவுகளை பாதிக்காத வண்ணம் வருமானம் வரும் முதலீட்டுத் தொகுப்பு (Corpus) அளவுக்கு ஆயுள் காப்பீடு பாலிசி எடுப்பது அவசியம். வரிச் சலுகைக்காக பல இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்து, அதன் மொத்த கவரேஜ் சில லட்சம் ரூபாய்க்குள் இருந்தால், அதனால் எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை. மேலும், வருமானம் அதிகரிக்கும் போது, திருமணத்துக்குப் பின், குழந்தை பிறந்தபின், கடன் வாங்கும்போது, பிசினஸ் ஆரம்பிக்கும்போது என பல்வேறு நிலைகளில் தேவைக்கேற்ப நம் இன்ஷூரன்ஸ் கவரேஜை அதிகரிக்கவேன்டும்’’ என்றார்.
நிதி ஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதி, “மியூச்சுவல் ஃபண்ட் என்றாலே நம்மில் பலரும் ரிஸ்க் என்று நினைக்கிறோம். அது தவறு. 2004-2014-ம் ஆண்டுகளுக்கு இடையே உள்ள பத்து ஆண்டுகளில் எஃப்டியில் முதலீடு செய்திருந்தால், ஆண்டுக்கு அதிகபட்சம் 9% வருமானம் கிடைத்திருக்கும். இந்த வருமானத்துக்கு வருமான வரி கட்டவேண்டும். அதுவே மியூச்சுவல் ஃபண்டில் பங்குச் சந்தை சார்ந்த திட்டத்தில் முதலீடு செய்திருந்தால், குறைந்தபட்சம் 13.5% வருமானம் கிடைத்திருக்கும். அதிகபட்சமாக 50 சதவிகிதம்கூட வருமானம் கிடைத்திருக்கும். இந்த வருமானத்துக்கு வரி கட்ட வேண்டியதில்லை. கடந்த 35 வருடத்தில் சென்செக்ஸ், பணவீக்க விகிதத்தைவிட 9% அதிக வருமானம் தந்திருக்கிறது. எஃப்டி வட்டி குறைவாக இருக்கும் போது, பங்குச் சந்தை, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யவேண்டும். அந்தச் சூழ்நிலை இப்போது நிலவுகிறது” என்றார்.

இறுதியாக வாசகர்களின் கேள்விகளுக்கு நிபுணர்கள் பதில் அளித்தனர். ஒரு வாசகர், “நான் மாதம் 8,000 ரூபாயை எட்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் பிரித்து முதலீடு செய்யத் திட்டமிட்டு உள்ளேன். அது சரியா?” என்றார்.
அதற்குப் பதில் அளித்த சுரேஷ் பார்த்தசாரதி, “பலரும் பல ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யவேண்டும் என்று நினைக்கிறார்கள். பல திட்டங்களில் முதலீடு செய்யும்போது, அந்தத் திட்டங்களின் செயல்பாட்டினை நம்மால் துல்லியமாகத் தீர்மானிக்க முடிவதில்லை. எனவே, நீங்கள் மூன்று ஃபண்டில் முதலீடு செய்தாலே போதும்’’ என்றார்.
இனியாவது நாம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வோம்!
படங்கள்: தே.தீட்சித், எம்.அரவிந்த்