Published:Updated:

இளம் தலைவர்கள்!

நாணயம் லைப்ரரி!சித்தார்த்தன் சுந்தரம்

பிரீமியம் ஸ்டோரி
இளம் தலைவர்கள்!

*புத்தகத்தின் பெயர்:  தி அண்டர்ஏஜ் சிஇஓஸ் 

*ஆசிரியர் : கணேஷ் V

*பதிப்பாளர்: காலின்ஸ் பிசினஸ்

“நீ பெரியவன் ஆனா என்னவாகப் போறே? டாக்டரா, இன்ஜினீயரா, ஆடிட்டரா?” என வழக்கமாகப் பெரியவர்கள், சிறியவர்களைப் பார்த்துக்கேட்பதுண்டு. தன் குழந்தைகள் நன்றாகப் படித்து ஒரு நல்ல நிறுவனத்தில் வேலையில் சேர்ந்து வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டால் பரவாயில்லை என ஒவ்வொரு பெற்றோரும் நினைப்பதுண்டு. ஆனால், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இளைஞர்களின் சிந்தனை, பெற்றோரின் சிந்தனைக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.

கல்லூரிப் படிப்பு முடிந்ததும் பெரும்பாலான மாணவர்கள் தொழில்முனைவோர் ஆவதில் விருப்பம்காட்டி வருகிறார்கள். கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக ‘கேம்பஸ் ரெக்ரூட்மென்ட்’டுக்குச் செல்லும் மிகப்பெரிய நிறுவனங்கள் வழங்கும் வேலை வாய்ப்புகளை நிராகரித்துவிட்டு, தன் நண்பர்களுடன் சேர்ந்து சொந்தமாக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து நடத்துவதையே விரும்புகிறார்கள்.

இப்படித் தங்களின் இளம்வயது  இருபதுகளிலேயே ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து அதன் சிஇஓ– க்களாக இருக்கும் 11 பேரைப் பற்றிய புத்தகம்தான் ‘அண்டர் ஏஜ் சிஇஓஸ்.’

இளைஞர்கள் பலரிடம் சிறப்பான யோசனைகள் இருக்கும். ஆனால், ‘அது காலத்துக்கும், சந்தைக்கும் ஏற்றதா? அப்படி ஏற்றதென்றால் அதை எப்படித் தொடங்குவது? யாரை அணுகுவது? முதலீட்டாளர்களை எப்படிக் கண்டறிவது?’ எனப் பல கேள்விகள் மனதுக்குள் எழும். அவற்றுக்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் இந்தப் பதினோரு பேருடைய அனுபவங்கள் அமையக்கூடும்.

தொழில்முனைவு சம்பந்தமாகப் பல புத்தகங்கள் எழுதப்பட்டிருந்தாலும், இந்தப் புத்தகம் மாணவப் பருவத்திலேயே தொழில்முனைவோர் ஆனவர்களைப் பற்றி எழுதப்பட்டு உள்ளது. தொழில்முனைவு சம்பந்தமாக இருக்கும் பல தவறான கருத்துகளுக்கு ஒரு தெளிவைக் கொடுப்பதோடு, தொழிலை லாபகரமாக நடத்திச் செல்வதற்கான யோசனைகளை அனுபவசாலிகள் மூலம் தெரியப்படுத்துவதில் இந்தப் புத்தகம் மற்ற புத்தகங்களிலிருந்து வித்தியாசப்படுகிறது.

இந்த பதினோரு பேரில் யாரும் ஐஐடி அல்லது ஐஐஎம்  போன்ற பிரபலமான கல்வி நிலையங்களில் படித்தவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் எல்லாம் சாதாரண கல்லூரிகளில் படித்து தங்களது `கனவை’ நனவாக்கியவர்கள். இந்த பதினோரு பேரை எப்படி ஆசிரியர் தேர்ந்தெடுத்தார் என்கிற குறிப்போடு இந்த புத்தகம் தொடங்குகிறது.

இளம் தலைவர்கள்!

அனைத்தும் `ஆன்லைன்’ மூலம் என்பதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், ஆன்லைன் மூலம் பகிரப்படும் தகவல்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதில் அனைத்து நிறுவனங்களும் அதிக அக்கறை எடுத்துக்கொள்வதோடு, அதற்காகப் பணம் செலவிடவும் தயங்குவதில்லை.

இந்த வாய்ப்பை அறிந்துகொண்ட செளரவ் கர்மாக்கர் கொல்கத்தாவில் 2014-ம் ஆண்டு அது சம்பந்தப்பட்ட பயிற்சி, ஆலோசனை வழங்குவதற்கென்று ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் `வெப் ஸ்காலர்ஸ் எல்எல்பி.’ படிக்கும்போது இவருக்கு `எத்திக்கல் ஹேக்கிங்’ (Ethical Hacking) செய்வதில் அலாதி பிரியம். கல்லூரியில் படிக்கும்போதே அதுகுறித்து மற்ற மாணவர்களுக்காகக் கருத்தரங்கம் நடத்தியவர். முதன்முதலாக அவர் நடத்திய அந்தக் கருத்தரங்கில் சுமார் 260 மாணவர்கள் கலந்துகொண்டனர்.  2014-ல் படிப்பு முடிந்து கல்லூரியைவிட்டு வெளியே வந்தவுடன் இவர் தன் நண்பர் ப்ரமோத்தையும் சேர்த்துக்கொண்டு ஆரம்பித்தது தான் வெப் ஸ்காலர்ஸ்.

இதுபோல, குழந்தைகளுக்கென்று செயல்பாடு சார்ந்த கல்வி நிறுவனத்தை ப்ரியாதீப் சின்ஹா தொடங்கினார். மின் வணிக (ஆன்லைன்) நிறுவனங்கள் அதிக வாடிக்கையாளர்களைப் பெறும் நோக்கத்துக்காக கேஷ் ஆன் டெலிவரி என்கிற முறையை சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தின. (குறிப்பாக, ஆன்லைனில் கிரெடிட்/டெபிட் கார்ட் உபயோகப்படுத்தத் தயங்குபவர்களைக் கவரும் பொருட்டு). ஆன்லைனில் புக் செய்யப்பட்ட சினிமா டிக்கெட், விமான டிக்கெட், ரயில்வே டிக்கெட் ஆகியவற்றை வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்வதில் இருக்கும் வாய்ப்பை அறிந்துகொண்டு அர்பித் மோகனும், அபிஷேக் நாயக்கும் சேர்ந்து ஹைதராபாத்தில் ஆரம்பித்த நிறுவனம்தான் `கர்பே (GharPay). இது அவர்களது `பதினெட்டாவது’ யோசனை.

`வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்’ என்பது போல வீட்டிலேயே தோட்டம் அமைப்பது குறித்தும், அதைப் பராமரிப்பது குறித்தும், அதற்குத் தேவையான சாமான்களை விற்கும் நிறுவனமாக மும்பையில் ப்ரியங்கா அமர் ஆரம்பித்த நிறுவனம் `ஐகேத்தி’ (iKheti – Kheti என்றால் ஹிந்தியில் விவசாயம் என்று பொருள்).

இன்றைக்கு எங்கு சென்றாலும் தொழில்நுட்ப பூங்காக்களையும், பல அடுக்கு மாடிக் கட்டடங்களையும் பார்க்க முடிகிறது. இந்தக் கட்டடங்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்துசெல்வதால் பாதுகாப்பு என்பது அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது. இதற்குத் தொழில்நுட்ப உதவியுடன் தானியங்கி பாதுகாப்புக் கருவிகளை அமைத்துக் கொடுக்க `டெக் இன்னோவேன்ஸ்’ என்கிற நிறுவனத்தை அக்‌ஷத் ஓஸ்வாலும், ப்ரசாத் குண்டேச்சாவும் ஆரம்பித்தார்கள்.

இன்னும்... பாரம்பர்யமான ஆர்ட்களை கார்ப்பரேட்டுகளுக்கு விற்கவும், பரிசுப் பொருளாக `செடிகளை’ விற்கவும், தான் பேரார்வம் கொண்டிருக்கும் நடனத்தை லாபம் சம்பாதிக்கும் தொழிலாக மாற்றவும் தொழில்முனைவோராக ஆனவர்கள் மற்றும் சமுதாயத்தில் பின்தங்கிய குழந்தைகளின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட                    ஹெச் ஹெச் ஸ்கூல் போன்றவை இதில் அடங்கும்.

சரி, இனி இந்த இளைஞர்களின் படிப்பினைகளையும், அவர்கள் தொழில்முனைவோர் ஆக விரும்புபவர்களுக்கும் சொல்லும் ஆலோசனைகளையும் பார்ப்போம். 

* கல்லூரிப் படிப்பும், சான்றிதழ்களும் உங்களுடைய திறமை இல்லை. கடின உழைப்பு, அனுபவம், தோல்விகளிலிருந்து உங்கள் சாதனையை நோக்கிச் செல்லும் திறன், உங்கள் பேரார்வத்திலிருந்து (passion) நீங்கள் கற்பது ஆகியவையே உங்களின் திறமை.

* உங்கள் உள்ளுணர்வைக் `கேட்பது’ மிகவும் முக்கியம். வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலோர் தங்களது உள்ளுணர்வின்படி நடந்தவர்கள்தான். இளம்வயதிலேயே தொழில்முனைவோர் என்கிற பொறுப்பேற்பது சிரமம்தான். அதில் வெற்றி பெற வேண்டுமெனில், ஆரம்பித்த தொழிலில் கவனமும், ஒழுக்கமும் தேவை.

* உடனடியாகப் பலன் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். முதலீட்டாளர்களுக்காக உங்கள் தொழிலை வளர்க்காமல் வாடிக்கையாளர்களை மனதில்கொண்டு அவர்களுக்காகச் செயல்படுங்கள். சேவையும், பொருட்களும் தரமாக இருந்தால் அதிக விலை கொடுக்கவும் தயங்க மாட்டார்கள்.

* யோசனை என்பது உங்களைச் சுற்றி எல்லா இடங்களிலும் இருக்கிறது. இதில் ஒரு தொழில்முனைவோர் தனக்குப் பள்ளிக்கூடத்தில் சரியான முறையில் பாடம் சொல்லித்தரவில்லை என்கிற குறையைத் தீர்க்கும் பொருட்டு ஆரம்பித்ததுதான் செயல்பாடு சார்ந்த கல்வியாகும். நீங்கள் முறையாக ஒரு தொழிலை ஆரம்பிக்குமுன் அதுசார்ந்த அனைத்து வேலைகளையும் கச்சிதமாகச் செய்யுங்கள்.

* உங்கள் நிறுவனத்துக்கென்று ஒரு தொழில் பண்பாட்டை (work culture) ஏற்படுத்துங்கள். இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் லாபகரமான தொழில் நடத்துவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

* தோல்விகளைக கண்டு துவளாதீர்கள். அந்த அனுபவமே உங்களை வெற்றியை நோக்கி இட்டுச் செல்லும். தோல்வியைக் கொண்டாடுங்கள்.

* அடுத்த 5-10 வருடங்களில் தொழிலை எந்த அளவுக்கு எடுத்துச்செல்ல வேண்டுமென்கிற தொலைதூரப் பார்வை இருப்பது அவசியம். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களின் நலனில் கவனம் செலுத்துங்கள்.
 
* உங்கள் நிறுவனத்தின் பொருட்கள், சேவைகள், விலை ஆகியவற்றோடு போட்டி யாளர்களின் நிலையையும் அவ்வப்போது ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்.

*
உதவி தேவைப்படும்போது மற்றவர்களை அணுகத் தயங்காதீர்கள்.

இந்தப் புத்தகத்தின் இறுதியில் ஒரு முதலீட்டாளரின் நேர்காணலும், தொழில் முனைவோரின் நேர்காணலும், தொழில்முனைவோர் சம்பந்தப்பட்ட இணையதளங்களின் முகவரிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

வில்லியம் ஷெட் என்கிற இறையியலாளர், ‘கப்பல் கரையிலிருந்தால் பாதுகாப்பாக இருக்கும். ஆனால், கப்பல் அதற்காகக் கட்டப்படவில்லை’ என்று கூறினார். அது போல, சாதிக்கவும் வெற்றி பெறவும் வேண்டுமெனில், உங்களுடைய செளகர்யமான (Comfort Zone) இடம் என்கிற கரையைவிட்டு வாருங்கள். நீங்களும் பிஞ்சிலே பழுத்தவராகலாம்!

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு