
தபால் அலுவலக ‘டைம் டெபாசிட்’ அல்லது ‘டேர்ம் டெபாசிட்’ என்பது வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் போன்றதுதான். இந்த டெபாசிட்டில் குறிப்பிட்ட காலத்துக்குச் செய்யப்படும் முதலீட்டுக்கு நிலையான வட்டி கிடைக்கும். குறிப்பிட்ட சதவிகித வருமானம் தேவை என்பவர்கள், இதைத் தேர்வு செய்யலாம்.
குறைந்தபட்ச முதலீடு
தபால் அலுவலக டைம் டெபாசிட்டில் குறைந்தபட்ச முதலீடு ரூ.200. இதன்பிறகு இதன் மடங்குகளில் எவ்வளவு வேண்டுமானலும் முதலீடு செய்யலாம்.
முதலீட்டுக் காலம்
இந்த ‘டைம் டெபாசிட்’களின் முதிர்வுக் காலம் 1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகள் என்று இருக்கின்றன. ஒருவரின் தேவைக்கேற்ப முதலீட்டுக் காலத்தைத் தேர்வு செய்துகொள்ளலாம்.
வட்டி வருமானம்
இதற்கான வட்டி ஆண்டுக்கு 7 முதல் 7.8 சதவிகிதமாக இருக்கிறது. காலாண்டுக்கு ஒருமுறை வட்டியைக் கணக்கிட்டு, ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும்.
யாரெல்லாம் டெபாசிட் போடலாம்?
* தனிநபர்
* இருவர் மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் கூட்டாக
* மைனர்கள் (பெற்றோர் அல்லது பாதுகாவலர் மேற்பார்வையுடன்)
* 10 வயதுக்கு மேற்பட்ட கல்வி அறிவுபெற்ற மைனர்கள், அவர்கள் பெயரில் டெபாசிட் ஆரம்பிக்கலாம்.
தேவையான ஆவணங்கள்
* அடையாளத்துக்கான ஆதாரம் - ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, வாகன ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, ஆதார் கார்டு - இவற்றில் ஏதாவது ஒன்றின் நகல்.
* முகவரிக்கான ஆதாரம் - ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, வாகன ஓட்டுநர் உரிமம், ஆதார் கார்டு, மின்சாரக் கட்டண அட்டை, டெலிபோன் பில், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், தபால் அலுவலகம்மூலம் பெற்ற அடையாள அட்டை - இவற்றில் ஏதாவது ஒன்றின் நகல்.
* மைனர்களுக்குப் பிறப்புச் சான்றிதழ் அல்லது 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.
* இரண்டு மார்பளவு புகைப்படங்கள்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
எப்படி டெபாசிட் செய்வது?
உங்களுக்கு ஏற்கெனவே தபால் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கு இருந்தால், மிக எளிதாக ஆரம்பித்துவிடலாம். இல்லை என்றால் மேலே கூறப்பட்ட அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆதாரம் கொடுக்கவேண்டி இருக்கும். இவற்றுக்கான அசலை டெபாசிட் போடும்போது கொண்டு செல்வது அவசியம். இந்தக் கணக்கை ஆரம்பிக்கும்போதே நாமினியை நியமித்துவிடுவது நல்லது.
வருமான வரிச் சலுகை
ஐந்தாண்டு ‘டைம் டெபாசிட்’டில் செய்யப்படும் முதலீட்டுக்கு வருமான வரிப் பிரிவு 80சி-யின் கீழ் வரிச் சலுகை இருக்கிறது. நிபந்தனைக்கு உட்பட்டு முதலீட்டுக்கு அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகை கிடைக்கும். வட்டி வருமானத்துக்கு அவரவர் அடிப்படை வருமான வரி வரம்புக்கேற்ப (10%, 20%, 30%) வரிக் கட்ட வேண்டும். டிடிஎஸ் சான்றிதழ் தரமாட்டார்கள்.
கவனிக்க வேண்டிய விஷயங்கள்
1. டெபாசிட் ஆரம்பித்து ஆறு மாதங்களுக்குப் பின், முதிர்வுக்கு முன்பே இந்தக் கணக்கினை முடித்துக்கொள்ள முடியும்.
2. ஓராண்டுக்குமுன் முடிக்கப்படும் ‘டைம் டெபாசிட்’டுக்கு, தபால் அலுவலகச் சேமிப்புக் கணக்குக்கு அளிக்கப்படும் வட்டியே (தற்போது 4%) தரப்படும்.
3. ஓராண்டு கழிந்த நிலையில், முதிர்வுக்குமுன் டெபாசிட்டை முடித்தால், 1% அபராத வட்டி விதிக்கப்படும்.
4. இந்த ‘டைம் டெபாசிட்’-ன் முதிர்வுக் காலத்தை நீடித்துக்கொள்ள முடியும். அப்படி நீடிக்காமல் கணக்கினைத் தொடர்ந்தால், முதிர்வுக் காலம் தாண்டிய இரண்டு ஆண்டுகளுக்கு தபால் அலுவலகச் சேமிப்புக் கணக்கு (4%) வட்டி அளிக்கப்படும்.
5. இந்த ‘டைம் டெபாசிட்’ பத்திரத்தை அடமானம் வைத்து, அதன் மதிப்பில் சுமார் 80% கடன் வாங்கிக்கொள்ளலாம்.
6. முதிர்வுக் காலத்துக்குமுன் டெபாசிட் செய்தவர் இறந்துவிட்டால், நாமினிக்கு அந்தத் தொகை வழங்கப்படும். நாமினியின் பெயர் குறிப்பிடப்படாமல் இருந்தால், வாரிசுதாரர்களுக்கு அந்தத் தொகை போய்ச் சேரும்.
7. இந்த டைம் டெபாசிட்டை ஒரு தபால் அலுவலகத்திலிருந்து இன்னொரு தபால் அலுவலகத்துக்கு மாற்றிக்கொள்ள முடியும்.
8. மொத்தத் தொகையையும் ஒரே டெபாசிட் டாகச் செய்யாமல், வெவ்வெறு முதிர்வுக் காலத்துக்குப் பிரித்து செய்தால், தேவைப்படும்போது அபராத வட்டி கட்டவேண்டி இருக்காது.
(பணம் பெருகும்)