Published:Updated:

கிரண் மஜூம்தார் ஷா... தடைகளைத் தகர்த்தவர்!

கிரண் மஜூம்தார் ஷா...  தடைகளைத் தகர்த்தவர்!
பிரீமியம் ஸ்டோரி
கிரண் மஜூம்தார் ஷா... தடைகளைத் தகர்த்தவர்!

பிசினஸ் சூப்பர் ஸ்டார்கள்!ஜெ.சரவணன் - ஓவியம்: கோ.ராமமூர்த்தி

கிரண் மஜூம்தார் ஷா... தடைகளைத் தகர்த்தவர்!

பிசினஸ் சூப்பர் ஸ்டார்கள்!ஜெ.சரவணன் - ஓவியம்: கோ.ராமமூர்த்தி

Published:Updated:
கிரண் மஜூம்தார் ஷா...  தடைகளைத் தகர்த்தவர்!
பிரீமியம் ஸ்டோரி
கிரண் மஜூம்தார் ஷா... தடைகளைத் தகர்த்தவர்!
கிரண் மஜூம்தார் ஷா...  தடைகளைத் தகர்த்தவர்!

பெண்களுக்குச் சுதந்திரமும் உரிமையும் ஓரளவுக்குக் கிடைத்துள்ள இன்றைய சூழ்நிலையில்கூட, ‘பெண்கள் அடுப்படிக்குத்தான் லாயக்கு’ என்ற எண்ணம் நம் சமூகத்தில் இன்னமும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், இப்போதிருக்கும் கொஞ்சநஞ்ச சுதந்திரமும் வாய்ப்புகளும்கூட இல்லாத காலத்திலேயே பல தடைகளையும் சவால்களையும் கடந்து, இந்த நூற்றாண்டின் சக்திவாய்ந்த பிசினஸ் பெண்மணி யாக இருக்கும் ‘பயோகான்’ நிறுவனத்தின் தலைவர் கிரண் மஜூம்தார் ஷாவின் வெற்றிக் கதை மிகவும் துடிதுடிப்பானது.

   ஆரம்பமே அதிரடிதான்

பெங்களூருவில் குஜராத்திக் குடும்பத்தில் பிறந்த கிரண் மஜூம்தார், உயிரியியல் பட்டப்படிப்பை முடித்தார். அதற்குக் காரணம், அவருடைய அப்பா ராஜேந்திர மஜூம்தார்தான். யுனைடெட் புரூவரீஸ் நிறுவனத்தில் மதுவடிப்பு (Liquor brewmaster) மாஸ்டராக இருந்ததால், வளர்ந்தபிறகு தானும் ஒரு மதுவடிப்பு மாஸ்டர் ஆகவேண்டும் என்கிற ஆசை தொற்றிக் கொண்டது. அதற்காகவே உயிரியியல் பாடத்தை எடுத்துப் படித்தார்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக் கழகத்தில் அறிவியல் முதுகலைப் பட்டம் எடுத்து, மதுவடிப்பு குறித்துச் சிறப்புப் படிப்புப் படித்தார். பின்னர் அடம்பிடித்து யுனைடெட் புருவரீஸ் நிறுவனத்திலேயே அதற்கான பயிற்சியையும் எடுத்துக்கொண்டார். கடைசியில் இது ஆண்கள் செய்யும் வேலை என்று, அவருக்கு அந்த வேலையைத் தரமுடியாது என்று சொல்லிவிட்டன நம்மூர் நிறுவனங்கள். உலகம் மிகப் பெரியது, இந்தியாவில் வேலை கிடைக்கவில்லை என்றால் என்ன என்று சர்வதேச நிறுவனங்களிடம் வேலை கேட்டு விண்ணப்பித்தார். கிரணின் முயற்சிக்கு ஸ்காட்லாந்தில் அவர் தேடிய வேலை கிடைத்தது. ஆனால், அதற்குள் அவருடைய வாழ்க்கையின் மிகப் பெரிய திருப்பம் ஆரம்பமானது.

   தேடிவந்த பயோகான்

அயர்லாந்தைச் சேர்ந்த பயோகான் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் லெஸ்லீ ஆச்சின்க்ளோஸ்  (Leslie Auchincloss) தனது தொழிலை இந்தியாவிலும் செய்யவேண்டும் என்று விரும்பினார். அவருடைய நிறுவனம், மது தயாரிப்புக்குத் தேவையான நொதிகளை (Enzymes) தயார் செய்து வந்தது. அது பயோடெக்னாலஜி சார்ந்ததாகவும், மது தயாரிப்புடன் தொடர்புடையதாகவும் இருந்ததால், கிரண் தன்னுடைய கனவு நிறைவேற வாய்ப்புக் கிடைத்ததை எண்ணி பெரு மகிழ்ச்சி அடைந்தார்.  

இதுமாதிரி நடந்தால், நம்மூரில் சும்மா விட்டுவிடுவார்களா? ‘இந்தப் பெண்ணுக்கு ஏன் இந்த வேலை? கல்யாணம், குடும்பம் என்று இருக்கலாமே’ என்று வழக்கம்போலவே பேச ஆரம்பித்தனர். ஆனால், கிரணுடைய தந்தை அவருக்குப் பக்கபலமாக இருந்ததோடு, தொடர்ந்து உற்சாகப்படுத்தினார். கிரண் ஒரு நிபந்தனையுடன் பயோகானின் ஆஃபரை ஏற்றுக்கொண்டார்.  “ஆறு மாதம் நான் இந்த பிசினஸை செய்து பார்க்கிறேன். ஒருவேளை தோல்வி அடைந்தால், எனக்கு நான் விரும்பிய மதுவடிப்பு மாஸ்டர் வேலையைத் தரவேண்டும்” என்பதுதான் அந்த நிபந்தனை. 

கிரண் மஜூம்தார் ஷா...  தடைகளைத் தகர்த்தவர்!

   ஆயிரம் சவால்கள்

கிரணின் நிபந்தனையை பயோகான் நிறுவனம் ஏற்றுக்கொண்டது. அவர் தனக்குக் கிடைத்த பொறுப்பை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. தீவிரமாகச் செயல்படத் தொடங்கினார்.  ஆனால், அது அவ்வளவு எளிதானதாக இல்லை. தொழில் தொடங்க பணமோ, இடமோ இல்லை. இது ஒரு கூட்டு முயற்சி (Joint venture) என்றாலும் அப்போது 70 சதவிகித முதலீட்டை தொழில் தொடங்கும் இந்திய நிறுவனமே முதலீடு செய்யவேண்டும் என்பது விதிமுறை. இந்த நிலையில், நொதிகள் தயாரிப்புத் தொழில் இந்தியாவுக்கே புதிது என்பதால் எந்த வங்கியும் கிரணுக்கு கடன் தர முன்வரவில்லை. அவர் பெண் என்பதால், யாரும் வேலைக்கும் வரவில்லை. பின்னர் எப்படியோ கொஞ்சம் நிதி உதவி கிடைக்க, ஒருவழியாக அவரது வாடகை வீட்டின் கார் ஷெட்டில் 3,000 சதுர அடி இடத்தில் அவரும் ஒரு ஓய்வு பெற்ற மெக்கானிக்கும் சேர்ந்து உற்பத்தியைத் தொடங்கினர்.

அவருடைய ஒரே நோக்கம், செயற்கையான கெமிக்கல்களைத் தவிர்த்து, இயற்கையான முறையில் மதுவுக்கான நொதிகளைத் தயார் செய்யவேண்டும் என்பதுதான். அதில் தீவிரமாக இருந்தார். எனவே, நிபுணத்துவம் பெற்ற பணியாளர்கள் இல்லாமல், தேவையான தொழில்நுட்பக் கருவிகள் இல்லாமல், தடையற்ற மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதி என எதுவும் இல்லாமல், ஆனால் தரத்தில் எந்த சமரசமும் செய்துகொள்ளாமல், விடா முயற்சியினாலும் வித்தியாசமான அணுகுமுறையினாலும் தனது உற்பத்தியைத் தவறாமல் செய்துவந்தார். அதனால் கிரண் தயாரித்த நொதிகள் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் நல்ல வரவேற்பைப் பெற்றன. தனது முதல் வருட வருமானத்தை வைத்து 20 ஏக்கர் நிலத்தை வாங்கி, தனது கனவைப் பெருங்கனவாக விரிக்க அடித்தளம் அமைத்தார்.  

உயிரித் தொழில்நுட்பத்தின் மூலம் நொதிகள் தயாரிக்கும் தொழிலில் கிரணின் பயோகான் நிறுவனம் முதன்மையாக விளங்கி வந்தது. அதே சமயம், பயோடெக்னாலஜியில் இருந்த பிற வாய்ப்புகளையும் கண்டறிந்து, தனது தொழிலை விரிவுபடுத்தினார் கிரண். அதன் மூலம் பயோகான், பார்மா கம்பெனியாகவும் உருவெடுத்தது. பயோடெக்னாலஜியைப் பயன்படுத்தி டயாபெட்டிக்ஸ், ஆங்காலஜி மற்றும் ஆட்டோ இம்யூன் வியாதிகளுக்கான மருந்துகளைத் தயார் செய்தார். சின்ஜென் (Syngene) மற்றும் க்ளினிஜென் (Clinigene) ஆகிய துணை நிறுவனங்களை உருவாக்கி, அவற்றின் செய்பாட்டினைத் தீவிரப்படுத்தினார். இந்த புதிய திட்டங்கள் மூலம் பல தரப்பிலிருந்தும் அவருக்கு முதலீடுகள் குவிய ஆரம்பித்தன. அமெரிக்காவின் முதலீடு கிடைத்த முதல் இந்திய பயோடெக் கம்பெனி, கிரணின் பயோகான் நிறுவனம்தான்.  

   கணவர் மூலம் அடித்த ஜாக்பாட்

1989-ல் லெஸ்லீயிடமிருந்து பயோகான் நிறுவனத்தை வாங்கியது யூனிலீவர் நிறுவனம். வாங்கியதுமே அதன் கெமிக்கல் துறை பிசினஸ் முழுவதையும், உலகின் பிரபல நிறுவனமான இம்பீரியல் கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் (ICI) நிறுவனத்துக்கு விற்றது. இந்த நடவடிக்கைகளால் தனக்கு ஏதாவது பிரச்னை வருமோ என்று பயந்தார் கிரண். ஆனால், கிரணைத் திருமணம் செய்துகொள்ளவிருந்த ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் ஷா, தனது முயற்சியினால் 2 மில்லியன் டாலரைச் சேர்த்து ஐசிஐ-யிடமிருந்து பயோகானின் பங்குகளை முழுமையாக வாங்கினார். அதன் மூலம் பயோகான் முழுமையாக கிரணுக்கு வந்து சேர்ந்தது. கிரண் மஜூம்தார்-ஜான் ஷா திருமணம் முடிந்தபின், பயோகான் நிறுவனம் கிரண் மஜூம்தார் ஷாவுக்குச் சொந்தமானது.  

   பங்குச் சந்தையில் சாதனை


இந்த நிலையில், கிரண் மஜூம்தார் ஷாவின் பயோகான் படிப்படியாக வளர்ந்து, பல உச்சங்களைத் தொட்டது. ஜப்பானைச் சேர்ந்த ஃபுஜிஃபிலிம் பார்மா (FUJIFILM Pharma), அமெரிக்காவின் மைலன் (Mylan) போன்ற பல சர்வதேச நிறுவனங்களுடனும் கூட்டுச் சேர்ந்து, பல வாய்ப்புகளைத் தேடித் தேடிக் கொண்டு வந்தார் கிரண்.

அவருக்கு பலதுறை சார்ந்த வெற்றியாளர்களுடன் நெருங்கிய நட்பும் இருந்தது. இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியுடன் கொண்ட நட்பு அவருக்குப் பங்குச் சந்தையை அறிமுகப்படுத்தி வைத்தது. பயோகானின் அடுத்தக் கட்ட வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிக்காக முதலீடு தேவைப்பட்ட நிலையில், 2004ல் அவர் பயோகானை பங்கு வெளியீட்டுத் திட்டத்துக்குக் கொண்டு வந்தார். ஐபிஓ விற்பனையில் பயோகான் பங்குகள் 33 மடங்கு அதிகமாக விண்ணப்பிக்கப்பட்டது.  

   பெண் என்ற அடையாளம்

அவருடைய வெற்றிக்கு அவருடைய உழைப்பு, முயற்சி எல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் மிக முக்கியமான காரணம், தான் ஒரு பெண் என்ற அடையாளத்தையே முற்றிலும் மாற்றியதுதான். நம்முடைய இந்தியச் சமூகத்தில் பெண்களுக்கு எப்போதும் இருக்கும் தடைகளை எல்லாம் அவர் லாகவமாக கடந்த சம்பவங்கள் எல்லாம் மிக சுவாரஸ்யமானவை.

மது தயாரிப்பு குறித்த படிப்புக்கு ஆஸ்திரேலியா போனபோது, அங்கு அவர் மட்டும்தான் பெண். அங்கு யாருடைய உதவியும் இல்லாமல், அனைத்தையும் தனியாக எதிர்கொண்டார். அங்கு வந்து படித்த ஆண்கள் எல்லோரும் மது தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வந்தவர்கள். ஆனாலும் வகுப்பில் அவர்தான் முதல் மாணவி. ‘பெண்ணாக இருப்பது ஒரு குறையல்ல. நம்மால் எதுவும் முடியும். அப்படி முடியாதது ஏதாவது ஒன்று இருந்தால், அதையும் முயற்சித்து பார்க்கும் தைரியம் வேண்டும்’ என்பார் கிரண்.

மேலும், பெண் என்பதால் சமூகத்தில் சொல்லப்படும் தவறான கருத்துகளுக்கு அவர் ஒருபோதும் செவிசாய்த்ததே இல்லை. மாறாக, பெண்ணாக இருப்பதால் கிடைக்கக்கூடிய சலுகைகளை மிகத் திறமையாக தனது வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொண்டார். அவர் யாருக்கும் ஒருபோதும் லஞ்சம் கொடுத்ததில்லை. தொழில் சார்ந்த அரசியல் மற்றும் அலுவலக விவகாரங்களுக்கு தனது பணியாளர்களை அனுப்பாமல், தானே நேரடியாகச் சென்று உரிய அதிகாரிகளைப் பார்த்து பேசினாலே எந்தக் குறுக்குவழியும் இல்லாமல், நமக்குத் தேவையானதை அடைய முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் கிரண்.

முக்கியமான தொழில் உரிமங்களைப் பெற உரிய அதிகாரிகளுடன் பேசும் முறையே வித்தியாசமாக இருக்கும். ‘‘அரசிடமிருந்து அனுமதி வேண்டும் என்றால், அதைக் கேட்கும்போது உன் சுயநலத்துக்காகக் கேட்பது போல் கேட்கக்கூடாது. பதிலாக, ஒட்டுமொத்தமாக அந்தத் துறைக்கே பயனுடையதாக இருக்கும் என்று விளக்கவேண்டும். நான் அரசு அலுவலகத்துக்குச் சென்று பேசும்போது, ‘எங்களுக்கு இது வேண்டும்’ என்று கேட்கமாட்டேன். ‘நீங்கள் இதைச் செய்தால் இந்தத் தொழில் இப்படி எல்லாம் வளரும்’ என்றுதான் சொல்வேன்’’ என்பார். அவருடைய வெற்றிகளுக்கு இந்த அணுகுமுறையும் ஒரு முக்கிய காரணம்.

இப்படி, தான் எடுத்துக்கொண்ட ஒவ்வொரு முயற்சியிலும் தனது கடும் உழைப்பையும் நேர்மையையும் அர்ப்பணிப்புடன் கொடுத்ததன் மூலம் உலகளவில் சக்தி வாய்ந்த பிசினஸ் பெண்மணியாக உயர்ந்தார் கிரண் மஜூம்தார் ஷா. வேதியியல் துறையில் மிக முக்கியப் பங்காற்றுபவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ஆத்மர் கோல்டு விருதை வாங்கிய முதல் இந்தியர் கிரண்தான். இவருக்குப் பிறகுதான் முகேஷ் அம்பானிக்கே இந்த விருது கிடைத்தது.

பயோடெக் துறையில் கொடிகட்டிப் பறக்கும் பயோகான் நிறுவனத்தின் நிறுவனர் கிரண் மஜூம்தார் ஷாவின் இன்றையச் சொத்து மதிப்பு 1.94 பில்லியன் டாலர் ஆகும். இவர் மாதிரியான பிசினஸ் பெண்மணிகள் ஒரு சிலரே!