Published:Updated:

நீங்களும் அதிர்ஷ்டசாலி ஆகலாம்!

நீங்களும் அதிர்ஷ்டசாலி ஆகலாம்!
பிரீமியம் ஸ்டோரி
நீங்களும் அதிர்ஷ்டசாலி ஆகலாம்!

நாணயம் லைப்ரரி!

நீங்களும் அதிர்ஷ்டசாலி ஆகலாம்!

நாணயம் லைப்ரரி!

Published:Updated:
நீங்களும் அதிர்ஷ்டசாலி ஆகலாம்!
பிரீமியம் ஸ்டோரி
நீங்களும் அதிர்ஷ்டசாலி ஆகலாம்!
நீங்களும் அதிர்ஷ்டசாலி ஆகலாம்!

புத்தகத்தின் பெயர் : லக் (Luck)

நீங்களும் அதிர்ஷ்டசாலி ஆகலாம்!ஆசிரியர் : எட் ஸ்மித் (Ed Smith)

பதிப்பாளர் : Bloomsbury Publishing India Private Limited

இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம், எட் ஸ்மித் என்னும் இங்கிலாந்து நாட்டு புரொஃபஷனல் கிரிக்கெட் வீரர் எழுதிய ‘லக் - எ ஃப்ரெஷ் லுக் அட் ஃபார்ச்சூன்.’  இது அதிர்ஷ்டம் பற்றிய புதிய பார்வையைத் தரும் புத்தகம் ஆகும்.

‘‘இந்தப் புத்தகத்தை நான் எழுதுவேன் என நினைத்துப்பார்க்கவே இல்லை. ஏனென்றால் என் வாழ்க்கையின் பெரும்பாலான பகுதிகளில் நான் அதிர்ஷ்டம் குறித்து நம்பியதே இல்லை. அதிர்ஷ்டம் குறித்துப் பேசுவது எல்லாம் கையாலாகத்தனம் என்றே நான் நினைத்திருந்தேன். நம் அதிர்ஷ்டத்தைத் தீர்மானிப்பது நாம்தான் என்கிற எண்ணமே என்னிடம் மேலோங்கி இருந்தது.

தொடர்ந்து நீண்ட காலத்துக்கு நாம் செய்யும் கடுமையான முயற்சிகளே நாம் எதற்குத் தகுதியானவராக இருக்கிறோமோ, அதை நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கிறது. இந்த எண்ணமே எனக்குள் இருந்தது.

யாராவது எனக்கு  ‘குட் லக்’ என்று வாழ்த்தினால், நான் சொன்ன பதில் என்ன தெரியுமா? வெற்றியைத் தருவது அதிர்ஷ்டம் இல்லை, திறமைதான்!  

அதிர்ஷ்டம் என்பதில் எள்ளளவும் நம்பிக்கை வைக்காத என்னிடத்தில், சில மூட நம்பிக்கைகளும் குடிகொண்டிருந்தன. மாலையில் மேட்ச் இருக்கும் நாட்களில் பள்ளியில் ஒரே சீட்டிலேயே அமர்வேன். கடந்த வாரம் போட்டியில் ஜெயித்த போது போட்டிருந்த அதே சட்டையை அடுத்த வாரம் போட்டிக்கும் போட்டுச்செல்வேன். கால் கவசம் அணிவதில் முதலில் வலதுகால் கவசத்தைத்தான் எப்போதும் அணிவேன். ‘ஜெயிப்பதற்குக் காரணம் அதிர்ஷ்டம் இல்லைங்கிற. அப்புறம் எதற்கு இதையெல்லாம் பார்க்குறே’ என்று யாராவது கேட்டால், ‘ஜெயிக்கும் சூத்திரங்களை ஒருபோதும் மாற்றக்கூடாது’ (Never change a winning formula) என்பேன்.

1996-ம் ஆண்டு கேம்பிரிட்ஜில் முதல் மேட்ச் ஆடப்போகும் வழியில் ஒரு கடையில் செய்தித்தாளும், ஒரு ஜூஸையும் வாங்கிச்சென்று செய்தித்தாளைப் படித்தபடி ஜூஸைக் குடித்து முடித்தேன். அன்று ஆடிய மேட்சில் செஞ்சுரி அடித்தேன். பதினெட்டு வயது மற்றும் ஒன்பதே மாதங்களான ஒரு பையன் முதல் மேட்சில் செஞ்சுரி அடிப்பது என்றால் சும்மாவா? அப்புறம் என்ன... நல்ல கிரிக்கெட் கரியர் ஆரம்பித்ததோ இல்லையோ, மேட்ச் இருக்கும் நாட்களில் எல்லாம் ஜூஸும், செய்தித்தாளும் வாங்குவது தொடர்ந்தது.

வழக்கமான விஷயங்களை எப்படி மாற்றுவது? கேம்பிரிட்ஜில் நடந்த முதல் மேட்சில் இருந்து கடைசி மேட்ச் வரை இது நடக்கவே செய்தது. விளையாட்டில் வெற்றி என்பது தொடர்ந்து ஒரே மாதிரியான தந்திரங்களை உபயோகிப்பதனால் வருகிறது என்பதினாலேயே இதைச் செய்தேன். விளையாட்டு என்பது உடல் மற்றும் மூளை சார்ந்தது. மூளைக்குச் சரியான நிகழ்வுகளைச் செய்ய அதற்கும் ஒரே மாதிரியான தந்திரங்கள் தேவைப்படுகிறது.
இன்னுமோர் உதாரணம் சொல்கிறேன். கிட்டத்தட்ட என் கிரிக்கெட் கரியரில் 15,000 ஓவர்கள் விளையாடி இருப்பேன். ஒவ்வொரு பந்துக்கும் முன்னாலும் அம்பயரிடம் இன்னும் எத்தனை பந்துகள் இருக்கின்றன என்று கேட்பேன். இது முட்டாள்தனமாக இருக்கிற மாதிரி படவில்லையா? எனக்கு நன்றாகத் தெரிகிறது. இருந்தாலும் பழகிவிட்டதே!

இந்த மூடநம்பிக்கைகளை என்னால் கடைசிவரை ஒழித்துக்கட்டவே முடியவில்லை. வீனஸ் வில்லியம்ஸ் என்னும் டென்னிஸ் விளையாட்டு வீரர் 2008 பிரெஞ்ச் ஓப்பன் போட்டியில் எதிர்பாராதவிதமாகத் தோல்வி அடைந்தபோது,  ‘நான் என் லேஸை வலதுபுறமாகக் கட்டவில்லை. ஐந்து முறை பந்தினை பவுன்ஸ் செய்வேன். அதைச் செய்யவில்லை. என் குளியலறைக் காலணியை மைதானத்துக்குக்  கொண்டு  வருவேன்.  அதையும் கொண்டுவரவில்லை’ என பல்வேறு காரணங்களை அவர் சொன்னது, விளையாட்டு வீரர்கள் மத்தியில் நிரம்பிக்கிடக்கும் மூட நம்பிக்கையையே காட்டுகிறது.

உளவியல் ஆராய்ச்சியாளர்கள் புறாவைக் கூண்டில் அடைத்து திடீர் திடீரென அவற்றுக்கு உணவளித்துப் பார்த்தனர். முதல் தடவை சாப்பாடு வந்தபோது, எந்த செயலைச் செய்தனவோ (கூண்டின் மேல்பகுதியைக் கொத்தின) அதைச் செய்துவிட்டு, சாப்பாடு வருகிறதா என்று எட்டிப்  ்பார்த்தன புறாக்கள். புறாக்களும் வீரர்களும் அவர்கள் பெற்ற உணவும் வெற்றியும் அதற்கு முன்னால் நடந்த செயலின் காரணமாகவே நடந்தது என்ற (தவறான) நம்பிக்கையைக் கொண்டிருக்கிறார்கள் என்று முடிவு செய்தன ஆய்வுகள். அதாவது, நம்மால் கட்டுப்பாடு செய்ய முடியாத விஷயங்களையும் நம்மால் கட்டுப்பாடு செய்ய முடிகிற விஷயங்களையும் நாம் குழப்பிக்கொள்கிறோம்.

நீங்களும் அதிர்ஷ்டசாலி ஆகலாம்!

என்னைப் பொறுத்தவரை, நான் ஜெயிக்கிற மேட்சுகளை மட்டுமே ஆடிக்கொண்டிருந்தேன்.எதையும் புதிதாகச் செய்வதைத் தவிர்த்தேன். அதாவது, ரிஸ்க் என்பதை விட்டு காததூரம் ஓடிப் போனேன். நான் எனக்குத் தெளிவாகத் தெரிந்த விஷயங்களை மட்டுமே பிரயோகித்து,  தெளிவாக வரையறுக்கப்பட்ட விளையாட்டை மட்டுமே விளையாடி ஜெயித்தேன் எனலாம். இது ஒரு வெற்றியே அல்ல.

என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள் என்கிறீர்களா? எனக்கு முப்பது வயதில்தான் இது புரிந்தது. ‘அதிர்ஷ்டம்’ என்பதே என்னை மாற்றியது” என இந்தப் ‘புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் ஏன் இந்தப் புத்தகத்தை எழுதினேன்’ என்று விளக்குகிறார் ஆசிரியர்.

‘‘வாழ்க்கையில் அதிர்ஷ்டம் வேண்டும் என்று நினைக்கிற நாம், அது வந்தபின்னர் அதுதான் நமக்கு உதவியது என்று ஒப்புக்கொள்வதேயில்லை. ஏனென்றால் அதிர்ஷ்டமே நமக்கு உதவியது என்று நாம் ஒப்புக்கொண்டால்  நமக்குத் திறமையில்லை என்பதுபோல் ஆகிவிடுமே! முதலில், அதிர்ஷ்டமே நம்மை இன்றைய நிலையில் வைத்திருக்கிறது என்பதை உணர்ந்தும் ஒப்புக்கொண்டும் வாழ முயற்சிக்கும் பட்சத்திலேயே அது நமக்குத் தொடர்ந்து வருவதை நம்மால் உணர முடியும். இதை உணராமல் எனக்கு அதிர்ஷ்டமில்லை என்று புலம்பும் மனிதர்கள் அவர்களுடைய இந்த முட்டாள்தனத்தினாலேயே துரதிர்ஷ்டசாலிகளாக மாறுகின்றனர். ஒருபோதும் தகுதியானவர்கள் உலகத்தால் ஒதுக்கப்படுவ தில்லை. அந்தத் தகுதி வாய்ந்த நபர்கள் அவர்களுடைய தவறுகளினாலேயே  தோல்வி அடைகிறார்கள்’’ என்கிறார் ஆசிரியர். 

‘‘ஆண்டான், அடிமை என்ற படிநிலைகள் இருந்த அந்தக் காலத்தில் பிறக்கும் குடும்பம் மற்றும் சூழல் (நாம் திட்டமிட முடியாத ஒரு விஷயம்) என்பது ஒருவருடைய வெற்றி, தோல்வியை நிர்ணயித்தது. ஆனால், இந்த நவீனத் திறமைக்கு மரியாதை தருகிற நாகரிகம் வளர்ந்த நவீன உலகில் ஒருவருடைய வளர்ச்சி என்பது அவர் கொண்டிருக்கும் மனதிடத்தையே சார்ந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

பொதுவாக, நீங்கள் ஒரு விஷயத்தில் வெற்றி பெறுகிறீர்கள். ‘என் திறமைடா...’ என்று கொக்கரிக்கிறீர்கள். அதேநேரம் தோல்வி அடைகிறீர்கள். எனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று நாம் தேற்றிக் கொள்கிறோம். ஜெயித்தால் திறமை, தோற்றால் துரதிர்ஷ்டமா?’’ என்று கேட்கும் ஆசிரியர், 3M நிறுவனத்தில் நடந்த ஒரு சுவையான விஷயத்தை மேற்கோள் காட்டுகிறார்.

‘‘ஒருவகையான பசையைக் கண்டுபிடித்து அதை உற்பத்தி செய்தது இந்த நிறுவனம். துரதிர்ஷ்டவசமாக அந்தப் பசை காயவே மாட்டேன் என்றது. சரி, தூக்கிப்போட்டுவிட்டு, வேறு ஒரு பசையைச் செய்வோம் என்று அதிர்ஷ்டத்தை நொந்துகொண்டு வேலைப் பார்க்க ஆரம்பித்தனர். ‘ஒட்டாத பசை டப்பா’ என்று எழுதி ஓர் இடத்தில் வைத்துவிட்டு, ஆறு வருட காலம் மறந்துபோயினர். பின்னர், ஆறாவது ஆண்டில் எதேச்சையாக அந்தப் பசை டப்பாவை எடுத்துப்பார்க்க, அப்போதும் அந்தப் பசை காயவில்லை. அதிலிருந்து உருவானதுதான் இன்றைக்கு நாம் கலர் கலராய் உபயோகிக்கும் ஸ்டிக்கி நோட். பசை காயாதது அதிர்ஷ்டமா, துரதிர்ஷ்டமா? நீங்களே சொல்லுங்கள்’’ என்று கிண்டலாகக் கேட்கிறார் ஆசிரியர்.

‘‘இன்றைய டெக்னாலஜி உலகில் அதிர்ஷ்டம் என்பதை ஒப்புக்்கொண்டால், அது என்னமோ நம்மை நாமே தாழ்த்திக்கொள்வது போலாகும் என்ற எண்ணமே நம்மிடம் மேலோங்கி நிற்கிறது. வெற்றிகள் குவியும்போது நம்மை மீறிய விஷயங்கள் ஏதும் இல்லை என்ற எண்ணமே பரவலாக நம்மிடத்தில் உருவாகிறது.

வாழ்வில் அதிர்ஷ்டத்தின் பங்கைப் புரிந்துகொள்ள,  முதலில் நாம் அது இல்லாவிட்டால் எவ்வளவு பாதிப்பை அடைவோம் என்று முழுமையாக உணர வேண்டும். அதுவே நம்மை முழுமனிதனாக்கும்” என்று முடிக்கிறார் ஸ்மித். உங்களின் அதிர்ஷ்டம் நீங்கள், உங்களை அதிர்ஷ்டசாலி என்று நம்புவதிலேயே இருக்கிறது என்பதைச் சொல்லும் இந்தப் புத்தகத்தை அதிர்ஷ்டசாலியாக மாறவிரும்பும் அனைவரும் ஒருமுறை படிக்கலாம்.

- நாணயம் டீம்


(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங்வெப்சைட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.)