Published:Updated:

ஊழியர்களை எப்படிக் கையாள வேண்டும்? - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 11

ஊழியர்களை எப்படிக் கையாள வேண்டும்? - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 11
பிரீமியம் ஸ்டோரி
ஊழியர்களை எப்படிக் கையாள வேண்டும்? - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 11

உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன், மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

ஊழியர்களை எப்படிக் கையாள வேண்டும்? - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 11

உங்களை அம்பானி ஆக்கும் வைபரேஷன் தொடர்கே.எஸ்.கமாலுதீன், மேலாண்மை இயக்குநர், ப்ளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்

Published:Updated:
ஊழியர்களை எப்படிக் கையாள வேண்டும்? - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 11
பிரீமியம் ஸ்டோரி
ஊழியர்களை எப்படிக் கையாள வேண்டும்? - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 11
ஊழியர்களை எப்படிக் கையாள வேண்டும்? - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 11

ரு பிசினஸுக்கு ஊழியர்கள்தான் மிக முக்கியமான பலம். தொழில்முனைவோருக்கு ஊழியர்களைக் கையாளத் தெரிந்திருப்பது மிகவும் அவசியம். ஊழியர்களைக் கையாளும் திறமை மட்டும் உங்களுக்கு வாய்த்துவிட்டால், உங்களால் எந்தச் செயலையும் வெற்றிகரமாக நடத்தி முடிக்க முடியும். ஊழியர்களைக் கையாளுவதில் சூட்சுமங்கள் நிறைந்து கிடக்கின்றன. ஊழியர்கள் மேலாண்மையில் கையாள வேண்டிய முக்கியமான படிநிலைகளை விரிவாகப் பார்க்கலாம்.

ஊழியர்களை எப்படிக் கையாள வேண்டும்? - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 11

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!



  ஊழியர்களின் தேர்வு முறை

ஊழியர்களுக்கான தேர்வு முறையைத் திட்டமிடுவதற்குமுன், நம்முடைய பிசினஸைப் பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். எந்தெந்த வேலைகளுக்கு நாம் ஊழியர்களைத் தேர்தெடுக்க இருக்கிறோம், அவர்களுக்கு என்னென்ன கல்வித் தகுதி, தொழில்நுட்ப தகுதி, குணநலன்கள் இருக்க வேண்டும் என்பது பற்றி எல்லாம் நமக்குத் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். 

பொதுவாக, உடலுழைப்பு தொடர்பான வேலைகளுக்கு எந்தத் தகுதியும் பார்க்காமல் ஆட்களைத் தேர்வு செய்கிறார்கள். மூளையைப் பயன்படுத்தி செய்யும் வேலைகளுக்கு, முக்கியமாக  கல்வித் தகுதி, சில எழுத்துத் தேர்வுகள் மற்றும் தகவல் தொடர்பு திறமை போன்றவை பார்க்கப்படுகின்றன. முன் அனுபவமும் ஒரு முக்கிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. எல்லா பிசினஸுக்கும், எல்லாப் பணியாளர்களுக்கும் இந்த ஒரே தேர்வு முறையைப் பயன்படுத்த முடியாது. நம்முடைய பிசினஸ் என்ன, எந்த வேலைக்கு ஆள் எடுக்கிறோம் என்பதைப் பொறுத்து, தேர்வு செய்யும் முறை மாறும். தேர்வு செய்யும் முறையில் தெளிவு இருந்தால், திறமையான நபர்களை எளிதில் தேர்ந்தெடுக்கலாம்.

  சரியான நபரைத் தேர்ந்தெடுங்கள்

எந்த வேலைக்கு நாம் ஆட்களை எடுக்கிறோமோ, அந்த வேலைக்கான சரியான நபரைத் தேர்ந்தெடுத்துவிட்டாலே பிசினஸில் 75 சதவிகித வெற்றியைப் பெற்றது மாதிரிதான். எனவே, தேர்வு முறையைத் திட்டமிட்ட பிறகு தேர்வில் கலந்து கொண்டவர்களின், வேலைக்கு அவசியமான கல்வி மற்றும் பிற தகுதிகளை வைத்து  அவர்களை படிப்படியாக வடிகட்ட வேண்டும்.

ஆரம்பத்திலேயே நிறைய ஆட்களை வேலைக்கு நியமிப்பதைத் தவிர்க்க வேண்டும். தொழிலின் அளவுக்கேற்ப தேவையான மற்றும் சரியான ஆட்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். பிற தேர்வுகளைக் காட்டிலும் நேர்முகத் தேர்வுக்கு சற்றுக் கூடுதல் முக்கியத்துவம் தர வேண்டும். ஏனெனில் பிற தேர்வுகளைக் காட்டிலும், நேர்முகத் தேர்வில்தான் அவர்களுடைய உண்மையான மனநிலையை நம்மால் அறிய முடியும். அவர்களின் அடிப்படை விவரங்களைக் கேட்டறிந்த பிறகு, வேலைக்குத் தேவையான மனப்பாங்கு அவர்களுக்கு இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். அவர்களுடைய குடும்பச் சூழ்நிலையைப் பற்றியும், அவர்கள் வளர்ந்த சூழல் பற்றியும், சந்தித்த சவால்கள் பற்றியும் பேசுவது மிகவும் நல்லது.

ஆனால், எதுவும் கட்டாயத்தின்பேரில் இருக்கக் கூடாது. இப்போது பெரும்பாலும் ஏதோ ஒரு படிப்பைப் படித்துவிட்டு, ஏதோ ஒரு வேலைக்குதான் எல்லோரும் போகிறார்கள். அதில் தவறில்லை. ஆனால், விருப்பம் ஒன்றாகவும் வேலை ஒன்றாகவும் இருந்தால் அவர்களால் முழுமையாகத் தன்னைப் பணியில் ஈடுபடுத்திக் கொள்ள முடியாமல் போகலாம். அப்போது நாம் எதிர்பார்த்த இலக்கை எட்ட முடியாத நிலைதான் உருவாகும்.

எனவே, நேர்முகத் தேர்வின்போதே வேலைக்கு விண்ணப்பித்தவரின் விருப்பம் எதில் இருக்கிறது என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். மொழிக்கு முக்கியத்துவம் அவசியம்தான். ஆனால், சிலருக்குத் தங்கள் மொழியறிவை வளர்த்துக் கொள்வதற்கான சூழல் கிடைக்காமல் இருக்க வாய்ப்புள்ளது. உண்மையாகவே இந்த வேலைக்கு மொழியறிவு மிகவும் அவசியம் என்றால் மட்டுமே அதைக் கறாராகப் பார்க்கலாம். வெளியில் இருந்து தேர்வாளர்களை வைத்து ஊழியர்களைத் தேர்வு செய்தாலும்கூட, நேர்முகத் தேர்வில் தொழில் முனைவோரும் இருப்பது அவசியம்.

  பயிற்சியும் வேலையும்

ஊழியர்களைத் தேர்ந்தெடுத்த பிறகு நேரடியாக அவர்களை வேலையில் இறக்கிவிட்டுவிடக் கூடாது. சிறிதுநேரம் ஒதுக்கி, உங்களுடைய பிசினஸ் என்ன, லட்சியம் (Mission) என்ன என்பதைத் தெளிவுபடுத்தி, அவர்களுக்கான வேலை என்ன என்பதையும் விளக்க வேண்டும். அதைவிட முக்கியமாக, அவர்கள் உங்களுடைய பிசினஸுக்கு எந்தளவுக்கு முக்கியம் என்பதையும் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.  அவர்களிடையே முதல் நாளிலிருந்தே ஓர் உற்சாகத்தை ஏற்படுத்த இந்தச் சந்திப்பு மிகவும் உதவும்.

அடுத்து, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலையில் அவர்களுக்குத் தெரியாதவை குறித்து பயிற்சி அளிக்க வேண்டும். பயிற்சி அளிக்காமல் அவர்கள் நீங்கள் கொடுத்த வேலையை முடிக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. அது முற்றிலும் பிசினஸைக் கெடுத்துவிடும். மேலும், பயிற்சியின் போது அவர்களைக் கூர்மையாகக் கவனிக்க வேண்டும். அவர்களுடைய கற்கும் ஆர்வம், வேகம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்வது அதற்கேற்ப அவர்களை இயக்க உதவியாக இருக்கும்.

ஊழியர்களை எப்படிக் கையாள வேண்டும்? - நீங்களும் ஆகலாம் பிசினஸ்மேன்! - 11

  திறமையை வளர்த்தெடுங்கள்

பயிற்சிக்குப் பிறகு ஊழியர்களுக்கு வேலை தரப்பட வேண்டும். வேலையின்போது அவர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு அதற்கேற்ப அவர்களை இயக்க வேண்டும். அவர்களுடைய திறமைகள் என்னென்ன என்பதைக் கவனித்து அவற்றை வளர்த்தெடுக்க வேண்டும். அவர்களுடைய திறமைகளை உங்களுடைய பிசினஸ் வளர்ச்சிக்குப் பயன்படுத்துங்கள். அவர் வேறு ஒரு வேலைக்காக எடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அவர்  திறமைமிக்கவரா என்பதைக் கண்டறிந்து, அதில் அவருடைய வேலையை மாற்றுவதில் தவறே இல்லை. அப்படி மாற்றுவது தான் அவருடைய திறமைக்கும் தீனி போடுகிற மாதிரி இருக்கும்; நம் பிசினஸை வளர்க்கவும் சரியாக இருக்கும்.

  ஊழியர்களைக் கையாளும் சூட்சுமங்கள்

ஒருவருக்குக் கீழே வேலை பார்க்கும் ஊழியர்களை, அவர்களுடைய பணி செயல்பாடு மற்றும் குணநலன்களை வைத்து ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம்.

1. 50% ஊழியர்கள், 2. 75% ஊழியர்கள், 3. கணக்கான ஊழியர்கள், 4. கடின உழைப்பாளிகள், 5. ஆக்கபூர்வ ஊழியர்கள். இதன்படிதான் அவர்களுடைய உயர்வும் தாழ்வும் கணக்கிடப்படும். சம்பள உயர்வு, பதவி உயர்வு அல்லது வேலை நீக்கம், பதவிப்பறிப்பு ஆகியவை இதன் அடிப்படையில்தான் முடிவெடுக்கப்படும்.

இவர்களில் 50 சதவிகித ஊழியர்கள், கொடுத்த நேரத்தில் கொடுத்த வேலையில் பாதியை முடித்துத் தந்துவிடுவார்கள். வேலை நேரத்தில் தேவையற்ற வேலைகளைப் பார்ப்பதே இதற்குக் காரணம். இவர்களை அவ்வப்போது கண்காணிக்கப்பட வேண்டும். தொடர்ந்து இவர்களோடு சந்திப்புகளை ஏற்படுத்த வேண்டும். இவர்களுடைய பிரச்னை என்ன என்பதை அவர்களோடு பேசித் தெரிந்து கொண்டு மாற்ற முயற்சிக்க வேண்டும்.  அப்போதும் இவர்கள் மாறவில்லை என்றால், இவர்களை லாகவமாக வெளியேற்றிவிட வேண்டும்.

‘அருகில் ஆள் இருந்தால்தான் வேலை செய்வேன்’ என்கிறவர்கள் 75% வேலை பார்க்கிற ரகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், நம்மால் அவர்களுடனே நின்றுகொண்டு சாவி கொடுத்துக் கொண்டு இருக்க முடியாது. இவர்களை நாம் அடுத்து பார்க்கப்போகிற ஊழியருடன் சேர்ந்து வேலை செய்யுமாறு மாற்றிவிட வேண்டும். அப்படி செய்யும்போது அவர்களுடைய உற்பத்தித் திறன் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அப்படியும் அதிகரிக்க முடியாவிட்டால், அவருக்கான சம்பள உயர்வு அவரைவிடக் கூடுதலாக வேலை செய்ப வரைக் காட்டிலும் குறைவாகவே இருக்க வேண்டும்.

கணக்காக வேலை பார்ப்பவர்கள், வேலையை யும் நேரத்தையும் கணக்காக வைத்திருப்பார்கள். அவர்களால் உங்களுக்கு எந்தக் குறைவும் இருக்காது. முடிந்தவரை இவர்களை வெளியே விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், இவர்கள் அவர்களுடைய வேலைக்கு மேல் எதையும் யோசிக்க மாட்டார்கள். வேறு வேலைக்குத் தாவுவதையும் யோசிக்க மாட்டார்கள். அதற்கான சூழலை நீங்களே உருவாக்கிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதாவது, அவர்களை அதிகம் சீண்டாமல் அவர்களுக்கான வேலைகளைக் கொடுப்பதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.

கடின உழைப்பாளியாக இருப்பவர்கள் நேரம், காலம் பார்க்காமல் வேலை செய்வார்கள். அவர்களை நாம் அவ்வப்போது அடையாளப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் சன்மானத்தைக் காட்டிலும் அங்கீகாரங் களை விரும்புவார்கள். ஆனால்,  அவர்களுக்கான சன்மானங்களை அதாவது, சம்பள உயர்வு, பதவி உயர்வு  ஆகியவற்றையும் சரியான நேரத்தில் தருவது நல்லது. ஏனெனில் இவர்களைப் போன்றவர்கள் மிக அரிதாகவே நமக்குக் கிடைப்பார்கள்.

ஆக்கபூர்வ ஊழியர்கள் ஒரு பிசினஸுக்கு அதிர்ஷ்ட தேவதைகள் போன்றவர்களாவர். ஏனெனில் இவர்கள் கொடுக்கும் யோசனைகள் சில நேரங்களில் உங்கள் பிசினஸையே  உச்சாணியில் ஏற்றிவிடக்கூடியவையாக இருக்கும். இவர்கள் வேலைசெய்யும் அதே நேரத்தில், உங்களுக்கும் சேர்த்து யோசிப்பவர்கள். அது திட்டமிட்டும் நடக்கலாம், எதேச்சையாகவும் நடக்கலாம்.

உதாரணமாக, கோல்கேட் பேஸ்ட் நிறுவனத்தில் நடந்த சம்பவத்தைச் சொல்லலாம். கோல்கேட் பேஸ்ட்டில் முன்பு துளை சற்று சிறியதாகவே இருக்கும். இதைப் பார்த்த அந்த நிறுவனத்தின் துப்புரவுத் தொழிலாளி ஒருவர், ‘பேஸ்ட்டில் துளை சிறியதாக இல்லாமல் பெரிதாக இருந்தால், அதிகமாக பேஸ்ட் செலவாகும். விற்பனையும் அதிகமாகுமே’ என்றாராம். இப்படிக் கிடைக்கும் யோசனைகள் மிக முக்கியமானவை. இவர்களில் சிலர் யோசனைகளைப் பகிர்ந்துகொள்வார்கள், சிலர் பயத்தில் சொல்லாமலும் இருப்பார்கள்.

  ஆரோக்கியமான உறவு

நம்மிடம் பணியாற்றும் ஊழியர்களை நம் குடும்பத்தில் ஒருவராகப் பாவித்து நடத்தவேண்டும். அவர்களுடைய குடும்பத்தைப் பற்றி அவ்வப்போது விசாரிக்க வேண்டும். குடும்ப நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டும். நீங்கள் காட்டும் அன்பும் அக்கறையும்தான் உங்களுக்கு விசுவாசமான ஊழியர்களைப் பெற்றுத்தரும். ஏனெனில் பிசினஸ் வெற்றி என்பது ஒரு கூட்டு முயற்சி. நீங்கள் நினைப்பதையும், அதை ஊழியர்கள் சரியாகச் செயல்படுத்துவதையும் அவர்களுக்கும் உங்களுக்கும் இடையேயான உறவுதான் தீர்மானிக்கும். இதனால் உங்களுடைய இலக்கையும் வேகமாக அடைய முடியும். அவர்களுக்கு இருக்கும் பிரச்னைகளைக் கேட்டு, அதற்கான தீர்வுகளையும் திட்டமிட வேண்டும். ஊழியர்களுக்கும் நமக்கும் இடையே பிரச்னைகளோ, மனக்குறையோ இருக்கக்கூடாது.

(ஜெயிப்போம்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism