Published:Updated:

ஆனந்த் மஹிந்த்ரா... நான்கு கொள்கைகளின் நாயகர்!

ஆனந்த் மஹிந்த்ரா... நான்கு கொள்கைகளின் நாயகர்!
பிரீமியம் ஸ்டோரி
ஆனந்த் மஹிந்த்ரா... நான்கு கொள்கைகளின் நாயகர்!

பிசினஸ் சூப்பர் ஸ்டார்கள்!ஜெ.சரவணன் - ஓவியம்: கோ.ராமமூர்த்தி

ஆனந்த் மஹிந்த்ரா... நான்கு கொள்கைகளின் நாயகர்!

பிசினஸ் சூப்பர் ஸ்டார்கள்!ஜெ.சரவணன் - ஓவியம்: கோ.ராமமூர்த்தி

Published:Updated:
ஆனந்த் மஹிந்த்ரா... நான்கு கொள்கைகளின் நாயகர்!
பிரீமியம் ஸ்டோரி
ஆனந்த் மஹிந்த்ரா... நான்கு கொள்கைகளின் நாயகர்!
ஆனந்த் மஹிந்த்ரா... நான்கு கொள்கைகளின் நாயகர்!

குடும்ப பிசினஸ் எந்தச் சிக்கலும் இல்லாமல் அப்படியே கைக்கு வந்தாலும், அதை வெற்றிகரமாக எடுத்துச் செல்வது சாதாரண விஷயமல்ல. ஆனந்த் மஹிந்த்ரா தனது குடும்ப பிசினஸுக்குள் நுழைந்தபோது அவருக்கு பல சவால்கள்  காத்திருந்தன. அந்த சவால்களை எல்லாம் தாண்டி, பிசினஸில் பல உச்சங்களை அவர் தொட்ட கதை ரொம்பவே சுவாரஸ்யமானது.

  பிரிவினை தந்த அதிர்ஷ்டம்

1945-ல் தொடங்கப்பட்ட எம் அண்ட் எம் கம்பெனி, ஆனந்த் மஹிந்த்ரா பிறப்பதற்குமுன் மஹிந்த்ரா & முகமது என்றுதான் இருந்தது. அவரது தாத்தா கே.சி.மஹிந்த்ராவுடன் மாலிக் குலாம் முகமது என்பவர் பார்ட்னராக இருந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்து இந்தியா - பாகிஸ்தான் என்று இரண்டாகப் பிரிந்தபோது, மஹிந்த்ரா & முகமது என்று இருந்த எம் அண்ட் எம் கம்பெனி மஹிந்த்ரா & மஹிந்த்ராவாக மாறியது. மஹிந்த்ராவில் பார்ட்னராக இருந்த மாலிக் குலாம் முகமது, பாகிஸ்தானின் முதல் நிதி அமைச்சராக தேர்வாகி, பாகிஸ்தானுக்கே போய்விட்டார். ஸ்டீல் தயாரித்து வந்த மஹிந்த்ரா அண்ட் மஹிந்த்ரா முழுமையாக மஹிந்த்ரா, குடும்பத்துக்கே வந்தது. 

கே.சி.மஹிந்த்ரா, தனது சகோதரர் ஜே.சி.மஹிந்த்ராவுடன் சேர்ந்து ஸ்டீல் உற்பத்தியைச் செய்துவந்தார். அப்போது ஆனந்த் மஹிந்த்ரா மும்பையில் பள்ளிப்படிப்பு படித்துவந்தார். அவர் கண்முன்னே மஹிந்த்ரா அண்ட் மஹிந்த்ரா கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது. ஸ்டீல்  விற்பனை செய்துவந்த மஹிந்த்ராவுக்கு வில்லிஸ் ஜீப் தயாரிப்பதற்கான கான்ட்ராக்ட் கிடைத்தது. 1956-ல் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலானது. 1969-ல் யுடிலிட்டி வாகனங்கள் மற்றும் உதிரிப் பாகங்களை உற்பத்தி செய்து, ஏற்றுமதி செய்யும் சந்தையைப் பிடித்தது. இவ்வளவு வாய்ப்புகள் கிடைத்தாலும் இந்தியாவில் பல்வேறு துறைகளிலும் தொழிலை விரிவுபடுத்துவதற்கான லைசென்ஸ் கிடைப்பதில் கட்டுப்பாடுகள் இருந்தன.

  மஹிந்த்ராவின் தலைவிதியை மாற்றினார்

மஹிந்த்ராவுக்கு இருந்த சவால்களை மீறி அதை வழிநடத்திச் செல்ல சரியான நபர் இல்லாததால், மஹிந்த்ரா நிறுவனம் பத்தோடு பதினொன்றாக மட்டுமே இருந்தது. அப்போது அமெரிக்காவில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார் ஆனந்த் மஹிந்த்ரா. அவருக்கு சினிமாவிலும் போட்டோகிராபியிலும்தான் ஆர்வம் இருந்தது. அதற்காகவே போட்டோகிராபி மற்றும் சினிமா குறித்த படிப்புகளைத் தேர்வு செய்து படித்தார். பின்னர் ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ படித்தபோதுதான் பிசினஸ் மீதான ஆர்வம் அவருக்கு வர ஆரம்பித்தது. பிசினஸ் குடும்பத்தில் பிறந்த அவர், தான் பார்த்து வளர்ந்த மஹிந்த்ராவைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தார்.

படிப்பை முடித்து இந்தியா திரும்பிய ஆனந்த், மஹிந்த்ரா நிறுவனத்தின் யூஜின் ஸ்டீல் கம்பெனியில் சேர்ந்தார். மஹிந்த்ராவின் அப்போதைய நிலையைக் கூர்ந்து கவனித்தவர், அதை வளர்த்தெடுப்பதற்கான திட்டங்களை வகுத்தார். 1989-ல் அதன் தலைவராகவும், துணை மேலாண்மை இயக்குநராகவும் ஆனபிறகு தனது திட்டங்களைச் செயல்படுத்தினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனந்த் மஹிந்த்ரா... நான்கு கொள்கைகளின் நாயகர்!

  வெற்றி தந்த சவால்கள்

தான் விரும்பிய மஹிந்த்ராவை உருவாக்க விரும்பிய ஆனந்த், அதற்காக பல சவால்களைத் துணிந்து எடுத்தார். தான் செய்துகொண்டிருக்கும் தொழில்களில் மட்டுமே கவனம் செலுத்தாமல் எங்கெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ, அங்கெல்லாம் துணிந்து இறங்கினார். அதில் சில தோல்விகளையும் கண்டார். ஆனால், அதற்கெல்லாம் அவர் கவலைப்படவில்லை. தோல்வியிலிருந்து நிறையப் பாடங்களைக் கற்று கொண்டார். பயந்து ஒதுங்குவதால், எந்தப் பிரச்னையையும் நம்மால் சரிசெய்துவிட முடியாது என்பது அவரது கொள்கையாக இருந்தது.  எதற்கும் பயந்து ஒதுங்காத அவரது குணம்தான் அனைத்திலும் அவருக்கு வெற்றியைக் கொடுத்தது.

உதாரணத்துக்கு, ஸ்கூட்டர் உற்பத்தி பிசினஸ். ஸ்கூட்டர் பிசினஸுக்கு எதிர்காலம் இல்லை என்று பஜாஜ் உட்பட பலரும் 2008-ல் அந்த பிசினஸைக் கைவிட முடிவெடுத்த சமயத்தில் அதில் துணிந்து இறங்கினார் ஆனந்த். கைனடிக் நிறுவனத்தை வாங்கினார். ‘இரு சக்கர வாகனச் சந்தையே சரிவில் இருக்கும்போது, இதில் இறங்குகிறீர்களே, எதற்காக? நஷ்டக் கணக்கு காட்டவா?’ என்றெல்லாம் கேட்டனர். அந்தக் கேள்விக்குத் தெளிவான பதில் அளித்தார் ஆனந்த் மஹிந்த்ரா.

“சீனாவுக்கு அடுத்தபடியாக மோட்டார் சைக்கிள் விற்பனையில் இந்தியாதான் உள்ளது. இங்கு யாரும் எடுத்த எடுப்பிலேயே கார் வாங்கிவிடுவதில்லை. முதலில் சைக்கிள், ஸ்கூட்டர், பின்னர் பைக், கார் என்றுதான் வாங்குகிறார்கள்.  அதனால் நிச்சயம் ஸ்கூட்டருக்கு வரவேற்பு இருக்கவே செய்யும். வாடிக்கையாளர் வளர வளர, அவர்களோடு மஹிந்த்ராவும் தொடர்ந்து பயணிக்கவேண்டும். இதை நான் வெற்றிகரமான பிசினஸாக அமைத்துக் காட்டுகிறேன்!’’ என்றார் ஆனந்த். சொன்னபடியே செய்தும் காட்டினார். நான்கே ஆண்டுகளில் வருடத்துக்கு 1.5 லட்சம் ஸ்கூட்டர்களை விற்பனை செய்தார்.

இதற்காக ஆராய்ச்சிப் பிரிவை அமைத்தார். வாடிக்கையாளர்களின் விருப்பங்கள் என்ன என்பதை அறிந்துகொண்டார். முன்பு உதிரிப் பாகங்களை மட்டுமே தயார் செய்துவந்த மஹிந்த்ரா நிறுவனத்தை முழு வாகனத்தையும் உற்பத்தி செய்யும் அளவுக்கு வளர்த்தெடுத்தார்.

ஸ்கூட்டர் மட்டுமல்ல, பைக், கார்கள் உற்பத்தியிலும் பட்டையைக் கிளப்பினார். மஹிந்த்ராவின் மகத்தான வளர்ச்சிக்கு  ஸ்கார்பியோ கார் மிக முக்கியமான காரணம். ஸ்கார்பியோ காரை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமல்ல, மஹிந்த்ராவுக்கும் அது கம்பீரத்தின் அடையாளமாக இருந்தது. சமீபத்தில் மஹிந்த்ராவின் தயாரிப்புகளாக வந்த டியுவி 300, 400 உள்ளிட்ட கார்களும் வாடிக்கையாளர்களைக் கவர்ந்தன.

  டிராக்டர் தயாரிப்பிலும் சாதனை

தொடங்கிய சில ஆண்டுகளிலேயே டிராக்டர் உற்பத்தியில் மஹிந்த்ரா நிறுவனம் முக்கிய இடம் பிடித்து, விவசாயிகளின் நண்பனாகவே மாறியது. ஆனால், 1973-ல் மஹிந்த்ரா நிறுவனம் மிகப் பெரிய நெருக்கடியைச் சந்தித்தது. கச்சா எண்ணெய் பற்றாக்குறையால் பெட்ரோல் விலை உயர்ந்தது. இது மஹிந்த்ராவின் பிசினஸுக்கும் சவாலாக மாறியது. பத்தாயிரம் டிராக்டர் கள் விற்பனை ஆக வேண்டிய சந்தையில் 3000-க்கும் குறைவாகவே விற்பனை ஆயின. அதற்கு மாற்று வழி கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. டிராக்டர் களில் டீசல் பயன்படுத்தும் வகையில் இன்ஜின்களை வடிவமைத்தது மஹிந்த்ரா. அதன் மூலம் நெருக்கடியைச் சமாளித்து டிராக்டர் சந்தையை விடாமல் தக்கவைத்துக் கொண்டது.

1994-ல் மஹிந்த்ராவின் பல பிசினஸ்கள் மிகவும் தொய்வடைந்து போயிருந்தன. அவற்றை எல்லாம் சரிசெய்து மீண்டும் வளர்ச்சிக்கு வழி செய்து கொடுத்தார் ஆனந்த். மஹிந்த்ராவின் தயாரிப்புகள் அனைத்தையும் உறுதியாகவும் வாடிக்கையாளர் களை கவரும் அட்டகாசமான டிசைனாகவும், தரமாகவும் உருவாக்குவதே அவரது நோக்கமாக இருந்தது.

  ஆனந்தின் வெற்றிக் கொள்கைகள்

ஒவ்வொரு வெற்றியாளருக்கும் தனக்கென சில கொள்கைகள் வைத்திருப்பார்கள். அப்படி ஆனந்த் மஹிந்த்ராவுக்கும் சில கொள்கைகள் உண்டு. அவைதான் அவரது வெற்றிக்கு முக்கிய காரணம் ஆகும். அதில் முதலாவது, யாரையும் ரோல் மாடலாக நினைக்கக் கூடாது என்பது. மற்றவர்களைக் கவனியுங்கள், படியுங்கள், கற்றுக் கொள்ளுங்கள். ஆனால், உங்களுடைய முடிவை நீங்களே தீர்மானியுங்கள். காப்பி அடிக்காதீர்கள் என்பதுதான் அவருடைய கொள்கை.

இரண்டாவது, நீங்கள் யார், உங்களுடைய திறமைகள் என்ன, என்ன செய்ய விரும்புகிறீர்கள்... இவைகள்தான் நம்முடைய வெற்றிக்கு வழிவகுக்கும்.

மூன்றாவது, பிசினஸில் நீங்கள் என்ன திட்டமிட்டாலும் அது அப்படியே நடந்துவிடும் என்பதில்லை. பிசினஸ் என்பது உங்களுடைய திட்டம் மட்டுமே இல்லை. உள்ளூர் முதல் சர்வதேசம் வரை பிசினஸை பாதிக்கும் பல காரணிகள் உள்ளன. அவற்றையெல்லாம் சமாளித்து நீங்கள் விரும்பியதை எப்படிச் செயல்படுத்துகிறீர்கள் என்பதில்தான் பிசினஸின் வெற்றி அடங்கியிருக்கிறது.

நான்காவதாக,  வாடிக்கை யாளர்கள் விரும்பும் தயாரிப்பு களை மட்டுமே தருவது. வாடிக்கையாளர்களின் பிரச்னைகளுக்குச் சரியான தீர்வுகளைக் கொடுக்கும் பிசினஸை அவர்களே வளர்த்தெடுப்பார்கள்.

இந்த நான்கு கொள்கைகளில் இருந்து ஆனந்த் ஒருபோதும் பின்வாங்கியதில்லை. சந்தையைக் கணிப்பதில் ஆனந்த் மஹிந்த்ராவுக்கு அபாரமான அனுபவம் உண்டு. அதன் விளைவுதான் ஆரம்பத்தில் வெறும் ஸ்டீல் மற்றும் வாகன உதிரிப் பாகங்கள் விற்பனையை மட்டுமே செய்துவந்த எம் அண்ட் எம் நிறுவனத்தை, ரியல் எஸ்டேட், ஹாஸ்பிட்டாலிட்டி, விவசாயம், விமானம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் என 15 துறைகளுக்கும் மேல் விஸ்தரித்து கொடிகட்டிப் பறக்க வைத்தார். ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து வெற்றிகரமாக விமானங்கள் உற்பத்தியில் இறங்கி இருக்கிறார்.

பெரும் மோசடியில் சிக்கி பெயரைக் கெடுத்துக் கொண்ட சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தை  வாங்கி, தனது டெக் மஹிந்த்ரா ஐ.டி நிறுவனத்துடன் இணைத்து இன்று, பல முன்னணி ஐ.டி நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியாவின் ஐந்தாவது டாப் ஐ.டி நிறுவனமாக வளர்த்திருக்கிறார். க்ளப் மஹிந்த்ரா மூலம் சுற்றுலா பிசினஸையும் சிறப்பாகச் செய்து வருகிறார்.

இப்படி அனைத்திலும் புதுமையையும், தரமான சேவையையும் செயல்படுத்துவதன் மூலம் தன் நிறுவனத்தை இன்று 12 பில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனமாகவும், இந்தியாவின் டாப் 10 நிறுவனங்களில் ஒன்றாகவும் மாற்றிய பெருமை ஆனந்த் மஹிந்த்ராவையே சேரும்!