Published:Updated:

பணமில்லா பரிவர்த்தனை... நிஜத்தில் வந்தாச்சா ?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பணமில்லா பரிவர்த்தனை... நிஜத்தில் வந்தாச்சா ?
பணமில்லா பரிவர்த்தனை... நிஜத்தில் வந்தாச்சா ?

கட்டுரை, படங்கள்: சி.சிங்கராஜ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

ரூ.500, ரூ.1,000 நோட்டுகளைச் செல்லாமல் ஆக்கிய மத்திய அரசாங்கம், இனி பணத்தை ரொக்கமாகச் செலவழிக்காமல் ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்யச் சொன்னது. ஆன்லைன் பரிவர்த்தனை செய்ய அடிப்படையாக இருப்பது பிஓஎஸ் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் பாயின்ட் ஆஃப் சேல். இந்த பிஓஎஸ் கருவியின் பயன்பாடு தமிழகத்தின் சிறு நகரங்களில்  எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள தென் மாவட்டங்களில் உள்ள சில நகரங்களுக்கு விசிட் அடித்தோம்.

பணமில்லா பரிவர்த்தனை... நிஜத்தில் வந்தாச்சா ?

ரமேஷ், சிவந்தி கிஃப்ட் ஷாப், சாத்தூர்

‘‘மத்திய அரசாங்கம் பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கும் முன்பே பிஓஎஸ் கருவியை நான் பயன்படுத்தி வருகிறேன். அப்போது பெரிய அளவில் பயன்படவில்லை. ஆனால், பழைய  நோட்டுகளை மத்திய அரசாங்கம் வாபஸ் வாங்கியதால், பணத்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு,  மக்கள் பிஓஎஸ்-யை அதிகமாகப் பயன் படுத்தினார்கள்.

ஆனால், இப்போது பணத் தட்டுப்பாடு கொஞ்சம் குறைந்திருப்பதால், மீண்டும் பழையபடி பணத்தையே கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.  ஆன்லைனில் பணம் கட்டினால்,  கட்டணத்துக்கான பணத்தைப் பிடிப்பார்கள் என்று பயப்படுகிறார்கள்.’’

பணமில்லா பரிவர்த்தனை... நிஜத்தில் வந்தாச்சா ?

ரகுநாத், ரகுநாத் பிராய்லர்ஸ், சாத்தூர்

‘‘இந்த முறையினால் வியாபாரம் வேகமாக நடக்கிறது. வருகிறவர்களில் பாதி பேர் பயன்படுத்துகிறார்கள். என் கடையில் கார்டு பயன்படுத்துவதற்கென்றே தனி கஸ்டமர்கள் உள்ளனர். மேலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏடிஎம்-களில் பணம் இருக்காது. அதனால்    ரூ.2,000-க்கு எல்லோருக்கும் சில்லறை தர முடியாது. அதை உணர்ந்து அவர்களே கார்டை பயன்படுத்த முன்வந்து நம் சிரமத்தை குறைக்கின்றனர்.’’

பணமில்லா பரிவர்த்தனை... நிஜத்தில் வந்தாச்சா ?

சண்முகநாதன், மு.செ.சண்முக நாடார் மிட்டாய் கடை, சாத்தூர்

‘‘எங்கள் கடையில் சேவு பிரபலம் என்பதால், வெளியூரிலிருந்து வரும் மக்கள் அதிகம் வாங்கிக் கொண்டு செல்வார்கள். அவர்களில் பெரும் பாலானவர்கள் முதலில் கேட்பது, டெபிட் கார்டு பயன்படுத்தலாமா என்பதே. நாங்கள், இல்லை என்றால் உடனே திரும்பச் சென்றுவிடுகிறார்கள். இவ்வாறு பல கஸ்டமர்களை இழக்க நேர்ந்ததால், உடனடியாகப் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறிவிட்டேன். இப்போது கஸ்டமர்கள் மகிழ்ச்சியாகப் பொருட்களை வாங்கிக் கொண்டு செல்கிறார்கள்.’’

பணமில்லா பரிவர்த்தனை... நிஜத்தில் வந்தாச்சா ?

நிர்மல், கே.பி.ஷூமார்ட், கோவில்பட்டி

‘‘எனக்கு இந்த முறையைப் பயன்படுத்துவதால், நஷ்டமே ஏற்படுகிறது. மேலும், நெட்வொர்க்  பிரச்னை உள்ளதால், சில நேரங்களில் இரண்டு முறை கஸ்டமரின் சேமிப்புக்கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுவிடுகிறது. இதனால் வாக்கு வாதமே ஏற்படுகிறது. இந்த பிரச்னையைச் சொல்வதற்கு வங்கிக்குச் சென்றால், அவர்கள் சரியான பதிலைச் சொல்வதில்லை. இந்தப் பிரச்னை வார இறுதி நாட்களில் ஏற்பட்டால், இன்னும் சிக்கல்தான்.’’

பணமில்லா பரிவர்த்தனை... நிஜத்தில் வந்தாச்சா ?

பால்ராஜ், கவிதா ஐஸ்க்ரீம் கடை, கோவில்பட்டி

‘‘எங்கள் கடைக்குப் பெரும்பாலும் இளைஞர்கள் வருவதால், எந்தப் பிரச்னையும் இல்லாமல் உடனடியாக பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டு, அவர்களுக்கு ரசீது கொடுத்து, அதில் பணம் பெற்றதற்கான கையெழுத்து வாங்கிக்கொள்கிறோம்.  இந்த பணமில்லா பரிவர்த்தனை முறையை இளைஞர்கள் நிறையபேர் விரும்புகிறார்கள்.’’

பணமில்லா பரிவர்த்தனை... நிஜத்தில் வந்தாச்சா ?

பாக்கியராஜ் குமார், நம்மாழ்வார் டிரேடர்ஸ், கோவில்பட்டி

‘‘அரசு ஊழியர்கள், விவரம் தெரிந்தவர்கள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். பலசரக்கு கடை என்பதால் அதிகம் வருவது கிராமப்புற மக்கள்தான். அவர்கள் அதிக பணம் எடுத்துவிடுவோம் என பயப்படுகிறார்கள். மேலும், சர்வீஸ் சார்ஜ் பிடிப்பதால், ஒரு பொருளுக்கு லாபம் வைத்து விற்கும் விலை அதற்கே சரியாக போய்விடுகிறது. இதை வங்கிகளிடம் சொன்னால், கஸ்டமர்களிடம் அதிக லாபம்வைத்து விற்றுக்கொள்ளுங்கள் என்கிறார்கள்.

மேலும், மெஷினுக்கு மாத வாடகையும்  கட்ட வேண்டியுள்ளது. இதனால் சில்லறை வணிகர்கள் இந்த முறையைப் பயன்படுத்தி வியாபாரம் செய்ய முடியாத நிலை உள்ளது.’’

பணமில்லா பரிவர்த்தனை... நிஜத்தில் வந்தாச்சா ?

வினோத், ஸ்ரீலட்சுமி மெடிகல், சிவகாசி

‘‘நான் சென்னையில் பணிபுரிந்தேன். அங்கு பெரும்பாலும் படித்தவர்கள் மத்தியில் கார்டுகளை அதிகம் பயன்படுத்தினார்கள். எனவே, நம் கடைக்கும் தேவை என வாங்கி வைத்துள்ளேன். இந்த பிஓஎஸ் மூலம் எல்லோரும் பரிவர்த்தனை செய்ய வேண்டும் எனில், சர்வீஸ் சார்ஜ் அளவை சிறு வணிகர்களைப் பாதிக்காத வகையில் மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும்.’’

பணமில்லா பரிவர்த்தனை... நிஜத்தில் வந்தாச்சா ?

சண்முக ராஜா,  ஸ்ரீசண்முகம் ஸ்டோர், சாத்தூர்

‘‘நவம்பர் மாத இறுதியில் பிஓஎஸ் மெஷினுக்கு விண்ணப்பித்தேன். இன்னும் வந்தபாடில்லை.  இடையில் இரண்டு முறை வங்கியில் சென்று விசாரித்தேன். இன்னும் பத்து நாள்களில் வரும் என்றார்கள்.’’

பிஓஎஸ் மெஷின் உடனடியாகக் கிடைக்காததுக்கு என்ன காரணம் என ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கேட்டோம். ‘‘இந்தக் கருவி உற்பத்தி செய்யப்படும் இடம் ஒன்று, கருவியில் ஹார்டுவேர் (Hardware) வைக்கும் (Input) இடம் வேறு என்பதால் தாமதம் ஆகிறது. இன்னும் ஒரு மாதத்தில் சரியாகிவிடும்’’ என்றார்கள். 

பணமில்லா பரிவர்த்தனையைப் பயன்படுத்தச் சொல்லும் அரசாங்கம், அதற்கான வசதியை எல்லோருக்கும் செய்துதந்தால் நன்றாக இருக்குமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு