Published:Updated:

இல்லத்தரசிகள் சிக்கனத்தின் இளவரசிகள்!

இல்லத்தரசிகள் சிக்கனத்தின் இளவரசிகள்!
பிரீமியம் ஸ்டோரி
இல்லத்தரசிகள் சிக்கனத்தின் இளவரசிகள்!

யாழ் ஸ்ரீதேவி

இல்லத்தரசிகள் சிக்கனத்தின் இளவரசிகள்!

யாழ் ஸ்ரீதேவி

Published:Updated:
இல்லத்தரசிகள் சிக்கனத்தின் இளவரசிகள்!
பிரீமியம் ஸ்டோரி
இல்லத்தரசிகள் சிக்கனத்தின் இளவரசிகள்!
இல்லத்தரசிகள் சிக்கனத்தின் இளவரசிகள்!

ரிசிப் பானை, கடுகு டப்பா, அலமாரியின் இண்டு இடுக்குகள், டிரங்க் பெட்டி... என ‘இங்கெல்லாம் பணம் இருக்குமா’ என்று யோசிக்க முடியாத இடங்களில்  எல்லாம் பணத்தை ஒளித்து வைப்பதில் நம் பெண்கள் கில்லிகள். வீட்டுச் செலவுக்குக் கணவர் கொடுக்கும் பணத்தில் சிறிதாவது சேமித்துவிடுவதுதான் நம் பெண்களின் நோக்கம். இன்றைய காலகட்டத்தில் பல வீடுகளில் குடும்பத்தின் நிதி நிலைமையை பலமாக வைத்திருக்கக் காரணம் இவர்கள்தான் என்பதை மறுக்கும் கணவர்கள் இல்லை என்றே சொல்லலாம்.

கணவர் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும்  பணத்தை அதிரடியாகச் செலவு செய்யாமல், ஒவ்வொரு பைசாவாக எப்படி சேமிக்கிறார்கள் நம் பெண்கள் என்பதைத் தெரிந்துகொள்ள, சென்னையைச் சுற்றி உள்ள இல்லத்தரசிகள் சிலரைச் சந்தித்தோம். 

சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பத்மபிரியா, சேமிப்பு விஷயத்தில் பக்கா பிளானர். கணவர் செந்தில், தனியார் நிறுவனப் பணியில் சம்பாதித்து, மாதந்தோறும் கொடுக்கும் தொகையைத் திட்டமிட்டுச் செலவழிக்கிறார். இரண்டு குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டங்கள், காப்பீடு மற்றும் கல்விச் செலவுகளும் இதில் அடக்கம். இனி, ஓவர் டு பத்மபிரியா.

‘‘மாதச் சம்பளம் வந்தவுடன் செலவுகளுக்கான பட்ஜெட் போட்டுவிடுவேன். குழந்தைகள் படிப்புச் செலவுகளைத் திட்டமிட்டு நான் எடுத்து வைத்திருக்கும் எஜுகேஷன் பாலிசி, மருத்துவச் செலவுகளுக்கான மெடிக்ளெய்ம் பாலிசி, எனக்கும் என் கணவருக்குமான இன்ஷூரன்ஸ் பாலிசிகள் என இவற்றுக்கான பிரீமியம் செலுத்த பணத்தை தனியே எடுத்து வைத்துவிடுவேன். அதுபோக மீதமாகும் பணத்தை வைத்துத்தான் குடும்பத்தை நடத்துவேன்.

குழந்தைகளிடம் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த, வீட்டின் பூஜை அறையில் நான்கு உண்டியல் களை வைத்திருக்கிறேன். குழந்தைகளுக்குப் பரிசாகக் கிடைக்கும் பணம், உறவினர் தரும் தொகையை எல்லாம் இந்த உண்டியலில் சேமிக் கின்றனர். சிறு வயதிலேயே சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் அவர்கள் மனதில் விதைத் திருக்கிறேன். செலவுகள் போக மிச்சமாகும் சில்லறையும் எங்கள் வீட்டில் சேமிப்பாக மாறிவிடும். புதிய பத்து ரூபாய் நோட்டுகளைச் சேமிப்பதும் எங்கள் வழக்கம். சில மாதங்களுக்கு முன்பு 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டபோது எனது சேமிப்பில் இருந்த பத்து ரூபாய் நோட்டுகள், ஒரு மாத செலவைச் சமாளிக்க எனக்குக் கைகொடுத்தது. சேமிப்பு எந்தவகையில் இருந்தாலும், அது நெருக்கடியான நேரத்தில் கைகொடுக்கும்’’ என்று ஜமாய்த்தார் பத்மபிரியா.

சென்னையைச் சேர்ந்த கோமதி, ஓர் இல்லத்தரசி. கணவர் சூரியப்பிரகாஷ், தனியார் ஹோட்டல் நிறுவனத்தில் வேலை செய்கிறார். வீட்டு வாடகை, அவுட்டிங் செலவுகள் என திருமணமான புதிதில் பட்ஜெட்டைப் பற்றி கவலைப்படாத இந்தத் தம்பதியர், இப்போது சேமிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளனர். எப்படியெல்லாம் சேமிக்கிறார் கோமதி என்பதை அவரே சொல்கிறார்.

‘‘தங்கத்தில் முதலீடு செய்றது எப்பவும் வீணாகாது. மாத பட்ஜெட்டில் நகைச் சீட்டு போடுறேன். நம்பிக்கையான இடத்தில் மாதத் தவணைச் சீட்டுக் கட்டுறேன். மருத்துவச் செலவு போன்ற அவசியம் ஏற்பட்டால், சீட்டுத் தொகையைப் பயன்படுத்திக்கொள்வோம். இல்லா விட்டால், மொத்தமாகக் கிடைக்கும் சீட்டுத் தொகையை ஃபிக்ஸட் டெபாசிட்டில் கொண்டு போய்க் கட்டிவிடுவேன்.

வெளியில் சென்று ஹோட்டலில் சாப்பிடுவதால், நிறைய பணம் செலவானது. அதைக் குறைக்க, பிடித்த உணவு வகைகளை ஹோட்டல் டேஸ்ட்டில் வீட்டிலேயே சமைக்கக் கற்றுக் கொண்டேன். இப்போ ஹோட்டல் செலவுகளைக் கட்டுப்படுத்திவிட்டோம். அளவுக்கு அதிகமாக டிரெஸ் எடுக்கவும் செலவு செய்வதில்லை. மாமியார் வீட்டிலும், அம்மா வீட்டிலும் ஒவ்வொரு பண்டிகைக்கும் டிரெஸ் எடுக்கக் கொடுக்கும் பணத்தையும் சேர்த்து ஃபிக்ஸட் டெபாசிட்டில் கட்டிவிடுகிறேன். தேவையற்ற செலவுகளைக் குறைத்தாலே ஓரளவுக்குச் சேமிக்க முடியும். ஃபிக்ஸட் டெபாசிட்டில் போடுவதால், பணம் பாதுகாப்பாகவும் உள்ளது’’ என்று குதூகலிக்கிறார் கோமதி.

பிளஸ் 2 படிப்போடு திருமணம் ஆகிவிட்டதால், ராதாவால் கூடுதலாகப் படிக்க முடியவில்லை. இல்லத்தரசியாக இருந்தாலும் வீட்டில் இருக்கும் நேரத்தில், ஆன்லைன் பிசினஸ் வழியாக சம்பாதிப்பதோடு சேமிப்பிலும் கவனம் செலுத்துகிறார் ராதா.

கணவர் கண்ணன், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். முதல் மகன், பட்டப்படிப்பை முடித்துவிட்டு, தற்போது வேலையில் சேர்ந்துள்ளார். இரண்டாவது மகன், ப்ளஸ் 2 படிக்கிறார். ராதாவின் சேமிப்புத் திட்டங்கள் இதோ...

‘‘ஆரம்பத்தில் வாடகை வீட்டில் குடியிருந்தோம். சம்பாதிப்பதில் பெரும்பகுதி வாடகைக்கே போனது. பழைய சொத்து ஒன்றை விற்று, அதன் மூலம் கிடைத்த தொகையோடு கையிருப்பில் இருந்த சேமிப்பையும் சேர்த்து சொந்த வீடு வாங்கினோம். இப்போது வாடகைப் பிரச்னை இல்லை. செலவுகள் போக மீதமாகும் பணத்தில், நகைச் சீட்டும், மாதத் தவணைச் சீட்டும் போடுகிறேன். வீட்டில் ஓய்வாக இருக்கும் நேரத்தில் சேலை விற்பனை செய்து வருகிறேன். இதன் மூலம் மாதம் ரூ.10,000 வரை கிடைக்கிறது. இதையும் சேமிக்கிறேன். சேமிப்பு பலமாக இருந்தால்தான், குடும்பத்தை எந்தச் சூழலிலும் மகிழ்ச்சியாக வழி நடத்தமுடியும்’’ என மகிழ்ச்சி பொங்கச் சொன்னார் ராதா.

இல்லத்தரசிகளின் இத்தகைய சேமிப்புகள் பாராட்டுக்குரியது என்றாலும் அவர்கள் இன்னும் பாரம்பர்யமான சேமிப்புத் திட்டங்களையே சுற்றி சுற்றி வருகிறார்கள் என்பது சற்று கவலை அளிக்கும் விஷயமாக இருக்கிறது. சேமிப்பு என்கிற விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்தாமல், முதலீடு என்கிற விஷயத்தையும் இனி நம் பெண்கள் தேடிச் செல்லவேண்டும். இனி வரும் காலத்திலாவது நம் பெண்கள் இதைச் செய்வார்கள் என்று நம்புவோமாக.

படங்கள்: கே.ஜெரோம், வி.ஸ்ரீனிவாசுலு

பங்குச் சந்தையில் பெண்கள் கலக்கலாம்!

சித்ரா நாகப்பன்,  முதலீட்டு ஆலோசகர்
 

இல்லத்தரசிகள் சிக்கனத்தின் இளவரசிகள்!


‘‘இந்த இல்லத்தரசிகள் சேமிப்பு விஷயத்தில் இவ்வளவு சிறப்பாக இருப்பதை நிச்சயம் பாராட்டலாம். இவர்கள், தங்களுக்குத் தெரிந்த வழிகளில் முதலீட்டுத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர். இந்தத் திட்டங்கள் அவர்கள் அளவில் திருப்தியாக இருக்கலாம். ஆனால், அதிலிருந்து கிடைக்கும் வருவாய் மிகக் குறைவாகவே இருக்கும் என்பதைக் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும்.

தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பாகத் தோன்றினாலும், அதிலிருந்து மிகப் பெரிய வருவாய் எதுவும் கிடைப்பதில்லை. தனி நபர்கள் மற்றும் அங்கீகாரம் இல்லாத சிட் ஃபண்ட் நிறுவனங்களில் முதலீடு செய்வது ரிஸ்க் ஆனது. பணத்தோடு நிறுவனங்கள் காணாமல் போவதையும், பணம் கட்டிய மக்கள் ஏமாற்றத்தோடு புகார் அளிப்பதையும் நாம் தினம் தினம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். எனவே, சிட் ஃப்ண்ட் திட்டமும்  அவ்வளவு பாதுகாப்பான முதலீடு இல்லை.

இன்றைய இல்லத்தரசிகளில் பெரும்பாலானோர் தங்களது ஸ்மார்ட் போன் வழியாக வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். ஆன்லைன் வழியாக வணிகம் செய்கிற பெண்களையும் பார்க்கிறோம். வீட்டில் இருந்தபடியே சிறுகச் சிறுக முதலீடு செய்வதோடு 20% வரை வருவாய் பெறுவதற்கு சிறந்த வழி, பங்குச் சந்தையில் முதலீடு செய்வது. அதிகம் ஆசைப்படாமல், நல்ல நிறுவனங்களாகத் தேர்வு செய்து முதலீடு செய்யலாம். பங்குச் சந்தையில்  முதலீடு செய்வதைத் தெரிந்துகொள்ள உள்ள பயிற்சி வகுப்புகள், இதற்குக் கைகொடுக்கும். பங்குச் சந்தை முதலீட்டுக்குத் தேவையான வங்கிக் கணக்கு, டீமேட் ஆகியவற்றைப் பராமரிப்பதும் எளிது.

பங்குச் சந்தை முதலீட்டில் அனைத்து விஷயங்களும் தெளிவாக உள்ளன. நாம் வைத்திருக்கும் பங்குகளுக்கு 15% முதல் 20% வரை உயர்வு இருக்கும்போது, விற்று லாபம் பார்க்கலாம். மீண்டும் புதிய பங்குகளில் முதலீடு செய்யலாம். இவற்றையெல்லாம் எங்கிருந்தாலும் கணினியின் வழியாக ஆன்லைனில் செய்து முடித்துவிடலாம்.

தொடர்ந்து ஃபாலோ அப் செய்ய முடியாதவர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். 12 சதவிகிதத்தில் இருந்து ரிட்டர்ன் கிடைக்கும். எந்தப் பங்கில்  முதலீடு செய்யலாம், எப்போது விற்கலாம் என்பது வரை அனைத்து விஷயங்களையும் அந்த மியூச்சுவல் ஃபண்டை நிர்வாகம் செய்யும் நிறுவனமே பார்த்துக்கொள்ளும். இவற்றிலும் நாம் 100% உத்தரவாதம் தர முடியாது.

எதில் முதலீடு செய்வது என்று முடிவெடுப்பதில்தான் நமது வருவாய் உள்ளது. பேராசைப்படுவதும், உணர்ச்சி வசப்படுவதும் வேண்டாம். பங்குகளின் விலை உயரும்போது விற்றுவிட்டு, விலை குறையும்போது வாங்குவது எனத் திட்டமிட்டுச் செயல்பட்டால் வீட்டில் இருந்தபடியே பெண்கள், மற்ற முதலீடுகளை விட அதிக வருவாய் ஈட்ட முடியும்.”