Published:Updated:

பிசினஸில் வெற்றி பெண்களுக்கும் சொந்தமானதுதான்!

பிசினஸில் வெற்றி பெண்களுக்கும் சொந்தமானதுதான்!
பிரீமியம் ஸ்டோரி
பிசினஸில் வெற்றி பெண்களுக்கும் சொந்தமானதுதான்!

ஆடை உற்பத்தியில் அசத்தும் கோவைப் பெண்மணி...கோ.ப.இலக்கியா

பிசினஸில் வெற்றி பெண்களுக்கும் சொந்தமானதுதான்!

ஆடை உற்பத்தியில் அசத்தும் கோவைப் பெண்மணி...கோ.ப.இலக்கியா

Published:Updated:
பிசினஸில் வெற்றி பெண்களுக்கும் சொந்தமானதுதான்!
பிரீமியம் ஸ்டோரி
பிசினஸில் வெற்றி பெண்களுக்கும் சொந்தமானதுதான்!
பிசினஸில் வெற்றி பெண்களுக்கும் சொந்தமானதுதான்!

டை உற்பத்தியில் அசத்தும் கோவைப் பெண்மணி... பிசினஸில் வெற்றி பெண்களும் குழந்தைகளுக்கான ஆடைகளைத் தயாரிக்கும் தொழிலில் நுழைந்து, கடந்த சில ஆண்டுகளில் கணிசமான முன்னேற்றம் கண்டிருக்கிறார் கோவையைச் சேர்ந்த  பெண் தொழிலதிபர் உண்ணாமலை முத்து. பிசினஸ் என்பது ஆண்களுக்கு மட்டுமானதல்ல, பெண்களுக்கும் சகல விதங்களில் ஏற்றதே என்கிறார் உண்ணாமலை. நாணயம் விகடன் மகளிர் தினச் சிறப்பிதழுக்காக அவரைச் சந்தித்தோம். அவரின் தெத்துப்பல் மிளிரும் அழகிய சிரிப்புடன் பேச்சுத் தொடங்கினார்.

‘‘சிறுவயதில் நான் இருந்தது மதுரை டவுன்ஹால் ரோட்டில் இருந்த என் பாட்டி வீட்டில்தான். என் தாத்தா ஒரு வியாபாரி. குடும்பம் ஒரு வியாபாரக் குடும்பம். அதுவே எனக்குள் தொழில் அதிபர் எனும் எண்ணத்தை விதைத்தது.

மதுரை டிகே லட்சுமி பள்ளியில் படிக்கும் போது, எங்கள் முதல்வர் அறை அருகிலேயே டிவி சுந்தரம் ஐயங்கார் சிலை இருக்கும். தினமும் அதைப் பார்க்கும் போதெல்லாம் நானும் ஒரு தொழில் அதிபர் ஆகவேண்டும் என்ற எண்ணம் தோன்றும். ஆனால், எந்தத் துறையில் எந்தமாதிரியான தொழிலில் ஈடுபட வேண்டும் என்ற தெளிவு கிடைக்காவிட்டாலும் என் லட்சியத்துக்கான தேடல் அங்கு தொடங்கியது.

தொழில் ஆரம்பிக்க தொழில்நுட்பம் தேவைப்படும் என்ற நோக்கில் பொறியியல் படிப்பில் சேர்த்தேன். 19 வயதில் கல்லூரி படிக்கும்போது, ‘உலகம் எவ்வளவு வேகமாக வளர்ந்துவருகிறது; நாம் இன்னும் அமைதியாக இருக்கிறோமே’ என்ற உணர்வு எழுந்துகொண்டே இருந்தது. அந்த நேரம் கம்ப்யூட்டர் ஸ்டார்ட் அப்கள் ஆரம்பித்த காலம். அதில் ஏதேனும் செய்யலாமா என்று தோன்றியது. என் தந்தையும் அதற்கு ஒப்புதல் அளித்தார். வாய்ப்பும் கிடைத்தது. ஆனால், அது ஒரு குறுகிய காலத் தொழிலாக முடித்துவிடக்கூடுமோ என்ற எண்ணம் எழுந்தது. திருமணம் ஆனபின் அந்தத் தொழிலை விடவேண்டிய நிலை வருமோ... நம் கனவு பாதியில் நின்றுவிடுமோ என்று எண்ணித் தயங்கினேன்.

  வரமாக வந்த வரன்

என் எண்ணத்துக்கும், என் காத்திருப்புக்கும் பலனாக இறைவன் கொடுத்த பரிசாக அமைந்தார் என் கணவர். அவர் ஆடைகள் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வந்தார். என் லட்சியத்தையும் கனவையும் மதிப்பவராக இருந்தார். அவர் அதுதான் என் உந்து சக்தி. என் மாமனாரும் கணவரும் காட்டன் மற்றும் நூலிழைத் தயாரித்து ஏற்றுமதி செய்து வந்தனர். அவர்களுடன் சேர்ந்து முதலில் தொழில் கற்றேன். பின் என் வழியை அமைத்து அவர்கள் வழிகாட்டலுடன் குழந்தைகளுக்கான ஆடை வடிவமைப்புத் தொழிலைத் தொடங்கினேன். இன்று ரூ.7,000 கோடி வர்த்தக வாய்ப்புக்கொண்ட குழந்தைகளுக்கான ஆயத்த ஆடை நிறுவனங்களில் டாப் 3-ல் நிற்கிறோம்.

  வெற்றி மந்திரம்

மேலை நாட்டுக்கு ஏற்றுமதி செய்துவந்த காலத்தில், ஒரு பிராண்டை உருவாக்கி, அதை உள்ளூர் தயாரிப்புகளோடு போட்டிப் போடவிடும் எண்ணம் எங்களுக்கு வெற்றிப் பாதையை ஏற்படுத்தித் தந்தது. வெற்றி என்பது அமைவது அல்ல. உருவாகப் படுவது என்பதை உணர்ந்து செயல்பட ஆரம்பித்தேன்.

  குழந்தைகள் ஆடையைத் தேர்ந்தெடுக்கக் காரணம்

குழந்தைகள் என்பவர்கள் புதுமை விரும்பிகள். எப்போதுமே அவர்களுக்கு ஏதேனும் புதிதாகக்  கிடைத்துக்கொண்டே இருக்கவேண்டும். குழந்தைகள் பெரும்பாலும் ஒன்றைத் தேர்ந்தெடுத்தால் அடுத்தமுறை அதைத் தேர்ந்தெடுக்கமாட்டார்கள். அவர்களுக்குப் புதிதுபுதிதாக, தினுசு தினுசாக கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும் என்று மனதில்பட்டது.

அதுவும் இல்லாமல், இந்த மாபெரும் ஆடை தயாரிப்புத் தொழில் என்னும் கடலுக்குள் குழந்தைகளுக்கான ஆயத்த ஆடைகளில்,  7  சதவிகிதத்துக்கும் குறைவாகவே பிராண்டட் உடைகள் உள்ளன. இதைக் கவனித்ததுதான் இந்தத் தொழில் தொடங்க மூலாதர மாக அமைந்தது. நம் நாட்டின் 54 சதவிகித மக்கள், இளைய சமூகத்தினராக இருக்கின்றனர். இன்றைய குழந்தைகள் அதில் பெரும்பங்கு வகிக்கின்றனர். அதனால்தான் இதைத் தொடங்கினோம். சவால் நிறைந்த துறை என்பதால், திட்டமிட்டுச் செயல்பட்டோம்.

  முதல் பிராண்ட் உருவான கதை

எங்கள் முதல் பிராண்டின் பெயர் ஆன்ட்( ANT). குழந்தைகளுக்கு எளிமையாக எழுத்துக்கூட்டிப் படிக்கவும் நினைவில் வைத்துக்கொள்ளவும் வசதியாக இருக்கும் என்பதற்காக ‘ஆன்ட்’ என்று அதற்குப் பெயர் வைத்தோம். எங்கள் தொழிலும் சுறுசுறுப்பாகத் தொடங்கியது.

தோல்வி இல்லாமல் வெற்றிகள் கிடையா தல்லவா? ஆரம்பத்தில் ரீடெய்ல் இண்டஸ்ட்ரி பற்றித் தெரியாத நிலையில், சில சறுக்கல்களைச் சந்தித்தோம். இந்தியாவைப் பொறுத்தவரை, இது பலதரப்பட்ட சந்தை வடிவைக் கொண்டது. இதை முதலில் புரிந்து ஒரு நிலைக்கு வர 2 முதல் 3 வருடங்கள் ஆகின. பிடித்தது. மும்பையில் இருந்துதான் ஆரம்பித்தேன். 20 மல்டி பிராண்டட் ரீடெய்ல் கடைகளுக்கு அனுப்ப ஆரம்பித்தோம். அதில் கற்ற பாடம் மூலம் பெரிய  கடைகளுக்கு அனுப்பினோம். இன்று 500-க்கும் மேற்பட்ட மல்டி பிராண்டட் ரீடெய்ல் கடைகளுக்கு எங்கள் ஆடைகள் செல்கின்றன. ஜீன்ஸ், டி- ஷர்ட், ஃப்ராக், லெகின் எனத் தொடங்கிக் குழந்தைகளுக் கான எல்லா உடைகளையும் உருவாக்குகிறோம்.

பிசினஸில் வெற்றி பெண்களுக்கும் சொந்தமானதுதான்!

  மும்பை முதல் நெதர்லாந்து வரை

2006-ல் மும்பையில் அகில இந்திய ஆடை கண்காட்சி நடந்தது. அந்த காலகட்டத்தில் வெறும் டி-ஷர்ட் மட்டும்தான் போட் டோம். ஆனால், அதன் தரத்துக்கு இந்தியா முழுக்க பெரும் வரவேற்பு கிடைத்தது. மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூர், ஹைதரா பாத் என்று தொடங்கி மும்பை முதல் கெளஹாத்தி வரையும், டெல்லி முதல் கன்னியாகுமரி வரையும் எங்கள் பிசினஸ் விரிவடைந்துள்ளது.  உள்ளூர் மார்க்கெட்களில் போட்டி போட்ட அதேநேரம், ஏற்றுமதி யிலும் கவனம் செலுத்தினோம். தற்போது யு.எஸ்.ஏ, கனடா, பிரான்ஸ், யு.கே, ஸ்பெயின், இத் தாலி, நெதர்லாந்து என்று ஏற்றுமதி செய்கிறோம்.

  அடுத்த கட்டம்

இந்த வெற்றியை தக்கவைப்பதும்கூட சவாலான ஒன்றே. முன்னமே சொன்னபடி, குழந்தைகள் ஆடை உலகில் புதுப்பித்தல்தான் நம்மை நம் நிலையில் நிறுத்திவைக்கும் ஒரே ஆயுதம். கொஞ்சம் இடைவெளி விட்டாலும், விட்ட இடத்தைப் பிடிப்பது கஷ்டமாகிவிடும். கார்ட்டூன் நெட்வொர்க்குடன் ஒப்பந்தம் போட்டு, அந்த கதாபாத்திரங்களை எங்கள் ஆடைகளில் உருவாக்கினோம். பெரிய வரவேற்புக் கிடைத்தது. ஆன்டி - மைக்ரோபியல் ஆடைகளை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம். மேலும், ஐந்தாறு வருடங்களில் ஆண்களுக்கான உடைகளையும் உருவாக்கும் ஐடியாவில் உள்ளோம்.

  சந்தித்த அனுபவங்கள்

நான் இந்தத் தொழில் ஆரம்பிக்க முழுச் சுதந்திரத்தையும் ஊக்கத்தையும் கொடுத்த என் கணவர் சொன்ன ஒரு வாசகம்தான் என்னை இந்த நிலைக்கு உயர்த்தி இருக்கிறது. “நான் உன் வாழ்வின் ஒரு அங்கம் மட்டுமே; நானே உன் வாழ்வல்ல. உனக்குப் பிடிக்கிற மாதிரி உன் பொறுப்பை உருவாக்கிக்கொள். வெற்றி தோல்வி  என எல்லாவற்றையும் நீயே துணிந்து சமாளி” என்றார்.

தொழில் சிறக்கவேண்டும் என்று நினைத்துவிட்டால் முதலில் களத்தில் இறங்கவேண்டும் என்று தெரிந்து கொண்டேன். எல்லாச்  சூழலையும் சமாளிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒருமுறை நாங்கள் அனுப்பிய சரக்கு, இரண்டு ஆண்டுகளாக இத்தாலி துறை முகத்திலேயே தேங்கிப் போனது.  எங்கள் வாடிக்கையாளர் சொன்ன நிபந்தனைகள் ஏற்க முடியாததாக இருந்தது. வேறு வழியின்றி ஸ்பெயினுக்கு அனுப்பினோம். அங்கும் அதை விற்க முடியவில்லை. கடைசியில் அதை கிரீஸில்  வெறும் 20% விலையில்தான் விற்க முடிந்தது. மீதமுள்ள 80% தொகையை ஈ.சி.ஜி.சி மூலம் பெற் றோம். அந்த மாதிரியான மாற்று வழிமுறை களும் தொழில் நுணுக்கங்களையும் கற்றோம். 

  பெண்களை எப்படிப் பார்க்கிறார்கள்?

உலக அளவில் எல்லாத் துறைகளிலும் இன்று பெண்கள் சாதிக்க ஆரம்பித்துவிட்டனர். டெக்ஸ் டைல் துறையைப் பொறுத்தவரை, இன்றைய சூழலில் ஆண், பெண் என யாரும் பார்ப்பதில்லை. தரம் மட்டுமே அங்கு பேசுகிறது.  வட இந்தியாவில் ஒரு பெண் தொழில் அதிபர் பிசினஸ் பேச வந்துள்ளார் என்று தெரிந்தால், உடனே மதிப்பு கொடுத்துப் பேசுவார்கள். அப்படி ஒரு நிலை இங்கில்லை. அந்த நிலை இங்கு உருவாக வேண்டும்.

  இளைஞருக்கும் பெண்களுக்கும் டிப்ஸ்

இன்றைய நிலையில் இளைஞர்களுக்கு ஆடை துறையில் வாய்ப்பும் தேவையும் அதிகம் உள்ளது. இன்றைய இளைஞர்களின் சிந்தனையும் கற்பனைத் திறனும்தான் இங்கு மூலதனமே. கையில் வெண்ணை இருக்க நெய் எடுக்க சிரமம் இல்லையே!

முயற்சி ஒன்று மட்டும் வைத்து கொண்டுதான் நான் உட்பட பலபேர் இங்கு தொழில் அதிபர் ஆகி உள்ளோம். முயற்சி இருந்தாலே நம் கனவுகள் உருப்பெரும்.  தொழில் செய்து ஜெயிக்கவேண்டும் என்கிற தணியாத ஆர்வம் எப்போதும் இருக்கவேண்டும். அதில் சமரசமே செய்துகொள்ளக் கூடாது. பிசினஸ் செய்யும்போது தனித்து இறங்கிச் செய்யும் துணிவு வேண்டும். பிரச்னைக்கும் உதவிக்கும் கணவரையோ, தந்தையையோ சார்ந்து இல்லாமல் இருக்கப் பழக வேண்டும். நம்மால்  எதையும் சமாளிக்கமுடியும் என்ற துணிவே நம்மை உயர்த்தும்’’ என்று முடித்தார் உண்ணாமலை.

ஒரு பெண்ணாக சந்தைக்குள் போட்டியிட்டு வெற்றி வாகை சூடி நிற்கும் இவர், குடும்பத்தையும் செவ்வனே வழிநடத்தி வருகிறார். குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்குவதிலும், கணவர், பெரியோர்களை கவனிப்பதிலும் இம்மி அளவுகூட சமரசம் செய்வதில்லை. தொழில் குடும்பம் இரண்டையும் சமநிலையில் பார்த்துக்கொள்கிறார்.

தொழில் தொடங்கும் பெண்களுக்கு இவர் ஒரு நல்ல உதாரணம்!